Wednesday 1 March 2017

தவக்காலச் சிந்தனை - இறையுறவு

தவக்காலச் சிந்தனைஇறையுறவு

உலகினை படைத்து அதற்கு உருகொடுத்த இறைவன், படைப்பின் சிகரமாய், முழுமையாய், உயர்ந்ததாய் மனிதரைப் படைத்து, அவர்களோடு ஓர் அன்புறவை ஏற்படுத்தினார். மனிதர்கள், அந்த இறையுறவினை மறந்து, தூரம் சென்று, உருக்குலைந்த வேளையில், தன் இறைத்தன்மையை துறந்து, மனித நிலை ஏற்று, மனிதரை, தன் இறைநிலைக்கு அழைத்தார், இறைவன். இதுதான், இறையுறவின் வெளிப்பாடு. மனிதரின் அறிவுக்கு சிறிதளவும் எட்டாத இந்த மகத்தான உறவு நிலைதான், இறையுறவு. இந்த உன்னதமான இறையுறவினை புதுப்பித்துக்கொள்ளத்தான், இந்த தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. இறையுறவு என்பது, நமக்கும் இறைவனுக்குமிடையில் உள்ள ஒரு தனிப்பட்ட உறவு மட்டுமன்று, அது ஒரு சமூக உறவு. இறையுறவு, நாம், நம்மோடு பயணிக்கும் சக மனிதர்களோடு கொள்ளும் உறவையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது. தன்னையும், பிறரையும், கடவுளையும், உள்ளடக்கிய இந்த இணைப்பில் ஏற்படுகின்ற எந்த ஒரு விரிசலும், இறையுறவில், விரிசலை ஏற்படுத்துகின்றது. இவற்றை சரிசெய்யதான், இன்றைய நற்செய்தி, மூன்று முக்கியச் செயல்களை எடுத்துரைக்கின்றது - செபம், தவம், தர்மம். ஆனால் இத்தகைய முயற்சிகளை பிறர் பார்க்கவேண்டும் என்று நாம் செய்யும்பொழுது, நான் நல்லவன், மற்றவர்களைவிட சிறந்தவன் என்று, தன்னை, பிரிக்கும் வண்ணமாய் அமைகின்றது. இது, நம் உறவில் மேலும் விரிசல்களை ஏற்படுத்துகின்றது. எனவே, செபம், தவம், தர்மம் ஆகிய பக்தி முயற்சிகளை நாம் மேற்கொள்ளும்பொழுது, அதை பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காக அல்லாமல், நமது இறையுறவினைப் புதுப்பிக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்வோம். இறையுறவில் வளர்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment