Tuesday, 8 January 2013

CAtholic News in TAmil - 07/01/13


1. திருப்பீடத்திற்கான பன்னாட்டு தூதர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு

2. கம்போடிய திருஅவைக்கு திருத்தந்தையின் சிறப்புச் செய்தி

3. திருத்தந்தை : ஆயர்கள் இயேசு கிறிஸ்துவின் வழியைப் பிறருக்குக் காட்ட வேண்டும்

4. திருத்தந்தை : திருக்காட்சி இயேசு கிறிஸ்துவின் உலகளாவியதன்மையைக் காட்டுகிறது

5. மத உரிமை மீறல்கள் கியூபாவில் அதிகரித்துள்ளது

6. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 60,000க்கும் அதிகமான மாணவர்கள் கல்விக்கூடங்களிலிருந்து இடையில் விலகியுள்ளனர்

7. எய்ட்ஸ் நோய்க்கு புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீடத்திற்கான பன்னாட்டு தூதர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு

சன.07,2013. மனிதனின் ஆன்மீக மற்றும் பொதுநலனுக்காக எவ்வாறு திருப்பீடம் அரசுகளுடன் இணைந்து செயலாற்றிவருகிறது என்பதன் அடையாளமாக ஐவரிகோஸ்ட் நாட்டில் அண்மையில் உயிரிழந்த திருப்பீடத்தூதர் பேராயர் அம்புரோஸ் மாட்தா அந்நாட்டில் பெற்றிருந்த உயர்மதிப்பு இருந்தது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் அரசியல் தூதர்களை இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து உரை வழங்கிய திருத்தந்தை, பல்வேறு நாடுகளில் திருப்பீடத்தின் பலன் தரும் ஒத்துழைப்புப் பணிகளின் சிறந்த எடுத்துக்காட்டாக, இந்தியரான திருப்பீடத்தூதர் பேராயர் மாட்தாவை முன்வைத்தார்.
உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் போர்நிறுத்தம் இடம்பெற்று பயன்தரும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுதல், இஸ்ரேயலர்களும், பாலஸ்தீனியர்களும் தங்களுக்குரிய தனிநாடுகளுடன் ஒத்திணங்கி வாழ்தல், ஈராக் நாடு ஒப்புரவின் பாதையில் நடைபோடுதல், லெபனனில் அமைதியின் வருங்காலத்தை கட்டியெழுப்புவதில் கிறிஸ்தவ சமூகம் பலனுள்ள சாட்சியாக விளங்குதல், வட ஆப்ரிக்கா, சஹாராவை சுற்றியுள்ள ஆப்ரிக்க நாடுகள், காங்கோ, நைஜீரியா, மாலி, மத்திய ஆப்ரிக்க குடியரசு போன்றவைகளில் அமைதியும் நிலையான தன்மையும் இடம்பெறுதலின் அவசியம் போன்ற அம்சங்களையும் தன் உரையில் வலியுறுத்தினார் பாப்பிறை.
கருக்கலைப்பை அனுமதிப்பது ஒழுக்கரீதி சட்டங்களுக்கு எதிரானது என்பதையும் எடுத்தியம்பிய திருத்தந்தை, உலகில், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் மனித உரிமைகள் குறித்து தெளிவற்ற ஒரு கண்ணோட்டம் உருவாகி வருவது குறித்த கவலையையும் வெளியிட்டார். அமைதிக்கான பாதையில் கல்வியின் முக்கியத்துவத்தையும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
எழைநாடுகளில் கல்வி நிலை வளர்வதற்கு உதவுவதன் மூலம் ஏழ்மையையும் நோய்களையும் ஒழிக்க பணக்கார நாடுகள் உதவமுடியும் எனவும் தெரிவித்தத் திருத்தந்தை, பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதியைக் கட்டியெழுப்புவது என்பது நமக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு அல்ல, மாறாக அது ஓர் அத்தியாவசியத் தேவை என்றார். பல்வேறு நாடுகளில் திருஅவை தன் மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், அனாதைச்சிறார் இல்லங்கள் மூலம் ஆற்றிவரும் பணிகளையும், திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களிடம் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
உலகின் 179 நாடுகள் திருப்பீடத்துடன் முழு அரசியல் உறவைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


2. கம்போடிய திருஅவைக்கு திருத்தந்தையின் சிறப்புச் செய்தி

சன.07,2013. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையும், கத்தோலிக்கத் திருஅவையின் புதிய மறைக்கல்வி ஏடு வெளியிடப்பட்டதன் 20ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் விதமாக கருத்தரங்கு ஒன்றை நடத்திவரும் கம்போடிய தலத்திருஅவைக்கு ஒலி-ஒளி வாழ்த்துச்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கம்போடியா நாட்டை இருண்ட காலத்திற்குள் தள்ளிய பிரச்சனைகளின் காலத்தை தற்போது தான் நினைவுகூர்வதாக தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, நற்செய்திக்குச் சான்று பகரும் விதமாக இக்காலக்கட்டத்தில் உயிரிழந்த கிறிஸ்தவத் திருப்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரின் மன உறுதியைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த சாட்சிய வாழ்வே கம்போடியாவில் திருஅவை சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆன்மீகப் பலத்தை வழங்கி, இன்று திருமுழுக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் காரணமாகியுள்ளது எனவும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
கம்போடியாவின் இளைஞர்கள், குருமாணவர்கள், குருக்கள், துறவறத்தார், மறைபோதகர்கள் என அனைவருக்கும் தன் சிறப்பு வாழ்த்துக்களையும் இதில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.


3. திருத்தந்தை : ஆயர்கள் இயேசு கிறிஸ்துவின் வழியைப் பிறருக்குக் காட்ட வேண்டும்

சன.07,20113. இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருக்காட்சித் திருவிழாத் திருப்பலியை நிகழ்த்தி, நான்கு பேரை ஆயர்களாகத் திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் அந்தரங்கச் செயலர் மற்றும் பாப்பிறை இல்ல நிர்வாகத்தின் தலைவரான பேரருள்திரு Georg Gaenswein, கத்தோலிக்கக் கல்விப் பேராயத்தின் செயலர் பேரருள்திரு Vincenzo Zani, நிக்கராகுவா நாட்டுக்கானப் பதிய திருப்பீடத் தூதர் பேரருள்திரு Fortunatus Nwachukwu, திருப்பீடத்தின் தூதரகப் பணிகளில் தூதராகப் பணியாற்றும் பேரருள்திரு Nicolas Thevenin ஆகிய நால்வரையும் ஆயர்கள் மற்றும் பேராயர்களாகத் திருநிலைப்படுத்தினார் திருத்தந்தை.
இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இந்த மூன்று கீழ்த்திசை ஞானிகளின் பண்புகள், ஓர் உண்மையான ஆயரின் பண்பை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன என்று கூறினார்.
விண்மீனால் வழிநடத்தப்பட்டு பெத்லகேம் குடிலை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடர்ந்த இந்த மூன்று ஞானிகள், இயேசு கிறிஸ்துவை நோக்கிய நாடுகளின் திருப்பயணத்தின் மற்றும் மனித வரலாறு முழுவதும் வீசிக்கொண்டிருக்கும் பெரிய ஊர்வலத்தின் தொடக்கமாக இருக்கிறார்கள் என்றும் கூறினார் அவர்.
ஓர் ஆயர் இந்தப் பயணத்தில் மற்றவர்களோடு சேர்ந்து நடப்பவர் மட்டுமல்லாமல், பிறருக்கு முன்னே சென்று அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் வழியைக் காட்ட வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இந்த மூன்று ஞானிகள் போன்று திருநிலைப்படுத்தப்பட்ட ஆயர்களும் துணிச்சலானவர்களாய் இருக்க வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, மனிதர்மீது கடவுள் கொண்டிருக்கும் அக்கறையாக வாழும் ஒரு மனிதரே ஆயர் என்றும், இதற்காகவே ஆயர் ஓய்வின்றிச் செயல்பட்டு, உலகில் விண்மீன்கள் போன்று இயேசுவின் வாழ்வுக்குச் சாட்சிகளாக வாழ வேண்டுமென்றும் கூறினார்.

4. திருத்தந்தை : திருக்காட்சி இயேசு கிறிஸ்துவின் உலகளாவியதன்மையைக் காட்டுகிறது

சன.07,2013. இயேசு கிறிஸ்து, அனைத்து மக்களின் பாதையை வழிநடத்தும் உலகின் ஒளி என்பதை, மூன்று கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவைப் பார்த்த நிகழ்வை நாம் சிறப்பிக்கும் திருக்காட்சித் திருவிழா நமக்குக் காட்டுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மரியாவின் விசுவாசம், புதிய உடன்படிக்கையின் மக்களாகிய, திருஅவையின் விசுவாசத்தின் முதல் கனியாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றது என்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இஞ்ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த மக்களிடம் கூறினார் திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட திருக்காட்சித் திருவிழாவை மையமாக வைத்து மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, புதிய உடன்படிக்கையின் மக்கள் தொடக்கத்திலிருந்தே உலகளாவியத் தன்மையைக் கொண்டிருந்தனர், இதனை இன்று கீழ்த்திசை ஞானிகளின் உருவத்தில் பார்க்கிறோம், இந்த ஞானிகள் விண்மீனின் ஒளி மற்றும் மறைநூல்களின் குறிப்புக்களைப் பின்தொடர்ந்து பெத்லகேம் சென்றவர்கள் என்றும் உரைத்தார்.
கன்னிமரியா, வளன், இடையர்கள் ஆகியோரின் விசுவாசத்தை கிறிஸ்மஸ் காட்டும் அதேவேளை, திருக்காட்சித் திருவிழா கீழ்த்திசை ஞானிகளின் விசுவாசத்தைக் காட்டுகிறது என்றும் கூறினார் அவர்.
கன்னிமரியா இஸ்ரேலின் கிளையாகவும், இறைவாக்கினர்கள் மெசியா குறித்து முன்னுரைத்த கூற்றையும் குறித்து நிற்கிறார், ஆனால், கீழ்த்திசை ஞானிகளோ, கடவுளின் அமைதி, நீதி, உண்மை மற்றும் சுதந்திரத்தின் ஆட்சியைத் தேடும் பாதைகளாகிய மக்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள், மதங்கள் ஆகியவற்றை குறித்து நிற்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்துவின் ஒளி தெளிவாகவும் உறுதியானதாகவும் இருக்கின்றது, இது இந்த அண்டத்தின் மொழியை அமைக்கின்றது மற்றம் மறைநூல்களை அறிவுள்ளதாக்குகிறது. அதன்மூலம் ஞானிகள் போல அனைவரும் உண்மைக்குத் திறந்தவர்களாய் இருந்து, அதை ஏற்கவும், உலகின் மீட்பரைத் தியானிப்பதற்கு இணையவும் முடியும் எனவும் திருத்தந்தை மூவேளை செப உரையில் கூறினார்.


5. மத உரிமை மீறல்கள் கியூபாவில் அதிகரித்துள்ளது

சன.07,2013. 2012ம் ஆண்டில் கியூபாவில் மத உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக குறைகூறும் உலகளாவிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு, கியூப அரசுத்தலைவர் இதில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளது.
நாட்டில் மத உரிமைகள் மீறப்படுவதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது கத்தோலிக்கர்களே எனக்கூறும் இவ்வமைப்பு, அதற்கடுத்தபடியாக பேப்டிஸ்ட், பெந்தகோஸ்தே மற்றும் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
2012ம் ஆண்டின் இறுதி நாட்களில் அதிக அளவில் உரிமை மீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாகக் கூறும் இவ்வமைப்பு, மத உரிமை மீறல்கள் தொடர்புடைய வன்முறைகள் அதற்கு முந்தைய ஆண்டைவிட 2012ம் ஆண்டில் நான்கு மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கிறது. மதக் குழுக்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அரசு வாக்குறுதிகளை வழங்கியுள்ளபோதிலும், மதக் குழுக்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் அதிகரித்தே வருவதாக கியூப மதத்தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

6. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 60,000க்கும் அதிகமான மாணவர்கள் கல்விக்கூடங்களிலிருந்து இடையில் விலகியுள்ளனர்

சன.07,2013. உள்நாட்டுப் போருக்குப்பின் பின்னர் வட இலங்கையின் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2011ம் ஆண்டில் மட்டும் நாடளவில் ஒரு இலட்சத்து இருபத்தாறாயிரம் மாணவர்கள் கல்வியாண்டின் நடுவில் பள்ளிகளிலிருந்து விலகியிருப்பதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
38,321 மாணவர்கள் வடமாநிலக் கல்விக்கூடங்களில் இருந்தும், 24,614 மாணவர்கள் கிழக்கு மாநிலக் கல்விக்கூடங்களில் இருந்தும் இடையில் விலகியிருப்பதாக கல்வி அமைச்சகம் கூறுகிறது.
நாட்டில் இலவசக் கட்டாயக் கல்வி நடைமுறையில் இருக்கின்ற போதிலும், கல்விக்கூடங்களில் இடை நிலை வகுப்புகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகிச் செல்வது கவலைக்குரியது என சேவ் த சில்ரன் என்ற சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த மேனகா கல்யாணரத்ன தெரிவித்துள்ளார். 
போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வறுமை காரணமாகவே மாணவர்கள் கல்விக்கூடங்களிலிருந்து இடைவிலகிச் செல்வதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கல்விக்கூடங்களிலிருந்து மாணவர்கள் இடைவிலகுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து 2012ம் ஆண்டில் மாணவர்களின் இடைவிலகல் எண்ணிக்கை குறையத் தொடங்கியதாகவும் கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.


7. எய்ட்ஸ் நோய்க்கு புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு

சன.07,2013. எய்ட்ஸ் நோயைத் தற்காலிகமாக கட்டுப்படுத்தும் தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டு பார்சலோனா பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், எய்ட்ஸ் நோயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் மருந்துகளை தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் உபயோகித்து வரும் நிலையில் எய்ட்ஸ் நோய்க்கான புதிய தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எய்ட்ஸ் நோயின் தாக்கம் உள்ளவர்கள் இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் எய்ட்ஸ் கிருமிகள் வளர்வது தற்காலிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, நோயாளிகள் நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எய்ட்ஸ் கிருமிகள் உடலின் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் வேளையில், இந்த தடுப்பூசி எய்ட்ஸ் நோய் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தியாக விளங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
32 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இச்சோதனை செய்யப்பட்டு வெற்றியடைந்துவிட்ட நிலையில், விரைவில் இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் தற்போது 3 கோடியே 40 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...