Wednesday, 25 September 2013

செய்திகள் - 24.09.13

செய்திகள் - 24.09.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தனிமனிதர்மீது முதலில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்லதோர் உலகு அமையும்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : நமது இன்ப, துன்ப நேரங்களில் ஆண்டவர் உடனிருக்கிறார் 

3. திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழைகளைக் கருணையுடன் நோக்குவோம்

4. கர்தினால் பஞ்ஞாஸ்கோ : உலகில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமான வன்முறைகள்

5. நைரோபி பயங்கரவாதத் தாக்குதலுக்கு கென்யப் பல்சமயத் தலைவர்கள் வன்மையான கண்டனம்

6. போரினால் பல்லாயிரக்கணக்கான சிறாருக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டுள்ளது, ஐ.நா. எச்சரிக்கை

7. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், புதிய வளர்ச்சித்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், ஐ.நா.

8. சிறார் தொழிலாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : தனிமனிதர்மீது முதலில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்லதோர் உலகு அமையும்

செப்.,24,2013. தனிமனிதர்மீது முதலில் கவனம் செலுத்தினால் மட்டுமே, மனிதரின் ஆன்மீகம் உட்பட அவரின் ஒவ்வொரு கூறும் கவனத்தில் எடுக்கப்படும் மனித வளர்ச்சி முழுமைபெற்றால் மட்டுமே நல்லதோர் உலகு அமையும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏழைகள், நோயாளிகள், கைதிகள், தேவையில் இருப்போர், அந்நியர் ஆகியோர் உட்பட யாரும் ஒதுக்கப்படாமல் இருந்தால் மட்டுமே, எதையும் தூக்கியெறியும் கலாச்சாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, சந்திக்கும் அனைவரையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நல்லதோர் உலகு அமையும் என்று மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 
2014ம் ஆண்டு சனவரி 19ம் தேதி கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கும் அனைத்துலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், நல்லதோர் உலகு அமைவதற்கு ஒவ்வொரு மனிதரும் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
நல்லதோர் உலகின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளை, இழுக்கு ஏற்படுத்தும் வறுமையின் பல்வேறு வடிவங்கள் குறித்து நாம் மௌனமாய் இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், குடியேற்றதாரர் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைவதற்கு அனைத்துலக அளவில் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோரைக் கருத்தில்கொண்டு நல்லதோர் உலகை அமைக்கும் முயற்சியில், குடியேற்றதாரர் குறித்த முற்சார்பு எண்ணங்கள் களையப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
மக்களின் குடியேற்றம் நற்செய்தி அறிவிப்புப்பணியைப் புதிய முறைகளில் செய்வதற்கு வாய்ப்புக்களை வழங்க முடியும் என்றும் தனது செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், தங்களது எதிர்காலம் இன்னும் அதிகமான பாதுகாப்பை வழங்கும் என்பதில் நம்பிக்கை இழக்க வேண்டாமென, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோரைக் கேட்டுள்ளார்.
2014ம் ஆண்டு சனவரி 19ம் தேதி கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கும் அனைத்துலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாள் நூறாவது அனைத்துலக தினமாகும்.
திருக்காட்சி விழாவுக்கு அடுத்துவரும் 2வது ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கப்படும் இவ்வுலக நாளை 1914ம் ஆண்டில் திருத்தந்தை 10ம் பத்திநாதர் உருவாக்கினார்.
குடியேற்றதாரரும் புலம்பெயர்ந்தோரும் : நல்லதோர் உலகை நோக்கி..’ என்ற தலைப்பில் நூறாவது அனைத்துலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினம் சிறப்பிக்கப்படவுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : நமது இன்ப, துன்ப நேரங்களில் ஆண்டவர் உடனிருக்கிறார் 

