1. ஜோர்டன் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு எருசலேம் முதுபெரும் தலைவர் செய்தி
2. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்திய ஆயர்கள்
3. பிரான்சின் சாலைகளில் திருமணம் குறித்து எழுப்பப்பட்டுள்ள மக்களின் குரல்களுக்கு அரசியல் தலைவர்கள் செவிமடுக்க வேண்டும், தலத்திருஅவை
4. மாலி தலத்திருஅவை : மாலியில் ப்ரெஞ்ச் இராணுவத் தலையீடு ஆறுதலாக இருக்கின்றது
5. ஆயுதங்களைச் சரணடையச் செய்த நிகழ்ச்சிக்கு உதவி செய்த மெக்சிகோ உயர்மறைமாநிலத்துக்கு அரசு நன்றி
6. சமூக ஆர்வலர் Lenin Raguvanshi : மகா கும்ப மேளா, தீவிரப்போக்கு மற்றும் வன்முறையின் காட்சி
7. ஆஸ்திரேலியாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியர்கள் குடியேற்றம்
8. மெக்சிகோவில் ஏறக்குறைய 30 இலட்சம் சிறார் அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. ஜோர்டன் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு எருசலேம் முதுபெரும் தலைவர் செய்தி
சன.15,2013. ஜோர்டன் குடிமக்கள், தங்களது
அன்புமிக்கத் தாயகத்துக்குத் தாங்கள் கொண்டிருக்கும் உரிமைகளையும்
கடமைகளயும் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத் தேர்தல்கள் மதிப்புமிக்க
வாய்ப்பு என்று எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கூறினார்.
ஜோர்டனில்
இம்மாதம் 23ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருப்பதையொட்டி
ஜோர்டன் மக்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள முதுபெரும் தலைவர் Twal, ஜோர்டன் குடிமக்கள், நாட்டின்
அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ள தேர்தல் குறித்த உரிமைகளைச் செயல்படுத்த
முடிந்தமைக்கு அந்நாட்டு அரசர் 2ம் அப்துல்லாவுக்கு நன்றி
தெரிவித்துள்ளார்.
ஜோர்டனின் அனைத்து முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சட்டத்தின் முன்பாக சமம் என்று, 2009ம் ஆண்டு மே மாதத்தில் அரசர் 2ம் அப்துல்லா, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம் கூறியதையும் நினைவுபடுத்தியுள்ளார் முதுபெரும் தலைவர் Twal.
ஒரே கடவுள் கொள்கையுடைய ஜோர்டனில், கடவுளுக்கு அடுத்தபடியாக, தங்களது
நாட்டு மக்களின் நியாயமான உரிமைகளுக்கு உறுதியளித்து அவற்றைப் பாதுகாப்பதே
அரசின் கடமை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்திய ஆயர்கள்
சன.15,2013. இந்தியாவில் பெண் ஒருவர், வன்முறைக் கும்பல் ஒன்றால் பாலியல் வன்கொடுமைக்கு மீண்டும் உள்ளாகியிருப்பது, நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது என்று சொல்லி, அவ்வன்கொடுமை குறித்தத் தங்களது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இந்திய ஆயர்கள்.
கடந்த டிசம்பரில் 23 வயது மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் புதுடெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இறந்துள்ளவேளை, பஞ்சாப் மாநிலத்தின் Amristarல்
29 வயதுப் பெண் ஒருவர் ஆறு ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு
உள்ளாகியிருப்பது குறித்து இந்திய ஆயர்கள் பேரவையின் பேச்சாளர் அருள்பணி Dominic D'Abreo, Fides செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், இவ்விவகாரம் தொடர்பாக இந்திய ஆயர்களின் கருத்தைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு மனிதரின் வாழ்வும் புனிதமானது என்றும்,
பெண்களின் மாண்பை அவமதிக்கும் இத்தகைய வன்செயல்களை நிறுத்துவதற்கு
கல்வித்துறையில் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அருள்பணி Dominic கூறினார்.
பாலியல் வன்கொடுமைச் செயல்கள் மிகுந்த வருத்தம் அளிக்கின்றன என்றுரைத்த அக்குரு, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள், ஒவ்வொரு மனிதரும் மதிக்கப்பட வேண்டியவர், எனவே இத்தகைய செயல்கள் இடம்பெறவே கூடாது என்றும் கூறினார்.
மேலும், “பாலியல் சமத்துவத்துக்கான நீதி நாள்” இம்மாதம் 27ம் தேதியன்று மும்பை உயர்மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படவிருப்பதையும் குறிப்பிட்ட அருள்பணி Dominic, இந்தியர்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற இந்நாள் ஊக்கமளிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.
பெண்கருக்கள் அழிப்பு, பெண் சிசுக்கொலை, வரதட்சணை இறப்புகள், பாலியல் வன்கொடுமை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், இம்மாதம் 27ம் தேதியன்று அனைத்துப் பங்குகளிலும் 3 கோடியே 70 இலட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Amristarல் 29 வயதுப் பெண் ஒருவர் பேருந்தில் தனியாகப் பயணம் செய்ததை அப்பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் பயன்படுத்திக்கொண்டு, அப்பெண்ணின்
கிராமத்தில் வண்டியை நிறுத்தாமல் ஒதுக்குப்புறமான வீடொன்றுக்கு
வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று மேலும் ஐந்து பேரை அவ்விடத்துக்கு
வரவழைத்து மாற்றி மாற்றி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
3. பிரான்சின் சாலைகளில் திருமணம் குறித்து எழுப்பப்பட்டுள்ள மக்களின் குரல்களுக்கு அரசியல் தலைவர்கள் செவிமடுக்க வேண்டும், தலத்திருஅவை
சன.15,2013.
பிரான்சில் ஓரினச்சேர்க்கைத் திருமணங்களுக்கு எதிராக இலட்சக்கணக்கான
மக்கள் சாலைகளில் எழுப்பிய குரல்களுக்கு அரசியல் தலைவர்கள் செவிமடுக்க
வேண்டுமென ப்ரெஞ்ச் ஆயர் பேரவை பேச்சாளர் பேரருள்திரு Bernard Podvin கூறினார்.
குடும்பம் என்றால் என்ன?, திருமணம் என்றால் என்ன?, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இருக்கின்றதா? என்பன போன்ற சமூகம் பற்றிய கேள்விகளை, ப்ரெஞ்ச் ஆயர்கள் எதிர்கொண்டு வருவதாக பேரருள்திரு Podvin மேலும் கூறினார்.
இத்தகைய விடயங்களுக்கானத் தீர்வை, தெருக்களில் நடத்தப்படும் பேரணிகள் முடிவு செய்ய வேண்டுமெனத் தான் கூறவில்லை, ஏனெனில் இது எப்போதும் ஆபத்தானது எனத் தெரிவித்த ப்ரெஞ்ச் ஆயர் பேரவை பேச்சாளர், இவ்விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கே பொறுப்பு உள்ளது என்று கூறினார்.
ஓரினச்சேர்க்கைத் திருமணங்களையும், அவ்வாறு
திருமணம் செய்வோர் குழந்தைகளைத் தத்து எடுப்பதையும் சட்டப்படி
அங்கீகரிப்பதற்கு ப்ரெஞ்ச் அரசு திட்டமிட்டு வருவது குறித்து மக்கள்
மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
பிரான்சின்
முப்பது குடும்ப அமைப்புக்களால் இஞ்ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்ட
இப்பேரணியில் எட்டு இலட்சம் பேர்வரை பங்கு கொண்டனர் என்று ஊடகங்கள்
கூறுகின்றன.
