கத்தோலிக்கச் செய்திகள் - 04/03/17
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திரு இசையின் மரபை புதுப்பிக்க திருத்தந்தை அழைப்பு
2. தவக்காலம், நம் உடனடி மனமாற்றத்திற்கு அழைக்கின்றது
3. ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் கையேடு
4. உலக மகளிர் தினத்தன்று வத்திக்கானில் மாநாடு
5. வாழ்வில் வெறுமையை அகற்றி, இறைவனோடு ஒப்புரவாகுங்கள்
6. இளையோர், மாற்றத்தை கொணர்பவர்கள் வருங்காலப் பாதுகாவலர்கள்
7. விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திரு இசையின் மரபை புதுப்பிக்க திருத்தந்தை அழைப்பு
மார்ச்,04,2017. திருவழிபாடுகளில் இசைக்கப்படும் பாடல்களைப் புதுப்பிக்குமாறு, திருவழிபாட்டு இசைத்துறையிலுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திரு இசையின் தரத்தைப் பொருத்தமட்டில், திரு இசையையும், திருவழிபாடுகளில் இசைக்கப்படும் பாடல்களையும் புதுப்பிப்பதற்கு, பாடல் ஆசிரியர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், திருவழிபாடுகளை வழிநடத்துபவர்கள் உட்பட, இத்துறையிலுள்ள எல்லாரும், தங்களின் சிறப்பான பங்கை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவழிபாடு பற்றிய இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க கொள்கை விளக்கம் வெளியிடப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகியுள்ளதை முன்னிட்டு, உரோம் அகுஸ்தீனியானம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்ட நானூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
திருவழிபாட்டில், நவீனத்தையும், அந்தந்தப் பகுதி மொழிகளையும் புகுத்தும்போது, இசை மொழிகளிலும், அதன் அமைப்புகளிலும், பல்வேறு பிரச்சனைகள் எழும்புகின்றன என்றுரைத்த திருத்தந்தை, இதை எளிதாக்குவதற்கு, தகுந்த இசைக் கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அருள்பணியாளர்களுக்குப் பயிற்சி பெற்றுவரும் குருத்துவ மாணவர்களுக்கு, இக்காலத்தின் இசைப் போக்கு, பல்வேறு கலாச்சாரங்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு எண்ணம் போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
“இசையும், திருஅவையும் : Musicam sacram என்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க கொள்கைத் திரட்டு வெளியிடப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், வழிபாடும், கலாச்சாரமும்” என்ற தலைப்பில், மார்ச் 2,3,4 ஆகிய தேதிகளில் நடந்த இக்கருத்தரங்கை, திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயம், திருப்பீட கலாச்சார அவை, திருப்பீட திருஇசை நிறுவனம், புனித ஆன்செல்ம் பாப்பிறை திருவழிபாடு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தின.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. தவக்காலம், நம் உடனடி மனமாற்றத்திற்கு அழைக்கின்றது
மார்ச்,04,2017. “தவக்காலம், நம் உடனடி மனமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. நம் முழு இதயத்தோடு இறைவனிடம் திரும்பி வருவதற்கு நாம் அழைக்கப்படுகின்றோம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டார்.
மேலும், திருப்பீடத்திற்கான ஈராக் புதிய தூதர் Omer Ahmed Karim Berzinji அவர்களை, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், திருத்தந்தையும், திருப்பீட துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும், உரோம் நகருக்கு ஏறக்குறைய 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள அரிச்சா நகர், தெய்வீகப் போதகர் இல்லத்தில், மார்ச் 5, இஞ்ஞாயிறு மாலை முதல் தங்களின் ஆண்டு தியானத்தைத் தொடங்கவுள்ளனர்.
மார்ச் 10, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் இந்த ஐந்து நாள்கள் தியானம் பற்றி, CNA கத்தோலிக்க ஊடகத்திடம் பேசிய, அருள்பணி Olinto Crespi அவர்கள், இத்தியானம், புனித இஞ்ஞாசியார் தியானம் போன்று அமைந்திருக்கும் என்று தெரிவித்தார். பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் ஜூலியோ மிக்கேலினி அவர்கள், தியான உரைகளை வழங்குவார்.
தவக்காலத்தில், திருத்தந்தையும், திருப்பீட துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் தியானம் செய்வது, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. வத்திக்கானில் தியானங்கள் நடைபெற்றபோது, தியான உரைகள் முடிந்ததும், திருப்பீட அதிகாரிகள் தங்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணியாற்றினர்.
ஆயினும், தியானம், சிந்தனை மற்றும் செபச்சூழலில், நடைபெற வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விரும்பியதால், 2014ம் ஆண்டு, தவக்காலத்திலிருந்து உரோம் நகருக்கு வெளியே, தியான இல்லத்தில் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார், அருள்பணி Olinto Crespi.
புனித பவுல் துறவு சபையினர் நடத்தும் தெய்வீகப் போதகர் இல்லத்தில், அச்சபையின் ஐந்து அருள்பணியாளர்கள், இத்தியான காலத்தில் திருத்தந்தைக்கும், திருப்பீட உயர் அதிகாரிகளுக்கும் உதவவுள்ளனர்.
ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி
3. ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் கையேடு
மார்ச்,04,2017. ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற செப முயற்சிக்கு உதவும் மேய்ப்புப்பணி கையேடு ஒன்றை, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை வெளியிட்டுள்ளது.
இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவாக, 2016ம் ஆண்டு நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது கடிதத்தில், ஒப்புரவு அருளடையாளம், கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு உதவியாக, தவக்காலத்தில், ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற செப முயற்சி பற்றியும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் திருத்தந்தை.
இந்தப் பக்தி முயற்சிக்கு உதவியாக, புதிய வழியில் நற்செய்தி அறிவிக்கும் திருப்பீட அவை, 63 பக்க மேய்ப்புப்பணி கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“நான் இரக்கத்தை விரும்புகிறேன் (மத்.9,13)” என்ற தலைப்பில், இம்மாதம் 24, 25 தேதிகளில், ஆண்டவரோடு 24 மணி நேரங்கள் என்ற செப முயற்சி கடைப்பிடிக்கப்படுகின்றது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தப் பக்தி முயற்சியை, மார்ச் 17, வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தலைமையேற்று நடத்துவார்.
ஆதாரம் : CWN/வத்திக்கான் வானொலி
4. உலக மகளிர் தினத்தன்று வத்திக்கானில் மாநாடு
மார்ச்,04,2017. அமைதிக்கு ஆதரவாக, மதநம்பிக்கை கொண்ட பெண்கள் ஆற்றிவரும் நற்பணிகளை உலகுக்கு வெளிப்படுத்தும் நோக்கத்தில், உலக மகளிர் தினமான, மார்ச் 8, வருகிற புதனன்று, வத்திக்கானில் மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.
இயேசு சபையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவும், விசுவாசக் குரல்கள் என்ற கழகமும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்து வருகின்றன.
உலக மகளிர் தினத்தன்று, நான்காவது முறையாக, இவ்வாண்டில் நடத்தப்படும் இம்மாநாட்டிற்கு, “தண்ணீர் குறித்த அதிர்வுகளை உருவாக்குங்கள் : இயலாததை இயலக்கூடியதாய் ஆக்குங்கள்” என்பது தலைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாடு பற்றி விளக்கிய அதன் அமைப்பாளர்கள், அமைதி பாதுகாக்கப்பட்டு, நீடித்து நிலைத்திருக்க வேண்டுமெனில், பெண்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டுமென்று கூறினர்.
புருண்டி நாட்டு Marguerite Barankitse, அமெரிக்க ஐக்கிய நாட்டு அருள்சகோதரி Simone Campbell, பிரித்தானியாவின் Scilla Elworthy போன்றோர், வத்திக்கானில் நடைபெறவிருக்கும், இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.
1993ம் ஆண்டில், புருண்டியில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, பெற்றோரை இழந்த ஏழு சிறாரைத் தத்தெடுத்த Marguerite Barankitse அவர்கள் நடத்திவரும் நிறுவனங்கள் வழியாக, முப்பதாயிரம் சிறாரின் வாழ்வு காப்பாற்றப்பட்டுள்ளது.
அருள்சகோதரி Simone Campbell அவர்கள், “பேருந்தில் அருள்சகோதரிகள்” என்ற அமைப்பின் இயக்குனர். வழக்கறிஞராகிய இவர், குடியேற்றதாரர், ஏழைகள் மற்றும், சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்களுக்காக உழைத்து வருகிறார்.
“ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வுக் குழு”வை உருவாக்கிய Scilla Elworthy அவர்கள், போரினால் ஏற்படும் துன்பங்களை எடுத்துரைத்து, உலகில், அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட குரல் கொடுத்து வருகிறார்.
ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி
5. வாழ்வில் வெறுமையை அகற்றி, இறைவனோடு ஒப்புரவாகுங்கள்
மார்ச்,04,2017. வாழ்வில் ஏற்படும் வெறுமையை நீக்கி, இறைவனோடு ஒப்புரவை உருவாக்கிக் கொள்வதற்கு, இத்தவக்காலத்தில் முயற்சிக்குமாறு, விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார், சிங்கப்பூர் திருஅவை தலைவர், பேராயர் வில்லியம் கோ (William Goh).
மார்ச்,01, இப்புதனன்று தொடங்கியுள்ள தவக்காலத்திற்கென மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள, சிங்கப்பூர் பேராயர் வில்லியம் கோ அவர்கள், தவறான நடவடிக்கைகளைக் கைவிட்டு, இறைவனிடம் மன்னிப்பை இறைஞ்சி, அவரோடு நல்லுறவில் வாழ்வது, அமைதி மற்றும், மகிழ்வை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
வாழ்வில் வெறுமையை உணர்தல், மோசமான நடவடிக்கைகளால் ஏற்படுவதாகும் என்றும், இந்நடவடிக்கைகள், நலவாழ்வை மட்டுமல்ல, அமைதி, மகிழ்வு மற்றும், சுதந்திரத்தையும், வாழ்விலிருந்து பறித்துக்கொள்ளும் என்றும் கூறியுள்ளார், பேராயர் கோ.
கிறிஸ்தவ சமூகம், இறையருளை அனுபவிக்க வேண்டியது இன்றியமையாதது எனவும், தவம், செபம், தர்மம் கொடுத்தல் ஆகிய மூன்றும், தவக்காலத்தின் தூண்கள் எனவும் கூறியுள்ளார், சிங்கப்பூர் பேராயர் கோ.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
6. இளையோர், மாற்றத்தை கொணர்பவர்கள் வருங்காலப் பாதுகாவலர்கள்
மார்ச்,04,2017. அழியும் ஆபத்தை எதிர்நோக்கி வரும், வன உயிரினங்களைக் காப்பாற்றும் பொறுப்பு, இளையோரிடம் உள்ளது என்று, ஐ.நா.பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
“இளையோரின் குரல்களைக் கேளுங்கள்” என்ற தலைப்பில், மார்ச் 03, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வன உயிரின நாளுக்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், கூட்டேரஸ்.
மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் மற்றும், வருங்காலப் பாதுகாவலர்கள் என்ற வகையில், இளையோர், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், திருட்டுத்தனமாக வேட்டையாடுதல், சட்டத்திற்குப் புறம்பே வர்த்தகம் செய்தல் ஆகியவை, வனவிலங்குகளின் அழிவுக்கு ஆபத்தாக அமைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
உலகின் 2 விழுக்காட்டு நிலப்பரப்பே இந்தியாவில் உள்ள போதிலும், 8 விழுக்காட்டு வன உயிரினங்கள் இங்கு காணப்படுவதால், உலகிலுள்ள 12 மிகப் பெரிய பல்லுயிர் பெருக்கம் இடம்பெறும் நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. உலகளவில் கண்டறிப்பட்டுள்ள 1.75 மில்லியன் சிறிய உயிரினங்களில், இந்தியாவில் மட்டும் 1,26,188 சிறிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
உலக வன உயிரின நாள், மார்ச் 03ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேண்டுமென, 2013ம் ஆண்டு, டிசம்பர் 20ம் தேதி, ஐ.நா. பொது அவை தீர்மானித்தது.
ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி
7. விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் அறிவுரை
மார்ச்,04,2017. இந்தியாவில், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம், அதற்கு இழப்பீடு கொடுப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு, அவற்றை எப்படித் தடுப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
விவசாயிகளின் தற்கொலைகள் குறித்த, ஒரு பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி J.S.Khehar தலைமையிலான குழு, தற்கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களுக்குத் தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
பெருமளவு சாகுபடி செய்யப்படும்போது, விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், வறட்சி அல்லது வெள்ளத்தின்போது பயிர்கள் அழிவதால் இழப்பைச் சந்திக்கிறார்கள் என்றும், தலைமை நீதிபதி தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுரை குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள காவிரி டெல்டா விவசாயிகள் உரிமை பாதுகாப்புக் குழுவின் தலைவர் இரங்கநாதன் அவர்கள், உச்சநீதிமன்றம், விவசாயிகளின் வேதனையை முழுமையாகப் புரிந்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி, இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும் என்று கோரிய இரங்கநாதன் அவர்கள், எல்.ஐ.சி போல, விவசாயிகளுக்கென வேளாண் காப்பீட்டுக் கழகம் (ஏ.ஐ.சி) ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அதேபோல், மாற்றுப் பயிர் திட்டம் தொடர்பாக, வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும், இரங்கநாதன் அவர்கள் கூறினார்.
இரு மாநிலங்களில், மூன்று மாதங்களில் குறைந்தது 600 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment