Thursday, 28 March 2013

Catholic News in Tamil - 27/03/13

1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான்

2. திருத்தந்தை பிரான்சிஸ் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் நிறைவேற்றும் திருப்பலி, தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும்

3. திருத்தந்தையர் தங்கிவந்த வத்திக்கான் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தங்கமாட்டார்

4. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழு வழங்கியுள்ள உயிர்ப்பு விழாச் செய்தி

5. எருசலேமில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி

6. புதியத் திருத்தந்தைக்குச் செபிக்குமாறு, காத்மண்டு ஆயர் அந்தனி ஷர்மா வேண்டுகோள்

7. அர்ஜென்டினா மக்கள் ஒன்றிணைந்து வருவதற்கு நல்லதொரு தருணம் - ஆயர் பேரவைத் தலைவர்

8. மும்பை நகரில் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு இயேசுவின் பாடுகளைக் குறிக்கும் ஊர்வலம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் - ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான்

மார்ச்,27,2013. ஏனைய மனிதர்கள் ஒவ்வொருவரையும் போல நானும் ஒரு பாவிதான், ஆயினும் ஆண்டவருக்கு நம்பிக்கையுள்ள பணியாளராக இருக்க விரும்புகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
வத்திக்கானில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் இப்புதன் காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கர்தினால் Angelo Comastri அவர்கள் ஆற்றிய சிறப்புத் திருப்பலிக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வூழியர்களைச் சந்தித்து உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார்.
ஒரு சில நிமிடங்களே நீடித்த இந்த சந்திப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை 23ம் ஜான் குறித்த ஒரு நகைச்சுவை கூற்றுடன் துவக்கினார்.
ஒரு முறை திருத்தந்தை 23ம் ஜான் அவர்களைச் சந்தித்த ஒரு வெளிநாட்டுத் தூதர் வத்திக்கானில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்று கேட்டதற்கு, திருத்தந்தை 23ம் ஜான், "பாதி பேர்" என்று கூறியதை நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ், அங்கு கூடியிருந்த ஊழியர்கள் அந்தப் பாதிப் பேரில் அடங்குவர் என்று குறிப்பிட்டார்.
இத்திருப்பலியின் இறுதியில் திருத்தந்தையைச் சந்தித்தது தங்கள் அனைவருக்கும் ஓர் ஆனந்த அதிர்ச்சியே என்று கர்தினால் Comastri திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் வளர் இளம் கைதிகள் இல்லத்தில் நிறைவேற்றும் திருப்பலி, தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும்

மார்ச்,27,2013. புனித வியாழன் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் உள்ள வளர் இளம் கைதிகள் இல்லத்தில் நிறைவேற்றும் திருப்பலி, திருத்தந்தையின் விருப்பத்திற்கிணங்க, ஊடகங்களின் தலியீடு இல்லாத தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் சார்பில், உரோம் நகர் ஆயராகப் பணியாற்றும் கர்தினால் Agostino Vallini அவர்களும், வளர் இளம் கைதிகள் இல்லத்தில் ஆன்மீகப் பணியாற்றும் அருள்தந்தை Gaetano Greco அவர்களும் மட்டுமே திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொள்வர்.
11 இளம்பெண்கள் உட்பட 50 இளம் கைதிகள் கலந்து கொள்ளும் இத்திருப்பலியில், திருத்தந்தை ஆற்றும் பாதம் கழுவும் சடங்கில் பங்கேற்க, வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 இளையோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பலிக்குப் பின் அவ்வில்லத்தில் உள்ள 150க்கும் அதிகமான இளையோரை, திருத்தந்தை சந்தித்துப் பேசுகிறார். இச்சந்திப்பின்போது, அவ்விளையோர் மரத்தால் உருவாக்கிய ஒரு சிலுவையையும், முழந்தாள்படியிடும் ஒரு மணையையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளிக்கின்றனர்.
திருத்தந்தையும் அங்குள்ள அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கி, பாஸ்கா வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

ஆதாரம் வத்திக்கான் வானொலி


3. திருத்தந்தையர் தங்கிவந்த வத்திக்கான் மாளிகையில் திருத்தந்தை பிரான்சிஸ் தங்கமாட்டார்

மார்ச்,27,2013. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருத்தந்தையர் தங்கிவந்த வத்திக்கான் மாளிகையில் தங்காமல், கான்கிளேவ் கர்தினால்கள் அவை நடைபெற்றபோது தான் தங்கியிருந்த புனித மார்த்தா இல்லத்திலேயே தொடர்ந்து தங்குவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முடிவு செய்துள்ளார்.
இம்முடிவை இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு அறிவித்த திருப்பீடப் பேச்சாளர், இயேசுசபை அருள்தந்தை Federico Lombardi, திருத்தந்தையர் இல்லத்தில் உள்ள நூலகத்தையும், பார்வையாளர்கள் அரங்கத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் தேவைப்படும்போது பயன்படுத்துவார் என்றும் அறிவித்தார்.
அதேபோல், ஞாயிறு மூவேளை செபஉரை வழங்குவதற்கும், இதுவரை பயன்படுத்தப்பட்ட மேல்மாடி சன்னலையே திருத்தந்தை பிரான்சிஸ் பயன்படுத்துவார் என்றும் அருள்தந்தை Lombardi குறிப்பிட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Aires பேராயராகப் பணியாற்றியபோதும், அவருக்குரிய பேராயர் இல்லத்தில் தங்காமல், ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மக்களுடன் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ அடையாளத்தில், அன்னை மரியாவைக் குறிக்கும் அடையாளமான ஐந்து முனைகள் கொண்டிருந்த விண்மீன், எட்டு முனைகள் கொண்ட விண்மீனாக மாற்றப்பட்டுள்ளது என்றும், இயேசு வழங்கிய மலைப் பொழிவில் கூறப்பட்டுள்ள பேறுபெற்றோர் என்ற 8 வாக்கியங்களை நினைவுறுத்தும் வகையில் 8 முனைகள் கொண்ட விண்மீன் அமைக்கப்பட்டுள்ளதென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி


4. இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழு வழங்கியுள்ள உயிர்ப்பு விழாச் செய்தி

மார்ச்,27,2013. மனிதர்கள் ஒவ்வொருவரும் முழுமையான வாழ்வில் மகிழும் வகையில், நீதியும் அமைதியும் நிலவும் புதிய சமுதாயம் என்ற பின்னணியில் மட்டுமே இயேசுவின் இறப்பையும் உயிர்ப்பையும் நாம் புரிந்துகொள்ள முடியும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் உயிர்ப்பு விழாச் செய்தி கூறியுள்ளது.
இப்பேரவையின் நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Yvon Ambroise, மற்றும் இப்பணிக்குழுவின் உறுப்பினர்களான ஆயர் Mathew Arackal, மற்றும் ஆயர் Gerald Almeida ஆகியோருடன், செயலரான அருள்தந்தை Charles Irudayam அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இச்செய்தியில், திருத்தூதர் பவுல் அடியார் எழுதிய திருமுகங்களின் வரிகள் மேற்கோளாகக் கூறப்பட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குருத்து ஞாயிறன்று வழங்கிய மறையுரையின் கருத்துக்களைச் சுட்டிக்காட்டியுள்ள இச்செய்தி, இவ்வுலகில் நிலவும் பல்வேறு தீய சக்திகளுக்கு எதிராகப் போராட வேண்டுமென்ற அழைப்பையும் விடுக்கிறது.
நமக்கு விடுதலை வழங்கும் கிறிஸ்துவுடன் இணைந்து, உலகை அடக்கி ஆளும் தீய சக்திகளுக்கு எதிராகப் போராடுவது ஒன்றே உண்மையான கிறிஸ்தவர்களின் அடையாளம் என்று மறைந்த பேராயர் Oscar Romero கூறியுள்ள வார்த்தைகளையும் தங்கள் செய்தியில் கூறியுள்ளனர் இந்திய ஆயர்கள்.

ஆதாரம் CBCI - நீதி, அமைதி, மற்றும் முன்னேற்றப் பணிக்குழு

5. எருசலேமில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்களின் உயிர்ப்பு விழா செய்தி

மார்ச்,27,2013. இறை நம்பிக்கையும், நல்மனதும் கொண்ட மக்கள் அனைவரும், சிறப்பாக, அதிகாரத்தில் உள்ள அனைவரும் நீதியையும் அமைதியையும் உலகில் நிலைநாட்ட உழைக்கவேண்டும் என்ற அழைப்புடன் எருசலேமில் உள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் உயிர்ப்பு விழாச் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
சிரியா, லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளில் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வரும் அமைதியற்ற சூழல் முற்றிலும் நீங்க அனைத்துலகும் இணைந்து உழைக்கவேண்டும் என்று இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நமது விசுவாசத்தின் தாய் வீட்டைப்போல் விளங்கும் புனித பூமியில் திருப்பயணம் மேற்கொள்ள உலகின் அனைத்து நாட்டு மக்களையும் அழைக்கும் இச்செய்தியில், புனித பூமிக்கு வர முடியாதவர்கள் தங்கள் செபங்கள் மூலம் இங்குள்ள கிறிஸ்தவர்களுடன் இணையவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளனர் கிறிஸ்தவத் தலைவர்கள்.
புனித பூமியில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டும் இச்செய்தி, புனித பூமியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தோரின் எண்ணிக்கையும் உயரவேண்டும் என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் செய்திப் பணி

