Monday, 30 September 2013

செய்திகள் - 28.09.13

செய்திகள் - 28.09.13
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : சிலுவையைக் கண்டு விலகிச் செல்லாதிருக்க வரம் கேட்போம்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறர் பற்றி நல்லதையே பேச வேண்டும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருமணத்தின் இன்னல்நிறைந்த தருணங்களின் அனுபவங்கள் அன்பின் பாதையை மேலும் உறுதிப்படுத்துகின்றது

4. திருத்தந்தை பிரான்சிஸ் : மறைக்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்துவின் பெயரால் பிறரை அணுக வேண்டும்

5. உரையாடல் மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமன்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் உறுதியாக உள்ளார்

6. இந்தியாவிலே மிக உயரமான இயேசுவின் இறைஇரக்க திருவுருவம்

7. சிரியாவில் வேதிய ஆயுதங்கள் குறித்த வரலாற்று சிறப்புமிக்க ஐ.நா.தீர்மானம்

8. புவி வெப்பமடைதலின் தாக்கத்திலிருந்து எவரும் தப்ப முடியாது, அறிவியலாளர்கள் எச்சரிக்கை

9. ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு, பிரிட்டன் நிறுவனம் சாதனை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : சிலுவையைக் கண்டு விலகிச் செல்லாதிருக்க வரம் கேட்போம்

செப்.,28,2013. சிலுவையைக் கண்டு விலகிச் செல்லாதிருக்க வரம் கேட்போம் என்று இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார் என்ற இயேசுவின் வார்த்தைகள், தாங்கள் வெற்றிப் பயணம் மேற்கொள்வோம் என்று நினைத்துக்கொண்டிருந்த அவரின் சீடர்களுக்குப் புரியவில்லை, ஆயினும் இயேசு சொன்னது பற்றி அவரிடம் விளக்கம் கேட்க அவர்கள் அஞ்சினார்கள் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேதுரு உட்பட இயேசுவின் சீடர்கள் சிலுவையைக் கண்டு அஞ்சினார்கள், இவர்கள் மட்டுமல்ல, இயேசுவும் அஞ்சினார், தனக்கு வரப்போகும் துன்பக்கலத்தைக் கண்டு புனித வியாழன் இரவில் இயேசு இரத்த வியர்வை சிந்தினார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தி அறிவிப்புப்பணியிலும் இந்தச் சிலுவை நமக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார்.
சிலுவையின் அருகில் இயேசுவின் தாய் அன்னமரியா நின்றார், எனவே சிலுவையைக் கண்டு நாம் விலகிச் செல்லாதிருக்க இயேசுவிடம் வரம் கேட்போம் என்று மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறர் பற்றி நல்லதையே பேச வேண்டும்

செப்.,28,2013. புனித மிக்கேல் அதிதூதரைப் பாதுகாவலராகக் கொண்டுள்ள திருப்பீட மற்றும் வத்திக்கான் காவல்துறையினருக்கு வத்திக்கான் தோட்டத்தில் இச்சனிக்கிழமையன்று திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், அலகையின் மொழியான பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவதற்கு எதிரான போரில் நாம் வெற்றி காண வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பிறரைப் பற்றி ஒருபோதும் அவதூறு பேசாமலும், புறம்பேசுதலுக்கு ஒருபோதும் நம் காதுகளைத் திறவாமலும் இருப்பதற்கு, புனித மிக்கேல் அதிதூதரிடம் வரம் கேட்போம் என்று அக்காவல்துறையினரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நமது எல்லாப் பகைவரிடமிருந்து நம்மைக் காப்பாற்றுமாறு புனித மிக்கேல் அதிதூதரிடம் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை,  வத்திக்கானை எடுத்துக்கொள்வதற்கு ஆயுதம் ஏந்தியப் போர் நடத்துவது இனி எளிதல்ல, நெப்போலியன் இனிமேல் வரமாட்டார், ஆயினும், ஒளிக்கு எதிரான இருளின் போரும், பகலுக்கு  எதிரான இரவின் போரும் இங்கு நடக்கிறது என்றும் கூறினார்.
வத்திக்கானில் வாழ்கின்ற மற்றும் வேலை செய்கின்றவர்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்குச் சாத்தான் வேலை செய்யும், ஆயுதங்கள் இல்லாத ஓர் ஆன்மீகப்போரை உள்ளுக்குள்ளே உருவாக்கச் சாத்தான் முயற்சிக்கும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். 
இவ்வகையான போரின் ஆயுதம் மொழியாகும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், வத்திக்கானில் தடை செய்யப்பட்ட மற்றும் வத்திக்கானில் பேசக்கூடாத மொழியான புறணி பேசக்கூடாது, இவ்வாறு பேசுவது தீயவனின் வேலை, எனவே பிறர் பற்றி மோசமானதைப் பேசாமல், நல்லதையே பேசுவோம் எனக் கேட்டுக்கொண்டார். 
திருப்பீட மற்றும் வத்திக்கான் காவல்பணியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : திருமணத்தின் இன்னல்நிறைந்த தருணங்களின் அனுபவங்கள் அன்பின் பாதையை மேலும் உறுதிப்படுத்துகின்றது 

செப்.,28,2013. ஒவ்வொரு திருமணமும் இன்னல்நிறைந்த தருணங்களைக் கொண்டுள்ளது. ஆயினும் இந்தச் சிலுவையின் அனுபவங்கள் அன்பின் பாதையை மேலும் உறுதிப்படுத்துகின்றன என்று இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis @Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், உறுதியான திருமணத்தின் சிறப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 33 நாள்களே  திருஅவையில் தலைமைப்பணியாற்றிய திருத்தந்தை முதலாம் ஜான் பால் இறந்ததன் 35ம் ஆண்டு இச்சனிக்கிழமையன்று நினைவுகூரப்பட்டது.
திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் தனது 66வது வயதில், 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி காலையில் இறைவனடி சேர்ந்தார்.
இன்னும், புனித பிரான்சிஸ் அசிசி இத்தாலியின் ரிமினியைக் கடந்து சென்றதன் 800ம் ஆண்டையொட்டி அந்நகரில் இடம்பெற்றுவரும் விழாவுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
ரிமினியில் நடைபெறும் இந்த மூன்று நாள் விழா இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : மறைக்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்துவின் பெயரால் பிறரை அணுக வேண்டும்

செப்.,28,2013. மறைக்கல்வி ஆசிரியர்கள் தினத்தையொட்டி இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உலகெங்கிலுமிருந்து வந்திருந்த 1,600க்கு மேற்பட்ட மறைக்கல்வி ஆசிரியர்களை இவ்வெள்ளி மாலை வத்திக்கான் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், நல்ல மறைக்கல்வி ஆசிரியர்களாக வாழ விரும்பினால் மூன்று காரியங்களைப் பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
முதலாவதாக, இயேசுவை அறிந்து அவரோடு நெருங்கிய உறவு கொண்டிருக்க வேண்டும், இரண்டாவதாக, இயேசுவைப் போன்று செயல்பட வேண்டும், அதாவது நற்செய்தியை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும், மூன்றாவதாக, தங்களது சுகமான வசதிகளை விட்டுச்செல்லப் பயப்படக்கூடாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துவை அன்புகூர்ந்து, தங்களது அன்றாட வாழ்வில் நற்செய்தியை வாழ்ந்து, சமூகத்தின் விளிம்பு நிலைக்குத் துணிச்சலுடன் சென்று விசுவாசம் எனும் கொடையை பிறருக்கு வழங்கும் நல்ல மறைக்கல்வி ஆசிரியர்கள் திருஅவைக்குத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைக்கல்வி ஆசிரியர்கள் திருஅவைக்கு ஆற்றும் பணிக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், மறைக்கல்வி ஆசிரியராக இருப்பது ஒரு வேலையோ அல்லது ஒரு பதவியோ அல்ல, மாறாக, இது ஓர் அழைப்பு என்றும் கூறினார்.
இந்த மூன்று காரியங்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லி விளக்கியபோது பலர் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தனர். 
இம்மறைக்கல்வி ஆசிரியர்கள், நற்செய்தியை புதிய முறையில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவை நடத்திய மூன்று நாள் அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. உரையாடல் மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமன்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் உறுதியாக உள்ளார்

செப்.,28,2013. மத்திய கிழக்குப் பகுதி, சிரியா, லெபனன் ஆகிய பகுதிகளில் போரினால் அல்ல, மாறாக, உரையாடல் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உறுதியாக இருப்பதை தான் உணர்ந்ததாகத் தெரிவித்தார் அந்தியோக்கியா மற்றும் அனைத்து கீழை நாடுகளின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை 10ம் Youhanna Yazigi.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த பின்னர் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த முதுபெரும் தந்தை 10ம் Youhanna, மத்திய கிழக்குப் பகுதி, சிரியா, லெபனன் ஆகிய பகுதிகளின் திருஅவைகள் மற்றும் மக்கள்மீது திருத்தந்தை பிரான்சிஸ் மிகுந்த கரிசனை கொண்டுள்ளார் எனவும் கூறினார்.
சிரியாவிலும், பிற பகுதிகளிலும் அமைதி இடம்பெறுவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திய ஒரு நாள் உண்ணாநோன்பு மற்றும் செப வழிபாட்டை மறக்க இயலாது எனவும், இச்செப வழிபாட்டில் தங்கள் சபையினர் அனைவரும் கலந்து கொண்டோம் எனவும் முதுபெரும் தந்தை 10ம் Youhanna கூறினார்.
சிரியாவில் கடத்தப்பட்டுள்ள தனது சகோதர ஆயர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.      

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. இந்தியாவிலே மிக உயரமான இயேசுவின் இறைஇரக்க திருவுருவம்

செப்.,28,2013. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் மிக உயரமான இயேசுவின் இறைஇரக்க(கருணை) திருவுருவம் ஒன்று வருகிற திங்களன்று ஆசீர்வதிக்கப்பட்டு திறக்கப்படவுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சாகர்(Sagar) நகருக்கு 15 கிலோ மீட்டரிலிருக்கின்ற Khajooria Guru கிராமத்தில் செப்டம்பர் 30ம் தேதியன்று திறக்கப்படவுள்ள இத்திருவுருவம், இந்தியாவிலே மிக உயரமான திருவுருவமாக அமைந்திருக்கும்.
இத்திறப்புவிழா குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய சாகர் ஆயர் அந்தோணி சிரியத்(Anthony Chirayath), மக்கள் இந்த இடத்தை தயாசாகர் அதாவது கருணைக்கடல் என்று அழைக்கின்றனர் எனக் கூறினார்.
வருகிற திங்களன்று திறக்கப்படவுள்ள ஏறக்குறைய 13 மீட்டர் உயரமுள்ள இயேசுவின் இறைஇரக்க திருவுருவம், 30 மீட்டர் கான்கிரீட் அடித்தளத்தின்மீது பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides

7. சிரியாவில் வேதிய ஆயுதங்கள் குறித்த வரலாற்று சிறப்புமிக்க ஐ.நா.தீர்மானம்

செப்.,28,2013. சிரியாவில் வேதிய ஆயுதங்கள் அழிக்கப்படவும், வேதிய ஆயுதக்கிடங்கு ஒப்படைக்கப்படவுமான தீர்மானம் ஒன்றை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவை ஒரே மனதாக நிறைவேற்றியுள்ளது.
சிரியா விவகாரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதன்முறையாக ஐ.நா.பாதுகாப்பு அவையின் 15 உறுப்பு நாடுகளும் ஒரே மனதாக ஓட்டளித்துள்ளன.
இத்தீர்மானத்தின்படி சிரியா தனது வேதிய ஆயுதக் கிடங்கை ஐ.நா. கண்காணிப்பாளர் பார்வையிட அனுமதிக்க வேண்டும். ஆயினும், கடந்த ஜூலை 21ம் தேதி சிரியாவில் நடத்தப்பட்ட வேதிய ஆயுதத் தாக்குதல் தொடர்பாக, சிரியா அரசு மற்றும் சிரியாவின் புரட்சிக்குழுமீதான எவ்வித நடவடிக்கையையும் இத்தீர்மானம் உள்ளடக்கவில்லை.
மேலும், வருகிற நவம்பர் பாதியில் அமைதிக் கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது. இதற்குத் திருப்பீடம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews

8. புவி வெப்பமடைதலின் தாக்கத்திலிருந்து எவரும் தப்ப முடியாது, அறிவியலாளர்கள் எச்சரிக்கை

செப்.,28,2013. இப்புவி வெப்பமடைவதற்கு 1950களிலிருந்து மிக முக்கிய காரணியாக மனிதர் இருந்து வருகின்றனர் என்பதை 95 விழுக்காடு உறுதியாகச் சொல்லலாம் என அறிவியலாளர்கள் கூறுவதாக ஒரு புதிய அறிக்கை எச்சரிக்கின்றது.
வெப்பநிலை மாற்றம் குறித்த ஐ.நா. குழு நடத்திய விவாதமேடை ஒன்றில் அறிவியலாளர்கள் ஆதாரங்களுடன் இதனை விளக்கியுள்ளனர்.
சுற்றுச்சூழலைப் பாதிக்கும் வாயுக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டால் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து இடம்பெற்று வெப்பநிலை அமைப்பின் அனைத்துக்கூறுகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
புவி வெப்பமடைதலின் தாக்கத்திலிருந்து எவரும் தப்ப முடியாது எனவும் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : UN

9. ஒரே செடியில் தக்காளி, உருளைக் கிழங்கு, பிரிட்டன் நிறுவனம் சாதனை

செப்.,28,2013. ஒரே செடியில் தக்காளியும், உருளைக்கிழங்கும் விளையும் நவீன முறையைக் கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று சாதனை படைத்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த Thompson & Morgan என்ற நிறுவனம் வேளாண்மையில் புதுமைகளைப் புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன யுக்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக்கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு (Paul Hansord) இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம் என்று கூறினார்.
மரபியல் மாற்றங்களைச் செய்து இதற்குமுன் இது போன்ற செயல்களில் அறிவியலாளர்கள் வெற்றி கண்டுள்ளனர், எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாகத் தற்போது விளைவித்துள்ளோம் என்றும் ஹான்சர்டு கூறினார்.
இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன. அதன்பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப்பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கண்டறியப்பட்ட இந்த முறையை தற்போது நியூசிலாந்து விவசாயிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

ஆதாரம் : BBC
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...