1.
இன்றைய மாற்றங்களுக்குத் தகுந்ததுபோல் திருப்பீடமும் எழுத்துப் பணியில்
மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது - கர்தினால் தர்சிசியோ பெர்தோனே
2. நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பற்றி பேராயர் Rino Fisichella
3. நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களைச் சிறப்பிக்கும் விதமாக, Beijing நகரில் இன்னிசை நிகழ்ச்சி
4. கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் 5 கோடியே, 50 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கருவில் அழிக்கப்பட்டுள்ளனர்
5. பெங்களூரு விவேக் நகர் குழந்தை இயேசு திருத்தலத்தின் விழா
6. மாற்றுத் திறனாளியான Rimsha Masihயின் வழக்கு பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் ஆரம்பம்
7. தெற்கு சூடானில் வேளாண்மையை வளர்க்கும் ஒரு புதிய முயற்சியில் FAO
8. வெப்பநிலையில் உயர்ந்த பத்து இடங்களில் ஒன்றை 2012ம் ஆண்டு பிடித்துள்ளது
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1.
இன்றைய மாற்றங்களுக்குத் தகுந்ததுபோல் திருப்பீடமும் எழுத்துப் பணியில்
மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது - கர்தினால் தர்சிசியோ பெர்தோனே
சன.16,2013. புதிய நற்செய்தி அறிவிப்புப் பணியை முனைப்புடன் ஆற்றிவரும் திருப்பீடம், பாரம்பரிய கலாச்சாரங்களைப் பாதுகாப்பதிலும் ஈடுபட்டுள்ளது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
வத்திக்கான் பதிப்பகத்தின் புதிய கட்டிடத்தை இச்செவ்வாயன்று திறந்து வைத்து, துவக்க உரையாற்றிய கர்தினால் பெர்தோனே, அச்சுத்
துறையில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களுக்குத் தகுந்ததுபோல் திருப்பீடமும்
தன் எழுத்துப் பணியில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது என்று
குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டுகளாக வத்திக்கான் பதிப்பகம் வெளியிடும் நூல்களில் விவிலியம், திருவழிபாடு, ஆன்மீகம் என்ற துறைகளையும் தாண்டி, பல்வேறு நன்னெறி அம்சங்களும் இடம்பெற்று வருகின்றன.
புத்தகங்களில் மட்டுமே இடம்பெற்றுவந்த அச்சுப் பணி தற்போது கணணி நூல்கள், இணையதள பதிப்புக்கள் என்று முன்னேறிவருவதற்கு ஏற்ப, வத்திக்கான் பதிப்பகமும் மாறி வருகிறது என்பதை கர்தினால் பெர்தோனே மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.
2. நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பற்றி பேராயர் Rino Fisichella
சன.16,2013. நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களில், திருஅவையில்
நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் உலகின் பல்வேறு மொழிகளில்
பிரசுரிக்கப்பட்டுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்த நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்கள் முடிவுற்றிருக்கும் வேளையில், இந்நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பற்றி, புதிய நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் அறிவிக்கப்பட்ட முதல் நம்பிக்கை ஆண்டு, 1967ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1968ம் ஆண்டு ஜூன் மாதம் முடிய நடைபெற்றது என்றும், தற்போது
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ள நம்பிக்கை ஆண்டை இரண்டாம்
நம்பிக்கை ஆண்டு என்று அவரே குறிப்பிட்டுள்ளார் என்றும் பேராயர் Fisichella சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைபெறும் இரண்டாவது நம்பிக்கை ஆண்டில் புதிய நற்செய்திப் பணிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்றும், நற்செய்தியைப் புதிய வழிகளில் வழங்கும் ஒரு ஆரம்பமாக, Twitter வழியாக திருத்தந்தை குறுகியச் செய்திகளை அளித்து வருவது ஓர் எடுத்துகாட்டாக அமைந்துள்ளது என்றும் பேராயர் Fisichella தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.
3. நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களைச் சிறப்பிக்கும் விதமாக, Beijing நகரில் இன்னிசை நிகழ்ச்சி
சன.16,2013. நம்பிக்கை ஆண்டின் முதல் நூறு நாட்களைச் சிறப்பிக்கும் விதமாக, சீனாவின் Beijing நகரில் அமைந்துள்ள புதுமைப் பதக்கம் (Miraculous Medal) பங்குத் தளத்தில் இன்னிசை நிகழ்ச்சியொன்று நடைபெற்றது.
சனவரி 13, கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்ட கிறிஸ்துவின் திருமுழுக்கு விழாவையொட்டி, 'நம்பிக்கையின் ஒளி' என்ற தலைப்புடன் நடத்தப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி, இளையோர் மத்தியில் குருத்துவ வாழ்வை வளர்க்கும் ஒரு முயற்சியாக அமைந்தது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சீனாவின் பல்வேறு குருத்துவ பயிற்சி இல்லங்களில் பயிலும் இளையோர் இவ்வின்னிசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர் என்றும், அவர்களின் குருத்துவ அழைத்தலைப் புதுப்பிக்கும் ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைந்தது என்றும் நிகழ்ச்சியின் அமைப்பாளர் அருள்தந்தை Zhang Hong Bo கூறினார்.
இதேபோல், நம்பிக்கை ஆண்டின் 200வது நாள் நிறைவு, அருள்சகோதரிகளை மையப்படுத்தும் துறவற விழாவாகக் கொண்டாடப்படும் என்றும், 300வது நாள் நிறைவு குடும்ப வாழ்வை மையப்படுத்தும் விழாவாக அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் 5 கோடியே, 50 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கருவில் அழிக்கப்பட்டுள்ளனர்
சன.16,2013. இம்மாதம் 19ம் தேதி முதல் 27ம் தேதி முடிய அமெரிக்காவில் வாழும் கத்தோலிக்கர்கள் செபத்திலும், உண்ணா நோன்பிலும் ஈடுபடுமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு முன், சனவரி 22ம் தேதி அமெரிக்காவில் கருக்கலைத்தல் சட்டமயமானது. இதையடுத்து, கடந்த 40 ஆண்டுகளில் அமெரிக்காவில் 5 கோடியே, 50 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் கருவில் அழிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்கொடுமைக்கு எதிராகவும், உயிர்கள் போற்றி வளர்க்கப்பட வேண்டும் என்ற கலாச்சாரத்தை உருவாக்கவும் ஒன்பது நாள் செபத்திற்கும், உண்ணா நோன்பு மற்றும் திருப்பயணங்களுக்கும் அமெரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நாட்களில் நடைபெறும் பல்வேறு முயற்சிகளின் ஒரு சிகரமாக, சனவரி 25ம் தேதி வாஷிங்டன் நகரில் நடைபெறும் ஓர் ஊர்வலத்தில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்ப்பதாக CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
5. பெங்களூரு விவேக் நகர் குழந்தை இயேசு திருத்தலத்தின் விழா
சன.16,2013. நான் ஓர் இந்துவாக இருந்தாலும், குழந்தை இயேசு திருத்தலத்தில் ஒருவகை அமைதியை அனுபவிக்கிறேன். கடந்த ஈராண்டுகளாய் நான் இந்த விழாவில் கலந்து வருகிறேன் என்று R.N. பிரமோத் என்ற இளைஞர் கூறினார்.
பெங்களூருவில் அமைந்துள்ள விவேக் நகர் குழந்தை இயேசு திருத்தலத்தின் விழா இத்திங்களன்று இரவு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கடந்த ஒன்பது நாட்களாக நடைபெற்ற இவ்விழாவின் உச்சகட்டமாக, இத்திங்கள் இரவு நடைபெற்ற தேர் பவனியை பேராயர் Bernard Moras துவக்கிவைத்தார். கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாமல், பிற மதத்தினரும் இத்திருத்தலக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர் என்று இந்தியச் செய்தித் தாள்கள் கூறியுள்ளன.
தற்போது உரோம் நகரில் கர்தினாலாக இருக்கும் லூர்துசாமி ஆண்டகை, 1969ம் ஆண்டு பெங்களூரு பேராயராகப் பணியாற்றியபோது, விவேக்
நகர் குழந்தை இயேசு திருத்தலத்தின் அடிக்கல்லை நாட்டினார். அப்போது ஒரு
கூடாரமாக அமைக்கப்பட்டிருந்த இக்கோவில் 1979ம் ஆண்டு முழுமையான ஓர் ஆலயமாக
உருமாறியது.
6. மாற்றுத் திறனாளியான Rimsha Masihயின் வழக்கு பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் ஆரம்பம்
சன.16,2013. தேவநிந்தனை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மாற்றுத் திறனாளியான Rimsha Masih என்ற சிறுமியின் வழக்கு இச்செவ்வாயன்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் ஆரம்பமானது.
பாகிஸ்தான் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருந்தாலும், வன்முறை
அரசியல் மூலம் நாட்டை அச்சத்திற்கு உள்ளாக்கும் தலைவர்களால் ஆபத்து உள்ளது
என்று பாகிஸ்தான் பாப்பிறை மறைபரப்புப் பணி கழகத்தின் இயக்குனர்
அருள்தந்தை Mario Rodrigues கூறினார்.
திருக்குர்ஆன் விளக்க நூலின் பக்கங்களை எரித்தார் என்று பொய் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட Rimsha Masih என்ற சிறுமியை, நவம்பர் மாதம் இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் விடுதலை செய்தது. தற்போது இவ்வழக்கு உச்சநீதி மன்றத்திற்குச் சென்றுள்ளது.
Rimsha Masih குடும்பம் வாழ்ந்த பகுதியில், அச்சிறுமியின் பெற்றோர் உட்பட இன்னும் பல கிறிஸ்தவர்கள் தங்கள் உயிருக்குப் பயந்து அப்பகுதியை விட்டு, தலைமறைவாகி உள்ளனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
7. தெற்கு சூடானில் வேளாண்மையை வளர்க்கும் ஒரு புதிய முயற்சியில் FAO
சன.16,2013. FAO (Food and Agriculture Organisation) எனப்படும் ஐ.நா. அமைப்பும், பிரான்ஸ் அரசும் இணைந்து தெற்கு சூடானில் வேளாண்மையை வளர்க்கும் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
5 இலட்சம் யூரோக்கள் மதிப்பில் துவக்கப்பட்டுள்ள இந்த முயற்சியின் மூலம், தெற்கு
சூடானின் அடிப்படை தானிய வகைகளை இன்னும் சிறந்த முறையில் பயிரிடும் வழிகள்
அங்குள்ள விவசாயிகளுக்குச் சொல்லித் தரப்படும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு, ஜூலை மாதம், சூடானில் இருந்து தெற்கு சூடான் தனி நாடாகப் பிரிந்ததிலிருந்து, இவ்விரு நாடுகளுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வந்தாலும், தெற்கு சூடான் வேளாண்மையில் தன்னிறைவு அடையும் வழிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருவது நம்பிக்கை அளிக்கும் ஓர் அடையாளம் என்று FAO அதிகாரி Sue Lautze கூறினார்.
இப்புதிய முயற்சியில் இளையோரை அதிக அளவில் ஈடுபடுத்துவே தங்கள் முதன்மையான குறிக்கோள் என்று FAOவின் மற்றொரு அதிகாரி Joseph Okidi கூறினார்.
8. வெப்பநிலையில் உயர்ந்த பத்து இடங்களில் ஒன்றை 2012ம் ஆண்டு பிடித்துள்ளது
சன.16,2013. 1880ம் ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டு வரும் ஒரு கணிப்பின்படி, வெப்பநிலையில் உயர்ந்த பத்து இடங்களில் ஒன்றை 2012ம் ஆண்டு பிடித்துள்ளது. இது, சராசரி வெப்பநிலையை விட 0.57°C அதிகம் என்றும் கூறப்படுகிறது.
NASA மற்றும் வேறொரு அமெரிக்க ஆய்வு நிறுவனம் இரண்டும் மேற்கொண்ட கணிப்பின்படி உயர்வெப்ப நிலையில், 2012ம் ஆண்டு, 9 அல்லது 10வது இடங்களைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு உலக வெப்ப நிலை இவ்வளவு அதிகம் உயர்ந்ததற்கு கரியமல வாயுவே காரணம் என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.
கடந்த 133 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின் அடிப்படையில், 2001ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரையில் நிலவிய உலக வெப்ப நிலை, முதல் 14 இடங்களில் உள்ளன என்றும் இவ்வறிக்கை கூறுகிறது.
பொதுவாகவே, 1976ம் ஆண்டுக்குப் பின்னர், உலக வெப்ப நிலை கூடிவரும் போக்கே அதிகம் காணப்படுகிறது என்றும் இந்த ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
No comments:
Post a Comment