Saturday, 18 March 2017

கத்தோலிக்கச் செய்திகள் - 17/03/17

கத்தோலிக்கச் செய்திகள் - 17/03/17
------------------------------------------------------------------------------------------------------

1. ஒப்புரவு அருளடையாளத்தை நன்றாக நிறைவேற்றுபவர் செப மனிதர்

2. திருத்தந்தையின் Instagramக்கு வயது ஒன்று

3. பணியிடங்களில் பெண்களின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும்

4.  பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சகித்துக்கொள்வது...

5. உலகளாவிய மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதியை அதிகரிக்க...

6. திருத்தந்தை, லெபனானுக்கு பயணம் மேற்கொள்ள விருப்பம்

7.  புலம்பெயர்ந்தவர்கள் குறித்த EU நடவடிக்கை பற்றி கவலை

8. காசநோயை கண்டுபிடிக்க உதவும் சூரிய சக்தி

------------------------------------------------------------------------------------------------------

1. ஒப்புரவு அருளடையாளத்தை நன்றாக நிறைவேற்றுபவர் செப மனிதர்

மார்ச்,17,2017. ஒப்புரவு அருளடையாளத்தை சிறப்பாக நிறைவேற்றுபவர், நல்ல ஆயராம் இயேசுவின் உண்மையான நண்பராக இருப்பார், இந்த நட்புறவின்றி, ஒப்புரவு அருளடையாளத் திருப்பணிக்குத் தேவையான, தந்தைக்குரிய அன்பை வளர்த்துக்கொள்வது கடினம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
கத்தோலிக்கத் திருஅவையின் பாவ மன்னிப்பு நீதிமன்றம் (Apostolic Penitentiary) ஒப்புரவு அருளடையாளம் பற்றி நடத்தும் பயிற்சிப் பாசறையில் கலந்துகொள்ளும் 700 பேரை, இவ்வெள்ளியன்று, அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒப்புரவு அருளடையாளத்தை நன்றாக நிறைவேற்றுபவர் யார்? இந்த அருளடையாளத்தை, நன்றாக நிறைவேற்றுபவராக மாறுவது எப்படி? என்பதை, மூன்று கூறுகள் வழியாக விளக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
ஒப்புரவு அருளடையாளத்தை நன்றாக நிறைவேற்றுபவர், முதலில் செப மனிதராக இருக்க வேண்டும், இரண்டாவதாக, தூய ஆவியாரின் மனிதராக, தன்னில் செயல்படும் ஆவியானவரைக் கண்டுகொள்பவராக இருக்க வேண்டும், மூன்றாவதாக, நற்செய்தியை அறிவிப்பவராக இருக்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர் செபிக்கும் மனிதராக இருக்கும்போது, தான் ஒரு பாவி எனவும், தான் மன்னிக்கப்பட்டவர் எனவும், முதலில் அறிந்துகொள்வார் என்றுரைத்த திருத்தந்தை, பாவியிடம் அவசியமின்றி கடினமாக நடந்துகொள்ளும் எவ்வித எண்ணத்தையும் தவிர்த்து நடப்பதற்கு, செபம் உதவும் என்று குறிப்பிட்டார்.
மேலும், தூய ஆவியாரின் மனிதராகவும், அந்த ஆவியாரில் தேர்ந்து தெளிபவராகவும் இருக்கும்போது, இந்த அருளடையாளத்தை நிறைவேற்றுபவர், தனது விருப்பத்தைச் செய்யாமலும், தனது சொந்தக் கோட்பாடுகளைப் போதிக்காமலும் இருந்து, எப்போதும், கடவுளின் விருப்பத்தையே தேடுவார் என்றும் கூறினார், திருத்தந்தை.
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றும் இடம், நற்செய்தி அறிவிக்கும் உண்மையான இடம் என்றும், இவ்விடத்தில், உண்மையிலேயே, இரக்கமுள்ள இறைவனையும், அவரின் இரக்கத்தையும் சந்திக்கிறோம் என்றும், திருத்தந்தை கூறினார்.
ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுபவர், ஒவ்வொரு நாளும், தீமை மற்றும் பாவத்தினின்று விலகி நடக்கையில், அவரின் திருப்பணி, மேய்ப்புப்பணிக்கு உண்மையாகவே முன்னுரிமை கொடுப்பதாக அமைந்திருக்கும் என்றும் கூறியத்  திருத்தந்தை, இந்த அருளடையாளத்தைப் பெற வருகின்றவர்களுக்காக எப்போதும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  திருஅவையின் பாவ மன்னிப்பு நீதிமன்றம், நம் ஆன்மாவுக்கு இன்றியமையாத மருந்தாகிய இறை இரக்கத்தை வழங்கும், இரக்கத்தின் நீதிமன்றம், இந்த நீதிமன்றம் தனக்குப் பிடிக்கும் என்றும், கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் Instagramக்கு வயது ஒன்று

மார்ச்,17,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Instagram சமூக வலைத்தளம், திருத்தந்தையின் இரக்கத்திற்குச் சான்றாக உள்ளது என்று, திருப்பீட மக்கள்தொடர்புத் செயலகத்தின் செயலர் பேரருள்திரு Lucio Adrian Ruiz அவர்கள், தெரிவித்தார்.
@Franciscus என்ற முகவரியில், திருத்தந்தையின் Instagram ஆரம்பிக்கப்பட்டு, மார்ச் 19, இஞ்ஞாயிறன்று ஓராண்டு நிறைவுறுவதை முன்னிட்டு, வத்திக்கான் வானொலிக்கு பேட்டி அளித்த பேரருள்திரு Ruiz அவர்கள், டிஜிட்டல் உலகில், நற்செய்தி அறிவிப்பது குறித்த திருத்தந்தையின் கண்ணோட்டம் பற்றியும் பேசினார்.
Instagram வலைத்தளத்தின் இணை நிறுவனரான கெவின் அவர்கள், திருத்தந்தையை  சந்தித்தபோது, இந்த வலைத்தளம் பற்றிப் பேசியதாகவும், குறிப்பாக, படங்கள் வழியாக இந்தச் சமூக வலைத்தளம் மக்கள் தொடர்பு செய்தியைக் கொண்டிருக்கின்றது என்று விளக்கியதாகவும், இதற்குப் பின்னர், இந்த வலைத்தளம் பற்றிய சிந்தனை திருத்தந்தைக்கு ஏற்பட்டது என்றும் தெரிவித்தார் பேரருள்திரு Ruiz .
கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி தொடங்கப்பட்ட திருத்தந்தையின் இந்த வலைத்தளத்தை 35 இலட்சம் பேர் பின்பற்றுகின்றனர் என்றும், இதில், ஒவ்வொரு வாரமும் பிரசுரிக்கப்படும் படங்களை, ஏறக்குறைய ஒரு கோடிப் பேர் பார்வையிட்டுள்ளனர் என்றும், பேரருள்திரு Ruiz அவர்கள் கூறினார்.
மேலும், 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' பக்தி முயற்சியின் ஒரு பகுதியான ஒப்புரவு அருளடையாள வழிபாட்டை, மார்ச் 17, இவ்வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், திருத்தந்தை தலைமையேற்று நடத்துகிறார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 25ம் தேதி, மிலான் நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, இவ்வாண்டு கொண்டாடப்படும் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சியை இவ்வெள்ளியன்று நிறைவேற்றுகிறார் திருத்தந்தை.
'இரக்கத்தையே விரும்புகிறேன்' (மத்.9:13) என்ற சொற்கள், இவ்வாண்டின் 'இறைவனோடு 24 மணி நேரங்கள்' முயற்சிக்கு மையக்கருத்தாக அமைந்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பணியிடங்களில் பெண்களின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும்

மார்ச்,17,2017. சிறந்த வருங்காலத்தை அமைப்பதற்கு, ஆண்கள் மற்றும், பெண்களுக்கிடையே முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்று, திருப்பீடத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா.வில், பெண்கள் பற்றி ஆற்றிய உரையில் கூறினார்.
மாறிவரும் தொழில் உலகில், பொருளாதாரத்தில் பெண்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் 61வது அமர்வில், இவ்வியாழனன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.
வாழ்வு மற்றும் தொழிலின் ஒவ்வொரு பகுதியிலும், பெண்களின் திறமைகளை உணர்ந்து, அவர்களுக்கு அதிகாரமளிப்பது, பெண்களை மட்டுமல்ல, நம் அனைவரையும் உறுதிப்படுத்துவதாக அமையும் என்றும் தன் உரையில் கூறினார், பேராயர் அவுசா.
பணியிடங்களில் பெண்களின் மாண்பு உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என, உலகளாவிய சமுதாயத்தைக் கேட்டுக்கொண்ட பேராயர் அவுசா அவர்கள், போர் மற்றும், வறுமையினால் நாடுகளைவிட்டு வெளியேறும் பெண்களும், சிறுமிகளும், எதிர்கொள்ளும் இன்னல்களை, சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
மனித வர்த்தகம் மற்றும் தவறாக நடத்தப்படுவதால், பெண்களும், சிறுமிகளும் கடும் உரிமை மீறல்களைச் சந்திக்கின்றனர் என்ற கவலையையும் வெளிப்படுத்தினார், பேராயர் அவுசா.
ஊதியமில்லாமல் பெண்கள் ஆற்றும் வேலைகள், பொருளாதாரத் துறைகளால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை எனினும், பெண்களின் இவ்வேலைகள், ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தையும், ஒரு நாட்டையும் தாங்கிப் பிடிக்கும் அடிப்படைத் தூண்களாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார், பேராயர் அவுசா.
நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில், இம்மாதம் 13ம் தேதி தொடங்கிய இக்கூட்டம், இம்மாதம் 24ம் தேதி நிறைவடைகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4.  பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சகித்துக்கொள்வது...

மார்ச்,17,2017. நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் பற்றிய 61வது அமர்வுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ILO என்ற உலக தொழில் நிறுவனம் நடத்திய கூட்டத்தில், பணியிடங்களில், பாலினத்தை அடிப்படையாக வைத்து இடம்பெறும் வன்முறைகள் களையப்பட வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா. பெண்கள் அமைப்பின் இயக்குனர் Phumzile Mlambo-Ngcuka அவர்கள், பணியிடங்களில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சகித்துக்கொள்வது, வேலை வழங்கும் முதலாளிகளுக்கு, பல வழிகளில் இழப்பைக் கொணரும் என எச்சரித்தார்.
உற்பத்தி இழப்பு, சட்டமுறையான செலவுகள், நோய் விடுப்புகள், நிறுவனத்தின் பெயர் கெடுதல் உட்பட, பெருமளவில் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்குமாறு, தொழில் நிறுவனத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார், Phumzile.
பணியிடங்களில், பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகளை அகற்றுவதற்கென, 2019 அல்லது 2020ம் ஆண்டில், புதிய உலகளாவிய விதிமுறைகளை வெளியிடுவதற்கு, ILO நிறுவனம் முயற்சித்து வருகின்றதெனத் தெரிவித்தார், Phumzile.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி

5. உலகளாவிய மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதியை அதிகரிக்க...

மார்ச்,17,2017. உலக அளவில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க ஐக்கிய நாடு செலவழிக்கும் தொகை அதிகரிக்கப்பட வேண்டுமென்ற பல்சமயத் தலைவர்களின் விண்ணப்பத்திற்கு, அந்நாட்டு கத்தோலிக்கத் தலைவர்களும் தங்களின் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐந்து ஆயர்கள் உட்பட, 106 பல்சமயத் தலைவர்கள், காங்கிரஸ் அவைத் தலைவர்களுக்கு, இவ்வியாழனன்று எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்க அரசுத் துறை வழியாக, மனிதாபிமான மற்றும், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2018ம் நிதியாண்டின் வரவு செலவு அறிக்கையின் சுருக்கத்தை, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குள், அந்நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட பல்சமயத் தலைவர்கள், இக்கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இந்த அறிக்கையில், இராணுவத்திற்குரிய செலவு 5,400 கோடி டாலர் அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும், இராணுவமல்லாத  திட்டங்களுக்கு ஆகும் செலவு 28 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது என, அக்கடிதம் சுட்டிக் காட்டுகின்றது.
குறிப்பாக, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், மெக்சிகோவுக்கும் இடையே எல்லைச் சுவர் கட்டுவதற்கு, 260 கோடி டாலர் உட்பட, உள்நாட்டுப் பாதுகாப்புக்கென சிறிய அளவில் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : CNS  / வத்திக்கான் வானொலி

6. திருத்தந்தை, லெபனானுக்கு பயணம் மேற்கொள்ள விருப்பம்

மார்ச்,17,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தார் என, லெபனான் அரசுத்தலைவர், Michel Aoun அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மார்ச் 16, இவ்வியாழன் காலையில், தனது துணைவியார், மற்றும் அரசு அதிகாரிகளுடன் திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், இவ்வாறு தெரிவித்தார் என, ஆசியச் செய்தி கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் நிறைந்ததாய் இருக்குமென்று உரைத்த லெபனான் அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும்  தொட்டிலாக உள்ள பகுதியில், கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் கடினமான சூழல்களில் வாழ்கின்றனர் என்று கூறினார்.
இதற்கிடையே, உலகில் வேகமாக வளரும் மதம் இஸ்லாம் என்று, அமெரிக்காவை மையமாகக்கொண்ட Pew ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. 2050ம் ஆண்டில் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கலாம் எனவும் அவ்வறிக்கை கூறுவதாக, பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

7.  புலம்பெயர்ந்தவர்கள் குறித்த EU நடவடிக்கை பற்றி கவலை

மார்ச்,17,2017. புலம்பெயர்ந்த மக்கள், துருக்கியிலிருந்து, EU என்ற ஐரோப்பிய ஒன்றிய அவை நாடுகளுக்குள் வருவதைத் தடை செய்வதற்கு, 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை, ஐரோப்பிய ஆயர்களின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் குறை கூறியுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு, மார்ச் 16, இவ்வியாழக்கிழமையோடு, ஓராண்டு நிறைவுற்றதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய அவையின் இந்நடவடிக்கை, வெட்கத்துக்குரியது என குறை கூறியுள்ளது.
இந்நடவடிக்கையால், கிரேக்கத்தில், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள், மனிதமற்ற மற்றும், மாண்பிழந்த நிலையில் வாழ்வதற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், இம்மக்கள், EU நாடுகளில் புகலிடம் தேடுவதற்கு, வேறு அதிக ஆபத்தான வழிகளைக் கட்டாயமாக தேர்ந்து கொள்வதற்கு இது வழியமைக்கும் என்றும், ஐரோப்பிய காரித்தாசின் அறிக்கை கூறுகிறது.
புலம்பெயர்ந்த மக்களைத் தண்டிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும், துருக்கியோடு இடம்பெற்றுள்ள ஒப்பந்தம், புலம்பெயர்ந்தவர் பிரச்சனைக்குத் தீர்வாகாது எனவும், கூறியுள்ளார், ஐரோப்பிய காரித்தாசின் பொதுச் செயலர் Jorge Nuño Mayer.

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி

8. காசநோயை கண்டுபிடிக்க உதவும் சூரிய சக்தி

மார்ச்,17,2017. ஆப்ரிக்க நாடான கானாவில், காசநோயால் ஏற்படும் உயிரிழப்புக்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், புதுமையானதொரு திட்டத்தை, நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது அந்நாட்டு அரசு.
வேகமாகத் தொற்றக்கூடிய காசநோயால், கானாவில் ஆண்டுக்கு ஒன்பதாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கும்வேளை, காசநோயை விரைவில் கண்டுபிடித்து, அந்நோயால் உயிரிழக்கும் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன், சூரிய சக்தியில் இயங்கும் எக்ஸ்ரே கருவிகளை அறிமுகம் செய்துள்ளது கானா அரசு.
இதன் மூலம், நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், மின்சார வசதியும் இல்லாத தொலைதூரப் பகுதிகள் உட்பட, அனைத்துப் பகுதிகளிலும் காசநோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்தவும், மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்கவும் முடியுமென கானா அரசு கருதுகிறது.
மேற்கு ஆப்ரிக்காவில் இபோலாவால் கொல்லப்பட்டதாகப் பதிவானவர்களின் எண்ணிக்கையைவிட, கானாவில் காசநோயால், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் எனக் கூறப்படுகின்றது.
கானா நாட்டில், 2035ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. அந்நாட்டில், ஆயிரத்திற்கு 7.5 பேர் வீதம், காச நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்று, ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
உலகில், ஒவ்வொரு நிமிடத்திற்கும் மூன்று பேர் வீதம் காச நோயால் இறக்கின்றனர். 

ஆதாரம் : Agencies /பிபிசி/ வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment