செய்திகள் -19.02.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அருள் பணியாளர் Lombardi - 8 கர்தினால்கள் குழுவின் செயல்பாடுகள்
2. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான்பால் உருவங்கள் பதிக்கப்பட்ட தபால் வில்லைகள்
3. சிங்கப்பூர் பேராயர் William Goh - பணியிடங்களில் செபம் சேரும்போது, அங்கு மகிழ்வும், நிறைவும் பொங்கும்
4. "வாழ்வுக்கென நாற்பது நாள் செபம்" - தென்கொரியத் தலத்திருஅவையின் தவக்கால முயற்சி
5. ராஞ்சி உயர்மறைமாவட்டத்தில் கொலையுண்ட இயேசு சபை அருள் பணியாளரின் 50ம் ஆண்டு நினைவு கொண்டாட்டம்
6. அணு ஆயுத எதிர்ப்பு - அருள் சகோதரிக்கு மூன்றாண்டுகள் சிறை
7. குடும்ப விவசாயம், ஆப்ரிக்காவின் மிக முக்கியமான தேவை - FAO தலைமை இயக்குனர்
8. மாற்று எரிபொருள் ஆய்வில் சென்னையைச் சேர்ந்த இரு மாணவர்கள் வெற்றி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அருள் பணியாளர் Lombardi - 8 கர்தினால்கள் குழுவின் செயல்பாடுகள்
பிப்.19,2014. பிப்ரவரி 20, 21 ஆகிய நாட்களில் வத்திக்கானில் கூடும் கர்தினால்கள் அவையினர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் மேற்கொள்ளும் விவாதங்கள், வருகிற
அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கு தயாரிப்பாக
அமையும் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள் பணியாளர் Federico Lombardi அவர்கள் கூறினார்.
பிப்ரவரி 17 இத்திங்கள் முதல் 19, இப்புதன்
முடிய திருத்தந்தையுடன் ஆலோசனைகளைப் பகிர்வதற்குக் கூடியிருக்கும் 8
கர்தினால்கள் குழுவைக் குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இயேசு
சபை அருள் பணியாளர் Lombardi அவர்கள், இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் வத்திக்கானில் நடைபெறும் கர்தினால்கள் கூட்டத்தைக் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
வத்திக்கான் வங்கி என்று பொதுவாகப் பெயர்பெற்றுள்ள IOR எனப்படும் சமயப்பணிகள் நிறுவனத்தின் செயல்பாடுகளைக் குறித்து திருத்தந்தை அவர்கள் எட்டுக் கர்தினால்களுடனும், இந்நிறுவனத்தின் உறுப்பினர்களுடனும் உரையாடல்கள் மேற்கொண்டார் என்று கூறிய அருள் பணியாளர் Lombardi அவர்கள், இந்நிறுவனத்தின் மறுபரிசீலனை இன்னும் தொடரும் என்பதை மட்டும் குறிப்பிட்டார்.
திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கக் கூடியுள்ள இந்த 8 கர்தினால்கள் குழுவுடன், திருப்பீடச் செயலர், பேராயர் Pietro Parolin அவர்களும் இக்கூட்டங்களில் கலந்துகொண்டார் என்றும் அருள் பணியாளர் Lombardi அவர்கள் அறிவித்தார்.
இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் நடைபெறும் கர்தினால்கள் அவை கூட்டத்திற்குப் பிறகு, பிப்ரவரி 22, சனிக்கிழமை, திருத்தூதர் பேதுருவின் தலைமைப்பீடத் திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேலும் 19 பேரை கர்தினால்களாக உயர்த்தும் திருச்சடங்கு நடைபெறும்.
பிப்ரவரி 23, ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய கர்தினால்களுடன் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியாற்றுவார்.