செப்.,24,2013. நமது இன்ப, துன்ப நேரங்கள் என எப்பொழுதும் இயேசு நம்மோடு இருக்கிறார் என்று இச்செவ்வாய் காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நாம் ஆண்டவரது இல்லத்துக்கு அகமகிழ்வோடு போவோம் என்ற திருப்பா வரிகளை வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருநற்கருணை திருவருள்சாதனம் வித்தைகாட்டும் ஒரு வழிபாட்டுமுறை அல்ல, மாறாக, நம் வாழ்வில் நம்மோடு இருக்கும் இயேசுவைச் சந்திப்பதாகும் என்றும் கூறினார்.
இறைமக்களின் வரலாற்றில் மகிழ்வைக் கொண்டுவந்த அழகான தருணங்களும், அதேசமயம், வேதனை, மறைசாட்சிமரணம், பாவம் ஆகியவற்றின் அழகற்ற நேரங்களும் இருந்திருக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுள் முடிவில்லாதவராய் இருக்கிறார், எனவே அவருக்கு வரலாறு கிடையாது, இந்தக் கடவுள் தம் மக்களோடு உடன்நடந்து வரலாறு படைக்க விரும்பினார் என்றும் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இதையும்விட மேலாக, கடவுள், இயேசு வழியாக நம்மோடு நடந்து நம்மில் ஒருவராக மாற விரும்பினார் என்றும் தெரிவித்தார்.
இது கடவுளின் மேன்மையைக் காட்டுகின்றது, அதேவேளை இது அவரின் தாழ்மையை வெளிப்படுத்துகின்றது, தம் மக்கள் பாவத்திலும், சிலைவழிபாட்டிலும் அவரிடமிருந்து தூரச் சென்றாலும், அவர் நம் மக்களுக்காகக் காத்திருக்கிறார், இயேசுவும் இதே தாழ்மையை வெளிப்படுத்தினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசு இறைமக்களோடு நடக்கிறார், பாவிகளோடு நடக்கிறார், செருக்குள்ளவருடன் நடக்கிறார், பரிசேயர்களின் செருக்குள்ள இதயங்களுக்கு உதவி செய்கிறார் என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவை கடவுளின் தாழ்மையில் மகிழ்ச்சியடைகின்றது என்றும் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : ஏழைகளைக் கருணையுடன் நோக்குவோம்
செப்.,24,2013. மனிதக் கணக்கீடு, பயம் ஆகியவை இன்றி புரிந்துணர்வு மற்றும் அன்புடன் ஏழைகளை நோக்கும் கருணைப் பண்பை ஆண்டவரிடம் கேட்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis @Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், ஏழைகள்மீது நாம் கனிவுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
மேலும், திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றும் தலைவர்கள் சிலரின் பதவிகளை இச்செவ்வாயன்று மீண்டும் உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட பொதுநிலையினர் அவைத் தலைவர் கர்தினால் Stanisław Ryłko, அவ்வவையின் செயலர் ஆயர் Josef Clemens, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் Peter Kodwo Appiah Turkson, அதன் செயலர் ஆயர் Mario Toso, இன்னும், அதன் தற்போதைய உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களின் பதவிகளை மீண்டும் உறுதிசெய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கர்தினால் பஞ்ஞாஸ்கோ : உலகில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகமான வன்முறைகள்

செப்.,24,2013. நீண்ட காலமாக வன்முறையிலும் அச்சத்திலும் வாழ்ந்துவரும் புனிதபூமி தொடங்கி, மத்திய கிழக்குப் பகுதி முழுவதுடனும் இத்தாலிய கத்தோலிக்கத் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது என்று கூறியுள்ளார் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ.
இத்தாலிய ஆயர் பேரவையின் நிலைத்தகுழு கூட்டத்தை உரோமையில் துவக்கி வைத்து உரையாற்றிய, ஜெனோவா பேராயரான கர்தினால் பஞ்ஞாஸ்கோ, தற்போதைய இத்தாலியையும், அனைத்துலகையும் பாதித்துள்ள விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
குழுக்களையும், மக்களையும் நஞ்சூட்டியுள்ள தனிமனிதப் போக்கின் தீமைகளை முதலில் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் பஞ்ஞாஸ்கோ, பாகுபாடு மற்றும் சகிப்பற்றதன்மையின் வடிவங்களில் அனைத்துலக அளவில் இவற்றை வெளிப்படையாகவும், தொடர்ந்தும் காண முடிகின்றது என்றும் கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுடன் தனது மிக நெருக்கமான ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்த கர்தினால் பஞ்ஞாஸ்கோ, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இவ்வன்முறைகள் எதுவும் நடக்காததுபோல் உலகம் பாசாங்கு செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
சிரியாவில் இடம்பெறும் போரில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 20 இலட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews                              

5. நைரோபி பயங்கரவாதத் தாக்குதலுக்கு கென்யப் பல்சமயத் தலைவர்கள் வன்மையான கண்டனம்

செப்.,24,2013. கென்யத் தலைநகர் நைரோபியில் வெஸ்ட்கேட் வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டின் பல்சமயத் தலைவர்கள்.
இப்பயங்கரவாதத் தாக்குதல், அந்நாட்டின் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிரச்சனையை விதைக்க இடம்பெற்ற முயற்சி என்பதில் சந்தேகமேயில்லை எனக் கூறும் இத்தலைவர்கள், இம்முயற்சி பலனளிக்காது என்றும், தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் உறுதி கூறியுள்ளனர்.
இன்னும், ஆயிரத்துக்கு மேற்பட்ட பிணையக் கைதிகளை துப்பாக்கி மனிதர்களிடமிருந்து மீட்டுள்ளதற்கு அரசுப் படைகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது NCCK என்ற கென்ய தேசிய கிறிஸ்தவ சபைகள் அமைப்பு.
மேலும், கென்யாவின் பொதுமக்கள் பலரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள வணிக வளாகத்தில், முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கென்யாவின் பாதுகாப்புப் படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் என்று பிபிசி கூறியுள்ளது.
பிரான்ஸ், ஹாலந்து, தென்னாப்ரிக்கா, இந்தியா, கானடா, ஆஸ்திரேலியா பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டவரும், கென்யக் குடிமக்களும் என 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 175க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலர் இன்னும் கணக்கில் வராமல் இருக்கின்றனர் எனவும் சொல்லப்படுகின்றது.
சொமாலியாவில் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட கென்யா, தனது துருப்புகளை அனுப்பியதற்குப் பழிவாங்குவதற்காக இந்தத் தாக்குதலைத் தாங்கள் நடத்தியதாக அல் ஷபாப் இஸ்லாமிய தீவிரவாதிகள் கூறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. போரினால் பல்லாயிரக்கணக்கான சிறாருக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டுள்ளது, ஐ.நா. எச்சரிக்கை

செப்.,24,2013. போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் தாக்கப்பட்டும், ஆயுதம் ஏந்திய மனிதரால் ஆக்ரமிக்கப்பட்டும் இருப்பதால், அந்நாடுகளில் ஏறக்குறைய 2 கோடியே 85 இலட்சம் சிறாருக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் சிறார் பள்ளிக்கே செல்லாமல் இருக்கின்றனர் அல்லது இடையிலே படிப்பை நிறுத்தி விடுகின்றனர் என ஐ.நா.பொது அவையில் உரைத்த ஐ.நா.வின் யூனிசெப் செயல்திட்ட இயக்குனர் அந்தோணி லேக், இவ்விவகாரத்துக்கு உடனடியாகத் தீர்வு காணப்படுமாறு கேட்டுக்கொண்டார்.
போர்கள் முடியும்வரை கல்வியும், சிறாரும் காத்திருக்க முடியாது என்றும், போர்கள் முடியும்வரை நோய்கள் பரவாமல் இருக்காது என்றும் எச்சரித்த லேக், அனைத்துலக அளவில் இது குறித்த தீர்மானங்கள் எடுக்கப்படுமாறு வலியுறுத்தினார்.
ஆரம்பப் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய 5 கோடியே 70 இலட்சம் சிறாரில் பாதிக்கும் மேற்பட்டோர் போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ளனர் என்றும் லேக் கூறினார்.

ஆதாரம் : UN

7. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், புதிய வளர்ச்சித்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும், ஐ.நா.

செப்.,24,2013. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், 2015ம் ஆண்டின் வளர்ச்சித்திட்டத்தில் நேரிடையாக  இணைக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை முன்னேற்றுவது குறித்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் கொள்கைகள் வகுக்கப்படுவதற்கு ஆதரவாக ஐ.நா.பொது அவையின் உயர்மட்ட கூட்டத்தில் உலகத் தலைவர்கள் உறுதியளித்துள்ளதை யொட்டி இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர் ஐ.நா. அதிகாரிகள்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தை அமல்படுத்தாத நாடுகள் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா. பொது அவைத் தலைவர் John Ashe கேட்டுக்கொண்டார்.
இதுவரை 134 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்தியுள்ளன.

ஆதாரம் : UN

8. சிறார் தொழிலாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி

செப்.,24,2013. உலக அளவில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில்மட்டும் சிறார் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 80 இலட்சம் என்ற அளவில் குறைந்துள்ளதாக, ஐநாவின் தொழில் நிறுவனமான ILO வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதிலும் குறிப்பாக, பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடும், ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடும் குறைந்துள்ளன.
இந்த முன்னேற்றத்துடன் திருப்தியடையக் கூடாது என்றும் ILO நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஆயினும் இன்றும் 16 கோடியே 80 இலட்சம் சிறார், தொழிலாளர்களாக இருப்பதாக ILO தெரிவித்துள்ளது. இவ்வெண்ணிக்கை, உலகின் சிறார் எண்ணிக்கையில் 11 விழுக்காடாகும்.

ஆதாரம் : UN

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...