6. புதியத் திருத்தந்தைக்குச் செபிக்குமாறு, காத்மண்டு ஆயர் அந்தனி ஷர்மா வேண்டுகோள்

மார்ச்,27,2013. நேபாளத்தில் ஜூன் மாதம் நிகழவிருக்கும் தேர்தல்கள் மூலம் நாடு நலமிக்க பாதையில் செல்வதற்கும், அகில உலகக் கத்தோலிக்கர்களின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் புதியத் திருத்தந்தைக்கும் செபிக்குமாறு, காத்மண்டு ஆயர் அந்தனி ஷர்மா மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டு நிகழ்ந்த குருத்து ஞாயிறுத் திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர் ஷர்மா, நேபாளத்தில் மத சார்பற்ற நல்லதொரு அரசு அமைய செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள எடுத்துக்காட்டான வாழ்வு, கிறிஸ்துவை எடுத்துரைக்கும் பணியில் தங்களை உற்சாகப்படுத்துவதாக இத்திருப்பலியில் கலந்துகொண்ட இளையோர் கூறினார்.
குருத்து ஞாயிறு திருப்பலியில் கிறிஸ்தவர் அல்லாத ஏனைய மத இளையோர் பலர் கலந்து கொண்டனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
திருத்தந்தையின் சொற்களும் செயல்களும் தங்கள் உள்ளங்களை உயர்த்துகின்றன என்றும் அவர் விரைவில் பங்களாதேஷ் வருவதை எதிர்பார்த்திருப்பதாகவும் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவைச் சேர்ந்த இளையோர் கூறினர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் AsiaNews

7. அர்ஜென்டினா மக்கள் ஒன்றிணைந்து வருவதற்கு நல்லதொரு தருணம் - ஆயர் பேரவைத் தலைவர்

மார்ச்,27,2013. திருத்தந்தை பிரான்சிஸ் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நேரம், அர்ஜென்டினா மக்கள் பகைமை உணர்வுகளைக் களைந்து ஒன்றிணைந்து வருவதற்கு நல்லதொரு தருணம் என்று அர்ஜென்டினா ஆயர் பேரவைத் தலைவர் கூறினார்.
நம்மிடையே கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், திருத்தந்தையின் வழிகாட்டுதலுடன் வேற்றுமையில் நாம் ஒற்றுமை காண முடியும் என்று அர்ஜென்டினா ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் José Maria Arancedo, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்த அர்ஜென்டினா அரசுத் தலைவர் Cristina Fernandez அவர்கள், அச்சந்திப்பின் வழியாக புதிய எண்ணங்கள் எழுந்தன என்று தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக பேராயர் Arancedo தன் பேட்டியில் குறிப்பிட்டார்.
அர்ஜென்டினா அரசுக்கும் அந்நாட்டுத் திருஅவைக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன என்பதும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இக்கருத்து வேறுபாடுகள் உச்சநிலையை அடைந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் Fides

8. மும்பை நகரில் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு இயேசுவின் பாடுகளைக் குறிக்கும் ஊர்வலம்

மார்ச்,27,2013. புனித வெள்ளியன்று மும்பை நகரின் பல பகுதிகள் வழியே 7 கிலோமீட்டர் நீளத்திற்கு இயேசுவின் பாடுகளைக் குறிக்கும் ஓர் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
CSF எனப்படும் கத்தோலிக்க மதசார்பற்ற அமைப்பின் தலைமைச் செயலர் ஜோசப் டயஸ் அவர்களால் துவக்கப்பட்ட இம்முயற்சி, 26வது ஆண்டாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவ்வமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மும்பை நகரின் மேற்கு Khar பகுதியில் உள்ள திரு இருதயக் கோவிலில் துவங்கும் இந்த பக்தி முயற்சி, Santacruz, Vakola, Kalina ஆகிய பகுதிகள் வழியேச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் இந்த ஊர்வலத்தில் ஆங்காங்கே கிறிஸ்துவின் பாடுகளில் இடம்பெற்ற சில நிகழ்ச்சிகளை இளையோர் குழுவினர் அரங்கேற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் பல்வேறு அநீதிகளும், குறிப்பாக, கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் பல்வேறுதுயரங்களும் இந்த ஊர்வலத்தின்போது அரங்கேற்றப்படும் என்று CSF செயலர் ஜோசப் டயஸ் கூறியுள்ளார்.

ஆதாரம் CSFPost

No comments:

Post a Comment