ஆதாரம் வத்திக்கான் வானொலி
2. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான்பால் உருவங்கள் பதிக்கப்பட்ட தபால் வில்லைகள்
பிப்.19,2014. முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான் அவர்களும், 2ம் ஜான்பால் அவர்களும் ஏப்ரல் 27, ஞாயிறன்று புனிதர்களாக உயர்த்தப்படவிருக்கும் தருணத்தையோட்டி, அவர்கள் உருவங்கள் பதிக்கப்பட்ட தபால் வில்லைகள் வருகிற மார்ச் 21ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை 1962ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கி, திருஅவையில் புத்துணர்வைக் கொணர்ந்த திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், "நல்ல திருத்தந்தை ஜான்" என்று மக்களால் புகழப்பட்டு, 1963ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.
கத்தோலிக்கத் திருஅவையை மூன்றாவது மில்லென்னியத்திற்குள் அழைத்து வந்த திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், வேறு எந்தத் திருத்தந்தையும் மேற்கொள்ளாத அளவு திருப்பயணங்களை உலகெங்கும் மேற்கொண்டு, மக்களை, குறிப்பாக, இளையோரை பெருமளவில் கவர்ந்தவர்.
15 இலட்சம் என்ற எண்ணிக்கையில் அச்சிடப்படும் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களின் தபால் தலைகள், வத்திக்கானிலும், போலந்து நாட்டிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் வத்திக்கான் வானொலி
3. சிங்கப்பூர் பேராயர் William Goh - பணியிடங்களில் செபம் சேரும்போது, அங்கு மகிழ்வும், நிறைவும் பொங்கும்
பிப்.19,2014. நமது பணியிடங்களில் செபம் சேரும்போது, அங்கு மகிழ்வும், நிறைவும் பொங்கும் என்றும், செபம் இல்லாமல் செய்யப்படும் பணிகள் விரைவில் மனச் சோர்வை உருவாக்கும் என்று சிங்கப்பூர் பேராயர் William Goh அவர்கள் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் உயர்மறைமாவட்டத்தின் பல்வேறு அலுவலகங்களில் செயலாற்றும் பணியாளர்கள், ஒவ்வொரு நாள் காலையிலும் செபத்துடன் தங்கள் அலுவல்களைத் துவங்கும்படி வேண்டுகோள் விடுத்து, பேராயர் William Goh அவர்கள் அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
செபத்தைக்
குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள்
தன் மடலுக்குப் பின்னணியாக அமைந்ததென்று கூறும் பேராயர் William Goh அவர்கள், இல்லங்களிலும், இன்னும் பல குழுக்கள் வடிவிலும் செபம் செய்யும் பழக்கம் வளர்க்கப்படவேண்டும் என்று தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரம் Fides
4. "வாழ்வுக்கென நாற்பது நாள் செபம்" - தென்கொரியத் தலத்திருஅவையின் தவக்கால முயற்சி
பிப்.19,2014.
"வாழ்வுக்கென நாற்பது நாள் செபம்" என்ற முயற்சியை தென் கொரியத்
தலத்திருஅவை திருநீற்றுப் புதன் அன்று துவங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
1973ம்
ஆண்டு தென் கொரிய அரசு உருவாக்கிய கருக்கலைப்பு சட்டத்தை தடைசெய்யும்
கருத்துடன் மார்ச் 5ம் தேதி திருநீற்று புதனன்று அனைத்து கத்தோலிக்கக்
கோவில்களிலும் நாற்பது நாள் செப முயற்சிகள் துவங்கும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாதங்களில் கொரியத் தலத்திருஅவை வாழ்வை நிலைநாட்டும் பல செயல் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4 கோடியே 87 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தென் கொரியாவில், ஒவ்வோர் ஆண்டும் 3,40,000 பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர் என்ற விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும், அங்கு நடைபெறும் கருக்கலைப்புக்கள், ஏறத்தாழ 15 இலட்சம் என்று தலத் திருஅவை கூறிவருகிறது.
ஆதாரம் Fides
5. ராஞ்சி உயர்மறைமாவட்டத்தில் கொலையுண்ட இயேசு சபை அருள் பணியாளரின் 50ம் ஆண்டு நினைவு கொண்டாட்டம்
பிப்.19,2014.
வடஇந்தியாவில் 1964ம் ஆண்டு கொலையுண்ட இயேசு சபை அருள் பணியாளரின் 50ம்
ஆண்டு நினைவைக் கொண்டாடும் முயற்சியில் ராஞ்சி உயர்மறைமாவட்டம்
ஈடுபட்டுள்ளது.
1947ம் ஆண்டு முதல் ராஞ்சி பகுதியில் உழைத்த இயேசு சபை அருள் பணியாளர் Herman Rasschaert அவர்கள், 1964ம் ஆண்டு நிகழ்ந்த மதக்கலவரத்தின்போது, மார்ச் 24ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
1964ம் ஆண்டு சனவரி மாதம் முதல் கிழக்கு பாகிஸ்தான் என்று அப்போது வழங்கப்பட்ட பகுதியில் நிகழ்ந்த கலவரங்களில் காயப்பட்ட இந்துக்கள், இந்தியாவுக்கு வந்து சேர்ந்ததால், அதைக் கண்ட மக்கள், இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொண்டனர்.
1964ம் ஆண்டு, Gerda என்ற ஊரில், முஸ்லிம்கள் தஞ்சம் அடைந்த ஒரு தொழுகைக் கூடத்தை, ஏனைய பழங்குடி மக்கள் சூழ்ந்து அவர்களைக் கொல்வதற்கு முயன்றபோது, அருள் பணியாளர் Rasschaert அவர்கள், இடைமறித்து அமைதியை நிலைநாட்ட முயன்றார் என்றும், இந்த முயற்சியில் அவர் கொல்லப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
அருள் பணியாளர் Rasschaert அவர்களின் மரணம் பழங்குடியினரிடையே அதிர்ச்சியை உருவாக்கியதால், வன்முறைகள் நிறுத்தப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.
அருள் பணியாளர் Rasschaert அவர்கள் மரணமடைந்த 50ம் ஆண்டு நினைவைக் கொண்டாடும் முயற்சியில் Kutungia என்ற பங்குத்தளமும், ராஞ்சி உயர் மறைமாவட்டமும் ஈடுபட்டுள்ளன.
ஆதாரம் UCAN
6. அணு ஆயுத எதிர்ப்பு - அருள் சகோதரிக்கு மூன்றாண்டுகள் சிறை
பிப்.19,2014. அணு ஆயுதங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அமெரிக்காவில் யுரேனியம் சேமிப்புக் கிடங்கு ஒன்றில் அத்துமீறி நுழைந்ததற்காக, 84 வயது நிறைந்த அருள் சகோதரி ஒருவருக்கு சுமார் மூன்றாண்டுகள் – 35 மாதங்கள் - சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் டென்னெஸி மாநிலத்தில் உள்ள Oak Ridge என்ற
இடத்தில் அமைந்திருக்கும் இந்த யுரேனியம் சேமிப்புக் கிடங்கில் 2012ம்
ஆண்டு ஜூலை மாதத்தில் வேறு இருவருடன் சேர்ந்து இந்தப் போராட்டத்தில்
ஈடுபட்டதற்காக, அருள் சகோதரி Megan Rice மற்றும் அவ்விருவருக்கும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
ஏனைய இருவருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு கூறப்பட்டபோது, நீதிமன்றத்தில் இருந்த அருள் சகோதரி Megan Rice அவர்கள், தான் செய்த செயல் குறித்து தனக்கு எவ்வித வருத்தமும் இல்லை என்றும், இதைச் செய்வதற்கு தான் 70 ஆண்டுகள் காத்திருந்தது குறித்து மட்டுமே தனக்கு வருத்தம் இருப்பதாகவும் கூறினார்.
இந்த எதிர்ப்பாளர்கள், மிகவும் பாதுகாக்கப்பட்ட இந்தக் கிடங்கில், பாதுகாப்பு வேலியை வெட்டி ஊடுருவி உள்ளே நுழைந்து, அங்கு கண்டன வாசகங்கள் அடங்கிய விளம்பர அட்டைகளை தொங்கவிட்டனர் என்று கூறப்படுகிறது.
ஆதாரம் RNS
7. குடும்ப விவசாயம், ஆப்ரிக்காவின் மிக முக்கியமான தேவை - FAO தலைமை இயக்குனர்
பிப்.19,2014. குடும்ப விவசாயத்தில் ஈடுபடுவது, ஆப்ரிக்காவில் உள்ள இளையோருக்கும், பெண்களுக்கும் மிக முக்கியமான தேவை என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பன்முக உயிரினங்கள் (Biodiversity) பற்றி, இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய, ஐ.நா. உணவு வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர், José Graziano da Silva அவர்கள் இவ்வாறு கூறினார்.
FAOவின் உதவியுடன் ஆப்ரிக்காவின் 38 நாடுகளில், 350க்கும் மேற்பட்ட சமுதாயக் குழுக்கள் மத்தியில், குடும்ப விவசாயம் என்ற முயற்சி, 10,000க்கும் அதிகமான இடங்களில் துவங்கப்பட்டுள்ளது என்றும், இம்முயற்சியில் இளையோர் ஆர்வமாய் ஈடுபட்டுள்ளனர் என்றும், Graziano da Silva அவர்கள் எடுத்துரைத்தார்.
பாரம்பரிய விவசாய முறைகள் அடுத்தத் தலைமுறையினர் மத்தியில் அறிமுகமாவதும், இளையோரும் பெண்களும் வேலை வாய்ப்புப் பெறுவதும் இத்தகைய குடும்ப விவசாய முயற்சிகள் வழங்கும் நன்மைகள் என்று FAO இயக்குனர், Graziano da Silva அவர்கள் சுட்டிக்காட்டினார்.
2014ம் ஆண்டு, குடும்ப விவசாயத்தின் அகில உலக ஆண்டென ஐ.நா.வால் கொண்டாடப்படுகிறது.
ஆதாரம் UN
8. மாற்று எரிபொருள் ஆய்வில் சென்னையைச் சேர்ந்த இரு மாணவர்கள் வெற்றி
பிப்.19,2014.
பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பல்வேறு தேவைகளின் காரணமாக எரிபொருள்
பற்றாக்குறை கடுமையான அளவில் உயர்ந்து வரும்நிலையில் மாற்று எரிபொருள்
ஆய்வில் சென்னையைச் சேர்ந்த இரு மாணவர்கள் வெற்றி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் இருக்கும் ஹை டெக் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கார்த்திகேசன், சிவச்சந்திரன் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
இவர்களின்
ஒருங்கிணைந்த ஆய்வின் விளைவாக தண்ணீரை மின்னாற்பகுப்புக்கு உட்படுத்தி
அதிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுத்து அதனை எரிபொருளோடு சேர்த்து
பயன்படுத்தி வாகன மோட்டாரை இயக்கமுடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
இதற்கான ஆய்வுகள் உலகளவில் நடந்து வந்தாலும் முடிவுக்கு வந்திருக்கும் இவர்களின் ஆய்வை அமெரிக்க அரசு ஏற்று, ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய
நிலையில் எரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் ஒரு கருவி என்றுதான்
இதைச் சொல்ல வேண்டும். 300 கிராம் எடையுள்ள இதனை ஒரு இரு சக்கர வாகனத்தில்
பொருத்திவிட்டால் லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்லும் அந்த வாகனம்
90 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என்று, தாங்கள் கண்டுபிடித்துள்ள புதிய கருவியைப் பற்றி கார்த்திகேசனும், சிவச்சந்திரனும் கூறினர்.
மாணவர்களின்
எண்ணத்தை உள்வாங்கி இக்கருவியைத் திறம்படச் செய்து முடித்திருக்கும்
ஹைடெக் ரிசர்ச் பவுண்டேஷனை சேர்ந்த இளம் அறிவியலாளர் முரளி அவர்கள், எரிபொருளே இல்லாமல் முழுக்க முழுக்கத் தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி வாகனங்களை இயக்க ஒரு வருட காலமாகவே ஆய்வு செய்து வரும் எங்களுக்கு, இந்த மாணவர்களின் ஆய்வு பெரும் முன்னேற்றத்துக்கு வழி வகுத்திருக்கிறது என்று கூறினார்.
ஆதாரம் தி இந்து
No comments:
Post a Comment