Wednesday, 13 March 2019

''இயற்கை விவசாயி சுப்பு'

இயற்கை விவசாயி சுப்பு 'இயற்கை விவசாயி சுப்பு'

வேதிய பூச்சிக் கொல்லிகளுக்கும், உரங்களுக்கும் எதிராக நஞ்சில்லா உணவுகள் பற்றி உலக மக்களுக்கு உறக்க சொன்னவர் நம்மாழ்வார். அவர் வழியைப் பின்பற்றும் பலரில் ஒருவர், இயற்கை விவசாயி சுப்பு அவர்கள்
மேரி தெரேசா - வத்திக்கான்
இயற்கை விவசாயி சுப்பு அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், கடுகுப்பட்டு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்து, அம்பத்தூரில் டயர் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அச்சமயத்தில், ஒரு நாள் இரவுப் பணியில் தனது வலது கையில் ஐந்து விரல்களையும் இழந்துவிட்டார். ஆனாலும் தொடர்ந்து 37 ஆண்டுகள் வேலை செய்த பின்னர், ஓய்வு பெற்றார். பின்னர், சொந்த ஊருக்கு வந்து விவசாயம் தொடர்பான வேலைகள் செய்தார். இயற்கை விவசாயம் பற்றிய கூட்டமொன்றில், நம்மாழ்வார் அவர்களைச் சந்தித்துப் பேச கிடைத்த வாய்ப்பின் பலனாக, இயற்கை விவசாயம் பற்றிய பல பாடங்களைக் இவர் கற்றுக்கொண்டுள்ளார். அப்படி நம்மாழ்வார் அவர்கள் அடிக்கடி சொன்ன தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து இயற்கை உரங்களைத் தயார் செய்துகொண்டு வருகிறார், சுப்பு. தற்போது, 11 வகையான இடுபொருட்களைத் தயார் செய்து கொடுத்து வருகிறார் இவர். மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் பற்றி ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறார். விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குச் சென்று விவசாயிகளுக்கு இயற்கை விவசாய ஆலோசனைகளையும் கொடுத்து வருகிறார். இவரது தோட்டத்தில் தயாராகும் இயற்கை உரத்தைக் குறைவான விலையில் விவசாயிகளுக்குக் கொடுத்து உதவி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இவருக்காக இயற்கை விவசாய பிரிவை தனியாக அமைத்து பயிற்சி கொடுக்க வைத்தது. இயற்கை விவசாய கூட்டங்களில் யாராவது வேதிய உரங்களைப் பற்றி பேசினால் மேடையிலேயே அவரை வறுத்தெடுக்கும் அஞ்சாத குணம் கொண்டவர் சுப்பு. இதுவரை இவர் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்குச் சென்று ஆலோசனைகளைக் கொடுத்து இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியிருக்கிறார். இவரது வீட்டைச் சுற்றிலும் தொழு உரம், மண்புழு உரம், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, மீன் அமிலம் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். சுற்றுப்புறத்தில் இருக்கும் விவசாயிகள் இவரது வீட்டுக்கு வந்துபோனால் இயற்கை உரங்களைக் கொடுத்து வழியனுப்பும் பழக்கம் கொண்டவர்.
விபத்தில் கை விரல்கள் போனாலும், கடைசி வரை இயற்கை விவசாயத்திற்கு உதவுவதே தனது இலக்காகக் கொண்டு பயணித்து வருகிறார், சுப்பு. கடைசிக் காலகட்டத்தில் ஏழ்மை நிலையில் இருந்தாலும், தனது பணத்தேவையை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் அளிப்பதன் வழியாக, தானே நிறைவேற்றிக் கொள்கிறார். இவருக்கு இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒன்று விரைவில் 'இயற்கை உரச் செம்மல்' பட்டம் கொடுத்து கவுரவிக்கவிருக்கிறது.(நன்றி : விகடன்)

No comments:

Post a Comment