Tuesday, 8 January 2013

Catholic News in TAmil- 08/01/13


1. திருத்தந்தை : நல்ல சமாரியர் போன்று துன்புறுவோருக்கு உதவி செய்ய வேண்டும்

2. அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்களின் தாய்மாருக்குக் கர்தினால் பியாச்சென்சா கடிதம்

3. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் தேசிய குடியேற்றதாரர் வாரம்

4. Amman ஆயர் : அமைதி என்பது கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பொதுவானது

5. உலகில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் தினமும் செபமாலை செபிப்பதற்கு உறுதி

6. இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து கானடா எச்சரிக்கை

7. இந்தியாவில் சிறார் பாலியல் தொழிலிலும் மனித வியாபாரத்திலும் கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகின்றனர்

8. செவ்வாய்க் கிரகத்தில் புதிய நகரம் கட்டுவதற்குத் திட்டம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : நல்ல சமாரியர் போன்று துன்புறுவோருக்கு உதவி செய்ய வேண்டும்

சன.08,2013. நாம் ஒவ்வொருவரும் பிறருக்கும், நமக்கு நெருக்கமானவர்களுக்கும் நல்ல சமாரியர்களாக வாழும்பொருட்டு நமது திருஅவைச் சமூகங்களில் பிறரன்புப் பணிகள் மேலும் அதிகமாக இடம்பெறுவதற்கு இந்த நம்பிக்கை ஆண்டு ஏற்ற காலமாக அமைகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 11ம் தேதி, லூர்து அன்னைத் திருவிழாவன்று சிறப்பிக்கப்படும் 21வது அனைத்துலக நோயாளர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, புனித லூக்கா நற்செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள நல்ல சமாரியர் (லூக்.10,25-37) குறித்த சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பல்வேறு திருஅவைத் தந்தையர்கள் நல்ல சமாரியரில் இயேசுவையே பார்த்தனர் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் செபத்தில் இறைவனோடு ஆழமான உறவு கொள்வதன் மூலம், நல்ல சமாரியர் போன்று, உடலிலும் உள்ளத்திலும் துன்புறுவோர்மீது அக்கறை காட்டுவதற்கான வலிமையைப் பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.
திருஅவை வரலாற்றில், நோயாளிகளுக்கு உதவிய எண்ணற்ற  புனிதர்கள் குறித்துத் தான் குறிப்பிட விரும்புவதாகவும் சொல்லியுள்ள  திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற கொல்கத்தா அன்னை தெரேசா, புனித திருமுகத் தெரஸ், புனித குழந்தை தெரஸ், தொழுநோயாளர்களுக்கென்று தனது வாழ்வை அர்ப்பணித்த Raoul Follereau போன்ற பலரது பெயர்களை 21வது அனைத்துலக நோயாளர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 


2. அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்களின் தாய்மாருக்குக் கர்தினால் பியாச்சென்சா கடிதம்

சன.08,2013. உலகின் அனைத்து அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்கள் தங்களது இறையழைப்பைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த அவர்களின் தாய்மாருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கர்தினால் Mauro Piacenza.
இறைவனின் அன்னைப் பெருவிழாவை முன்னிட்டு உலகின் அனைத்து அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவ மாணவர்களின் தாய்மாருக்குத் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ள, திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் Piacenza, இளைஞர்கள் இறையழைத்தலைப் பெறுவதற்கு உதவுவதில் குடும்பங்களின் பங்கைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தக் கடிதம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் Piacenza, குருத்துவ வாழ்வைத் தேர்ந்து கொள்பவரின் வாழ்வில் கிறிஸ்து செயல்பட்டாலும், தாய்மார் அதில் சிறப்புப் பங்கு வகிக்கின்றனர் எனவும் கூறினார்.
புனித அகுஸ்தீனாரின் தாய் புனித மோனிக்காவின் வாழ்வு பற்றி விளக்கிய கர்தினால் Piacenza, புனித மோனிக்கா அனைத்துத் தாய்மாருக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கின்றார் எனவும் கூறினார்.
தனது கன்னி உதரத்தில் இறைவார்த்தையை வரவேற்று உன்னத குருவாம் இயேசுக் கிறிஸ்துவைப் பெற்றெடுத்து தனிப்பட்ட விதத்தில் நமது மீட்புப் பேருண்மையில் பங்கு கொண்ட அன்னை மரியாவை நினைப்பது போன்று, அனைத்து அருள்பணியாளர்களின் தாய்மாரையும் திருஅவை நினைக்கின்றது என்றும் கர்தினால் கூறினார்.


3. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் தேசிய குடியேற்றதாரர் வாரம்

சன.08,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சரியான ஆவணங்கள் இன்றி வாழும் ஒரு கோடியே பத்து இலட்சம் குடியேற்றதாரருக்குச் சட்டரீதியாகத் தங்குவதற்கு அனுமதியளிப்பதற்கு உதவும் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுமாறு அழைப்பு விடுத்து தேசிய குடியேற்றதாரர் வாரத்தைத் தொடங்கியுள்ளனர் ஆயர்கள்.
குடியேற்றதாரர்கள் பற்றி நினைப்பதற்கும், அவர்கள் குறித்துச் சிந்திப்பதற்கும் இந்தக் குடியேற்றதாரர் வாரம் நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று, அமெரிக்க ஆயர் பேரவையின் குடியேற்றதாரர் ஆணையத் தலைவரான Los Angeles பேராயர் José Gomez கூறினார்.
இம்மாதம் 6ம் தேதியன்று தொடங்கியுள்ள இந்தத் தேசிய குடியேற்றதாரர் வாரம் குறித்துப் பேசிய பேராயர் Gomez, கத்தோலிக்கர், தங்களது பங்குகளுக்கும் சமூகங்களுக்கும் புதிதாக வரும் மக்களை வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தேசிய குடியேற்றதாரர் வாரம் இம்மாதம் 6ம் தேதி முதல் 12ம் தேதிவரை கடைப்பிடிக்கப்படுகின்றது. இம்மாதம் 13ம் தேதி ஞாயிறு அனைத்துலக குடியேற்றதாரர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.


4. Amman ஆயர் : அமைதி என்பது கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பொதுவானது

சன.08,2013. பகிர்ந்து கொள்வதும், தாராளமாக இருப்பதும், பிறருக்குத் தங்களது இதயக் கதவுகளைத் திறந்து விடுவதும் அராபிய மதிப்பீடுகள், இவற்றை நினைத்துத் தாங்கள் பெருமிதம் அடைகின்றோம் என ஜோர்டன் நாட்டுத் தலைநகர் Amman ஆயர் Maroun Elias Lahham கூறினார்.
புனித பூமிக் கிறிஸ்தவர்களுடன் தலத்திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆயர்கள் புனித பூமிக் கத்தோலிக்கத் தலைவர்களுடன் நடத்திவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஆயர் Elias Lahham, வத்திக்கான் வானொலியின் நிருபருக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
நீ அன்பு செய்யும்போது அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இது கிறிஸ்தவ மதிப்பீடு மட்டுமல்ல, அராபிய மதிப்பீடும் ஆகும் என்றும் உரைத்த ஆயர், ஜோர்டனில் கத்தோலிக்கத் திருஅவையின் கல்வி, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன என்று கூறினார்.
எருசலேம் இலத்தீன் திருஅவையைச் சேர்ந்த ஜோர்டனில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 2 இலட்சம் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் கத்தோலிக்கர் பாதிப்பேரே என்றும் Amman ஆயர் கூறினார்.
ஜோர்டனில் பெரும்பாலானவர்கள் சுன்னி இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்கள்.


5. உலகில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் தினமும் செபமாலை செபிப்பதற்கு உறுதி

சன.08,2013. தினமும் செபமாலை செபிப்பதற்கு உறுதி எடுத்துள்ள 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்ட நூல் ஒன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நூலைத் திருத்தந்தையிடம் சமர்ப்பித்தது குறித்துப் பேட்டியளித்த அருள்தந்தை John Phalen, தினமும் செபமாலை செபிப்பதற்கு உறுதி எடுத்துள்ள உலகின் பல பாகங்களைச் சேர்ந்த மக்களின் பெயர்கள், அவர்களின் கையெழுத்துக்களுடன் இந்த நூலில் உள்ளன என்று கூறினார்.
விசுவாசிகளைத் தினமும் செபமாலை செபிக்கத் தூண்டும் முயற்சியானது, குடும்ப செபமாலை அமைப்பை உருவாக்கிய இறையடியார் அருள்பணி Patrick Peyton என்பவரால் 1991ம் ஆண்டில், ஆரம்பிக்கப்பட்டது.
குடும்பத்தில் செபமாலை சொல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 1942ம் ஆண்டில் குடும்ப செபமாலை அமைப்பை உருவாக்கினார் இறையடியார் அருள்பணி Patrick Peyton.


6. இலங்கை மனித உரிமை நிலவரம் குறித்து கானடா எச்சரிக்கை

சன.08,2013. இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நடவடிக்கைகளில்  திருப்தியளிக்கக்கூடிய முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டால், அந்நாட்டில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கானடா நாட்டுப் பிரதமர் Stephen Harper கலந்து கொள்ளமாட்டார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கானடாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கையில் நிருபர்களிடம் தெரிவித்த கானடா நாட்டு குடியேற்றதாரர் துறை அமைச்சர் Jason Kenney, இதனை இலங்கை அரசிடம் தெளிவுபடுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.
இலங்கையில் போருக்குப் பின்னரும்கூட மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் நீடிப்பதாக கானடா உணர்கிறது என அவர் தெரிவித்தார்.
"இலங்கையிலிருந்து மக்கள் ஆஸ்திரேலியா, கானடா போன்ற நாடுகளில் சென்று குடியேறும் ஆவலில் பெரும் பணம் செலவழித்து சட்டவிரோத ஆள்கடத்தல் கும்பல்களிடம் தொடர்ந்து சிக்குகிறார்கள் என்றால், அவர்களை அந்த நிலைக்குத் தள்ளுகின்ற ஓர் அரசியல் சூழல் இலங்கையில் நிலவத்தான் செய்கிறது என்பது தனக்குப் புரிகிறது" என்று கென்னடி குறிப்பிட்டுள்ளார்.
போர்க் காலத்தைவிட தற்போது இலங்கையிலிருந்து வெளிநாடுகள் சென்று சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கையில் போர் நடந்த காலத்தில் சட்டவிரோத நிறுவனங்களுக்குப் பணம் கொடுத்து வெளியேற முயன்றவர்களைவிட அதிகம்பேர் தற்போது அவ்வாறு வெளியேற முயற்சிக்கின்றனர் என்ற விவரம் தனக்குக் கவலையை ஏற்படுத்துகிறது என அமைச்சர் Jason Kenney தெரிவித்தார்.


7. இந்தியாவில் சிறார் பாலியல் தொழிலிலும் மனித வியாபாரத்திலும் கட்டாயமாகப் பயன்படுத்தப்படுகின்றனர்
சன.08,2013. இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சிறார் காணாமல்போகின்றனர், இவர்கள் பாலியல் தொழிலிலும், சட்டத்துக்கு விரோதமாகவும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
2011ம் ஆண்டில் காணாமல்போயுள்ள 32,342 சிறாரில், குறைந்தது 11,228 சிறார் மேற்கு வங்காளத்தில் காணாமல்போயுள்ளனர், இதற்கு ஏழ்மையே காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. 
18 வயதுக்குட்பட்ட சிறார் பாலியல் தொழிலில் ஒரு மாதத்தில் 80,000 ரூபாய்வரை சம்பாதிக்கின்றனர் என்றும் அந்த ஊடகச் செய்தி கூறுகிறது.


8. செவ்வாய்க் கிரகத்தில் புதிய நகரம் கட்டுவதற்குத் திட்டம்

சன.08,2013. செவ்வாய்க் கிரகத்தில் எண்பதாயிரம் பேர் தங்கும் வகையில் நகரமொன்றை உருவாக்குவதற்கு SpaceX நிறுவனத்தின் தலைவர் Elon Musk திட்டமிட்டு வருகிறார்.
இந்தக் குடியேற்றம் பற்றி இலண்டன் Royal Aeronautical கழகத்தில் பேசிய Musk, அங்கு முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
செவ்வாய்க் கிரகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 80,000 பேர் குடியேறுவார்கள். அவர்கள் அங்கு சுயச்சார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
இதற்காக, செவ்வாய்க் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களைத் தயாரிக்க வேண்டியுள்ளது. அத்துடன் விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் கூடிய "பால்கன்-9" என்ற விண்கலத்தை நாசா தயாரித்து வருகிறது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவதற்கான கட்டணம் 5 இலட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment