செய்திகள் - 07.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு கிறிஸ்து, கிறிஸ்தவரின் வாழ்வின் மையம்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : அமைதிக்காகச் செபிப்போம்
3. இத்தாலிய கத்தோலிக்க கழகச் சிறார் திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபம்
4. ஆப்ரிக்கா முழுவதும் அமைதிக்காகச் செபம்
5. சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அப்பகுதி முழுவதையும் எரியச்செய்யும், புனிதபூமி பிரான்சிஸ்கன் அருள்பணியாளர்
6. சிரியா மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் யாரும் விரும்பும் பலன்களைக் கொண்டுவராது, இயேசு சபை அருள்பணியாளர்
7. இலங்கையில் ஐ.நா. மனித உரிமை அவைத் தலைவரைச் சந்தித்த தமிழ் அருள்பணியாளர் காவல்துறையால் நச்சரிப்பு
8. எழுத்தறிவை ஊக்குவிப்பதன்மூலம் இலட்சக்கணக்கானவர்கள் தங்களின் சொந்த வாய்ப்பு அத்தியாயத்தை எழுத முடியும், ஐ.நா.
9. அமைதிக் கலாச்சாரத்தை தனிமனிதர் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம், ஐ.நா. அதிகாரிகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : இயேசு கிறிஸ்து, கிறிஸ்தவரின் வாழ்வின் மையம்
செப்.,07,2013.
கிறிஸ்தவரின் வாழ்வில் இயேசு கிறிஸ்துவே மையமாக இருக்க வேண்டும் என்பது
ஒருபோதும் மறக்கப்படக்கூடாது என்று இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான்
புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
இயேசு இல்லாமல் கிறிஸ்தவராய் இருப்பதன் சோதனையை வெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பக்திமுயற்சிகளைமட்டும் தேடும் கிறிஸ்தவராய் இருக்கும்போது அங்கே இயேசு இருக்கமாட்டார் என்றும் திருப்பலி மறையுரையில் கூறினார்.
கிறிஸ்தவரின் வாழ்வில் இயேசு கிறிஸ்து மையமாக இருக்க வேண்டும் என்பதை இந்நாளைய மறையுரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்து நம் வாழ்வின் மையமாக இருந்து நம்மை புதுப்பிக்கிறார் மற்றும் நம்மை உருவாக்குகிறார் என்றும் தெரிவித்தார்.
நாம் இயேசுவோடு இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் என்னவென்ற கேள்வியையும் எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், பிறவியிலேயே கண்பார்வையிழந்த மனிதர் போன்று, இயேசு முன்னர் மண்டியிட வேண்டும், அவரை நாம் வணங்க இயலவில்லையென்றால் நாம் எதையோ இழக்கிறோம் என்றும் மறையுரையில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : அமைதிக்காகச் செபிப்போம்
செப்.,07,2013. அமைதிக்காகச் செபிப்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis @Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், உலகினர் அனைவரும் அமைதிக்காகச் செபிக்குமாறு தனது டுவிட்டர், செய்திகள் மற்றும் உரைகளில் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகிறார்.
மேலும், நன்மனம்கொண்ட
எல்லா ஆண்களும் பெண்களும் அமைதியை ஏற்படுத்துவதற்கான கடமையைக்
கொண்டிருக்கின்றனர் என இவ்வெள்ளி மாலையில் தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. இத்தாலிய கத்தோலிக்க கழகச் சிறார் திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபம்
செப்.,07,2013.
இத்தாலிய கத்தோலிக்க கழகத்தைச் சேர்ந்த சிறார் இச்சனிக்கிழமை காலையில்
வத்திக்கான் தோட்டத்தில் கூடி திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச்
செபித்து தங்களது சிறிய சிந்தனைகளையும் திருத்தந்தைக்குத் தெரிவித்தனர்.
அன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே,
நாங்கள் இந்தத் தோட்டத்திலிருந்துகொண்டு தங்களோடு சேர்ந்து அமைதிக்காகச்
செபிக்கிறோம் என 12 வயதுச் சிறுமி அரியானா எழுதியிருக்கிறார்.
8 வயது லிண்டா, அன்புள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, இத்தாலி முழுவதிலிமிருந்து உரோம் வந்துள்ள சிறாருடன் இன்று நானும் சேர்ந்துள்ளேன், தாங்களும் இங்கு எங்களோடு வந்து இருந்தால் நன்றாக இருக்கும் என எழுதியிருக்கிறார்.
புனித பேதுரு கல்லறைக்குச் செபம் செய்ய வந்துள்ளேன், அமைதி வெற்றியடையும் என நம்புகிறேன் என 9 வயது மிக்கேலா எழுதியிருக்கிறார்.
இப்படி பல சிறார் எழுதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் கொடுத்துள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. ஆப்ரிக்கா முழுவதும் அமைதிக்காகச் செபம்
செப்.,07,2013. சிரியாவிலும், மத்திய கிழக்கிலும்,
உலகெங்கிலும் அமைதி நிலவச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
விடுத்த அழைப்பை ஏற்று ஆப்ரிக்காவிலுள்ள திருஅவைகள் செபம் மற்றும் நோன்பைக்
கடைப்பிடித்து வருகின்றன.
Gabon நாட்டில் எல்லா ஆலயங்களிலும் விசுவாசிகள் திருநற்கருணை ஆராதனை திருவழிபாடுகளில் பங்குகொண்டு, திருத்தந்தையின் கருத்துக்களுக்காகச் செபிக்கின்றனர்.
தென்னாப்ரிக்காவில் ஆலயங்களில் மட்டுமல்லாமல், சமூகவலைத்தளங்கள் மற்றும் வானொலி மூலமாகவும் செபிக்கப்படும்வேளை, கடும்
இனவாதச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள மாலி நாட்டில் திருத்தந்தையின்
கருத்துக்களுக்காகச் சிறப்பாக விசுவாசிகள் செபிக்கின்றனர்.
மேலும், உலகெங்கிலும் இருக்கின்ற இரானிய ஷியா இஸ்லாம் பிரிவினர், பாஹாய் பிரிவினர், கிறிஸ்தவர்கள், இன்னும், இந்தியாவில்
கிறிஸ்தவர்கள் இந்துக்கள் என உலகினர் அனைவரும் திருத்தந்தையின் அமைதிக்கான
கருத்துக்களுக்காகச் சிறப்பாகச் செபிக்கின்றனர்.
ஆதாரம் : Fides
5. சிரியா மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் அப்பகுதி முழுவதையும் எரியச்செய்யும், புனிதபூமி பிரான்சிஸ்கன் அருள்பணியாளர்
செப்.,07,2013.
சிரியா மீது அமெரிக்க ஐக்கிய நாடு தாக்குதல்களை நடத்தினால் அது மத்திய
கிழக்குப்பகுதி முழுவதையும் கொழுந்துவிட்டெரியச் செய்யும் என தன்னோடு
சேர்ந்த கிறிஸ்தவர்கள் கவலைகொண்டுள்ளதாக, புனிதபூமியிலுள்ள பிரான்சிஸ்கன் அருள்பணியாளர் Peter Vasko கூறினார்.
சிரியாவில் அமெரிக்க ஐக்கிய நாடு இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கினால், இரான் இஸ்ரேல்மீது ஏதாவது தாக்குதலை நடத்தும், இப்படி, தொடர் இரத்தம் சிந்துதல் இடம்பெறும் என எச்சரித்துள்ளார் அருள்பணியாளர் Vasko.
புனிதபூமியில்
வாழும் பாலஸ்தீனியர்களும் பிற கிறிஸ்தவர்களும் எதிர்நோக்கும் சவால்கள்
குறித்து விளக்குவதற்காக அமெரிக்க ஐக்கிய நாட்டில் 13 நகரங்களில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் அமெரிக்கரான அருள்பணியாளர் Vasko இவ்வாறு கூறினார்.
எருசலேமில் 27 ஆண்டுகளாக மறைப்பணியாற்றிவரும் அருள்பணியாளர் Vasko புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் துன்பங்கள் குறித்து நன்றாகவே அறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : CNS
6. சிரியா மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் யாரும் விரும்பும் பலன்களைக் கொண்டுவராது, இயேசு சபை அருள்பணியாளர்
செப்.,07,2013. சிரியா மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் யாரும் விரும்பும் பலன்களைக் கொண்டுவராது, மாறாக, அதில் ஒவ்வொருவருமே இழப்பவராக இருப்பார்கள், வெற்றி பெறுபவர்களாக யாருமே இருக்க மாட்டார்கள் என்று இயேசு சபை அகதிப்பணியின் தலைவர் எச்சரித்தார்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கப் பகுதிக்கான இயேசு சபை அகதிப்பணியின் இயக்குனர் அருள்பணியாளர் Nawras Sammour, Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்துக்கு, தமாஸ்கு நகரத்திலிருந்து அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தமாஸ்கில்
வாழும் ஒவ்வொருவரும் வெளிநாட்டு இராணுவத் தாக்குதல்கள் நடைபெறக்கூடும்
என்ற அச்சத்தில் வாழ்வதாகத் தெரிவித்த அருள்பணியாளர் Sammour, சிரியாவின் பிரச்சனைகள் வெளிநாட்டு இராணுவத் தாக்குதல்களால் தீர்க்கப்பட முடியாத சிக்கல் நிறைந்த பிரச்சனையாகும் என்றும், இதனால் யாரும் நீண்டகாலப் பலன்களை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்.
இயேசு
சபையினர் சிரியாவின் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி
வருகின்றனர். இக்குடும்பங்களில் 80 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.
ஆதாரம் : Zenit
7. இலங்கையில் ஐ.நா. மனித உரிமை அவைத் தலைவரைச் சந்தித்த தமிழ் அருள்பணியாளர் காவல்துறையால் நச்சரிப்பு
செப்.,07,2013. இலங்கை அரசை விமர்சனம் செய்பவர்களின் பேச்சு சுதந்திரமும், வெளிப்படுத்தும் சுதந்திரமும் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன என்று பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இலங்கைக்கு
அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை அவைத் தலைவர்
நவநீதம்பிள்ளை அவர்களைச் சந்தித்த இயேசு சபை தமிழ் அருள்பணியாளர் Veerasan Yogeswaran அவர்களை, காவல்துறை பல மணிநேரங்கள் கேள்விகளால் நச்சரித்துள்ளது.
அருள்பணியாளர் Yogeswaran வாழும் இல்லத்துக்குச் சாதாரண ஆடையில் இரவில் சென்ற காவல்துறை, நவநீதம்பிள்ளையிடம் அவர் என்ன கூறினார் என்று பல மணிநேரங்கள் கேட்டு நச்சரித்ததாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
60 வயதாகும் இயேசு சபை அருள்பணியாளர் Yogeswaran கிழக்கு மாநிலத்தில் மனித உரிமைகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஆதாரம் : AsiaNews
8. எழுத்தறிவை ஊக்குவிப்பதன்மூலம் இலட்சக்கணக்கானவர்கள் தங்களின் சொந்த வாய்ப்பு அத்தியாயத்தை எழுத முடியும், ஐ.நா.
செப்.,07,2013. இன்று உலகில் எழுத வாசிக்கத் தெரியாமல் இருக்கும் 77 கோடியே 30 இலட்சம் இளையோர் மற்றும் வயதுவந்தோர், தங்களுக்கான வேலை வாய்ப்புக்களைப் பெற முடியாமலும், பேருந்துகளின் எண்களைக்கூட வாசிக்கத் தெரியாமலும் உள்ளனர் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக எழுத்தறிவு நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், இன்று உலகில் எழுத வாசிக்கத் தெரியாதவர்களில் மூன்றில் இரண்டு பாகமாக இருக்கும் பெண்கள், சமூகத்தில் முழுமையாக ஈடுபட இயலாமல் இருக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.
கல்வியறிவை வழங்குவதில் நாம் முதலீடு செய்யும்போது மனித மாண்பு, முன்னேற்றம், அமைதி ஆகியவற்றில் முதலீடு செய்கின்றோம் எனவும், ஒவ்வொரு
குழந்தையும் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை வழங்கும் உலகளாவிய கல்வி என்ற
நடவடிக்கையை முதன்முதலாகத் தான் தொடங்கிவைத்திருப்பதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் வயதுடைய குறைந்தது 25 கோடிச் சிறார்க்கு எழுத வாசிக்கத் தெரியாது, இவர்களில் பாதிச் சிறார் நான்காம் வகுப்பை முடிக்கு முன்னரே படிப்பை நிறுத்தி விட்டனர் எனவும் கூறியுள்ள பான் கி மூன், நடுத்தரப் பள்ளிப் படிப்பை முடித்துள்ள மேலும் 20 கோடி வளர்பருவத்தினருக்கு அடிப்படை கல்வியறிவுத் திறமைகள் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்
கல்வியறிவை வளர்ப்பதற்கு நாடுகள் முன்னுரிமை கொடுக்குமாறு இந்த அனைத்துலக எழுத்தறிவு நாளில் கேட்பதாக தனது செய்தி கூறியுள்ள வெளியிட்டுள்ளார் பான் கி மூன்.
செப்டம்பர் 8, அனைத்துலக எழுத்தறிவு தினமாகும்.
ஆதாரம் : UN
9. அமைதிக் கலாச்சாரத்தை தனிமனிதர் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம், ஐ.நா. அதிகாரிகள்
செப்.,07,2013.
அமைதிக் கலாச்சாரம் எல்லைகளைக் கடந்து புரிந்துகொள்ளப்படுவதற்கு
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அறநெறி மற்றும் அரசியல்ரீதியான கடமை உள்ளது
என்று, அமைதிக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் ஐ.நா.பொது அவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
அமைதிக்
கலாச்சாரம் குறித்த ஐ.நா. செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி
இவ்வெள்ளியன்று நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்டக்
கூட்டத்தில் பேசிய, ஐ.நா. உதவிப் பொதுச்செயலர் யான் எலியாசன், கடும் சவால்கள் நிறைந்துள்ள இன்றைய உலகில், வன்முறைகள் புறக்கணிக்கப்பட்டு உரையாடலை ஊக்குவிக்க வேண்டியது சமயத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அனைவரின் கடமை என்பதை வலியுறுத்தினார்.
மில்லென்ய வளர்ச்சித்திட்ட இலக்குகளை செயல்படுத்துவதற்கான ஆயிரம் நாள் நடவடிக்கைகளை ஐ.நா. நிறைவேற்றியுள்ள இவ்வேளையில், கடும் ஏழ்மையிலும், ஒதுக்கப்பட்ட நிலையிலும் வாழும் மக்களுக்கு அமைதிக் கலாச்சாரம் முக்கிய அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்றும் எலியாசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment