Saturday, 19 January 2019

பூமியில் புதுமை : மரங்களைக் காதலித்த மனிதர்கள்

பூமியில் புதுமை : மரங்களைக் காதலித்த மனிதர்கள் மரம் வளர்ப்பதில் அக்கறை கொண்ட கொலம்பிய நாட்டுப் பெண்மணி

மரங்களைக் காப்பதற்காக ஒரே இடத்தில் 363 பேர் உயிர்த் தியாகம் செய்த நிகழ்வு, இயற்கையின் மீது இந்தியர்கள் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்துகிறது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
1730-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில், ‘கெஜ்ரி’ கிராமத்தில், தாங்கள் வளர்த்த வன்னி மரங்களைக் காப்பதற்காக, 363 பிஷ்னாய் மக்கள், உயிர்த் தியாகம் செய்துள்ளனர். மரங்களைக் காப்பதற்காக, உயிர்த் தியாகம் செய்த நிகழ்வு, உலகின் வேறு எந்த மூலையிலும் நடைபெறவில்லை. அதற்குக் காரணம், வறட்சியான ராஜஸ்தான் மாநிலத்தில், மரங்களே மக்களுக்கான அடிப்படை வாழ்வாதாரமாகத் திகழ்ந்ததுதான். அதனால்தான், அரசன் வழங்கிய ஆணையின்படி, வன்னி மரங்களை வீரர்கள் வெட்ட முற்பட்டபோது, அம்மரங்களைக் கட்டிப்பிடித்தவண்ணம், பிஷ்னாய் மக்கள் உயிர் நீத்தனர்.
அதேபோல், 1974-ம் ஆண்டில், உத்தர்காண்ட் மாநிலத்தில் சிப்கோ இயக்கம் தோன்றியது. ‘சிப்கோ’ என்றால் இந்தியில் ‘கட்டியணைப்பது’ என்று பொருள். மலைவாழ் இனத்தைச் சேர்ந்த கௌராதேவி என்ற பெண் தலைமையில், 27 பெண்கள், ரேணி கிராமத்தில், ஆயிரக்கணக்கான மரங்களைக் கட்டியணைத்து காப்பாற்றினர். தொடர்ந்து, அப்பகுதியில், மரம் வெட்டுவதை, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்கள், முழுமையாகத் தடை செய்தார். ஹூகோ உட் (Hugo Wood) என்ற ஆங்கிலேய இந்திய வனப் பணி அலுவலர் (1870-1933), தான் உருவாக்கிய தேக்குமரக் காடுகளுக்கு இடையே தன் கல்லறையை உருவாக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். ஆனைமலை ‘டாப் ஸ்லிப்’ என்ற இடத்தில் உள்ள அவரது கல்லறையிலே எழுதப்பட்டுள்ள வாசகங்கள், மரங்களின் மீது அவர் கொண்டிருந்த அழியாக் காதலை வெளிப்படுத்துகின்றன. "நீங்கள் என்னைக் காண வேண்டுமென்றால், சுற்றிலும் பாருங்கள்" என்ற வாசகம், அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்லறையைச் சுற்றிலும் நெடிதுயர்ந்த தேக்கு மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு உள்ளது. இங்கிலாந்து நாட்டில் பிறந்து, இந்தியா வந்து, இங்கே மரம் வளர்த்து, காடுகளைக் காக்கும் பணியில் ஈடுபட்ட ஓர் உன்னத ஆன்மாவின் உயர் பண்புகள், அவர் கல்லறையைக் காண்பவர்களின் கண்களைப் பனிக்கச் செய்கின்றன. (தி இந்து இணையதளம்)

No comments:

Post a Comment