4. மாலி தலத்திருஅவை : மாலியில் ப்ரெஞ்ச் இராணுவத் தலையீடு ஆறுதலாக இருக்கின்றது
சன.15,2013. மாலி நாட்டில் இசுலாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக, பிரான்ஸ் நாட்டுப் படைகள் போரிட்டு வருவது, மாலி நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருக்கின்றது என்று, அந்நாட்டு ஆயர் பேரவைச் செயலர் அருள்பணி Edmond Dembele, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஜிகாத் எனப்படும் இசுலாமியப் தீவிரவாதக் குழுக்கள், இம்மாதம் 10ம் தேதி Konna நகரைக் கைப்பற்றிய பின்னர், அக்குழுக்கள் தென்பகுதிக்கும் வரக்கூடும் என்ற அச்சத்தில் தாங்கள் மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டிருந்ததாகவும், ப்ரெஞ்ச் இராணுவத்தின் தலையீடு அப்புரட்சிக்குழுக்கள் மேலும் முன்னேறவிடாமல் தடுத்திருப்பதாகவும் அருள்பணி Dembele தெரிவித்தார்.
மாலியின் தீவிரவாதக் குழுக்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களும்கூட, ப்ரெஞ்ச் இராணுவத்தின் தலையீட்டை நம்பிக்கையுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் அருள்பணி Dembele கூறினார்.
இதற்கிடையே, மாலியின் மைய நகரான டியாப்லியை இந்த இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் கைப்பற்றிவிட்டதாக ப்ரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.
5. ஆயுதங்களைச் சரணடையச் செய்த நிகழ்ச்சிக்கு உதவி செய்த மெக்சிகோ உயர்மறைமாநிலத்துக்கு அரசு நன்றி
சன.15,2013.
மெக்சிகோ நாட்டு மெக்சிகோ நகரில் குவாதலூப்பே அன்னைமரியா பசிலிக்கா
வளாகத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஆயுதங்களைச் சரணடையச் செய்த
நிகழ்ச்சிக்கு உதவி செய்த மெக்சிகோ நகர் உயர்மறைமாநிலத்துக்கு அரசு அதிகாரி
ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்து நிருபர்களிடம் பேசிய ஆளுனர் Miguel Angel Mancera, மெக்சிகோ மக்கள் மத்தியில் அமைதிக்கான ஏக்கம் இருப்பதையே இது காட்டுகின்றது என்று கூறினார்.
ஆயுதங்களைச் சரணடையச் செய்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த மெக்சிகோ நகர் கர்தினால் Norberto Rivera, மெக்சிகோ நாட்டில் பரவலாக இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரத்தால், வன்முறையும் நாடெங்கும் பரவியுள்ளது என்று கூறினார்.
மேலும், ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்ட இத்தகைய சமூக விவகாரத்தில் தலத்திருஅவை ஒதுங்கி இருக்க முடியாது என்றும் கர்தினால் Rivera தெரிவித்தார்.
6. சமூக ஆர்வலர் Lenin Raguvanshi : மகா கும்ப மேளா, தீவிரப்போக்கு மற்றும் வன்முறையின் காட்சி
சன.15,2013. இந்துக்களின் மிகப்பெரிய விழாவான மகா கும்ப மேளா, இலட்சக்கணக்கான மக்களின் புனித நேரமாக இருப்பதைவிட, வன்முறை மற்றும் தீவிரப்போக்கின் வெளிப்பாடாக இருக்கின்றது என, மனித உரிமைகள் குறித்த மக்கள் விழிப்புணர்வு கழக இயக்குனர் Lenin Raguvanshi கூறினார்.
இந்தியாவில்
பல புத்தமதத்தினர் கொல்லப்படுவதற்குப் பொறுப்பானவர்கள் என்று சொல்லப்படும்
நாகா சாதுக்களின் ஆயுத அணிவகுப்பு சாதி அமைப்பினால் அறிவிக்கப்பட்ட
சமத்துவமின்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு இத்திருவிழா ஒரு வாய்ப்பாக
அமைந்திருக்கின்றது என்றும் Lenin Raguvanshi குறை கூறினார்.
அலகாபாத்தில்
கும்ப மேளாத் திருவிழாவுக்கென 124 கிலோ கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற
வாகனம் ஒன்றை இச்செவ்வாயன்று காவல்துறை கைப்பற்றியுள்ளது என்றும் லெனின்
கூறினார்.
ஈட்டிகள், கம்புகள், கத்திகள், திரிசூலம் ஆகியவையே, Chowni எனப்படும் இராணுவ முகாம்களில் வாழும் நாகா சாதுக்களின் அடையாளங்கள் எனவும், சமயத்
திருவிழாவான கும்ப மேளாவில் இந்தச் சாதுக்கள் வன்முறையால் தூண்டப்பட்ட
இந்துத்துவத்தை அறிக்கையிடுகின்றனர் எனவும் லெனின் தெரிவித்தார்.
உலகில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடும் இவ்விழாவில், இவ்வாண்டில் 10 கோடிக்கு மேற்பட்டவர்கள் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மட்டும் 5 இலட்சத்துக்கும் மேலானோர் கங்கையில் புனித நீராடியுள்ளனர்.
மகர சங்கராந்தி நாள் துவங்கி, மகா சிவராத்திரிவரை, 55 நாட்களுக்கு இவ்விழா நடைபெறும்.
இந்தியாவின் புண்ணிய நதிகளாகக் கருதப்படும் கங்கை, யமுனை, காவிரி
ஆகிய நதிகள் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் அருகே
திரிவேணியில் சங்கமமாக ஒன்றிணைகின்றன. இந்தப் புண்ணியத் தீர்த்தத்தில் 12
ஆண்டுகளுக்கு ஒருமுறை 'மகா கும்ப மேளா' திருவிழா நடைபெற்று வருகின்றது.
7. ஆஸ்திரேலியாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியர்கள் குடியேற்றம்
சன.15,2013.
ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவிலிருந்து மக்கள்
ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கின்றனர் என்று மரபணு குறித்த ஆய்வு ஒன்று
தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில்
ஏறக்குறைய நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மனிதர்கள் வந்து
குடியேறிய பின்னர் அக்கண்டம் பெருமளவு தனித்துவிடப்பட்டிருந்தது, பின்னர் 1800களில் ஐரோப்பியர்கள் அங்கு வந்து குடியேறியுள்ளனர் என்று கருதப்பட்டு வந்தது.
ஆனால், ஆஸ்திரேலியப் பூர்வீகஇன மக்களின் மரபணுச் சோதனைக்குப் பின்னர் வெளியான தகவலின்படி, அந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவிலிருந்து மக்கள் வந்து குடியேறியிருப்பதாகத் தெரிய வருகிறது.
ஏறக்குறைய 35 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் நியுகினி மக்களுக்கு இடையே மரபணுத் தொடர்பு இருந்தது எனவும், அக்காலத்தில் இவ்விரு பகுதிகளும் ஒரே நிலப்பகுதியாக இருந்தன எனவும் அந்த ஆய்வு கூறுகிறது.
8. மெக்சிகோவில் ஏறக்குறைய 30 இலட்சம் சிறார் அடிமைத்தனத்தில் வாழ்கின்றனர்
சன.15,2013. மெக்சிகோவில் ஏறக்குறைய 30 இலட்சம் சிறார், குழந்தைத் தொழில் என்ற வடிவில் சுரண்டப்படுகிறார்கள், வியாபாரம் செய்யப்படுகிறார்கள், பாலியல்ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் மற்றும் அடிமைத்தனத்தில் வாழ்கின்றார்கள் என ஊடகங்கள் கூறுகின்றன.
ப்த்து கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண்ட இலத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில், இரண்டு கோடிப் பேர் வீட்டு வேலை செய்கின்றனர், இவர்களில் குறைந்தது 20 இலட்சம் பேர் சிறுமிகள் எனவும் ஊடகங்கள் கூறுகின்றன.
30 இலட்சம் பேர் மோசமான நிலைகளில் வேலை செய்கின்றனர், 33 விழுக்காட்டினர் வாரத்துக்கு 35 மணி நேரங்களுக்கு மேல் வேலை செய்கின்றனர், 10 விழுக்காட்டினருக்கு நிலையான வேலை நேரம் கிடையாது எனவும் ஊடகங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment