Friday, 13 September 2013

செய்திகள் - 10.09.13

செய்திகள் - 10.09.13

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: அச்சமின்றி, வெட்கமின்றி இயேசுவை அறிவியுங்கள்

2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

3. உரோம் நகரில் இயேசபையினர் நடத்தும் புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை

4. மனித உரிமைகளும் மத விடுதலையும் நீடித்த அமைதிக்கு இன்றியமையாத கூறுகள்

5. சிரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படலும் அச்சுறுத்தப்படலும்

6. நைஜீரியாவில் ஆங்கிலிக்கன் பேராயர் கடத்தப்பட்டுள்ளார்

7. இலங்கை நிலவரம் குறித்து நவி பிள்ளை மீண்டும் கவலை

8. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதல் இடத்தில் டென்மார்க்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: அச்சமின்றி, வெட்கமின்றி இயேசுவை அறிவியுங்கள்

செப்.10,2013. அச்சமோ, வெட்கமோ, வெற்றி ஆர்ப்பரிப்போ இன்றி கிறிஸ்துவை அறிவிக்க வேண்டும் என கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய்க்கிழமை காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, உயிர்ப்பின்றி கிறிஸ்தவனாக மாறுவதில் இருக்கும் ஆபத்து குறித்து எடுத்துரைத்ததுடன், கிறிஸ்துவே எப்போதும் நம் வாழ்வு மற்றும் நம்பிக்கையின் மையமாக இருக்கிறார் என்பதையும் வலியுறுத்தினார். பாவத்தையும் மரணத்தையும் வென்ற கிறிஸ்துவே வெற்றியாளர், என்று கூறிய திருத்தந்தை, கிறிஸ்துவை அறிவிப்பதில் அச்சம் கொள்வோர், வெட்கப்படுவோர், உயிர்ப்பு குறித்து நம்பாமல் வெறும் வெற்றி ஆர்ப்பரிப்பில் ஈடுபடுவோர் ஆகியோர், உயிர்த்த கிறிஸ்துவைச் சந்திக்காதவர்கள் என்றார்.
ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் இயேசுவே அனைத்தும், அவரே முழுமை, அவரே நம்பிக்கை, அவரே வெற்றியாளர் என மேலும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்

செப்.10,2013. அமைதிக்கான‌ இர‌வு க‌ண்விழிப்பு செப‌ வ‌ழிபாட்டிலும், உண்ணா நோன்பிலும் க‌ல‌ந்துகொண்ட‌ ஒவ்வொருவ‌ருக்கும் என் ந‌ன்றியைத் தெரிவிக்கிறேன். அமைதிக்காகச் செபியுங்க‌ள், என‌ இச்செவ்வாயன்று த‌ன் டுவிட்ட‌ர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்த‌ந்தை பிரான்சிஸ்.
மேலும், திங்க‌ள் மாலை த‌ன் டுவிட்ட‌ர் ப‌க்க‌த்தில், 'அமைதியின் ம‌ற்றும் ந‌ம்பிக்கையின் வார்த்தைக‌ளை கேட்க‌வும், அமைதி ந‌ட‌வ‌டிக்கைக‌ளை பார்க்க‌வும் வேண்டிய‌ தேவை ம‌னித‌குல‌த்திற்கு உள்ள‌து என‌ எழுதியுள்ளார் திருத்த‌ந்தை.

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி

3. உரோம் நகரில் இயேசபையினர் நடத்தும் புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை

செப்.10,2013. வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து, இத்தாலி நாட்டிற்குள் வாழ்வோருக்கென உரோம் நகரில் இயேசுசபையினரால் நடத்தப்படும் பணி மையத்தைச் சென்றுப் பார்வையிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய்க்கிழமை பிற்பகல் உரோம் நகரின் மையப்பகுதியிலுள்ள Astalli புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையம் சென்ற திருத்தந்தை, அங்கு புலம்பெயர்ந்தோர் குழு ஒன்றைச் சந்தித்ததுடன், இயேசு கோவிலுள்ள இயேசு சபையின் முன்னாள் உலகத்தலைவர் அருட்பணி  Pedro Arrupeயின் கல்லறையையும் தரிசித்தார்.
அருட்பணி அருப்பேயின் தூண்டுதலால் 1981ல் துவக்கப்பட்ட இந்த புலம்பெயர்ந்தோர் பராமரிப்பு மையம், ஒவ்வொரு நாளும் 400 அகதிகளுக்கு உணவு வழங்கி வருகிறது. இயேசு சபையினரால் நடத்தப்படும் இந்த மையத்தின் மூலம், புலம்பெயர்ந்தோர் கல்விகற்கவும், வேலைதேடவும், சமூகத்தில் ஒருங்கிணையவும் உதவிகளைப் பெறுகின்றனர்.

ஆதாரம்  :  வத்திக்கான் வானொலி

4. மனித உரிமைகளும் மத விடுதலையும் நீடித்த அமைதிக்கு இன்றியமையாத கூறுகள்

செப்.10,2013. மனித உரிமைகளும் மத விடுதலையும் நீடித்த அமைதிக்கு இன்றியமையாத கூறுகள் என்றார் அமெரிக்க கர்தினால் Theodore McCarrick.
அண்மையில் ஜோர்டன் நாட்டில் பயணம் மேற்கொண்டு திரும்பிய வாஷிங்டனின் முன்னாள் பேராயர் கர்தினால்  McCarrick,  மத்தியக்கிழக்குப்பகுதியில் நீடித்த அமைதி உடன்பாடு இடம்பெற வேண்டுமெனில் மனித உரிமைகள், மதச் சுதந்திரம், எருசலேம் குறித்த உடன்பாடு, அமைதிப்பாதையை ஏற்றுக்கொள்ளல் போன்றவை முக்கியமானவை என்றார்.
அமைதியை உறுதிப்படுத்தும் பாதையில் மதச் சுதந்திரம் குறித்த கேள்வி முக்கிய இடம் வகிக்கிறது எனவும் கூறினார் கர்தினால் McCarrick.
மத்தியக்கிழக்குப்பகுதியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருவது மிகவும் கவலைக்குரிய செய்தியாகும் என்ற கர்தினால் McCarrick, 2003ம் ஆண்டின் போருக்கு முன்னர் இராக்கில் 9 இலட்சத்து 50 ஆயிரமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 2 இலட்சத்து 50 ஆயிரமாகக் குறைந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம்  : CNS

5. சிரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படலும் அச்சுறுத்தப்படலும்

செப்.10,2013. சிரியாவின் Maaloula என்ற கிராமத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள், மூன்று கிறிஸ்தவ இளையோரைக் கொலைசெய்ததுடன், 6 கிரேக்க கத்தோலிக்கர்களை கடத்திச்சென்றுள்ளனர்.
சிரியா நாட்டில், கிறிஸ்தவத்தின் தொட்டிலாகவும், இயேசு பேசிய அரமேய மொழி பேசும் மக்கள் வாழும் ஒரே இடமாகவும் இருக்கும் Maaloula கிராமத்திற்குள் அண்மைக்காலங்களில் இஸ்லாம் தீவிரவாதிகள் புகுந்து கிறிஸ்தவர்களைத் தாக்குவது இடம்பெற்று வருகிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து கிறிஸ்தவர்கள் தங்கள் உடைமைகளையும் குடியிருப்புகளையும் துறந்து வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையே, Maaloula கிராம மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அவ்வாறு மாற மறுப்போர் தலை துண்டிக்கப்படுவர் என அச்சுறுத்தப்படுவதாகவும், அப்பகுதியிலிருந்து தப்பி வந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம்  : AsiaNews

6. நைஜீரியாவில் ஆங்கிலிக்கன் பேராயர் கடத்தப்பட்டுள்ளார்

செப்.10,2013. நைஜீரியாவின் தென்பகுதி நகரிலிருந்து ஆங்கிலிக்கன் பேராயர் ஒருவர் அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
Port Harcourt  என்ற நகரிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட பேராயர் Ignatius Kattey இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அவரின் மனைவி Beatrice Kattey கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிணையத்தொகைக் கேட்டு மக்கள் கடத்தப்படுவது நைஜீரியாவில் வழக்கமேயெனினும், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவசபைப் பேராயரின் விடுதலைக்கென இதுவரை எவரும் பிணையத்தொகை கேட்டு அறிக்கை விடவில்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

ஆதாரம்  : AP

7. இலங்கை நிலவரம் குறித்து நவி பிள்ளை மீண்டும் கவலை

செப்.10,2013. இலங்கையில் தான் மேற்கொண்ட பயணத்தின்போது தன்னைச் சந்தித்தவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், மற்றும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் மீண்டும் கவலையை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24வது மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மை இலங்கை பயணத்தின்போது தன்னைச் சந்தித்த மனித உரிமைக் காவலர்கள், செய்தியாளர்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குறித்து தனது உடனடிக் கவலையையும் இங்கு வலியுறுத்த விழைவதாக ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.
இலங்கையில் அவர் மேற்கொண்ட பயணத்தின்போது அவரைச் சந்தித்த சில மாற்றுக் கருத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனையோர் மிரட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்  : BBC 

8. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: முதல் இடத்தில் டென்மார்க்

செப்.10,2013. உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக டென்மார்க் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
வாழ்க்கையின் எதிர்பார்ப்பு, சமூக ஆதரவு, தாராள மனப்பான்மை, வாழ்க்கை முறையினை தெரிவு செய்வதற்கானச் சுதந்திரம், பொருளாதாரம், ஊழல்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் போன்றவற்றைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் மகிழ்ச்சியான நாடுகளாக கருதப்படுகின்றன.
கிரேக்கம், இத்தாலி, ஜப்பான் ஆகியவை மகிழ்ச்சியற்ற நாடுகளாகவும், டென்மார்க் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும் கருதப்படுகின்றது.
மேலும் இவ்வறிக்கையை எழுதிய ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழக பேராசிரியர் John Helliwell,  ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அந்நாட்டு மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைமுறைதான் என்று தெரிவித்துள்ளார்.

ஆதாரம்  : TamilWin

No comments:

Post a Comment