செய்திகள் - 20.02.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : மூவொரு கடவுளாக விளங்கும் தன் இயல்பின் பிம்பமாக இறைவன் குடும்பத்தை உருவாக்கினார்
2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஒரு மாணவராக, அவரைப் பற்றிய அறிவை வளர்ப்பதற்குப் பதில், ஒரு சீடராக அவரைப் பின்பற்றுவதையே இயேசு விரும்புகிறார்
3. திருத்தந்தை பிரான்சிஸ் Twitter செய்தி : நீர் அன்பு கூர்வதுபோல் நாங்களும் அன்பு கூரும் திறமையை வழங்கியருளும்
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறைக்கைதிகளுடன் சந்திப்பு
5. திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ள முன்னுரை - "நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விலையேறப்பெற்றவர்கள்"
6. "ஏழைகளுக்காய் ஏழையாய்: திருஅவையின் மறைப்பணி" - விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் எழுதியுள்ள நூல்
7. திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் 8 கர்தினால்களின் கூட்டம், வருகிற ஏப்ரல் மாதம் மீண்டும் கூடும்
8. சமயங்களின் முக்கியப் பங்களிப்பை உணரும்போதுதான் இஸ்ரேல், பாலஸ்தீனயர்களுக்கிடையே தீர்வுகள் காணப்படும்
9.
லாகூர் உயர்மறை மாவட்டத்தில் புதிய பேராயர் பொறுப்பேற்றது புது வசந்தத்தை
உருவாக்கியுள்ளது - பாகிஸ்தான் நாட்டுக்கான திருப்பீடத் தூதர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : மூவொரு கடவுளாக விளங்கும் தன் இயல்பின் பிம்பமாக இறைவன் குடும்பத்தை உருவாக்கினார்
பிப்.20,2014.
சமுதாயத்தின் மிக அடிப்படையான கட்டமைப்பான குடும்பத்தைப் பற்றி நாம் இந்த
நாட்களில் சிந்திப்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
வத்திக்கானில் கூடியிருந்த கர்தினால்களிடம் கூறினார்.
உலகின் பல நாடுகளிலும் பணியாற்றும் கர்தினால்கள், பிப்ரவரி 20, 21 ஆகிய இரு நாட்கள் திருத்தந்தையுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட வத்திக்கானுக்கு வந்துள்ளனர்.
ஏறத்தாழ
185 பேர் அடங்கிய இந்த கர்தினால்கள் அவையின் உறுப்பினர்களை வத்திக்கானில்
இவ்வியாழன் காலை 9.30 மணியளவில் சந்தித்தத் திருத்தந்தை, அனைவரையும் வாழ்த்தி வரவேற்றதுடன், வருகிற சனிக்கிழமை கர்தினால்கலாகப் பொறுப்பேற்கும் புதிய கர்தினால்களையும் சிறப்பாக வரவேற்றுப் பேசினார்.
படைப்பின் துவக்கத்தில் மனித இனத்தை ஆண் என்றும், பெண் என்றும் படைத்து, குடும்பத்தை உருவாக்கிய இறைவன், மூவொரு கடவுளாக விளங்கும் தன் இயல்பின் பிம்பமாக குடும்பத்தை உருவாக்கினார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட இறையியலை நாம் ஆழப்படுத்தவும், இன்றைய
உலகில் குடும்பங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மேய்ப்பர்கள்
என்ற கோணத்தில் தீர்வுகளைத் தேடவும் நாம் கூடியிருக்கிறோம் என்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கர்தினால்கள் அவை கூட்டத்தின் நோக்கத்தைத்
தெளிவுபடுத்தினார்.
இறைவன் மனிதர்களுக்கென வகுத்துள்ள திட்டங்களை குடும்ப உறவுகளின் வழியே மக்கள் உணர்வதற்கும், அவர்கள் இறைவனின் திட்டத்தை மகிழ்வுடன் ஏற்று, அதன்படி தங்கள் வாழ்வை அமைப்பதற்கும் நமது கலந்துரையாடல் உதவ வேண்டும் என்று திருத்தந்தை தன் ஆவலை வெளியிட்டார்.
இவ்வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் நடைபெறும் கர்தினால்கள் அவையின் அமர்வுகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 4.30 மணியிலிருந்து மாலை 7 மணி வரையிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : ஒரு மாணவராக, அவரைப் பற்றிய அறிவை வளர்ப்பதற்குப் பதில், ஒரு சீடராக அவரைப் பின்பற்றுவதையே இயேசு விரும்புகிறார்
பிப்.20,2014. இயேசுவை ஒரு பாடநூலாகப் படிப்பதைவிட, அவரைப் பின் செல்வதையே அவர் புரிந்துகொள்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார்.
பிப்ரவரி 20, இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், தன்னை யாரென்று மக்களும் சீடர்களும் கூறுகின்றனர் என்பதை அறிய இயேசு எழுப்பிய கேள்விகளை திருத்தந்தை தன் மறையுரையின் மையமாக்கினார்.
ஒரு மாணவராக மாறி, இயேசுவைப் பற்றிய அறிவை வளர்ப்பதற்குப் பதில், ஒரு சீடராக மாறி, அவரை பின்பற்றுவதையே இயேசு விரும்புகிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இயேசுவைப் பின்பற்றும் வேளையில், நெருக்கடிகள், தவறுகள், காட்டிக் கொடுத்தல் என்ற பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும், அவரைத் தொடர்வது ஒன்றே உண்மையான சீடரின் அடையாளம் என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார்.
"என்னைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்" என்று இயேசு தன் சீடர்களுக்குக் கூறவில்லை; மாறாக, "என் பின்னே வாருங்கள்" என்றே அவர்களை அழைத்தார் என்பதை திருத்தந்தை தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.
நம் அறிவுப் பசியைத் தீர்க்கும் வண்ணம் இயேசுவைப் பற்றி புரிந்துகொள்வதைவிட, நம் உள்ளத்து வேட்கையுடன் அவரை பின்செல்ல, நமது தனிப்பட்ட வலிமை மட்டும் போதாது; தூய ஆவியாரின் துணையும் நமக்கு வேண்டும் என்று திருத்தந்தை தன் மறையுரையின் இறுதியில் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் Twitter செய்தி : நீர் அன்பு கூர்வதுபோல் நாங்களும் அன்பு கூரும் திறமையை வழங்கியருளும்
பிப்.20,2014. இயேசுவே ஆண்டவரே, நீர் அன்பு கூர்வதுபோல் நாங்களும் அன்பு கூரும் திறமையை எங்களுக்கு வழங்கியருளும் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று, இத்தாலியம், பிரெஞ்ச், ஆங்கிலம், அரேபியம் உட்பட, ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார்.
மேலும், வருகிற மார்ச் மாதம் 28ம் தேதி, போலந்து நாட்டின் Krakow நகரில் அமைந்துள்ள மரியன்னை பேராலயத்தின் 650ம் ஆண்டு நிறைவு விழாவில், திருத்தந்தையின் சார்பில், கர்தினால் Stanislaw Rylko அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநிலையினரின் பணிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Rylko அவர்களை, வரலாற்று சிறப்பு மிக்க இப்பேராலய விழாவில், தன் சார்பில் கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.
விண்ணேற்பு மரியன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட இப்பேராலயம், 13ம் நூற்றாண்டில் துவக்கப்பட்டு, 14ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டி முடிக்கப்பட்டது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறைக்கைதிகளுடன் சந்திப்பு
பிப்.20,2014. "கட்டுகளை அவிழ்த்துவிடும் நமது அன்னை மரியா" என்ற பெயரில், புனித மார்த்தா இல்லத்தில் அமைந்துள்ள ஒரு படத்திற்கு முன்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலையில் சிறைக்கைதிகள் சிலரைச் சந்தித்தார்.
இத்தாலியின் Pisa மற்றும் Pianosa என்ற இரு சிறைகளில் உள்ள 19 கைதிகளை, பிப்ரவரி 19, இப்புதன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தங்கியிருக்கும் புனித மார்த்தா இல்லத்தில், தன் புதன் பொது மறையுரைக்கு முன்னர், சந்தித்தார்.
இவ்விரு சிறைகளிலிருந்து உரோம் நகருக்கு ஆன்மீகப் பயணமாக வந்திருந்த இக்கைதிகளுக்கு, வத்திக்கான் தோட்டத்தில் அமைந்துள்ள மரியன்னையின் கெபியில் காலை 7 மணியளவில் பேராயர் Lorenzo Baldisseri அவர்கள் திருப்பலியாற்றினார்.
கைதிகளின் வரவைக் குறித்து கேள்வியுற்றத் திருத்தந்தை, தான் அவர்களைச் சந்திக்க விழைவதாகக் கூறியதால், புனித மார்த்தா இல்லத்தில் இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது என்று வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறுகிறது.
இறைவனின் கருணையையும் மன்னிப்பையும் கோரி, அக்கைதிகளில் ஒருவர் எழுதியிருந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட திருத்தந்தை, அவர்கள் அனைவரோடும் ஏறத்தாழ 45 நிமிடங்கள் உரையாடினார்.
"கட்டுகளை அவிழ்த்துவிடும் நமது அன்னை மரியா"வின் மீது தனக்குள்ள பக்தியை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த அன்னையின் திரு உருவத்திற்கு முன்பாக அக்கைதிகளுக்கு தன் ஆசீரை வழங்கினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை பிரான்சிஸ் எழுதியுள்ள முன்னுரை - "நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விலையேறப்பெற்றவர்கள்"
பிப்.20,2014. 'வறுமை' என்ற வார்த்தையைக் கேட்டு, சங்கடப்படாதவர்கள் நம்மில் யாருண்டு? என்ற கேள்வியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பியுள்ளார்.
விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller அவர்கள், "ஏழைகளுக்காய்
ஏழையாய்: திருஅவையின் மறைப்பணி" என்ற பெயரில் எழுதியுள்ள ஒரு நூலுக்கு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் இக்கேள்வியை
எழுப்பியுள்ளார்.
"நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் விலையேறப்பெற்றவர்கள்" என்ற தலைப்புடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள இந்த முன்னுரையில், ஆன்மீகம், சமுதாயம், நன்னெறி என்ற பல நிலைகளில் வறுமை ஆக்கிரமிப்பு செய்தாலும், பொருளாதார வறுமையை மட்டுமே இவ்வுலக அரசுகள், குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறியுள்ள நாடுகள் பெரிதுபடுத்துகின்றன என்று கூறியுள்ளார்.
இவ்வுலகைக் கடந்த ஒரு நிலையைக் குறித்து சற்றும் சிந்திக்காமல், இறைவனுக்கு நிகரான ஓர் இடத்தை செல்வத்திற்கு அளிப்பதால், இவ்வுலகம் மிகவும் வறுமைப்பட்டு நிற்கிறது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னைச் சுற்றியுள்ள செல்வத்தை மட்டுமே நம்பி, இறைவனைச் சாராமல் வாழும் மக்களுக்கு மாறாக, வறியோர் இறைவனைச் சார்ந்து வாழ்வதனால், அவர்களைப் 'பேறுபெற்றோர்' என்று இயேசு அழைத்திருப்பதை திருஅவை தன் பணிகளில் உணர்த்தவேண்டும் என்பதை பேராயர் Ludwig Müller அவர்கள் தன் நூலில் வெளிப்படுத்தியிருப்பதற்கு திருத்தந்தை தன் மகிழ்வை வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 22, வருகிற சனிக்கிழமையன்று கர்தினாலாகப் பொறுப்பேற்கும் பேராயர் Ludwig Müller அவர்கள் எழுதியுள்ள இந்நூல், பிப்ரவரி 25, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. "ஏழைகளுக்காய் ஏழையாய்: திருஅவையின் மறைப்பணி" - விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் எழுதியுள்ள நூல்
பிப்.20,2014. “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே” என்று இயேசு கூறியதன் பொருளை தான் பெரு நாட்டில் லீமா நகரின் சேரிகளில் கண்டதாக வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வருகிற சனிக்கிழமை கர்தினாலாகப் பொறுப்பேற்கவிருக்கும் விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller அவர்கள், "ஏழைகளுக்காய் ஏழையாய்: திருஅவையின் மறைப்பணி" என்ற தலைப்பில், பிப்ரவரி 25ம் தேதி வெளியிடவிருக்கும் நூலில் இவ்வாறு கூறியுள்ளார்.
"சாலையின் ஓரத்தில் மீட்பு ஆரம்பமாகிறது" என்ற தலைப்பில், இந்நூலின் முதல் பிரிவில் பேராயர் Müller அவர்கள் எழுதியுள்ள கருத்துக்களின் சுருக்கத்தை, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano வெளியிட்டுள்ளது.
இறைவனின் அன்பும், செயல்பாடும் வறுமையில் சிக்கியுள்ளவர்களை மட்டும் விடுவிப்பதில்லை, ஏனையோரை வறுமையில் கட்டிவைக்கும் செல்வரையும், பேராசையிலிருந்தும், செல்வம் என்ற பொய் தெய்வ வழிபாட்டிலிருந்தும் விடுவிக்கின்றது என்று பேராயர் Müller எடுத்துரைத்துள்ளார்.
300க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட இந்நூல், வத்திக்கான் நூலகத்தின் வெளியீடாக பிப்ரவரி 25, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் 8 கர்தினால்களின் கூட்டம், வருகிற ஏப்ரல் மாதம் மீண்டும் கூடும்
பிப்.20,2014. திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் 8 கர்தினால்களின் கூட்டம் வருகிற ஏப்ரல் மாதம், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் அவர்களின் புனிதர் நிலைத் திருச்சடங்குகளுக்குப் பின்னர், 28ம் தேதி முதல் 30ம் தேதி முடிய மீண்டும் கூடும் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
இத்திங்கள் முதல் புதன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் 8 கர்தினால்கள் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டங்களில், வத்திக்கான்
வங்கி என்று பரவலாகக் அழைக்கப்படும் சமயப்பணி நிறுவனத்தின் செயல்பாடுகள்
குறித்த ஆழ்ந்த ஆய்வு ஒன்று நடைபெற்றது என்று கூறிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், இந்த ஆய்வுகளின் கருத்துக்கள் திருத்தந்தையின் கவனத்திற்கென சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
குறிப்பாக, செவ்வாய், புதன் ஆகிய இரு நாட்கள், சமயப்பணி நிறுவனத்தின் உறுப்பினர்களையும் இணைத்து 15 பேர் கொண்ட குழு, திருத்தந்தையுடன் தீவிர கலந்துரையாடலில் ஈடுபட்டது என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் தெளிவுபடுத்தினார்.
கர்தினால்களின் ஆலோசனைக் கூட்டம் இனியும் தொடரும் என்று கூறிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், வருகிற ஏப்ரல் 28 முதல் 30ம் தேதி, மற்றும் ஜூலை 1 முதல் 4ம் தேதி ஆகிய நாட்களில் அடுத்த இரு கூட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. சமயங்களின் முக்கியப் பங்களிப்பை உணரும்போதுதான் இஸ்ரேல், பாலஸ்தீனயர்களுக்கிடையே தீர்வுகள் காணப்படும்
பிப்.20,2014. புனித பூமியில் ஊறியிருக்கும் ஆன்மீகப் பரிமாணத்தைக் கருத்தில் கொள்ளாமல், இங்கு நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.
சமயங்களின் முக்கியப் பங்களிப்பை உணரும்போதுதான் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாட்டவருக்குமிடையெ நிலவிவரும் போராட்டங்களுக்குத் தீர்வுகள் காணப்படும் என்று பேராயர் Fouad Twal அவர்கள் வெளியிட்ட கருத்தை Fides செய்தி இப்புதனன்று வெளியிட்டது.
இஸ்ரேல்
பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே மீண்டும் ஒப்புரவை உருவாக்க அமெரிக்க
அரசின் வெளியுறவுத் துறை மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாக, பேராயர் Fouad Twal அவர்கள் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எந்த ஒரு நாட்டிலும் அமைதி ஆழப்படுவதற்கு அங்கு நிலவும் மத நம்பிக்கை முக்கியமான பங்காற்றவேண்டும் என்று கூறிய பேராயர் Fouad Twal அவர்கள், மேமாதம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமிக்கு வரும் நேரத்தில் இந்த
அமைதியை நோக்கி இரு நாடுகளும் பயணிக்கவேண்டும் என்று தன் வேண்டுகோளை
விடுத்தார்.
ஆதாரம் : Fides
9.
லாகூர் உயர்மறை மாவட்டத்தில் புதிய பேராயர் பொறுப்பேற்றது புது வசந்தத்தை
உருவாக்கியுள்ளது - பாகிஸ்தான் நாட்டுக்கான திருப்பீடத் தூதர்
பிப்.20,2014.
பாகிஸ்தானின் லாகூர் உயர்மறை மாவட்டத்தில் புதிய பேராயர் பொறுப்பேற்ற
நிகழ்வு ஒரு புது வசந்தத்தை உருவாக்கியுள்ளது என்று பாகிஸ்தான் நாட்டுக்கான
திருப்பீடத் தூதர் பேராயர் Edgar Pena Parra அவர்கள் கூறினார்.
லாகூரின் புதியப் பேராயராக, Sebastian Francis Shaw அவர்கள் பொறுப்பேற்ற திருப்பலியில் உரையாற்றிய பேராயர் Pena Parra அவர்கள், இந்த நிகழ்வு, லாகூர் உயர் மறைமாவட்டத்திற்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் முழுமைக்கும் நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வு என்று கூறினார்.
1880ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 134 ஆண்டுகளாக, பல்வேறு
போராட்டங்கள் மத்தியில் வளர்ந்துவந்துள்ள லாகூர் உயர் மறைமாவட்டம்
நற்செய்திப் பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்பதை
பேராயர் Pena Parra அவர்கள் எடுத்துரைத்தார்.
1950ம் ஆண்டு இரு மறைமாவட்ட அருள் பணியாளர்களையும், 78,000 கத்தொலிக்கர்களையும் கொண்டிருந்த லாகூர் மறைமாவட்டம், தற்போது 30 மறைமாவட்ட அருள் பணியாளரையும், 5,70,000 கத்தோலிக்கர்களையும் கொண்டுள்ளது என்று பேராயர் Pena Parra அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
1957ம் ஆண்டு பிறந்த பேராயர் Shaw அவர்கள், 1991ம் ஆண்டு குருவாகவும், 2009ம் ஆண்டு லாகூர் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். கடந்த வாரம், பிப்ரவரி 14ம் தேதியன்று அவர் பேராயராகப் பொறுப்பேற்றார்.
No comments:
Post a Comment