Monday, 21 January 2013

Catholic News in Tamil - 18/01/13


1. இலத்தீனிலும் திருத்தந்தையின் டிவிட்டர் செய்திகள்

2. Bamako பேராயர் : மாலி நாட்டுக்கு மனிதாபிமானக் கதவுகள் திறக்கப்பட வேண்டும்

3. கச்சின் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துமாறு மியான்மார் கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்

4. மியான்மாரில் ஊடகச் சுதந்திரம் இன்னும் அதிகமாக வழங்கப்பட அழைப்பு

5. கொலம்பியாவில் பங்குக்குரு ஒருவர் கொலை

6. கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவரின் உதவிக்கு விண்ணப்பம்

7. ஹாங்காக்கில் 30 கிறிஸ்தவ இளையோர், கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரத்திற்கு அர்ப்பணம்

8. WHO நிறுவனம் : தட்டம்மை நோய் உலகில் மீண்டும் சிலபகுதிகளில் தாக்கியிருப்பது இந்நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு அச்சுறுத்தல்

------------------------------------------------------------------------------------------------------

1. இலத்தீனிலும் திருத்தந்தையின் டிவிட்டர் செய்திகள்

சன.18,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது டிவிட்டர் வழிச் செய்திகளை இலத்தீன் மொழியிலும் வருகிற ஞாயிறன்று தொடங்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“@Pontifex_ln” என்ற முகவரியுடன் திருத்தந்தையின் டிவிட்டர் செய்திகள் இலத்தீன் மொழியில் ஆரம்பமாகும் என இவ்வியாழனன்று அறிவிக்கப்பட்ட முதல் சில மணி நேரங்களிலேயே 1,200க்கும் மேற்பட்டோர் அதில் இணைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், இஸ்பானியம், இத்தாலியம், ஜெர்மன், போர்த்துக்கீசியம், போலந்து, அராபியம் ஆகிய எட்டு மொழிகளில் ஏற்கனவே திருத்தந்தை டிவிட்டர் வழி செய்திகளை வெளியிட்டு வருகிறார். சனவரி 20ம் தேதி ஞாயிறன்று இலத்தீன், ஒன்பதாவது மொழியாக இணையவுள்ளது.
திருத்தந்தை 16ம் பெனடிக்டோடு நீங்கள் டிவிட்டர் பக்கத்தில் இணைவது மிகவும் வரவேற்கப்படுகின்றது”(Tuus adventus in paginam publicam Summi Pontificis Benedicti XVI breviloquentis optatissimus est) எனப் பொருள்படும் இலத்தீன் சொற்கள் அவரது முதல் செய்தியில் இடம்பெற்றுள்ளன.
@Pontifex என்ற முகவரியுடன் திருத்தந்தையின் டிவிட்டர் முயற்சிகள் கடந்த டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 25 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அதனால் பயன் அடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. Bamako பேராயர் : மாலி நாட்டுக்கு மனிதாபிமானக் கதவுகள் திறக்கப்பட வேண்டும்

சன.18,2013. மாலி நாட்டில் உணவும் மருந்துகளும் இன்றி துன்புறும் அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி அனுப்பப்படுவதற்கு அனுமதிகள் வழங்கப்படுமாறு மாலி நாட்டின் காரித்தாஸ் நிறுவனத் தலைவரான Bamako பேராயர் Jean Zerbo கேட்டுள்ளார்.
மாலி மக்களுக்குத் துன்பத்தின் புதிய காலம் தொடங்கியிருக்கிறது என்றுரைத்த பேராயர் Zerbo, அந்நாட்டில் சண்டை இடம்பெறும் வடக்கிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் ஏறக்குறைய நான்கு இலட்சம் மக்கள் தென்பகுதிக்கும் அண்டை நாடுகளுக்கும் சென்றுள்ளனர் என்றும் கூறினார்.
மாலி நாட்டில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே இடம்பெற்றுவரும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், நலவாழ்வு வசதிகள், மலேரியாவைத் தடுக்க உதவும் பொருள்கள் உட்பட மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் பேராயர் தெரிவித்தார்.

