Thursday, 3 January 2019

2019ம் ஆண்டில் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள்

2019ம் ஆண்டில் திருத்தந்தையின் முக்கிய நிகழ்வுகள் புதன் மறைக்கல்வியுரை 020119

ஆயர் பேரவை தலைவர்களின் கூட்டம், அமேசான் காடுகளை மையப்படுத்தி நடைபெறவிருக்கும் ஆயர்களின் சிறப்பு மாமன்றம், திருத்தூதுப் பயணங்கள், ஆகியவை, 2019ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகள்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
பிப்ரவரி மாதம் வத்திக்கானில் கூடவிருக்கும் ஆயர் பேரவை தலைவர்களின் கூட்டம், அமேசான் காடுகளை மையப்படுத்தி, அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆயர்களின் சிறப்பு மாமன்றம், மற்றும், திருத்தூதுப் பயணங்கள், ஆகியவை, 2019ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளாக அமைந்துள்ளன.
கடந்த ஆண்டு சனவரி மாதம், பல்வேறு நாடுகளின் தூதர்களை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, 2018ம் ஆண்டு, மனித உரிமைகள் அறிக்கையின் 70ம் ஆண்டு என்பதை மையப்படுத்தி, தன் செய்தியை வெளியிட்டதுபோல், இவ்வாண்டும் சனவரி மாதம், பன்னாட்டுத் தூதர்களைச் சந்திக்கும் வேளையில், உலக சமுதாயத்திற்கு தான் கூற விழைவதை ஒரு செய்தியாக வெளியிடுவார்.
34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, பானமா நாட்டில் கூடும் இளையோரைச் சந்திக்க, சனவரி 23ம் தேதி முதல், 28ம் தேதி முடிய, அந்நாட்டிற்கு செல்வது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு மேற்கொள்ளும் முதல் திருத்தூதுப் பயணமாக அமையும்.
இதைத் தொடந்து, பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம், திருஅவை வரலாற்றில், ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் முதல் பயணமாகவும், "உமது அமைதியின் கருவியாக என்னை உருவாக்கும்" என்பது இத்திருத்தூதுப் பயணத்தின் விருது வாக்காகவும் அமைந்துள்ளன.
மேலும், மார்ச் மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு நாள்கள், மொராக்கோ நாட்டிலும், மே மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி முடிய பல்கேரியா மற்றும் மாசிடோனியா நாடுகளிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அருள்பணியாளர்களாலும், திருஅவையின் தலைவர்களாலும் பாலியல் கொடுமைகள் நிகழ்ந்துள்ளதை தடுக்கும் நோக்கத்துடன், இவ்வாண்டு, பிப்ரவரி மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கியக் கூட்டத்திற்கு வருமாறு, உலகின் அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைத்துள்ளார்.
அமேசான் காடுகளை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ள ஒன்பது நாடுகளைச் சேர்ந்த ஆயர்கள் சிறப்பாக அழைக்கப்பட்டுள்ளனர்.
"அமேசான்: திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சூழல் இயலுக்கும் புதிய பாதைகள்" என்ற மையக்கருத்துடன் நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தில், இயற்கையைப் பாதுகாக்கும் வழிகள் குறித்தும், அமேசான் காடுகளைச் சுற்றி வாழும் தலத் திருஅவைகள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment