Thursday, 31 January 2013

Catholic News in Tamil - 31/01/13

 
1. அலகாபாத் ஆயர் பதவி விலகும் கோரிக்கை திருத்தந்தையால் ஏற்பு

2. நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து அம்சங்கள் - இந்தியத் திருஅவை

3. நாட்டின் உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் துன்புறுகின்றனர் - அலெப்போ பேராயர் Marayati

4. குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது - இங்கிலாந்து ஆயர்கள்

5. 'இளையோருக்கு நீதியான தண்டனைகள் வழங்குதல்' - அமெரிக்க ஆயர்களின் முயற்சி

6. மகா கும்ப மேளாவையொட்டி கத்தோலிக்கக் குழு நடத்தும் வீதி நாடகங்கள்

7. உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளுக்கு பிரேசில் நாட்டின் சிறைக் கைதிகள் ஏற்பாடுகள்

8. நோய் தடுப்பு மருந்துகளுடன் தகுந்த அளவு உணவைக் கொடுப்பதால் பல இலட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கமுடியும்

------------------------------------------------------------------------------------------------------

1. அலகாபாத் ஆயர் பதவி விலகும் கோரிக்கை திருத்தந்தையால் ஏற்பு

சன.31,2013. கடந்த 24 ஆண்டுகளாக அலகாபாத் ஆயராகப் பணியாற்றிவந்த ஆயர் இஸிடோர் பெர்னான்டெஸ் அவர்கள் பதவி விலக விரும்பி அனுப்பிய கோரிக்கையை திருச்சட்டம் 401, 2ம் பிரிவின்படி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று ஏற்றுக்கொண்டார்.
ஆயர் பெர்னான்டெஸ் அவர்களுக்குப் பதிலாக, ஒய்வு பெற்ற ஆஜ்மீர் ஆயர் இக்னேசியஸ் மெனெசெஸ் அவர்களை அலகாபாத் மறைமாவட்ட மேற்பார்வையாளராக, திருத்தந்தை நியமித்துள்ளார்.
1947ம் ஆண்டு மங்களூரில் பிறந்த ஆயர் இஸிடோர் பெர்னான்டெஸ், 1972ம் ஆண்டு குருவாகவும், 1988ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கிடையே, அண்மையில் கர்தினாலாக உயர்த்தப்பட்ட சீரோ மலங்கரா தலைமைப் பேராயர் Baselios Cleemis Thottunkal அவர்களை, கீழைரீதி திருப்பேராயத்தின் உறுப்பினராகவும், பல்சமய உரையாடல் அவையின் உறுப்பினராகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.

2. நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து அம்சங்கள் - இந்தியத் திருஅவை

சன.31,2013. நடைபெற்றுவரும் நம்பிக்கை ஆண்டில், இவ்வுலக செல்வங்களின் மீது கொள்ளும் பற்றிலிருந்து விடுபட்டு, சமுதாய நீதிக்கு தங்களையே அர்ப்பணமாக்க ஒவ்வொரு கிறிஸ்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியத் திருஅவை கூறியுள்ளது.
சனவரி 29, இச்செவ்வாயன்று மங்களூர் ஆயர் Aloysius Paul D'Souza தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நம்பிக்கை ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய பத்து அம்சங்கள் வெளியிடப்பட்டன.
ஆசிய ஆயர்கள் பேரவையின் மனிதவள மேம்பாட்டுப் பணிக்குழுவின் பொதுச் செயலர் அருள்தந்தை நித்திய சகாயம் முன்னின்று நடத்திய இக்கூட்டத்தில், நம்பிக்கை ஆண்டில் ஒவ்வொரு மறைமாவட்டமும் கடைபிடிக்கக்கூடிய பத்து அம்சங்கள் வெளியிடப்பட்டன.
குழந்தைகளுக்கும், இளையோருக்கும் நமது விசுவாசப் பாரம்பரியத்தைச் சொல்லித் தருதல், குடும்பம், இளையோர், வயது முதிர்ந்தோர் மத்தியில் பணிபுரிய 'நம்பிக்கை அணிகளை' உருவாக்குதல், தேவையில் இருப்போருடன் ஒருமைப்பாட்டை வளர்த்தல், நெருங்கி வரும் தவக்காலத்தில் ஒப்புரவை வளர்க்கும் வழிகளைத் தேடுதல் என்பன உட்பட்ட பத்து அம்சங்கள் இக்கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

3. நாட்டின் உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் துன்புறுகின்றனர் - அலெப்போ பேராயர் Marayati

சன.31,2013. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, சிரியாவில் நிலவிவரும் வன்முறைகள் நிறைந்த வாழ்வுநிலை, பயங்கரங்கள் மீது பற்றுகொள்ளும் ஆபத்தான பழக்கத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது என்று அலெப்போவின் ஆர்மீனியக் கத்தோலிக்கப் பேராயர் Boutros Marayati கூறினார்.
அலெப்போ நகரில் இச்செவ்வாயன்று பல இளையோர் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, பேராயர் தன் வருத்தத்தை இவ்வாறு வெளியிட்டார்.
ஒரு சில நாட்களுக்கு முன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொலைகள் ஏற்கனவே ஒரு தூரத்து நினைவாக மாறுமளவுக்கு, ஒவ்வொரு நாளும் வெவ்வேறான பயங்கரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று பேராயர் Marayati, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஒவ்வொரு வன்முறையின்போதும் வெளிவரும் தகவல்களை சரிவர ஆய்வு செய்வதற்குள் அடுத்தடுத்து வன்முறைகள் நிகழ்வதாலும், உண்மையும் வதந்திகளும் கலந்து வருவதாலும், நாட்டின் உண்மை நிலையை அறிய முடியாமல் மக்கள் துன்புறுகின்றனர் என்று பேராயர் Marayati சுட்டிக்காட்டினார்.

4. குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது - இங்கிலாந்து ஆயர்கள்

சன.31,2013. குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்ற உண்மைக்குப் புறம்பாக, பாலியல் உறவுகளை உறுதி செய்யும் அமைப்புக்கள் உலகில் இருப்பதற்கு அர்த்தமில்லை என்று இங்கிலாந்தில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டமாக்கும் வகையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்விவாதங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிய ஆயர்கள், குழந்தை வளர்ப்பையும், திருமண உறவையும் பிரிப்பதற்கு பிரித்தானிய அரசு மேற்கொள்ளும் முயற்சி ஆபத்தானது என்று கூறினர்.
குடும்பத்தின் அடிப்படை இலக்கணத்தை மாற்றும் அரசின் முயற்சிக்கு, பிரித்தானிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் விரும்பாதபோது, அரசு இம்முயற்சியை மேற்கொள்வது நாட்டின் சட்ட வரைவு முறைகளுக்கு எதிரானது என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
இவ்வகை சட்ட மாற்றம் தேவையா என்ற கேள்வியை மக்கள் முன் வைக்காத அரசு, இச்சட்டத்தை எவ்வகையில் மாற்றலாம் என்ற கேள்வியை மட்டும் மக்கள் முன் வைப்பது அடிப்படையில் தவறான செயல்முறை என்றும் ஆயர்கள் குறை கூறியுள்ளனர்.

5. 'இளையோருக்கு நீதியான தண்டனைகள் வழங்குதல்' - அமெரிக்க ஆயர்களின் முயற்சி

சன.31,2013. 18 வயதுக்கு உட்பட்ட இளையோருக்கு, விடுவிக்கபடமுடியாத ஆயுள் தண்டனை வழங்குவது, அவர்களுக்கு அனைத்து வாய்ப்புக்களையும் மறுத்துவிடுகிறது என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
'இளையோருக்கு நீதியான தண்டனைகள் வழங்குதல்' என்ற கருத்துடன் அமெரிக்க ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனிதவள மேம்பாடு என்ற பணிக்குழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முயற்சிகளுக்கு, 100க்கும் மேற்பட்ட பல்வேறு மத அமைப்புக்களும், சமுதாய அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இளையோரில் பலர், மிகுந்த வன்முறைகளை வெளிப்படுத்தி சமுதாயத்திற்கு ஆபத்தாக இருக்கின்றனர் என்றாலும், அவர்களை வயது வந்தவர்களோடு ஒன்றாகக் கருதி, அவர்களுக்கு வழங்கப்படும் அதே தண்டனையை வழங்குவது சரியல்ல என்று ஆயர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் வெளியேற முடியாத ஆயுள் தண்டனை, அமெரிக்காவில் 38 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்நாட்டில் தற்போது 18 வயதுக்கு உட்பட்ட ஆயுள்தண்டனைக் கைதிகள் 2500க்கும் அதிகமானோர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கருப்பினத்தைச் சார்ந்தவர்களே என்றும் ICN என்ற கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

