Thursday 2 March 2017

கத்தோலிக்கச் செய்திகள் - 02.03.17

கத்தோலிக்கச் செய்திகள் - 02/03/17
------------------------------------------------------------------------------------------------------

1. பங்கு அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் தவக்கால தியானம்

2. வாழ்வில் நுழைந்த கடவுளை நம்புவதற்கு அழைக்கும் தவக்காலம்

3. வரலாற்றில் வீசும் நச்சுக் காற்றால் மூச்சடைத்துப் போகிறோம்

4. துன்புறும் கிறிஸ்தவர் அனைவருக்காகவும் செபிக்க அழைப்பு

5. குற்றவாளிகளுக்கும், வாழும் உரிமை எப்போதும் உண்டு

6. பசியால் துன்புறும் குழந்தைகளுக்கு உணவளிக்கவேண்டும்

7. கந்தமால் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி அழைப்பு

8. ஜார்க்கண்டில் வரதட்சணையை திருப்பிக்கொடுத்த 800 குடும்பத்தினர்

------------------------------------------------------------------------------------------------------

1. பங்கு அருள்பணியாளர்களுக்கு திருத்தந்தையின் தவக்கால தியானம்

மார்ச்,02,2017. நம்பிக்கையை மிகுதியாக்கும் என்ற வேண்டுதல், மனமாற்றத்தின் துவக்கமாக, நம்மிடமிருந்து எழவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தில் பணியாற்றும் பங்கு அருள்பணியாளர்களிடம் கூறினார்.
மார்ச் 2, இவ்வியாழன் காலை, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா பேராலயத்தில், உரோம் மறைமாவட்ட பங்கு அருள்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய தவக்காலத் தியான உரையில் இவ்வாறு கூறினார்.
உடன்பிறந்தோர் குற்றம் புரிந்தபின் அவர்கள் மன்னிப்பு வேண்டி வந்தால், அவர்களை ஏழுமுறை, எழுபது முறை மன்னிக்கவேண்டும் என்று இயேசு கூறிய சொற்களைத் தொடர்ந்து, அவருடைய சீடர்கள், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" (லூக்கா 17:5) என்று வேண்டிக்கொண்டதை தன் தியான உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை, நினைவாற்றல், நம்பிக்கை, தேர்ந்து தெளிதல் என்ற மூன்று கருத்துக்களின் அடிப்படையில் தன் உரையை வழங்கினார்.
நமது நம்பிக்கை வளர்வதற்கு, நினைவாற்றல் மிக உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, நம்பிக்கை கொண்டவர்கள், இறைவன் வழங்கக்கூடிய ஆச்சரியமான விடயங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றிருப்பர் என்று எடுத்துரைத்தார்.
நம்பிக்கையுடன் நடந்து செல்லும் பாதையில் ஒவ்வொரு தருணத்திலும் ஏற்படும் திருப்பங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, தேர்ந்து தெளியும் உள்ளத்தை அருள்பணியாளர்கள் பெற்றிருக்க வேண்டும் என்று, தன் தியான உரையில் வலியுறுத்திக் கூறினார், திருத்தந்தை.
நினைவாற்றல் குறித்து விளக்கமாகப் பேசியத் திருத்தந்தை, ‘இதை என் நினைவாகச் செய்யுங்கள்என்று, சொன்ன இயேசுவின் பலியை, ஒவ்வொருநாளும் கொண்டாடும் பாக்கியம் பெற்றோர், அருள்பணியாளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டியபின், "திருப்பலி என் வாழ்வு, மற்றும், என் வாழ்வு தொடர்ந்து நிகழும் ஒரு திருப்பலி" என்று புனித அல்பெர்த்தோ ஹுர்த்தாதோ (Alberto Hurtado) கூறியதை நினைவுகூர்ந்தார்.
"சீமோனே, சீமோனே, ... நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன்" (லூக்கா 22:31-32) என்று இயேசு கூறிய சொற்களை எடுத்துரைத்தத் திருத்தந்தை, தன் வாழ்நாள் முழுவதும் சோதனைகளோடு போராடிய பேதுரு, நமக்கொரு சிறந்த எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டினார்.
அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் உருவாகும் சோதனைகளையும், பாவங்களையும் நேருக்கு நேர் சந்தித்து, அவ்வேளைகளில், இயேசு நமக்காக மன்றாடுகிறார் என்ற உறுதியுடன், பாவங்களை வெல்வதோடு, மற்றவர்களையும் வாழ்வில் பற்றுறுதியுடன் வாழ்வதற்கு தூண்டவேண்டும் என்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இவ்வியாழன் காலை 11 மணியளவில் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, ஏறத்தாழ 12 அருள்பணியாளர்களுக்கு ஒப்புரவு அருள் சாதனம் வழங்கியபின், 11.50 மணிக்கு தன் தியான உரையை வழங்கினார். திருத்தந்தையின் தியான உரை, வத்திக்கான் தொலைக்காட்சி வழியே நேரடியாக ஒளிபரப்பானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. வாழ்வில் நுழைந்த கடவுளை நம்புவதற்கு அழைக்கும் தவக்காலம்

மார்ச்,02,2017. வெறும் கருத்தளவில் இருக்கும் கடவுளை நம்புவதிலிருந்து மனமாற்றம் பெற்று, கிறிஸ்துவின் வழியே இவ்வுலகிலும், நம் வாழ்விலும் நுழைந்த கடவுளை நம்புவதற்கு தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் கூறினார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, துன்பப்படவும், உதறித் தள்ளப்படவும், கொலை செய்யப்படவும் இவ்வுலகிற்கு தான் வந்ததாக இயேசு கூறும் வார்த்தைகளை மையப்படுத்தி, தன் மறையுரையை வழங்கினார்.
துன்புறும் கடவுள் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு சங்கடங்களை தருவதால், அத்தகையக் கடவுளை விட்டு விலகி, நமது கருத்துக்களுக்கு ஏற்றதுபோல் ஒரு கடவுளை உருவாக்கிக் கொள்கிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எச்சரிக்கை விடுத்தார்.
பிறருக்காக தன்னை முழுவதுமாக இழந்த இயேசு, நம்மையும் அத்தகைய தியாக வாழ்வுக்கு அழைக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்த அழைப்பை ஏற்பதற்கு, தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்று எடுத்துரைத்தார்.
மேலும், "இறைவன் எப்போதும் நம்பிக்கைக்குரியவர், அவர் ஒருபோதும் நம்மை அன்பு செய்வதை நிறுத்துவதில்லை; நாம் அவரைவிட்டு விலகிச் சென்றாலும், நம்மைத் தொடர்ந்து துரத்தி வருபவர் அவர்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இவ்வியாழனன்று வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. வரலாற்றில் வீசும் நச்சுக் காற்றால் மூச்சடைத்துப் போகிறோம்

மார்ச்,02,2017. "உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்" என்று, இறைவாக்கினர் யோவேல் வழியாக, இறைவன் விடுக்கும் அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநீற்றுப் புதன் மாலையில் கொண்டாடிய திருப்பலியில், தன் மறையுரையின் மையப் பொருளாக்கினார்.
இப்புதன் மாலை, உரோம் நகரில் அமைந்துள்ள புனித சபீனா பசிலிக்காவில் தவக்காலத்தின் முதல்நாள் திருப்பலியை நிறைவேற்றியத் திருத்தந்தை, இறைவனின் கருணையைக் காண்பதற்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த காலம், தவக்காலம் என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.
மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதர்கள், மீண்டும் மண்ணாகப் போவது இயற்கை என்றாலும், இந்த மண்ணின் மீது, இறைவனின் கருணை மிகுந்த மூச்சுக் காற்று பட்டதால் நாம் வாழ்வு பெற்றோம் என்பது, நமக்கு வழங்கப்பட்ட மிகப் பெரும் கொடை என்று திருத்தந்தை கூறினார்.
மனித வரலாற்றில் வீசும் நச்சுக் காற்றால் நாம் மூச்சடைக்கப்பட்டாலும், இறைவனின் வாழ்வு வழங்கும் மூச்சு, தொடர்ந்து நம்மீது பட்டுக்கொண்டே இருக்கிறது என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.
வாழ்வை ஒரு பொருட்டாக மதிக்க மறுப்பது, அக்கறையற்ற நிலை, போன்ற நச்சுக் காற்றுகள் வீசுவதால், நமது உலகச் சூழல் அதிக மாசடைந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய மாசடைந்த சூழலுக்கு மறுப்புத் தெரிவிக்க, தவக்காலம் நம்மை அழைக்கிறது என்று கூறினார்.
நம்மை மட்டுமே மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் செபம், நோன்பு, தர்மம் என்ற செயல்பாடுகளிலும், நாம் மூச்சடைத்துப் போக வாய்ப்புக்கள் உண்டு என்று குறிப்பிட்டத் திருத்தந்தை, காயப்பட்டிருக்கும் நம் உடன்பிறந்தோரை மையப்படுத்தி, நம் தவக்கால முயற்சிகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
யாரையும், எந்த அடிப்படையிலும் ஒதுக்கி வைக்காமல், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு தவக்காலம் தகுந்ததொரு தருணம் என்பதை திருத்தந்தை, திருநீற்றுப் புதன் மறையுரையில் வலியுறுத்தினார்.
இப்புதன் மாலை 4.30 மணிக்கு, புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து புறப்பட்ட தவப் பயணத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன், திருப்பீட அதிகாரிகள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கலந்துகொண்டனர்.
தவப்பயணத்தின் இறுதியில், புனித சபீனா பசிலிக்காவில் நடைபெற்ற திருப்பலியில், திருத்தந்தை சாம்பலை அர்ச்சித்து, அனைவருக்கும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. துன்புறும் கிறிஸ்தவர் அனைவருக்காகவும் செபிக்க அழைப்பு

மார்ச்,02,2017. கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக துன்புறுத்தப்படும் கத்தோலிக்கர், கிறிஸ்தவர், ஆர்த்தடாக்ஸ் சபையினர், அனைவருக்காகவும் செபிப்பதில் தன்னுடன் இணையுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் திருத்தந்தை வெளியிட்டு வரும் செபக்கருத்துக்களின் தொடர்ச்சியாக, மார்ச் மாதத்திற்கென்று திருத்தந்தை வகுத்துள்ள செபக்கருத்து, மார்ச் 2, இவ்வியாழன் காலை, ஒரு காணொளிச் செய்தியாக வெளியிடப்பட்டது.
தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறுத்தப்படும் மக்கள், தங்கள் இல்லங்களையும், வழிபாட்டுத் தலங்களையும், தங்கள் உடன்பிறந்தோர், அன்புக்குரியவர்கள் அனைவரையும் இழக்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர் என்று திருத்தந்தை இக்காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்கள் மீது இத்தகைய வன்முறைகளை மேற்கொள்வோர், கிறிஸ்தவர், கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, அனைவரையும் துன்புறுத்துகின்றனர் என்றும், திருத்தந்தை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உங்களில் எத்தனைபேர் துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பும் திருத்தந்தை, தன்னுடன் சேர்ந்து செபிக்குமாறும், துன்புறுவோருக்கு உதவிகள் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
திருத்தந்தையின் செபக்கருத்துக்களை ஒருங்கிணைக்கும் இயேசு சபையினர், The Pope Video வழியே வெளியிட்டிருக்கும் இந்தக் காணொளிச் செய்தியில், திருத்தந்தை இஸ்பானிய மொழியில் பேச, அவரது சொற்கள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, திரையில் தோன்றுமாறு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. குற்றவாளிகளுக்கும், வாழும் உரிமை எப்போதும் உண்டு

மார்ச்,02,2017. கருவில் உருவானதுமுதல், கல்லறை செல்லும்வரை, மனித உயிர் மதிக்கப்படவேண்டும் என்பது, திருஅவையின் அசைவுறாத கருத்து என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அவை கூட்டங்களில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்கும், பேராயர் Ivan Jurkovič அவர்கள், மரண தண்டனை குறித்து, ஐ.நா. பாதுகாப்பு அவை இப்புதனன்று நடத்திய 34வது அமர்வில் இவ்வாறு உரையாற்றினார்.
மனித உயிர் எந்நிலையிலும் மதிக்கப்பட வேண்டும் என்பதை, தன் உரைகளில் வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குற்றம் புரிந்தவர்களுக்கும், வாழும் உரிமை எப்போதும் உண்டு என்று கூறியதை, பேராயர் Jurkovič அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
தீர்ப்புக்களை வழங்குபவர் மனிதர்கள் என்பதால், தவறுகள் நிகழ வாய்ப்புக்கள் உண்டு என்றும், மரண தண்டனை நிறைவேறியபின், அதை மாற்ற நினைத்தாலும் முடியாது என்றும் கூறிய பேராயர் Jurkovič அவர்கள், மனிதத் தவறால், அப்பாவி உயிர்கள் கொல்லப்படுவதற்கும், மரண தண்டனை வழிவகுக்கிறது என்பதை, வலியுறுத்திக் கூறினார்.
குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகள் தங்கள் வாழ்வை சீரமைக்கவும் அரசுகள் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பதே, திருஅவை உலக சமுதாயாத்திற்கு விடுக்கும் விண்ணப்பம் என்று பேராயர் Jurkovič அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. பசியால் துன்புறும் குழந்தைகளுக்கு உணவளிக்கவேண்டும்

மார்ச்,02,2017. தவக்காலத்தில், செபம், உண்ணாநோன்பு ஆகிவற்றில் மட்டும் கத்தோலிக்கர்கள் கவனம் செலுத்தாமல், பசியால் துன்புறும் குழந்தைகளுக்கு உணவளிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிய கர்தினால் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மணிலா பேராயரும், உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான, கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், தவக்காலத்தையொட்டி விடுத்துள்ள மேய்ப்புப்பணி மடலில், வறியோர் மீது கவனம் செலுத்துமாறு விண்ணப்பித்துள்ளார்.
பசியில் வாடும் குழந்தைகளை பார்த்தும் பாராமல் செல்வது, கத்தோலிக்கருக்கு அழகல்ல என்பதைக் கூறிய கர்தினால் தாக்லே அவர்கள், இரக்கம் நமது இயல்பாக மாறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Fast2Feed அதாவது, 'நோன்பிருப்பது உணவூட்டவே' என்ற கருத்தில் இத்தவக்காலத்தில் மணிலா உயர் மறைமாவட்டம் துவங்கியுள்ள ஒரு முயற்சியின் வழியே, பிலிப்பீன்ஸ் நாடெங்கும் 16 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் உணவு பெறுகின்றனர் என்று UCAN செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி

7. கந்தமால் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி அழைப்பு

மார்ச்,02,2017. இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள், குறிப்பாக, ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு, இத்தவக்காலத்தில், தங்கள் செபங்கள் வழியே உறுதி வழங்குமாறு, இந்திய ஆயர் ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
கந்தமால் கிறிஸ்தவர்கள் வன்முறைகளைச் சந்தித்து 9 ஆண்டுகள் ஆகியும், அவர்கள் உள்ளங்களில் இருக்கும் காயங்கள் இன்னும் ஆறாமல் இருக்கின்றன என்றும், இந்தக் காயங்களை குணமாக்க செபங்கள் தேவை என்றும் கூறியுள்ளார்.
உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள மார்ச் மாத செபக்கருத்துடன் தன் விண்ணப்பத்தையும் இணைப்பதாக, பேராயர் பார்வா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
கந்தமால் வன்முறையில் தன் கணவரை இழந்த கனகா ரேகா நாயக் என்பவர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் செபங்களாலேயே தான் சக்தி பெற்றதாக, பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி

8. ஜார்க்கண்டில் வரதட்சணையை திருப்பிக்கொடுத்த 800 குடும்பத்தினர்

மார்ச்,02,2017. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரதட்சணைக்கு எதிராக அமைதியான புதுமையான முறையில் நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சுமார் 800 முஸ்லிம் குடும்பத்தினர், வரதட்சணையை திருப்பிக் கொடுத்துள்ளனர்.
இந்தியாவில் வரதட்சணையால் ஆயிரக்கணக்கான ஏழைக்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் இலடேகர் மாவட்டம், பொகாரி கிராமத்தைச் சேர்ந்த ஹாஜி மும்தாஜ் அலி அவர்கள், வரதட்சணைக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி, தனது மகனின் திருமணத்துக்கு வரதட்சணையாக பெற்ற தொகையை, திருப்பிக் கொடுத்தார்.
இவரைப் பின்பற்றி, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பலரும், வரதட்சணைக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டில், இலடேகர் மற்றும் பலாமு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 குடும்பத்தினர், திருமணத்துக்கு வரதட்சணையாக பெற்ற ரூபாய் 6 கோடிக்கும் மேற்பட்ட தொகையை, மணமகளின் குடும்பத்தினருக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர். அத்துடன், இப்போது நடைபெறும் திருமணங்களின்போது, மணமகன் வீட்டார், வரதட்சணையை மறுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மும்தாஜ் அலி அவர்கள் கூறும்போது, “வரதட்சணை, ஏழை குடும்பத்தினரை, புற்றுநோய் போல அரித்து வருகிறது. இதற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். இதற்கு பலன் கிடைத்து வருகிறது. எனினும், மேலும் சிலர் வரதட்சணை பெற்று வருகின்றனர். இதை முழுவதுமாக ஒழிக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும்என்று கூறினார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment