Friday, 4 January 2013

Catholic News in Tamil - 04/01/13


1. புனித பூமியில் துன்புறும் மக்களுடன் ஆயர்கள் ஒருமைப்பாடு

2. அமெரிக்காவில் வாழ்வுக் கலாச்சார மாற்றத்திற்கு ஆயர்கள் அழைப்பு

3. ஓர் அருள்சகோதரியின் நூல் ஜப்பானில் அமோக வரவேற்பு

4. செக் குடியரசில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை

5. அனுமதியற்ற புதிய மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்தியாவில் தடை

6. பிறக்க அருமையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 66வது இடம்

7. மலேசியாவில் நாடற்ற நிலையில் மூன்று இலட்சம் இந்தியர்கள்

8. இந்தியாவில் இலட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர்

------------------------------------------------------------------------------------------------------

1. புனித பூமியில் துன்புறும் மக்களுடன் ஆயர்கள் ஒருமைப்பாடு

சன.04,2013. ஜோர்டனில் வாழும் சிரியா நாட்டு அகதிகள் மற்றும் புனித பூமியில் துன்புறும் மக்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க ஆயர்கள் இவ்வாரத்தில் அப்பகுதிக்குச் செல்லவிருக்கின்றனர்.
புனித பூமித் திருஅவைக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க ஆயர் பேரவைகள் மற்றும் புனித பூமி கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகள் இச்சனிக்கிழமையன்று பெத்லகேமில் தொடங்கும் கூட்டத்தின் ஒரு நிகழ்வாக, இப்பிரதிநிதிகள் ஜோர்டன் மற்றும் பிற பகுதிகளைப் பார்வையிடவிருக்கின்றனர்.
இம்மாதம் 10ம் தேதி வரை நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தின் இறுதியில் இப்பிரதிநிதிகள் எருசலேமுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு புனித கல்லறை பசிலிக்காவில் திருப்பலியும் நிகழ்த்துவார்கள்.
எருசலேம் இலத்தீன்ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal, திருப்பீடத்தூதர் பேராயர் Giuseppe Lazzarotto, இன்னும், அகதிகள் முகாம்கள், சிறைகள் மற்றும் குடியேற்றதாரர் மத்தியில் பணிசெய்வோர் எனச் சிலர், மத்திய கிழக்குப் பகுதியின் நிலைமை குறித்து இக்கூட்டத்தில் விளக்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2. அமெரிக்காவில் வாழ்வுக் கலாச்சார மாற்றத்திற்கு ஆயர்கள் அழைப்பு

சன.04,2013. அமெரிக்கச் சமுதாயத்தில் கொள்கைகளை மறுஆய்வு செய்தல் மற்றும் வாழ்வுக் கலாச்சார மாற்றங்கள் மூலம் அந்நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை ஒழிக்க முடியுமென அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் பணிக்குழுக்களின் தலைவர்கள் கூறினர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் Newtown பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நிகழ்வை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட குடும்பம், திருமணம், இளையோர், குடும்பநீதி எனப் பல பணிக்குழுக்களின் தலைவர்கள், அமெரிக்காவில் வாழ்வுக் கலாச்சாரம் புதுப்பிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளனர்.
துப்பாக்கிகளைக் கொண்டிருப்பது குறித்த தேசியக் கொள்கைகள், மனநல வாழ்வுக்குச் சிகிச்சை பெறுவதற்கான வசதிகள், கேளிக்கை அரங்குகளில் வன்முறை உட்பட அமெரிக்கச் சமுதாயத்தின் மனித வாழ்வு குறித்த மதிப்பீடுகள் மறுஆய்வு செய்யப்படுமாறும் அத்தலைவர்கள் கேட்டுள்ளனர்.

3. ஓர் அருள்சகோதரியின் நூல் ஜப்பானில் அமோக வரவேற்பு

சன.04,2013. ஜப்பானில் 65 ஆண்டுகள் மறைப்பணியாற்றிய பின்னர் 96 வயதாகும் ஓர் அருள்சகோதரி எழுதியுள்ள நூல், அந்நாட்டில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என்று ஆசியச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
புன்சிரிப்பு மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது என்ற தலைப்பில் அருள்சகோதரி Jeanne Bosse எழுதியுள்ள நூல், நற்செய்தியின் அடிப்படையில் வாழும் முறையைச் செம்மைப்படுத்துவதற்கு உதவி வருகிறது.
இதுவரை நான்கு பதிப்புகளில் 19 ஆயிரம் நூல்கள் விற்பனையாகியுள்ளன. மேலும், ஜப்பானில் அதிக அளவில் விற்பனையாகும் Asahi Shimbun என்ற தினத்தாளும் இந்த நூல் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளது என ஆசியச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
உலகில் பொருளாதார வளமிக்க நாடுகளில் மூன்றாவதாக விளங்கும் ஜப்பானில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவு. அதேநேரம், தற்கொலைகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.     

4. செக் குடியரசில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை

சன.04,2013. செக் குடியரசு சுதந்திரம் அடைந்ததன் இருபதாம் ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக, அந்நாட்டில் ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஏறக்குறைய மூவாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வரும் நாள்களில் நான்காயிரத்துக்கு அதிகமான கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
செக் குடியரசின் அரசுத்தலைவர் Vaclav Klaus வழங்கிய பொது மன்னிப்பில், ஓராண்டுக்குக் குறைவாக தண்டனை அனுபவித்தவர்கள் மற்றும் பத்தாண்டுக்குக் குறைவான தண்டனை அனுபவித்த 75 வயதுக்கு மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அரசுத்தலைவர் Klaus வெளியிட்ட புத்தாண்டு அறிக்கையில், ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது, நாடு சுதந்திரம் அடைந்ததன் இருபதாம் ஆண்டைச் சிறப்பிப்பதன் அடையாளமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டிருந்தார்.
செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்த குடியரசு 1993ம் ஆண்டு சனவரி முதல் தேதியன்று செக் மற்றும் ஸ்லோவாக் குடியரசுகளாகப் பிரிந்தன. 

5. அனுமதியற்ற புதிய மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்தியாவில் தடை

சன.04,2013. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், எவ்வித வரைமுறையுமின்றி தாங்கள் புதிதாக உருவாக்கும் மருந்துகளின் செயற்திறன் மற்றும் பக்கவிளைவுகளைப் பரிசோதனை செய்யும் வகையில் அதைப் பலவீனமானவர்களுக்கு கொடுத்து ஆய்வுகள் செய்து வருவதை இந்திய உச்சநீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இனிமேல் அவ்வகையான எந்தச் சோதனைகளுக்கும் மத்திய நலவாழ்வுத்துறைச் செயலரின் முன்அனுமதியைப் பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கும் புதிய மருந்துகளின் செயற்திறன் மற்றும் பக்கவிளைவுகளைப் பரிசோதனை செய்வதைக் கண்காணிப்பதற்குப் புதிய சட்டம் கொண்டுவரப்போவதாகக் கூறினார், இத்தகைய பரிசோதனைகளுக்கான அனைத்துலகச் சட்ட அமைப்பின் இந்தியத் தலைவர் சுதர்சன் நாச்சியப்பன்
இது தொடர்பாக மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பதாகவும், அந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டால், உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கும் பல ஆலோசனைகள் அந்தச் சட்டத்திற்குள் அடங்கியிருக்கும் என்றும் சுதர்சன நம்பிக்கை வெளியிட்டார்.

6. பிறக்க அருமையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 66வது இடம்

சன.04,2013. இந்த 2013ம் ஆண்டில் மனிதர் பிறப்பதற்கு அருமையான நாடு எது என்ற ஆய்வில், இந்தியா, 66வது இடத்தையும் இலங்கை 63வது இடத்தையும் பிடித்துள்ளன. முதலிடத்தை, சுவிட்சர்லாந்தும், 75வது இடத்தை பாகிஸ்தானும் பிடித்துள்ளன.
"பிறந்தால் இந்த நாட்டில் தான் பிறக்க வேண்டும்' என்ற தலைப்பில்,  The Economist என்ற பன்னாட்டு நிறுவனத்தின் இணையதளம் சார்பில், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், ஆசியாவில் சிங்கப்பூரே வாழ்வதற்குச் சிறந்த இடம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தக் கருத்துக்கணிப்பில் சீனா 49வது இடத்திலும், இரஷ்யா, 72வது இடத்திலும் பங்களாதேஷ் 77வது இடத்திலும், ஆப்ரிக்க நாடான நைஜீரியா 80வது இடத்திலும் உள்ளன.
இது போன்றதொரு ஆய்வு 1988ல் எடுக்கப்பட்ட போது, 13வது இடத்தைப் பிடித்த சுவிட்சர்லாந்து, இப்போதைய கருத்துக்கணிப்பில் முதலிடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை, ஆஸ்திரேலியாவும், அடுத்த இடங்களை நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.
ஆறாவது இடத்தை சிங்கப்பூரும், எட்டாவது இடத்தை நெதர்லாந்தும், ஒன்பதாவது இடத்தை கனடாவும், 10வது இடத்தை ஹாங்காங்கும் பிடித்துள்ளன.
அமெரிக்காவும், ஜெர்மனியும், 16வது இடத்தில் உள்ளன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், ஐரோப்பிய நாடுகளான, கிரீஸ், போர்ச்சுக்கல், இஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள், இப்பட்டியலில் பின்தங்கியுள்ளன.

7. மலேசியாவில் நாடற்ற நிலையில் மூன்று இலட்சம் இந்தியர்கள்

சன.04,2013. மலேசியாவில் இவ்வாண்டுக்கான கல்விச் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் பள்ளிகளில் சேர முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களில் ஏறக்குறைய மூன்று இலட்சம் பேர், மலேசியாவில் நாடற்ற நிலையில் வாழ்வதாகவும், அவர்களை அரசு திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கிறது எனவும் தேசிய மக்கள் நீதிக்கட்சியின் துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.சுரேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இம்மக்கள் மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தாலும், அவர்களுக்குத் தொடர்ந்து பிறப்புச் சான்றிதழும் அடையாளஅட்டையும் மறுக்கப்படுகின்றன என்றும், இது சட்டத்துக்கு விரோதமானது என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், இந்தோனேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு உடனடியாகத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்கள் அரசின் சலுகைகளைப் பெறுகிறார்கள் எனவும், அவர்களின் வாக்குகளை குறி வைத்தே அரசு இப்படிச் செய்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, என்.சுரேந்திரன் அவர்களின் குற்றச்சாட்டுக்கு மலேசிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

8. இந்தியாவில் இலட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவர்

சன.04,2013. இந்தியாவில் இலட்சம் பேருக்கு, ஒரு மனநல மருத்துவர் என்ற நிலையே தற்போது உள்ளது என உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி, இலட்சம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையே உள்ளது. ஆனால் மேலை நாடுகளில் 5,000 பேருக்கு ஒரு மனநல மருத்துவர் இருக்கிறார் என்று மேலும் அந்த ஆய்வு கூறுகிறது.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...