Tuesday, 7 March 2017

கத்தோலிக்கச் செய்திகள் - 06/03/17

கத்தோலிக்கச் செய்திகள் - 06/03/17
------------------------------------------------------------------------------------------------------

1. கைத்தொலைபேசியைப் போல் விவிலியத்தையும் வைத்திருங்கள்

2. நாம் திருந்தி வரும்வரை காத்திருக்கும் நண்பர் அவர்

3. வத்திக்கான் அதிகாரிகளுடன் ஆண்டு தியானத்தில் திருத்தந்தை

4. மியான்மார் கல்வி அமைப்பை மேம்படுத்தும் தென்கொரிய திருஅவை

5. இலங்கையில் ஒப்புரவை உருவாக்கும் பணியில் மதத்தலைவர்கள்

6. இந்தோனேசியாவில் மத உரிமை மீறல்கள் அதிகரிப்பு

7. 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயம்

------------------------------------------------------------------------------------------------------

1. கைத்தொலைபேசியைப் போல் விவிலியத்தையும் வைத்திருங்கள்

மார்ச்,06,2017. கைத்தொலைபேசியைப்போல், எப்போதும் விவிலியப்பிரதியை தங்கள் கையில் வைத்துக்கொண்டு இயேசு வழங்கும் செய்தியை வாசித்தறியுமாறு அழிப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தவக்காலத்தின் முதல் ஞாயிறான இம்மாதம் 5ம் தேதி, உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கைத்தொலைபேசியை அடிக்கடி திறந்து செய்தியை வாசிப்பதுபோல், இத்தவக்காலத்தில் கையடக்க விவிலியப் பிரதியை நம்முடன் எப்போதும் வைத்துக்கொண்டு வாசிக்கப் பழகுவோம் என்றார்.
விவிலியத்தை அடிக்கடி வாசித்து, நம் உள்மனதில் மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்ளும்போது, தீமைகளை எதிர்த்துப் போரிடவும், அயலவர் மீது அன்பு காட்டவும் அது உதவும் எனவும் கூறினார் திருத்தந்தை.
இயேசு, சாத்தானால் சோதனைக்கு உள்ளானது பற்றிக் கூறும் இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் குறித்து தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழ்ப்படிதல் மற்றும் தாழ்ச்சியின் பாதையிலிருந்து இயேசுவை திசை திருப்ப முயலும் சாத்தானின் முயற்சியை முறியடிப்பதுபோல் நாமும் முறியடிக்க, இறைவார்த்தைகளே நமக்கு உதவ முடியும் என்றார்.
இஞ்ஞாயிறு மாலை, தன் ஆண்டு தியானத்தை, வத்திக்கான் உயர் அதிகாரிகளுடன் துவக்கவிருப்பது குறித்து தன் மூவேளை செப உரையின் இறுதியில் தெரிவித்து, தங்களுக்காக செபிக்குமாறு அழைப்பையும் விடுத்தார், திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. நாம் திருந்தி வரும்வரை காத்திருக்கும் நண்பர் அவர்

மார்ச்,06,2017. 'நம்மை எச்சூழலிலும் கைவிடாத நம்பிக்கைக்குரிய நண்பர் இயேசு. நாம் பாவம் செய்தாலும், நாம் மனந்திருந்தி திரும்பிவரும்வரை நமக்காக பொறுமையுடன் காத்திருப்பவர் அவர்' என தன் டுவிட்டர் பக்கத்தில், ஞாயிறன்று காலையில் பதிவிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்கு முன்னர் இப்பதிவை வெளியிட்டுள்ள திருத்தந்தை, மூவேளை செப உரையை வழங்கிய பின்னர், மாலையில், தன் தியானத்தை முன்னிட்டு அரிச்சா நகருக்கு கிளம்புமுன்னரும், ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
மாலை 4 மணிக்கு கிளம்புவதற்கு முன்னர், உள்ளூர் நேரம் 3.30 மணிக்கு திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தி, அவரின் தியானத்திற்கு செபங்கள் வழியாக உதவுமாறு அழைப்பு விடுக்கிறது.
'வரும் வெள்ளிக்கிழமை வரை ஆண்டு தியானத்தில் ஈடுபட உள்ள எனக்காகவும், என் உடன் உழைப்பாளர்களுக்காகவும் செபிக்குமாறு வேண்டுகிறேன்' என தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வத்திக்கான் அதிகாரிகளுடன் ஆண்டு தியானத்தில் திருத்தந்தை

மார்ச்,06,2017. திருத்தந்தையும், திருப்பீடத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகள் அனைவரும், உரோம் நகருக்கு ஏறக்குறைய 16 மைல் தூரத்தில் அமைந்துள்ள அரிச்சா நகர், தெய்வீகப் போதகர் இல்லத்தில், மார்ச் 5, இஞ்ஞாயிறு மாலை முதல் தங்களின் ஆண்டு தியானத்தைத் தொடங்கியுள்ளனர்.
இத்தியானத்தையொட்டி, ஞாயிறு, உள்ளூர் நேரம், மாலை 4 மணிக்கு, திருப்பீட அதிகாரிகளுடன், தனியார் பேருந்தில் அரிச்சா நகருக்குப் பறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 6 மணிக்கு தன் 5 நாள் தியானத்தைத் துவக்கினார்.
மார்ச் 10, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் இந்த ஐந்து நாள்கள் தியானத்தில், பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் ஜூலியோ மிக்கேலினி அவர்கள், தியான உரைகளை வழங்குகிறார்.
தவக்காலத்தில், திருத்தந்தையும், திருப்பீடத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் தியானம் செய்வது, ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வழக்கம் என்பதும், வத்திக்கானிலேயே இத்தியானங்கள் நடைபெற்று வந்த பழக்கத்தை மாற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்படி, 2014ம் ஆண்டு, தவக்காலத்திலிருந்து உரோம் நகருக்கு வெளியே, தியான இல்லத்தில் இது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கன.
கடந்த ஆண்டுகளைப் போலவே, அரிச்சா நகரில், புனித பவுல் துறவு சபையினர் நடத்தும் தெய்வீகப் போதகர் இல்லத்தில், இந்த ஆண்டு தியானமும் இடம்பெறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. மியான்மார் கல்வி அமைப்பை மேம்படுத்தும் தென்கொரிய திருஅவை

மார்ச்,06,2017. மியான்மார் நாட்டின் கல்வி அமைப்பை மேம்படுத்தும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது, தென்கொரிய தலத்திருஅவை.
தென் கொரியாவின் செயோல் உயர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் ' ஒரே உடல், ஒரே ஆவி' என்ற அரசு சாரா இயக்கத்தின் வழியாக, மியான்மார் ஆசிரியர்களுக்கு அந்நாட்டில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மியான்மாரின் ஏறத்தாழ 70 ஆண்டு கால உள்நாட்டு மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், இதுவரை, 66,000 டாலர்களைத் திரட்டியுள்ளது, செயோல் உயர்மறைமாவட்டம்.
மியான்மார் நாட்டின் ஆசிரியர்களுக்கு, சிறந்த பயிற்சியை வழங்கி, அதன் வழியாக அந்நாட்டின் கல்வித்துறைக்கு உதவுவதை தன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது, செயோல் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் 'ஒரே உடல், ஒரே ஆவி' இயக்கம்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

5. இலங்கையில் ஒப்புரவை உருவாக்கும் பணியில் மதத்தலைவர்கள்

மார்ச்,06,2017. பல ஆண்டுகள் இனமோதல்களால் பாதிக்கப்பட்ட இலங்கை நாட்டில், ஒப்புரவை உருவாக்கும் நோக்கில், அந்நாட்டின் கிறிஸ்தவ மற்றும் புத்த மதத்தலைவர்களுடன் இணைந்து அமைதிப்பணியைத் துவக்கியுள்ளார், ஆங்கிலிக்கன் போதகர் ஒருவர்.
நியூசிலாந்தில் பிறந்து தென் ஆப்ரிக்காவில் பணியாற்றியபோது, இனவெறி குழுக்களால் தாக்கப்பட்டு, தன் கைவிரல்களையும், ஒரு கண்ணையும் இழந்த ஆங்கிலிக்கன் போதகர் Michael Lapsley அவர்கள், கடந்த கால கசப்பான எண்ணங்களை, மன்னிப்பின் வழியாக மறந்து, அமைதியை உருவாக்கலாம் என்று கூறினார்.
'கடந்த கால கசப்புணர்வுகளை குணப்படுத்தல்' என்ற தலைப்பில் அமைப்பு ஒன்றை துவக்கி, தென் ஆப்ரிக்காவில் ஒப்புரவுக்குப் பணியாற்றிவரும் ஆங்கிலிக்கன் போதகர் Lapsley அவர்கள், போருக்குப்பின், அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், பகைமையையும் கசப்புணர்வுகளையும் ஒழிப்பது என்றார்.
பல்வேறு இனங்கள் வாழும் ஒரு சமுதாயத்தில், ஓரினம் ஏனைய இனத்திற்கு ஆற்றிய தீமைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றை அகற்ற முயல்வதே, அமைதிக்குரிய முதல்படி எனவும் கூறினார் அவர்.

ஆதாரம் : UCAN  / வத்திக்கான் வானொலி

6. இந்தோனேசியாவில் மத உரிமை மீறல்கள் அதிகரிப்பு

மார்ச்,06,2017. இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு மத சிறுபான்மையினருக்கும், மத விடுதலைக்கும் எதிரான உரிமை மீறல்கள் அதிகரித்திருந்ததாக, அந்நாட்டின் இஸ்லாமிய நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் இஸ்லாமிய ஆய்வாளர்களால் நடத்தப்படும் Wahid நிறுவனம், அந்நாட்டின் கடந்த ஆண்டு மத உரிமை மீறல்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016ம் ஆண்டின் உரிமை மீறல் நடவடிக்கைகள், அதற்கு முந்தைய ஆண்டைவிட 7 விழுக்காடு அதிகம் என தெரிவிக்கிறது.
இவ்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சில கத்தோலிக்கத் தல அதிகாரிகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே குடும்பமாக வாழும் நிலையில், சில இஸ்லாமிய, மற்றும், அரசியல் தலைவர்களின் தவறான வழிகாட்டுதலாலேயே, மத உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர்.
இவ்வாண்டில், இதுவரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இடம்பெற்ற மத உரிமை மீறல்களைவிட இவ்வாண்டில் மேலும் 7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக, இஸ்லாமிய Wahid நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா, இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக்கொண்ட நாடாகும்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

7. 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயம்

மார்ச்,06,2017. உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக ஐ.நா. நிறுவனம் தன் கவலையை வெளியிட்டுள்ளது.
பெரும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியா, சொமாலியா, தென் சூடான் மற்றும் ஏமன் நாடுகளில், மக்கள் பசியால் உயிரிழக்கும் ஆபத்து அதிகமாக இருப்பதாக உரைக்கும் ஐ நா. நிறுவனம், இதுவரை, இந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த மனிதாபிமான உதவிகளும், பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
பஞ்சத்தால் மக்கள் உயிரிழப்பதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றபோதிலும், அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த, அதாவது, வேளாண்மைக்கும், கால்நடை பராமரிப்புக்கும் போதிய உதவிகளை வழங்கவேண்டும் என, அனைத்துலக நாடுகளிடம் விண்ணப்பித்துள்ளது, ஐ.நா. நிறுவனம்.
நைஜீரியாவில் விவசாயப் பயிர்களுக்கென தேவைப்படும் 2 கோடி டாலர் உதவித் தொகைக்கு, ஐ.நா.வின் FAO எனும், உணவு மற்றும் வேளாண் நிறுவனம் விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டபோதிலும், மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாகவே தற்போது கிட்டியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

ஆதாரம் : Catholic Online / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment