Wednesday, 1 March 2017

கத்தோலிக்கச் செய்திகள் - 28/02/2017

கத்தோலிக்கச் செய்திகள் - 28/02/2017
------------------------------------------------------------------------------------------------------

1. உண்மையான கிறிஸ்தவர் மகிழ்வான முகங்களைக் கொண்டிருப்பர்

2. வீடற்றவர் நடத்தும் ஓர் இதழுக்கு திருத்தந்தை பேட்டி

3. உரோம் ஆங்கிலிக்கன் சமூகம் திருத்தந்தைக்கு பரிசுகள்

4. தென் சூடானுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து திருத்தந்தை பரிசீலனை

5. இப்பூமியைப் பாதுகாப்பதற்கு உறுதி எடுக்குமாறு வலியுறுத்தல்

6. ஜப்பான் ஆயர்கள் : பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபம்

7. இலங்கை குடியேற்றதாரத் தொழிலாளருக்கு ஓய்வூதியம்

8. ஐரோப்பாவை அடைய ஆபத்துக்களை எதிர்கொள்ளும் புலம்பெயர்வோர்

------------------------------------------------------------------------------------------------------

1. உண்மையான கிறிஸ்தவர் மகிழ்வான முகங்களைக் கொண்டிருப்பர்

பிப்.28,2017. தவக்காலத்தில் நாம் நுழையவிருக்கும் இவ்வேளையில், கடவுளுக்கும் பணத்திற்கும் இடையே இருக்கும் உறவு குறித்து சிந்திக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் விசுவாசிகளிடம் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசுவைப் பின்செல்ல விரும்பிய பணக்கார இளைஞர் ஒருவர், தன்னிடம் இருந்த செல்வத்தால் பின்பற்ற முடியாமல் போனது பற்றிக் குறிப்பிட்டு, ஒருவர் இரண்டு முதலாளிகளுக்கு அதாவது, கடவுளுக்கும், செல்வத்திற்கும் ஒரே நேரத்தில் ஊழியம் செய்ய முடியாது என்று கூறினார்.
தம் சொற்கள் சீடர்களைக் கவலைக்குள்ளாக்கியது பற்றி அறிந்த இயேசு, செல்வந்தர் விண்ணரசில் நுழைவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்று கூறினார் என்றார் திருத்தந்தை.
இயேசுவைப் பின்பற்றியதால் கிடைக்கும் நலன்கள் பற்றிக் கூறும், இச்செவ்வாய்க் கிழமை திருப்பலியின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, கடவுள் நமக்கு வழங்கும் கொடை முழுமையானது, அந்த முழுமை, கல்வாரியில் சிலுவையில் உச்சத்தை எட்டுகின்றது என்று கூறினார்.
பாரும், நாங்கள் எல்லவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே என்று பேதுரு கேட்ட கேள்விக்கு இயேசு அளித்த பதில் பற்றி விளக்கியத்  திருத்தந்தை, எல்லாவற்றையும் விட்டுவிடும் எவரும், எல்லாவற்றையும் பெறாமல் போகார் என்றும், நம் ஆண்டவர், எதையும் கொடுக்கும்போது குறைவாகக் கொடுப்பதற்குத் திறனற்றவர், அவர், நமக்கு ஏதாவது கொடுக்கும்போது, தம்மையே முழுமையாகக் கொடுக்கிறார் என்றும் கூறினார்.
இயேசுவுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்ட எவரும், இவ்வுலகில், நூறு மடங்காக, வீடுகள், நிலபுலன்கள், சகோதர சகோதரிகள், இவற்றோடுகூட இன்னல்களையும் பெறுவர் என்ற நற்செய்தி திருச்சொற்களையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவனின் கொடை சிலுவையில் முழுமையடைகின்றது என்றும் தெரிவித்தார்.     
கடவுளின் முழுமை, சிலுவையில் அவர் தம்மையே முழுமையாய் வெறுமையாக்கியதில் தெரிகின்றது எனவும், தன் மறையுரையில் கூறியத் திருத்தந்தை, மகிழ்வான முகம், மகிழ்வால் நிறைந்த கண்கள் ஆகியவையே கிறிஸ்துவை முழுமையாய் பின்பற்றுகிறவரின் அடையாளங்கள் என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வீடற்றவர் நடத்தும் ஓர் இதழுக்கு திருத்தந்தை பேட்டி

பிப்.28,2017. போர் அல்லது பசியால் தங்கள் நாடுகளைவிட்டு ஐரோப்பாவுக்குள் வரும் மக்கள் வரவேற்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட வேண்டும் மற்றும், இம்மக்கள் புலம்பெயர்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
மார்ச் 25ம் தேதி, மிலானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதையொட்டி, இத்தாலிய காரித்தாஸ் நிறுவனத்தின் ஆதரவுடன், வீடற்ற மக்களால் நடத்தப்படும் “Scarp de’ tenis” (ஓசையற்ற மிதியடிகள்) என்ற இதழுக்கு அளித்த நீண்ட நேர்காணலில், இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புலம்பெயர்ந்து வரும் மக்கள், கிறிஸ்தவ நற்பண்புடன் வரவேற்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த திருத்தந்தை, வீடுகளின்றி இருக்கும் மனிதரை சந்திக்கும்போது,  முதலில் வணக்கம் சொல்லி, நலமா எனக் கேட்பதாகவும், பின்னர் அவர்கள் கூறுவதைக் கேட்பதாகவும் தெரிவித்தார். 
வத்திக்கானில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது உட்பட, புலம்பெயரும் மக்களுக்கு எடுக்கப்பட்டுள்ள அண்மை நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்குமாறு கேட்டதற்குப் பதிலளித்த திருத்தந்தை, தனது முயற்சி, உரோம் பங்குத்தளங்கள் வீடற்றவர்களை வரவேற்கத் தூண்டியுள்ளது என்று கூறினார். வத்திக்கானில் இரண்டு பங்குத்தளங்கள், சிரியா நாட்டுக் குடும்பங்களுக்கு உதவுகின்றன என்றும் உரைத்த திருத்தந்தை, இந்நேர்காணல் முழுவதும், ஒருவர் மற்றவர் மிதியடிகளில் நடப்பது பற்றி கூறினார். பிறரது மிதியடிகளில் நடக்கும்போது, தன்னலத்தினின்று நாம் வெளியேறுகிறோம், பிறரது மிதியடிகளில், கடினமான சூழல்களைப் புரிந்துகொள்கிறோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
Scarp de' tenis என்ற இத்தாலிய இதழ், 1994ம் ஆண்டு மிலானில், Pietro Greppi என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்த இதழ், இத்தாலிய காரித்தாஸ் மற்றும் மிலான் அம்புரோசியானா காரித்தாஸ் நிறுவனங்களின் ஆதரவுடன் வெளியிடப்பட்டு வருகிறது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஏப்ரல் 2ம் தேதி ஞாயிறன்று, இத்தாலியின் கார்பி (Carpi) மறைமாவட்டத்திற்கு, திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இம்மறைமாவட்டம், கடந்த ஆண்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. உரோம் ஆங்கிலிக்கன் சமூகம் திருத்தந்தைக்கு பரிசுகள்

பிப்.28,2017. இறைவனின் இரக்கம் நிறைந்த இதயத்தைத் திறக்கும் திறவுகோல் செபம் என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று வெளியாயின.
மேலும், ஏழைகளுக்கு உணவு, மனித வர்த்தகத்திற்குப் பலியாகியுள்ள ஆப்ரிக்கப் பெண்களுக்கு விவிலியப் பிரதிகள், ஒரு சிறப்பு தவக்கால இனிப்பு ஆகிய மூன்று பரிசுகளை, உரோம் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சமூகம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
உரோம் நகரில், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் பங்குத்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் 200ம் ஆண்டையொட்டி, அச்சபையின் அனைத்துப் புனிதர்கள் ஆலயத்திற்கு, இஞ்ஞாயிறு மாலை சென்ற திருத்தந்தையிடம், இப்பரிசுகள் பற்றி கூறப்பட்டது.
உரோம் ஓஸ்தியென்சியே இரயில் நிலையத்தைச் சுற்றி வாழும் ஏழை மக்களுக்கு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும், அப்பகுதியின் அனைத்துப் புனிதர்கள் கத்தோலிக்க பங்குத்தளமும், ஆங்லிக்கன் பங்குத்தளமும் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் உணவு வழங்கவிருப்பதாக, திருத்தந்தையிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த 200ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அச்சிடப்பட்ட 200 விவிலிய ஆங்கில மொழிப் பிரதிகளில், ஐம்பதை, மேற்கு ஆப்ரிக்காவில், பாலியல் வன்செயலுக்குப் பலியாகியுள்ள பெண்களுக்கு வழங்குவதாகவும், ஆங்கிலிக்கன் சபை, திருத்தந்தையிடம் தெரிவித்தது. இப்பெண்கள், விவிலியப் பிரதிகளை அடிக்கடி கேட்கின்றனர் என்றும், இப்பெண்கள் மத்தியில் பணியாற்றும் அருள்சகோதரிகள் வழியாக, இவை வழங்கப்படும் என்றும், உரோம் ஆங்கிலிக்கன் சபை மேலும் தெரிவித்தது.
வீடுகளில் தயாரிக்கப்படும் பழ இனிப்புகள், தவக்கால நான்காவது ஞாயிறன்று பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் இனிப்பு உட்பட, ஆங்கிலிக்கன் சபையினரின் சில சிறந்த தயாரிப்புப் பொருள்களும் திருத்தந்தையிடம் வழங்கப்பட்டன. இந்தச் சிறப்பு இனிப்பு, யூதாஸ் இஸ்காரியோத்தை தவிர்த்த திருத்தூதர்களைக் குறிக்கும் 11 சிறிய உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. தென் சூடானுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து திருத்தந்தை பரிசீலனை

பிப்.28,2017. உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தென் சூடான் நாட்டிற்குச் சென்று, அம்மக்களைச் சந்திப்பதற்குச் சிந்தித்து வருவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம் நகரில், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையின் பங்குத்தளம் ஆரம்பிக்கப்பட்டதன் 200ம் ஆண்டையொட்டி, அச்சபையின் அனைத்துப் புனிதர்கள் ஆலயத்திற்கு இஞ்ஞாயிறன்று சென்ற திருத்தந்தையிடம், அப்பங்கு மக்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, கான்டர்பரி ஆங்கிலிக்கன் பேராயர் Justin Welby அவர்களுடன் தென் சூடான் செல்வது பற்றி பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
தென் சூடானின் கத்தோலிக்க, ஆங்கிலிக்கன் மற்றும், பிரெஸ்பிட்டேரியன் கிறிஸ்தவ சபை ஆயர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டதன்பேரில், இப்பயணம் குறித்து, வத்திக்கான் அதிகாரிகளும், தானும் பரிசீலித்து வருவதாக, மேலும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கிடையே, தென் சூடானில், கிறிஸ்தவர்கள் அல்லாதவர் உட்பட அனைத்து மக்களுக்கும், திருத்தந்தையின் வருகை குறித்த செய்தி மிகவும் மகிழ்வை அளிக்கும், ஆயினும், இவ்வருகை குறித்து, திருத்தந்தை உறுதியுடன் தங்களிடம் கூறவில்லையென, தென் சூடான் ஆயர் லுடு தோம்பே அவர்கள் கூறினார்.
திருத்தந்தையின் வருகை, தென் சூடான் மக்களின் விசுவாசத்திற்கும், வாழ்வுக்கும் முழு அர்த்தத்தைக் கொடுக்கும் எனவும் கூறினார், ஆயர் தோம்பே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. இப்பூமியைப் பாதுகாப்பதற்கு உறுதி எடுக்குமாறு வலியுறுத்தல்

பிப்.28,2017. சுற்றுச்சூழல் அழிவு என்ற மிக மோசமான ஒரு நிலையை இக்காலத்தில் நாம் எதிர்கொண்டுவரும்வேளை, இப்பூமியைப் பாதுகாப்பதற்கு உறுதி எடுக்குமாறு, மியான்மார் மக்களைக் கேட்டுக்கொண்டார், அந்நாட்டு தலத்திருஅவை தலைவர்.
ஆசிய-ஓசியானியப் பகுதி அருள்சகோதரிகள் அவையினர் யாங்கூனில் நடத்திவரும் கூட்டத்தில் உரையாற்றிய, யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டு வரும், சுற்றுச்சூழலுக்கு எதிரான பாவம் உட்பட, நவீன காலப் பாவங்கள் பற்றிச் சுட்டிக்காட்டினார்.
மனிதரின் பேராசை, தாய் பூமிக்கு எதிராக, சுற்றுச்சூழல் பயங்கரவாதத்தை எரியவிட்டுள்ளது என்றும், காலநிலை மாற்றம் இப்பூமியை அதிக வெப்பமடையச் செய்கின்றது என்றும், இது, ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழல் அகதிகளை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார் கர்தினால் போ.
உலகில் ஐம்பது விழுக்காடு செல்வத்தை, ஒரு விழுக்காடு மக்கள் கொண்டிருக்கின்றனர் எனவும், உலகின் ஆறு விழுக்காட்டு மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு, பசுமை இல்லத்தை மாசுபடுத்தும் வாயுவில், நாற்பது விழுக்காட்டிற்குக் காரணமாகின்றது எனவும் தெரிவித்தார் கர்தினால் போ.
தவக்காலத்தை ஆரம்பிக்கும் நாம், கடவுளின் படைப்பை மாசுபடுத்துவதற்கு மனம் வருந்தி, நம் வாழ்வுப் பாதையை மாற்றி, இப்பூமியைப் பாதுகாப்போம் எனக் கேட்டுக்கொண்டார், மியான்மார் கர்தினால் போ.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

6. ஜப்பான் ஆயர்கள் : பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபம்

பிப்.28,2017. பாலியலில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளும் விதமாக, தவக்காலத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, செபம் மற்றும் தப முயற்சிகளை ஆற்றுவதற்குத் தீர்மானித்துள்ளனர், ஜப்பான் கத்தோலிக்க ஆயர்கள்.
பாலியல் முறைகேடால் பாதிக்கப்பட்டோருக்காக, பிப்ரவரி 21ம் தேதி திருப்பலி நிறைவேற்றி செபித்த, ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவரான, நாகசாகி பேராயர் Mitsuaki Takami அவர்கள், அருளால் நிறைந்த இறைவா, திருஅவையின் அருள்பணியாளர்கள் இழைத்த பாலியல் குற்றங்களுக்காக மன்னிப்பை இறைஞ்சுகின்றோம் என்று செபித்தார்.
அருள்பணியாளர்களின் தவறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களின் வேதனைகளில் திருஅவை பங்குகொள்கின்றது எனவும், கிறிஸ்துவிடமிருந்து குணம் பெறுதலை, அவர்கள் அனுபவிப்பதற்கு, திருஅவை அவர்களோடு உடன் பயணித்து, ஆறுதல் அளிப்பதாக எனவும் செபித்தார், பேராயர் Takami.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பின்பேரில், பாலியல் வன்கொடுமைக்குப் பலியானவருடன் ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளும் விதமாக, தவக்காலத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை, செபம் மற்றும் தப முயற்சி நாளாக அறிவித்துள்ளது ஜப்பான் ஆயர் பேரவை.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. இலங்கை குடியேற்றதாரத் தொழிலாளருக்கு ஓய்வூதியம்

பிப்.28,2017. வெளிநாடுகளில் பணியாற்றும் இலட்சக்கணக்கான இலங்கை மக்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவிவருவதை முன்னிட்டு, அம்மக்கள் நாடு திரும்பிய பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியத்தையும், வெளிநாடுகளில் இருந்துகொண்டே ஓட்டளிக்கும் வாய்ப்பையும் வழங்குவதற்கு, இலங்கை அரசு தீர்மானித்திருப்பதை, தலத்திருஅவை வரவேற்றுள்ளது.
ஓய்வூதியத் திட்டம், அரசுத்தலைவர் மற்றும், அமைச்சரவையால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், இது சார்ந்த ஆவணங்கள், அரசின் பொது வருவாய்த் துறைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் Thalatha Athukorala அவர்கள் தெரிவித்தார்.
அரசின் இந்நடவடிக்கைகளை வரவேற்றுப் பேசியுள்ள, காரித்தாஸ் நிறுவனத்தின் திட்ட அலுவலகர் அருள்பணி Freddi Jayawardana அவர்கள், குடியேற்றதாரத் தொழிலாளர்களுக்காக உழைக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், அரசின் ஓய்வூதியத் திட்டப் பரிந்துரையை, காரித்தாஸ் வரவேற்கிறது எனக் கூறினார்.
குடியேற்றதாரத் தொழிலாளர்கள், இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் முக்கிய வளமாக உள்ளனர். இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்புப்படி, 2015ம் ஆண்டில், குடியேற்றதாரத் தொழிலாளர்களிடமிருந்து வந்த பணம், 750 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் எனத் தெரிகிறது. இதில், 55 விழுக்காட்டுத் தொகை, மத்திய கிழக்குப் பகுதி நாடுகளிலிருந்து வந்துள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

8. ஐரோப்பாவை அடைய ஆபத்துக்களை எதிர்கொள்ளும் புலம்பெயர்வோர்

பிப்.28,2017. எல்லைக் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பது, சட்ட ரீதியாக நுழையும் வழிகள் இல்லாமை ஆகிய காரணங்களால், ஐரோப்பாவுக்குள் நுழைய வரும் புலம்பெயர்வோரும், குடிபெயர்வோரும், பல்வேறு ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்று, UNHCR என்ற ஐ.நா. புலம்பெயர்ந்தோர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
மனித வர்த்தகர்கள் அல்லது, உறுதியற்ற படகுகளைப் பயன்படுத்தி, சீற்றம் நிறைந்த கடல்களில் புலம்பெயர்வோர் பயணம் மேற்கொள்கின்றனர் என்றும், 2017ம் ஆண்டின் முதல் 53 நாள்களில், மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு வந்த இம்மக்களில் 366 பேர் இறந்துள்ளனர் என்றும் அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.
2016ம் ஆண்டில், இத்தாலிக்கு வந்துள்ள 1,81,436 பேருக்கு, உலகளாவிய பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்றும், இவர்களில் 90 விழுக்காட்டினர் லிபியாவிலிருந்து படகு வழியாக வந்தவர்கள் என்றும், UNHCR நிறுவன அறிக்கை கூறுகிறது.
இன்னும், ஆப்ரிக்காவிலிருந்து லிபியா வழியாக, இத்தாலிக்கு ஆபத்தான பயணம் மேற்கொள்ளும், அதிக எண்ணிக்கையிலான சிறார், கடத்தல்காரர்கள் மற்றும் அதிகாரிகளின், வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் எனவும் ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு, யாருடைய துணையுமின்றி ஏறக்குறைய 26,000 சிறார் மத்திய தரைக் கடலைக் கடந்தனர் என்றும், இவ்வெண்ணிக்கை, 2015ம் ஆண்டைவிட இருமடங்காகும் என்றும், யுனிசெஃப் தெரிவிக்கிறது.
எல்லைகளில், சட்டவிரோத கைது, பாலியல் வன்முறை, ஈவு இரக்கமற்ற துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு சிறார் எவ்வாறு ஆளாகின்றனர் என அந்நிறுவனம் விவரித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment