செய்திகள்-13.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஒருவரின் குறையை அவரிடம் எடுத்துச் சொல்லவேண்டுமே தவிர, மற்றவர்களிடம் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்
2. குடும்பம் என்பது வெறும் ஏட்டளவு கருத்து மட்டுமல்ல, மாறாக, அதுவே ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் அடிப்படை உண்மை - திருத்தந்தை பிரான்சிஸ்
3.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொணர்ந்துள்ள மாற்றங்கள் திருஅவையின்
வேர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன - பேராயர் பியெத்ரோ பரோலின்
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆறு மாதங்கள் பணியைக் குறித்து திருப்பீடப் பேச்சாளர்
5. "எல்லைகளைக் கடந்த குடும்பம்" என்ற கருத்தை வெளியிட்டுள்ள மெக்சிகோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்
6. பிலிப்பின்ஸ் நாட்டில் கடத்தப்பட்ட அருள் பணியாளர் Michael Ofana அவர்கள் விடுவிக்கப்பட்டார்
7. Muzaffarnagar பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம், இந்து முஸ்லிம் நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது
8. காங்கோ குடியரசு நாட்டில், இராணுவத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டிருந்த 550க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஒருவரின் குறையை அவரிடம் எடுத்துச் சொல்லவேண்டுமே தவிர, மற்றவர்களிடம் அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.13,2013. “நீங்கள்
உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர்
அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?” (லூக்கா 6:41) என்று இயேசு கேட்ட கேள்வி, ஒவ்வொருவரின்
மனசாட்சியையும் உலுக்கும் ஒரு கேள்வியாக அனைத்துக் காலங்களிலும் ஒலித்து
வருகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளியன்று புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இயேசு எழுப்பிய இக்கேள்வியை மையப்படுத்தி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரைப் பற்றி மற்றவர்களிடம் புறம்பேசும் நம் போக்கினைக் குறித்து கேள்விகளை எழுப்பினார்.
ஒருவரிடம் குறை காணும்போது, அவருக்காகச் செபிக்கவும், அவருக்காக உடல் ஒறுத்தல்களை மேற்கொள்ளவும் நாம் முயலவேண்டும்; பின்னர் அவரது குறையை அவரிடம் எடுத்துச் சொல்லவேண்டுமே தவிர, மற்றவர்களிடம் அல்ல என்பதை திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
கிறிஸ்துவைப் பழித்துரைத்ததாகக் கூறும் புனித பவுலை எடுத்துக்காட்டாகக் கூறி, நாம் கடவுளைப் பழித்துரைக்காமல் இருக்கலாம், ஆனால் அடுத்தவரின் குறைகளை நாம் பறைசாற்றும்போது, நாமும் பவுலைப் போல, திருஅவையைத் துன்புறுத்துகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
இத்தகையக் குறைபாட்டிலிருந்து திருஅவை முழுவதுமே விடுதலை பெற்று, பணிவு, கனிவு மற்றும் மென்மையான மனம் கொண்டு அனைவரும் வாழும் வரங்களைப் பெற செபிப்போம் என்று திருத்தந்தை தன் மறையுரையை நிறைவு செய்தார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் வெளியிட்டுவரும் Twitter செய்திகளில் ஒன்றாக, இயேசுவே ஆதவன், அந்த ஆதவனை அறிவிக்கும் உதயம் மரியன்னை என்ற Twitter செய்தியை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. குடும்பம் என்பது வெறும் ஏட்டளவு கருத்து மட்டுமல்ல, மாறாக, அதுவே ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் அடிப்படை உண்மை - திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.13,2013. வயது முதிர்ந்தோரையும், இளையோரையும் புறக்கணிக்கும் எந்த ஒரு நாடும் எதிர்காலத்தை இழக்கிறது, ஏனெனில் அது பாரம்பரிய நினைவுகளையும், எதிர்காலத்தின் கனவுகளையும் சிதைக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
செப்டம்பர் 12 இவ்வியாழன் முதல் 15, இஞ்ஞாயிறு முடிய இத்தாலியின் Turin நகரில்
நடைபெறும் 47வது இத்தாலிய கத்தோலிக்கர் சமுதாய வாரம் என்ற கூட்டத்தில்
கலந்துகொள்ளும் அனைவருக்கும் தான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்
திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுநிலையினர் தலைவர்களில் ஒருவரான Giuseppe Toniolo அவர்கள், 1907ம் ஆண்டு சமுதாய வாரம் என்ற முயற்சியைத் துவக்கிவைத்த வரலாற்றை நினைவுகூர்ந்த திருத்தந்தை, Toniolo அவர்கள், கடந்த ஆண்டு முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட்டபின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவென்பதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
போதுநிலையினருக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்று இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவதற்கு முன்னரே, இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முயற்சியைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டியுள்ளார்.
Turin நகரில் நடைபெறும் சமுதாய வார நிகழ்வுகளுக்கு "குடும்பம், இத்தாலிய சமுதாயத்தின் நம்பிக்கையும், எதிர்காலமும்" என்ற தலைப்பினைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானது என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளத் திருத்தந்தை, குடும்பம் என்பது வெறும் ஏட்டளவு கருத்து மட்டுமல்ல, மாறாக, அதுவே ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் அடிப்படை உண்மை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இந்த முயற்சியை முன்னின்று நடத்தும் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Angelo Bagnasco அவர்களையும், ஏனைய ஆயர்களையும் போதுநிலைத் தலைவர்களையும் வாழ்த்தி, அவர்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாக இச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொணர்ந்துள்ள மாற்றங்கள் திருஅவையின்
வேர்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன - பேராயர் பியெத்ரோ பரோலின்
செப்.13,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையில் கொணர்ந்துள்ள மாற்றங்களை ஒரு புரட்சி என்ற கோணத்தில் நோக்குவதற்குப் பதிலாக, திருஅவையின்
வேர்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு முயற்சியாகக் காண்பதே சிறந்தது
என்று பேராயர் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
வருகிற அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் திருப்பீடச் செயலர் பொறுப்பை ஏற்கவிருக்கும் பேராயர் பரோலின் அவர்கள், Venezuela நாட்டின் El Universal என்ற நாளிதழுக்கு அண்மையில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பீடம்
செயலாற்றும் வழிகளை மறுபரிசீலனைச் செய்வதற்கு அக்டோபர் மாதத் துவக்கத்தில்
கூடிவரும் கர்தினால்கள் குழுக்களைக் குறித்துப் பேசிய பேராயர் பரோலின்
அவர்கள், திருஅவையில் மாற்றங்கள் என்று கூறும்போது, அது, உலக அரசுகளை ஒத்த மாற்றங்கள் என்று எண்ணிப்பார்ப்பது தவறு என்று கூறினார்.
உலக அரசுகளிலிருந்து மாறுபட்டு, ஒரு மாற்று சாட்சியமாக திருஅவை விளங்கும்போதுதான் அது, இவ்வுலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கமுடியும் என்பதையும் பேராயர் பரோலின் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : CNA/EWTN
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆறு மாதங்கள் பணியைக் குறித்து திருப்பீடப் பேச்சாளர்
செப்.13,2013. ஏழ்மை, அமைதி, இயற்கையின் பாதுகாப்பு என்ற மூன்று எண்ணங்களை உள்ளடக்கிய 'பிரான்சிஸ்' என்ற பெயர் உலகினர் அறிந்த பெயர்தான் என்றாலும், அப்பெயரைத்
தெரிவு செய்ததன் வழியாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்
தலைமைப்பணியின் அடிப்படையை உலகிற்கு எடுத்துரைத்தார் என்று திருப்பீடப்
பேச்சாளரும், வத்திக்கான் வானொலி நிலையத்தின் இயக்குனருமான அருள்பணியாளர் Federico Lombardi கூறினார்.
இவ்வாண்டு மார்ச் 13ம் தேதி முதல், செப்டம்பர் 13, இவ்வெள்ளியன்று நிறைவுறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதல் ஆறு மாதங்கள் பணியைக் குறித்து, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் அருள்பணியாளர் Lombardi இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்த பெயர், ஐரோப்பாவுக்கு வெளியிலிருந்து வந்த திருத்தந்தை என்ற மாற்றம், தனக்குள்ளேயே
தங்கிவிடாமல் வெளியில் செல்லவெண்டியத் திருஅவை என்று திருத்தந்தை
வழங்கிவரும் செய்திகள் என்ற இந்த மூன்று அம்சங்கள் இந்த முதல் ஆறு
மாதங்களின் முக்கிய அம்சங்கள் என்று அருள்பணியாளர் Lombardi எடுத்துரைத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களும் நட்புறவுடன் பழகுவதை இவ்வுலகம் கண்டு வருகிறது என்பதையும் அருள்பணியாளர் Lombardi தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொற்களைவிட, அவரது செயல்பாடுகளும், வாழ்வு முறையும் தெளிவானச் செய்திகளை உலகிற்கு அறிவித்து வருவதால், திருப்பீடத்தின் பேச்சாளர் என்ற முறையில் தனது பணி மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது என்பதையும் அருள்பணியாளர் Lombardi எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. "எல்லைகளைக் கடந்த குடும்பம்" என்ற கருத்தை வெளியிட்டுள்ள மெக்சிகோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்
செப்.13,2013. தகுந்த ஆவணங்கள் இன்றி அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைவோரைக் குறித்தும், அதனால் உருவாகும் குடும்பப் பிரிவுகள் குறித்தும் மெக்சிகோ மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மெக்சிகோ ஆயர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லை மறைமாவட்டங்களான Texas மற்றும் New Mexicoவைச் சார்ந்த ஆயர்களும் அண்மையில் நடத்திய ஒரு கூட்டத்தில், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் அனுமதியின்றி நுழையும் ஏராளமான மக்களைக் குறித்து கவலை வெளியிடப்பட்டது.
அனுமதியின்றி நுழைபவர்களால் அதிகம் பாதிக்கப்படுவது குடும்பங்களே என்று கூறிய ஆயர்கள், "எல்லைகளைக்
கடந்த குடும்பம்" என்ற கருத்துடன் இப்பிரச்சனையை மேய்ப்புப்பணி
கண்ணோட்டத்துடன் காணவேண்டும் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தன் முடிவுகளை எடுக்கும் அமெரிக்க அரசு, மனிதாபிமானம், குடும்ப உறவுகள் ஆகிய கண்ணோட்டங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
ஆதாரம் : Fides
6. பிலிப்பின்ஸ் நாட்டில் கடத்தப்பட்ட அருள் பணியாளர் Michael Ofana அவர்கள் விடுவிக்கப்பட்டார்
செப்.13,2013. பிலிப்பின்ஸ் நாட்டின் Mindanao தீவில் நான்கு நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட அருள் பணியாளர் Michael Ofana அவர்கள் இவ்வெள்ளியன்று காலை விடுவிக்கப்பட்டார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
Mindanao தீவில், MNLF எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலால், நான்கு நாட்களுக்கு முன் அருள் பணியாளர் Ofana உட்பட 200 பேர் பிணையக் கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.
இவர்களின் விடுதலைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் 15,000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து Zamboanga நகரில் இவ்வியாழனன்று செப வழிபாடும், அமைதிப் போராட்டமும் மேற்கொண்டனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
கடத்தப்பட்டிருக்கும் பிணையக் கைதிகளின் விடுதலையையொட்டி, MNLF குழுவுக்கும் அரசுக்கும் இடையே அருள் பணியாளர் Ofana ஒரு தூதராகச் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கணிக்கின்றன.
ஆதாரம் : Fides / MISNA
7. Muzaffarnagar பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம், இந்து முஸ்லிம் நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது
செப்.13,2013. கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் இந்து முஸ்லிம் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள Muzaffarnagar பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம், இந்து முஸ்லிம் நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
Muzaffarnagar பகுதியில் இந்துக்கள் அதிகம் வாழும் ஒரு காலனியில் முஸ்தகீம் என்பவர் நடத்திவரும் பால் வியாபாரத்தையும், அவரது குடும்பத்தையும் அப்பகுதியின் இந்துக்கள் நாள் முழுவதும் காவல் காத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
கலவரத்தைக் கேள்விப்பட்ட முஸ்தகீம் அவர்களின் உறவினர் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர் அந்த காலனியில் எவ்வித ஆபத்தும் இன்றி வாழ்வதாக எடுத்துரைத்தார்.
கடந்த
இரு வாரங்களாக இப்பகுதியில் நிகழ்ந்த பல மோதல்களில் இதுவரை 40க்கும்
அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இன்னும் பல்லாயிரம் பேர்
அப்பகுதியைவிட்டு வெளியேறி உள்ளனர் என்றும் செய்திகள் கூறி வருகின்றன.
ஆதாரம் : UCAN/ Ibnlive
8. காங்கோ குடியரசு நாட்டில், இராணுவத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டிருந்த 550க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர்
செப்.13,2013. ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசு நாட்டில், Katanga மாநிலத்தில்
இராணுவத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டிருந்த 550க்கும் மேற்பட்ட
சிறுவர்கள் கடந்த ஐந்து மாதங்களில் விடுவிக்கப்பட்டனர் என்று ஐ.நா. அறிக்கை
ஒன்று கூறியுள்ளது.
UNICEF மற்றும்
ஏனைய சமுதாய அமைப்பினர் அப்பகுதியில் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக மார்ச்
மாதம் முதல் செப்டம்பர் மாதத் துவக்கம் வரை 557 சிறுவர்கள்
காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அலுவலகம் இவ்வியாழனன்று அறிவித்தது.
இவர்களில் 113 சிறுவர்கள் அவர்களுடைய குடும்பங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும், ஏனைய 444 சிறுவர்கள் பாதுகாப்பு மையங்களில் பாராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் ஐ.நா. உயர் அதிகாரி Leila Zerrougui அவர்கள் கூறினார்.
இந்த முயற்சி மகிழ்வை அளித்தாலும், காங்கோ குடியரசில் இன்னும் பல்லாயிரம் சிறுவர்கள் கட்டாய இராணுவப் பயிற்சிகளிலும், பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று Zerrougui அவர்கள் கவலை தெரிவித்தார்.
No comments:
Post a Comment