கத்தோலிக்கச் செய்திகள் - 18/03/17
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : பாலங்களை அல்ல, சுவர்களைக் கட்ட உங்களை அழைக்கின்றேன்
2. திருத்தந்தை தலைமையேற்று நடத்திய பாவ மன்னிப்பு வழிபாடு
3. திருத்தந்தை மேய்ப்புப்பணி அனுபவம் கொண்ட ஒரு மனிதர்
4. திருத்தந்தைக்கு, கவுரவ மருத்துவப் பட்டம்
5. திருத்தந்தை எகிப்துக்குத் திருத்தூதுப்பயணம் ஏப்.28-29,2017
6. கர்தினால் Vlkன் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்
7. புனித பூமி திருஅவைக்கு புனித வெள்ளி உண்டியல் நிதி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : பாலங்களை அல்ல, சுவர்களைக் கட்ட உங்களை அழைக்கின்றேன்
மார்ச்,18,2017. “பாலங்களை அல்ல, சுவர்களைக் கட்டவும், நன்மையால் தீமையையும், மன்னிப்பால் தவறுகளையும் வெற்றி காணவும், எல்லாருடனும் சமாதானத்துடன் வாழவும் உங்களை அழைக்கின்றேன்” என்ற செய்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இச்சனிக்கிழமையன்று வெளியாயின.
மேலும், சிறார்க்கெதிரான வன்முறைகளை ஒழிப்பது குறித்த, ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்பு பிரதிநிதி Marta Santos Pais, இத்தாலியின் பெருஜியா பேராயர் கர்தினால் Gualtiero Bassetti, பானமா திருப்பீடத் தூதர் பேராயர் Andrés Carrascosa Coso, உகாண்டா திருப்பீடத் தூதர் பேராயர் Michael A. Blume ஆகியோரை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முந்திய நாளில், கர்தினால்கள் அவைக்கு அவர் ஆற்றிய உரையின் கையெழுத்துப் பிரதியை, கியூபா நாட்டு கத்தோலிக்க இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருத்தந்தை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், கர்தினால்கள் அவை கூடி, திருஅவையின் தேவைகள் குறித்து கலந்துரையாடினர். இந்த உரையாடலில், உரையாற்றிய, அர்ஜென்டீனாவின் புவனோஸ் அய்ரெஸ் பேராயரான கர்தினால் ஹோர்கெ பெர்கோலியோ அவர்கள், நற்செய்தி அறிவித்தலில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கர்தினால் பெர்கோலியோ அவர்கள், இஸ்பானிய மொழியில், கையில் எழுதிக்கொண்டுவந்து ஆற்றிய உரையின் கருத்துக்களால் கவரப்பட்ட, ஹவானா கர்தினால் ஹைமே ஒர்த்தேகா அவர்கள், இந்த எழுத்துப் பிரதியைக் கேட்டு வாங்கியதாக, ஊடகச் செய்தி கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகளாவிய திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காம் ஆண்டின் நிறைவையொட்டி, இந்த உரை, ஹவானா உயர் மறைமாவட்டத்தின் Palabra Nueva இதழில், வெளியிடப்பட்டது.
கர்தினால் பெர்கோலியோ அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பிரான்சிஸ் என்ற பெயரை ஏற்றார்.
ஆதாரம் : CWN /வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை தலைமையேற்று நடத்திய பாவ மன்னிப்பு வழிபாடு
மார்ச்,18,2017. 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' என்ற பக்தி முயற்சியின் ஒரு பகுதியான ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை, மார்ச் 17, இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
இவ்வழிபாட்டில், நற்செய்தி வாசகத்திற்குப் பின்னர், மறையுரை வழங்காமல், ஏறக்குறைய பத்து நிமிடங்கள், திருத்தந்தை அமைதியாகச் செபித்தபோது, இதில் பங்கு கொண்ட விசுவாசிகள் அனைவரும் மிக அமைதியாகச் செபித்துக்கொண்டிருந்தனர்.
பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்காவில் ஓர் அருள்பணியாளரிடம், ஏறக்குறைய நான்கு நிமிடங்கள் ஒப்புரவு அருளடையாளத்தைப் பெற்றார். அதன் பின்னர், திருத்தந்தை, மூன்று ஆண்கள் மற்றும், நான்கு பெண்களுக்கு, ஏறக்குறைய ஐம்பது நிமிடங்கள், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றினார்.
அதேநேரம், பசிலிக்காவில் ஆயர்கள், அருள்பணியாளர்கள் என, 95 பேர் இந்த அருளடையாளத்தை நிறைவேற்றினர். இவ்வேளையில், சிஸ்டீன் சிற்றாலய இசைக் குழுவினர், மெல்லிய இசையை வழங்கிக்கொண்டிருந்தனர்.
ஒப்புரவு அருளடையாளத்தைப் பெறுவதற்குத் தயாரிப்பாக, 28 கேள்விகள் கொண்ட ஒரு சிறிய கையேடு விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
'இரக்கத்தையே விரும்புகிறேன்' (மத்.9:13) என்ற சொற்கள், இவ்வாண்டின் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சிக்கு மையக்கருத்தாக அமைந்துள்ளன.
இதற்கிடையே, இவ்வெள்ளி காலையில், அருள்பணியாளர்களுக்கு ஆற்றிய உரையில், ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதற்கு, அருள்பணியாளர்கள் எப்போதும் தாராள மனதுடன் முன்வரவேண்டுமென்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை மேய்ப்புப்பணி அனுபவம் கொண்ட ஒரு மனிதர்
மார்ச்,18,2017. நற்செய்தியை மகிழ்வுடன் அறிவித்தல் பற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது அறிவுரை மடல், முழுவதும் மேய்ப்புப்பணியை மையமாகக் கொண்டிருக்கும் ஏடு என்றும், திருத்தந்தையோடு உரையாடுகையில், மேய்ப்புப்பணி அனுபவம் கொண்ட ஒரு மனிதராக, அவரைப் பார்க்க முடிந்தது என்றும், கானடா நாட்டு ஆயர்கள் தெரிவித்தனர்.
ஆயர்களின் அத் லிமினா சந்திப்பையொட்டி, மார்ச் 16, இவ்வியாழனன்று, கானடா நாட்டின் அட்லாண்டிக் பகுதியின் பத்து ஆயர்களும், திருப்பீடத்தில், திருத்தந்தையோடு 90 நிமிடங்கள் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு குறித்த அனுபவத்தை, CNS கத்தோலிக்க ஊடகத்திடம் பகிர்ந்துகொண்ட, கானடாவின் Edmundston ஆயர் Claude Champagne அவர்கள், நற்செய்தியின் மகிழ்வு என்ற திருத்தூது அறிவுரை மடலை எழுதிய ஒருவரை, அனுபவத்தால் தன்னால் காண முடிந்தது என்று கூறினார்.
ஆயர்களாகிய நாங்கள் சொல்ல விரும்பியதை திருத்தந்தை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார் எனவும், ஆயர் பணியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், மிகுந்த விருப்பத்துடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார் எனவும் தெரிவித்தார், ஆயர் Champagne.
மேலும், திருத்தந்தையுடன் இடம்பெற்ற இச்சந்திப்பு பற்றி பகிர்ந்துகொண்ட, மற்றுமோர் ஆயர் Peter J. Hundt அவர்கள், ஒரு மூத்த சகோதரருடன் இருந்த உணர்வு ஏற்பட்டது என்றார்.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆனதும், ஆயர்களில் சிலர் தங்களின் கைக்கடிகாரங்களில் மணியைப் பாரத்தனர், அப்போது திருத்தந்தை, நீங்கள் போக வேண்டுமா? எனக் கேட்டார், ஆனால், ஆயர்களோ, திருத்தந்தைக்கு நேரமாகின்றது என நினைத்தோம் என்று கூறினர், அப்போது திருத்தந்தை, ஒன்றும் அவசரமில்லை, எனக்கு நேரமிருக்கின்றது எனத் தெரிவித்தார், என்றார் ஆயர் Hundt.
கானடா ஆயர்கள், தங்களின் அத் லிமினா சந்திப்பில், திருப்பீடத்தின் பல துறைகளையும் பார்வையிட்டனர். இச்சந்திப்பு, இச்சனிக்கிழமையன்று நிறைவுற்றது.
ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தைக்கு, கவுரவ மருத்துவப் பட்டம்
மார்ச்,18,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆன்மாக்களின் மருத்துவராக அங்கீகரித்து, அவருக்கு, கவுரவ மருத்துவப் பட்டம் வழங்குவதாக, இத்தாலியின் சலேர்னோ மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இத்தாலிய கத்தோலிக்க மருத்துவர் கழகமும், சலேர்னோ பல்கலைக்கழகத்தின் மருந்து மற்றும், அறுவைச் சிகிச்சைத் துறையும் சேர்ந்து, Baronissiல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், சலேர்னோ பல்கலைக்கழகத்தின் தலைவர், Aurelio Tommasetti தலைமையிலான குழு, திருத்தந்தைக்கு, கவுரவ மருத்துவப் பட்டம் வழங்குவதாக, இவ்வெள்ளியன்று அறிவித்தது.
உலகின் மிகப் பழமையான மருத்துவப் பள்ளியான சலேர்னோ மருத்துவப் பள்ளி, தற்போது, மருந்து மற்றும், அறுவைச் சிகிச்சைத் துறையாகச் செயல்பட்டு வருகிறது.
ஆன்மாக்களின் மருத்துவராகவும், நலிந்தவர்கள், மிக ஏழைகள், இறை இரக்கமும், மனித ஒருமைப்பாடும் அதிகம் தேவைப்படுகின்றவர்கள் ஆகியோரை நன்கு அறிந்தவராகவும் செயல்படுகின்ற, திருத்தந்தையின் திறமைகள், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று, சலேர்னோ மருத்துவப் பல்கலைக்கழகம், திருத்தந்தைக்கும், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தை எகிப்துக்குத் திருத்தூதுப்பயணம் ஏப்.28-29,2017
மார்ச்,18,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற ஏப்ரலில், எகிப்து நாட்டுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் புர்கே அவர்கள், இச்சனிக்கிழமையன்று, செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
எகிப்து நாட்டு அரசுத்தலைவர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், காப்டிக் கிறிஸ்தவ சபைத் தலைவர், திருத்தந்தை 2ம் Tawadros, Al Azhar மசூதியின் பெரிய தலைவர் Sheikh Ahmed Mohamed el-Tayyib ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்துக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என, புர்கே அவர்கள், கூறினார்.
இத்திருத்தூதுப் பயணம், வருகிற ஏப்ரல் 28, 29 ஆகிய இரு நாள்கள் இடம்பெறும் எனவும், இப்பயணம் குறித்த விவரங்கள், பின்னர் வெளியிடப்படும் எனவும், புர்கே அவர்கள், செய்தியாளர்களிடம் அறிவித்தார்
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. கர்தினால் Vlkன் இறப்புக்கு திருத்தந்தை இரங்கல்
மார்ச்,18,2017. செக் குடியரசின் Prague நகரின் முன்னாள் பேராயர் கர்தினால் Miloslav Vlk அவர்கள், மரணமடைந்ததையொட்டி, தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிராக் நகர் பேராயர் கர்தினால் Dominik Duka அவர்களுக்கு, இத்தந்திச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, திருஅவைக்கு எதிராக இடம்பெற்ற அடக்குமுறைகளிலும், அரசு அதிகாரிகளால் இவர் தனிமைப்படுத்தப்பட்ட காலங்களிலும், நற்செய்திக்கு மகிழ்வுடன் இவர் வழங்கிய துணிச்சலான சான்று வாழ்வைப் பாராட்டியுள்ளார்.
விசுவாசிகளைப் புதுப்பிக்கும் பணியில், தூய ஆவியாருக்கு இவர் பணிந்து நடந்த முறைகளையும் பாராட்டியுள்ள திருத்தந்தை, இவரின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினர் மற்றும், மறைமாவட்ட விசுவாசிகளுக்கு, தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
கர்தினால் Miloslav Vlk அவர்கள், தனது 84வது வயதில் இச்சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
1932ம் ஆண்டு மே 17ம் தேதி, Líšnice நகரில் பிறந்த கர்தினால் Miloslav Vlk அவர்கள், வாகனத் தொழிற்சாலை உட்பட, பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிய பின்னர், பிராக் புரட்சியின்போது, 1968ம் ஆண்டு, ஜூன் 23ம் நாள், தனது 36வது வயதில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். உடனடியாக இவர், České Budějovice நகர் ஆயருக்குச் செயலராக நியமிக்கப்பட்டார்.
மக்கள் மத்தியில் இவரின் செல்வாக்கு மற்றும், மேய்ப்புப்பணி நடவடிக்கைகளைக் கண்ட அரசு அதிகாரிகள், 1971ம் ஆண்டில், České Budějovice நகரைவிட்டு கட்டாயமாக இவரை வெளியேற்றினர். உள்ளூர் கம்யூனிச கட்சியினரின் ஒத்துழைப்புடன், 1978ம் ஆண்டில், இவரின் குருத்துவப்பணியை அரசு அதிகாரிகள் தடை செய்தனர்.
1978ம் ஆண்டு முதல், 1986ம் ஆண்டு வரை அந்நகரில், ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் வேலை செய்தார் கர்தினால் Vlk.. அதோடு, இவர், பிராக்
நகரிலிருந்து செக்கோஸ்லோவாக்கிய அரசு வங்கியின் மாவட்ட ஆவணக்
காப்பகத்திலும் வேலை செய்தார். 1988ம் ஆண்டு டிசம்பர் வரை பிராக் நகரில்
மறைந்த வாழ்வு வாழ்ந்த இவர், 1989ம் ஆண்டு சனவரி முதல் தேதி, பரிசோதனை முறையில் அருள்பணியாளர் பணியைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.
கம்யூனிச வீழ்ச்சிக்குப் பின்னர், 1990ம் ஆண்டில் České Budějovice நகர் ஆயராகவும், 1991ம் ஆண்டில், பிராக் பேராயராகவும், 1994ம் ஆண்டில் கர்தினாலாகவும் நியமிக்கப்பட்டார் கர்தினால் Vlk..
கர்தினால் Miloslav Vlk அவர்கள், பல்வேறு கவுரவ பட்டங்களைப் பெற்றிருப்பவர், பல்வேறு முக்கிய பொறுப்புக்களையும் கொண்டிருந்தவர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. புனித பூமி திருஅவைக்கு புனித வெள்ளி உண்டியல் நிதி
மார்ச்,18,2017. புனித பூமியிலுள்ள திருஅவைக்கு கத்தோலிக்கர் உதவுமாறு, உலகின் ஆயர்களுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீட கீழை வழிபாட்டுமுறை பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி.
இவ்வாண்டின் தவக்காலத்தின் தொடக்கத்தில், இக்கடிதத்தை எழுதியுள்ள கர்தினால் சாந்திரி அவர்கள், புனித பூமியில், திருஅவையின் பிரசன்னம் மட்டுமல்ல, அப்பகுதியின் புனித இடங்களும், திருத்தலங்களும் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை வலியுறுத்தி இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில், குறிப்பாக, ஈராக், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்களின் வாழ்வு, மிகவும் கடினமாக உள்ளது எனவும், இவ்விடங்களில் எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் இரத்தம் சிந்துகின்றனர் எனவும் கூறியுள்ளார், கர்தினால் சாந்திரி.
புனித வெள்ளியன்று ஆலயங்களில் எடுக்கப்படும் உண்டியல், புனித பூமி திருஅவைக்கு வழங்கப்படும் என, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் அறிவித்த திட்டம், தொடர்ந்து செயலில் உள்ளது, அது இவ்வாண்டும் புதுப்பிக்கப்படுகின்றது எனவும் கர்தினால் சாந்திரி அவர்கள், குறிப்பிட்டுள்ளார்.
புனித பூமிக்கு விசுவாசிகள் திருப்பயணம் மேற்கொள்வது, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு உதவுவதாய் இருக்குமெனவும், எருசலேம் மற்றும் பெத்லகேமில் வாழும் மக்களில் குறைந்தது 30 விழுக்காட்டினர், திருப்பயணங்களால் வாழ்கின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது எனவும், கர்தினால் சாந்திரி அவர்களின் கடிதம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment