Wednesday, 23 January 2013

கை குலுக்குதல்

கை குலுக்குதல்

வரவேற்பு, பிரிவு, பாராட்டு, சமரசம் என்று பல எண்ணங்களை வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் ஒரு பொதுவான அடையாளம் கை குலுக்குதல். உலக வரலாற்றை மாற்றியமைத்த பல ஒப்பந்தங்கள், கை குலுக்குதல் வழியாக உறுதி செய்யப்பட்டன.
பாபிலோனிய அரசர்கள் தங்கள் தலைமைக் கடவுள் Marduk சிலையின் கரங்களை வருடத்தில் ஒருநாள் பிடித்து குலுக்குவர். இதனால், தங்களது அதிகாரம் கடவுள் Mardukஇடமிருந்து வந்தது என்பதை உலகறியச் செய்வர்.
எகிப்தின் பழங்கால Heiroglyph எழுத்து வடிவத்தில், கொடுப்பது அல்லது கொடை என்ற வார்த்தைக்கு நீட்டப்பட்ட கரம் ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது. வத்திக்கானில் அமைந்துள்ள Sistine சிற்றாலயத்தின் உள்கூரையில் வரையப்பட்டுள்ள "படைப்பு" என்ற உலகப் புகழ்பெற்ற ஓவியத்தை மிக்கேலாஞ்சலோ உருவாக்கியபோது, இந்த எகிப்திய அடையாளமே அவருக்கு உந்துதலாக இருந்ததென்று சொல்லப்படுகிறது. இறைவனின் விரல்களைத் தொட்டும், தொடாமலும் இருக்கும் முதல் மனிதன் ஆதாம், இறைவனால் வழங்கப்பட்டவர், அவரது கொடை என்பதை இந்த ஓவியம் சொல்கிறது.
தற்போது நாம் பயன்படுத்தும் கைகுலுக்குதல், உரோமைய வீரர்கள் மத்தியில் இருந்த ஒரு பழக்கம். உரோமைய வீரர்களின் வலது கை பட்டையில் எப்போதும் கத்தி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். இரு வீரர்கள் ஒருவர் மற்றவரது கைப்பட்டையில் உள்ள கத்தியைப் பிடிப்பதன் வழியாக, அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தினர். இவ்வடையாளமே கைகுலுக்குதலுக்கு வழிவகுத்தது.
(ஆதாரம் - Now You Know - The Book of Answers)
 

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...