Saturday, 19 January 2019

பூமியில் புதுமை – அகிலமெங்கும் அறுவடைத் திருவிழா

பூமியில் புதுமை – அகிலமெங்கும் அறுவடைத் திருவிழா இலங்கையில் மக்கள் கூடிவந்து பொங்கல் சமைத்தல்

இயற்கை அன்னையும், மனித உழைப்பும் இணைந்து, வழங்கியுள்ள அறுவடைப் பலன்களுக்கு நன்றி கூறும் பொங்கல் திருநாளில், உலகின் சில நாடுகளில் சிறப்பிக்கப்படும் அறுவடைத் திருநாள்கள்...
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
தமிழ்கூறு நல்லுலகெங்கும் சனவரி 15, இச்செவ்வாயன்று, பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இயற்கை அன்னையும், மனித உழைப்பும் இணைந்து, வழங்கியுள்ள அறுவடைப் பலன்களுக்கு நன்றி கூறும் நன்னாள், பொங்கல் திருநாள். இந்த நன்னாளில் உலகின் வேறு சில நாடுகளில் சிறப்பிக்கப்படும் அறுவடைத் திருநாள்களைக் குறித்து ஒரு மேலோட்டமான பார்வை இதோ:
இந்தோனேசியாவின் பாலித்தீவில் (Bali) அரிசியை, 'தேவி ஸ்ரீ' என்ற தேவதையாகக் கொண்டாடுகின்றனர். அறுவடைக் காலத்தில், இந்த தேவதைக்கு மூங்கிலால் கோவில்கள் உருவாக்கப்படுகின்றன. அந்தத் தீவில் வாழும் மக்கள், இந்த தேவதையின் உருவத்தை, நெல் கதிர்களால் உருவாக்கி, நெல் களஞ்சியங்கள் மீது, பாதுகாப்பின் அடையாளமாக வைக்கின்றனர்.
தாய்லாந்து நாட்டின் சந்தபுரி (Chanthapuri) என்ற நகரம், பல்வேறு வண்ணங்களால் ஒளிரும் படிகக் கற்களுக்கும், பலவண்ணங்கள் கொண்ட பழங்களுக்கும் புகழ்பெற்றது. கோடைக்காலத்தில், அறுவடையாகும் பல வண்ணப் பழங்களைக் கொண்டு, அலங்கரிக்கப்பட்ட இரதங்கள், அறுவடைத் திருநாளன்று ஊர்வலமாகச் செல்லும்.
ஆர்ஜென்டீனா நாட்டின் மென்டோன்சா (Mendonza) மாநிலம், திராட்சைத் தோட்டங்கள் நிறைந்த மாநிலம். அங்கு, பிப்ரவரி இரண்டாம் ஞாயிறன்று, மென்டோன்சா பேராயர், அவ்வாண்டில் விளைந்த முதல் திராட்சைக் கனிகள் மீது புனித நீரைத் தெளித்து அர்ச்சித்தபின், திராட்சைக் கனிகளின் அறுவடையும், அறுவடைத் திருவிழாவும் ஆரம்பமாகும்.
ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தில், இஸ்ரேல் நாட்டவர், ‘சுக்கோத்’ (Sukkot) என்றழைக்கப்படும் ‘கூடாரத் திருவிழா’வைக் கொண்டாடுகின்றனர். அறுவடையை நினைவுறுத்தும் இந்தக் கூடாரத் திருவிழாவையொட்டி, பல குடும்பங்கள், திறந்த வெளியில், கூரையற்ற கூடாரங்கள் அமைத்து, அவற்றில் தங்குவர். வானத்தைப் பார்த்து, அறுவடையைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல்வதெற்கென, இந்தக் கூடாரங்கள் கூரையின்றி உருவாக்கப்படுகின்றன.
பிரித்தானியாவில், ஆகஸ்ட் முதல் தேதி, லம்மாஸ் (Lammas) என்ற திருநாளுடன் அறுவடை மாதம் ஆரம்பமாகிறது. கோதுமை அறுவடையைக் கொண்டாடும் இந்நாள்களில், முதலில் அறுவடை செய்யப்படும் புதிய கோதுமை மணிகளால் உருவாக்கப்பட்ட ரொட்டி, ஆலயப் பீடத்தில் காணிக்கையாக வைக்கப்பட்டபின், அறுவடைத் திருவிழா ஆரம்பமாகின்றது. (National Geographic)

No comments:

Post a Comment