6. மகா கும்ப மேளாவையொட்டி கத்தோலிக்கக் குழு நடத்தும் வீதி நாடகங்கள்

சன.31,2013. இந்தியாவின் அலகாபாத் நகரில் தற்போது நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவையொட்டி, மத நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் வலியுறுத்தும் வீதி நாடகங்களை கத்தோலிக்கக் குழு ஒன்று நடத்தி வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாபெரும் இந்து மதப் புனித விழா, சனவரி 14ம் தேதி முதல், பிப்ரவரி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, இந்திய மறைப்பணித் துறவுச் சபை என்ற அமைப்பினரால் பல்வேறு வீதி நாடகங்கள் நடைபெற்று வருகின்றன.
HIV-AIDS நோய் பற்றிய விழிப்புணர்வையும், இந்நோய் கண்டவர்களை மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தும் நாடகங்கள் சனவரி 26, 27, 28 ஆகிய நாட்களில் நடைபெற்றன.
கங்கை நதியில் ஏற்படும் அளவுக்கு மீறிய மாசுகள் பற்றியும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வை உருவாக்கும் நாடகங்களை இந்திய மறைப்பணித் துறவுச் சபையின் Vishwa Jyoti என்ற குழுவினர் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மனிதர்கள் கூடிவரும் எண்ணிக்கையில் உலகச் சாதனை படைக்கும் கும்ப மேளா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சாதுக்களில் பலர், கங்கை மாசுபட்டு வருவதை கண்டித்து, இவ்வாண்டு கங்கையில் குளிக்கப்போவதில்லை என்ற தீர்மானம் எடுத்திருப்பதாக UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

7. உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளுக்கு பிரேசில் நாட்டின் சிறைக் கைதிகள் ஏற்பாடுகள்

சன.31,2013. வரும் ஜூலை மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளுக்கு இளையோரை வரவேற்க அந்நாட்டின் சிறைக் கைதிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த இளையோர் நாள் நிகழ்வில் பயன்படுத்தவிருக்கும் செபமாலைகள், திரு உருவங்கள் பதித்த அணிகலன்கள் போன்ற பல்வேறு  புனிதப் பொருட்களை பிரேசில் சிறையில் உள்ள 50 ஆண் மற்றும் 30 பெண் கைதிகள் தயாரித்து வருகின்றனர்.
சிறையில் உள்ள கைதிகள் மீண்டும் வெளி உலகத்திற்குச் செல்லும்போது, அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் இந்த முயற்சி அமையும் என்று, இத்திட்டத்தை முன்னின்று நடத்தும் தேசிய குடும்பநலக் கழகத்தின் உதவித் தலைவர், Paulo Fernando Melo கூறினார்.
இம்முயற்சியை பிரேசில் நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் ஆரம்பிக்கும் திட்டங்கள் உள்ளன என்றும், இக்கைதிகள் திருப்பலி உடைகள் மற்றும் பல புனிதப் பொருட்கள் தயாரிக்கும் வகையில் அவர்களுக்குப் பயிற்சிகள் தரும் திட்டமும் உள்ளது என்றும் உதவித் தலைவர் Melo கூறினார்.

8. நோய் தடுப்பு மருந்துகளுடன் தகுந்த அளவு உணவைக் கொடுப்பதால் பல இலட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கமுடியும்

சன.31,2013. நோய் தடுப்பு மருந்துகளுடன் (Antibiotics) தகுந்த அளவு உணவைக் கொடுப்பதால் பல இலட்சம் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கமுடியும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
உணவு பற்றாக் குறையால் ஒவ்வோர் ஆண்டும் 2 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்; இவர்களில் பத்து இலட்சம் குழந்தைகள் இறக்கின்றனர்.
இந்த மரணங்களையும், உணவு பற்றாக் குறையால் வளர்ச்சி குன்றிய குழந்தைகளையும் குறித்து ஆப்ரிக்காவின் மாலி நாட்டில், வாஷிங்க்டன் பல்கலைக் கழகம்,  குழந்தைகளுக்குத் நோய் தடுப்பு மருந்து மட்டும் அளிப்பதால் ஏற்படும் எதிர் மறை விளைவுகள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
2767 குழந்தைகள் மத்தியில் 5 முதல் 6 மாதங்கள் வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் The New England Journal of Medicine என்ற மருத்துவ இதழில் இப்புதனன்று வெளியாயின.
இந்த ஆய்வின் விவரங்களை, ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனமான WHO பயன்படுத்தவிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...