3. கச்சின் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துமாறு மியான்மார் கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள்

சன.18,2013. மியான்மார் நாட்டின் கச்சின் மாநிலத்தில் அரசுப் படைகளால் நடத்தப்பட்டுவரும் வான்வீச்சுக் குண்டுத் தாக்குதல்களும், துப்பாக்கிச்சூடுகளும் நிறுத்தப்பட்டு அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்துமாறு அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு வயதான வேதியர் உட்பட பல அப்பாவி மக்கள் உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ள இவ்வன்முறை நிறுத்தப்படுமாறும், போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கு அனைத்துலகப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுமாறும் கேட்டுள்ளனர் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள்.
மியான்மாரில் சண்டையிடும் குழுக்கள் அனைவரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறும், தேவைப்பட்டால் இடைநிலையாளரின் உதவியைக் கேட்குமாறும் கூறியுள்ள அத்தலைவர்கள், அந்நாட்டில் அமைதி இயலக்கூடியதே என்றும்  கூறியுள்ளனர்.
17 ஆண்டுகால வன்முறையை முடிவுக்குக் கொண்டுவந்த 2011ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கச்சின் மாநிலத்தில் தற்காலிகக் குடியிருப்புக்களில் அடைக்கலம் தேடியுள்ளனர் என்றும் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
4. மியான்மாரில் ஊடகச் சுதந்திரம் இன்னும் அதிகமாக வழங்கப்பட அழைப்பு

சன.18,2013. மியான்மாரில் நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படாமல் இருந்த ஊடகச் சுதந்திரத்தில் முன்னேற்றம் காணப்படுவதை உறுதி செய்யும் விதத்தில், பத்திரிகையாளர்கள் குறித்த விதிமுறைகளில் மாற்றம் இடம்பெறுமாறு, எல்லைகளற்ற நிருபர்கள் என்ற அமைப்பு கேட்டுள்ளது.
பாரிசை மையமாகக் கொண்டு இயங்கும், நிருபர்களின் உரிமைக்கான இந்த அமைப்பு, முதல் முறையாக அந்நாட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டதையும் விவரித்துள்ளது.
மியான்மாரில் 300க்கும் அதிகமான தினத்தாள்கள் இருந்தாலும், ஏறக்குறைய 30 தினத்தாள்களே செய்திகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

5. கொலம்பியாவில் பங்குக்குரு ஒருவர் கொலை

சன.18,2013. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 55 வயதாகும் கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவர் இப்புதனன்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 
கொலை செய்யப்பட்டுள்ள El Albergue பங்குக்குரு José Francisco Velez Echeverri, சமூகநலப் பணிகளில் அதிகமாக ஈடுபட்டு வந்தவர் எனவும், இவருக்கு எதிரிகள் இல்லை எனவும் பங்கு மக்கள் கூறியுள்ளனர்.
திருட்டே இக்கொலைக்கு காரணம் எனக் காவல்துறை சந்தேகிக்கின்றது.
அமெரிக்கக் கண்டத்தில் கத்தோலிக்க மேய்ப்பர்கள் கொலை செய்யப்படுவது   தொடர்ந்து நான்காவது ஆண்டாக அதிகரித்து வருவதாக  Fides செய்தி நிறுவனத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 
கொலம்பியாவில் 2012ம் ஆண்டில் ஒரு குருவும்,  2011ம் ஆண்டில் 6 குருக்களும் ஒரு பொதுநிலை விசுவாசியும், 2010ம் ஆண்டில் 3 குருக்களும் ஒரு துறவியும், 2009ம் ஆண்டில் 5 குருக்களும் ஒரு பொதுநிலை விசுவாசியும் கொல்லப்பட்டுள்ளனர்.

6. கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் அரசுத்தலைவரின் உதவிக்கு விண்ணப்பம் 

சன.18,2013. இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பத்திரிகை சுதந்திரத்தைக் காக்கவும், சிறையிலுள்ள இரண்டு பத்திரிகையாளர்கள் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்யவும் அரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டுமென்று ஒரு கிறிஸ்தவக் குழு கேட்டுள்ளது.
பிஜேபி கட்சி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தின் நிலைமை குறித்து அரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்புமாறு, கர்நாடக ஆளுனர் Bhardwaj ஐக் கேட்டுள்ளார் CSF  என்ற கிறிஸ்தவக் குழுவின் பொதுச் செயலர் Joseph Dias.
குறிப்பாக, இரண்டு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டது, பத்திரிகைச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் நெறிக்கப்படுவது ஆகியவை குறித்து அரசுத்தலைவருக்கு அறிக்கை அனுப்புமாறு வலியுறுத்தியுளார் Dias.
இரண்டு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதற்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் வேலைநீக்கம் செய்யப்படுமாறும் Dias கோரியுள்ளார்.

7. ஹாங்காக்கில் 30 கிறிஸ்தவ இளையோர், கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரத்திற்கு அர்ப்பணம்

சன.18,2013. இவ்வெள்ளிக்கிழமையன்று தொடங்கியுள்ள கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரத்தின் தொடக்க நிகழ்வாக, புதிய தோழமையையும் ஒன்றிப்பையும் நோக்கி என்ற தலைப்பில் ஹாங்காக்கின் 30 கிறிஸ்தவ இளையோர் ஒன்றுகூடி செபித்து சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கத்தோலிக்க, ஆங்லிக்கன், பெந்தக்கோஸ்து மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த, 18க்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 30 இளையோர் தங்களது அனுபவங்களை மட்டுமல்லாமல், சேர்ந்து செபித்து அதில் கிடைத்த நல்ல சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
கடவுள் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்?” என்ற தலைப்பில் இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்புச் செப வாரம் இவ்வெள்ளியன்று உலகெங்கும் தொடங்கியுள்ளது.

8. WHO நிறுவனம் : தட்டம்மை நோய் உலகில் மீண்டும் சிலபகுதிகளில் தாக்கியிருப்பது இந்நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு அச்சுறுத்தல்

சன.18,2013. தட்டம்மையினால் இறப்போரின் எண்ணிக்கை, கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் குறிப்பிடத்தகும் வகையில் குறைந்திருக்கின்ற போதிலும், சில பகுதிகளில் இந்நோய் மீண்டும் பெருமளவில் தாக்கியிருப்பது இந்நோய்த் தடுப்பு முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்தது.   
தட்டம்மையினால் இறப்போரின் எண்ணிக்கை 2,000த்துக்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் 5 இலட்சத்து 42 ஆயிரத்திலிருந்து, ஒரு இலட்சத்து 58 ஆயிரமாகக் குறைந்தது, அதேசமயம் அதே காலக்கட்டத்தில் இந்நோயினால் புதிதாகப் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் 58 விழுக்காடாகக் குறைந்தது என்று WHO நிறுவனத்தின் புதிய புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
எனினும், சில பகுதிகளில் ஏறக்குறைய இரண்டு கோடிச் சிறார்க்கு இந்நோய்க்கானத் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்றும், இவர்களில் பாதிப்பேர், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர் என்றும் WHO நிறுவனம் கூறியது.  
இந்தியாவில் மட்டும் 67 இலட்சம் சிறார், தட்டம்மைக்கெதிரானத் தடுப்பூசிகள் போடப்படாமல் உள்ளனர் எனவும் WHO நிறுவனம் எச்சரித்துள்ளது. 
தட்டம்மை நோய் ஏற்கனவே ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிரான்ஸ், இத்தாலி, இஸ்பெயின் உட்பட 5 நாடுகளில், 2011ம் ஆண்டில் இந்நோய் மீண்டும் பரவியது.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...