Saturday, 4 March 2017

கத்தோலிக்கச் செய்திகள் - 03/03/17

கத்தோலிக்கச் செய்திகள் - 03/03/17
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : உண்மையான நோன்பு பிறருக்கு உதவுவதாகும்

2. திருத்தந்தையின் மார்ச், ஏப்ரல் திருவழிபாடுகள்

3. திருப்பீடத்தில் ஐரோப்பிய ஒன்றிய அவை தலைவர்கள்

4. ஐரோப்பியர்கள் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கு திரும்ப அழைப்பு

5. உலக வெப்பநிலை உயர்வுக்கு செல்வந்தர்கள் பொறுப்பு

6. அருள்பணி டாம் விடுதலைக்காக, இந்தியாவில் செபம்

7. பங்களாதேஷின் புதிய சிறார் திருமணச் சட்டத்திற்கு கண்டனம்

8. இந்தோனேசியா : ஒவ்வோர் ஆண்டும் 3,40,000 சிறார் திருமணங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : உண்மையான நோன்பு பிறருக்கு உதவுவதாகும்

மார்ச்,03,2017. உண்மையான நோன்பு என்பது, பிறருக்கு உதவுவதாகும்; அதேநேரம், போலியான நோன்பு என்பது, மத உணர்வை, அழுக்கான செயல்களோடு கலப்பதாகும் மற்றும், இது, தற்பெருமையை பறைசாற்றுவதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை தன் மறையுரையில் கூறினார்.
இந்நாளைய திருப்பலி வாசகங்கள், உண்ணா நோன்பு பற்றி, அதாவது, இத்தவக்காலத்தில், நம் ஆண்டவரிடம் நெருங்கிச் செல்வதற்கு அழைப்பு விடுக்கும் தவத்தைப் பற்றிப் பேசுகின்றன என்றுரைத்த திருத்தந்தை, தான் பாவி என்று உணர்ந்து, மனம் வருந்தும் உள்ளம் குறித்து இறைவன் மகிழ்கின்றார் என்ற திருப்பா வசனத்தையும் குறிப்பிட்டார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில், போலியான மத உணர்வில் கடைப்பிடிக்கப்படும் நோன்பு பற்றி, முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா சொல்வதையும் விளக்கினார் திருத்தந்தை.
வெளிவேட நோன்பு பற்றியும் விளக்கிய திருத்தந்தை, இயேசு வெளிவேடம் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தினார் என்றும், நோன்பிருந்துகொண்டு, அதேநேரம், வீட்டில் வேலைசெய்பவருக்கு உரிய கூலியைக் கொடுக்காமல் இருந்தால், அந்த நோன்பு, வெளிவேடம் என்றும் கூறினார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த சமயம் அது, இயேசு சபை அருள்பணியாளர் பேதுரோ அருப்பே அவர்கள், ஜப்பானில் மறைப்பணியாற்றியபோது, ஒரு பணக்கார தொழிலதிபர் அவரிடம் வந்து, நற்செய்திப் பணிகளுக்காக நன்கொடை வழங்கினார், அப்போது அவர் தன்னுடன், ஒரு புகைப்படக்காரரையும், ஒரு செய்தியாளரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார், இவ்வளவுக்கும் அவர் கொடுத்த நன்கொடை பத்து டாலரே எனவும் கூறினார், திருத்தந்தை. 
கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும், பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு என, உண்மையான நோன்பு பற்றிச் சொல்லும், இறைவாக்கினர் எசாயா நூல் பகுதியையும் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இந்த வார்த்தைகளை நம் இதயத்தில் பதித்து, நாம் எவ்வாறு நோன்பு இருக்கிறோம் எனச் சிந்திப்போம் எனவும், 200 யூரோக்கள் பணத்திற்கு உணவு அருந்திச் செல்லும் மனிதர் ஒருவர், வீடு திரும்பும் வழியில், பசியால் வருந்தும் ஒருவரைக் கண்டும் காணாதது போல் நடந்து செல்வது எப்படி இருக்கும்? என்ற கேள்வியுடன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியாக, "உண்ணா நோன்பு என்பது, உணவைத் தவிர்ப்பது மட்டுமல்ல, பசியாய் இருப்போருடன் உணவைப் பகிர்ந்துகொள்வதும் ஆகும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தையின் மார்ச், ஏப்ரல் திருவழிபாடுகள்

மார்ச்,03,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலைமையேற்று நடத்தும் திருவழிபாடுகள் பற்றிய விவரங்களை, திருத்தந்தையின்  திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான, பேரருள்திரு குய்தோ மரினி (Guido Marini) அவர்கள் இவ்வெள்ளியன்று வெளியிட்டார்.
மார்ச் 17, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் பாவ மன்னிப்பு திருவழிபாட்டை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழாவான, மார்ச் 25, சனிக்கிழமையன்று, மிலானுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார்.
ஏப்ரல் 2, ஞாயிறன்று, கார்பி மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, ஏப்ரல் 9ம் தேதி குருத்தோலை ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுவார்.
ஏப்ரல் 13, புனித வியாழன் காலை 9.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலி, ஏப்ரல் 14, புனித வெள்ளியன்று மாலை 5 மணிக்கு, திருப்பாடுகளின் திருவழிபாடு, இரவு 9.15 மணிக்கு, கொலோசேயம் திடலில் சிலுவைப்பாதை, ஏப்ரல் 15 புனித சனி, இரவு 8.30 மணிக்கு, தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஆண்டவரின் பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாடு ஆகியவற்றை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.                         
ஏப்ரல் 16, ஞாயிறு, காலை 10 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியை நிறைவேற்றும் திருத்தந்தை, அன்று நண்பகலில், உரோம் நகருக்கும், உலகுக்குமென ஊர்பி எத் ஓர்பி (Urbi et Orbi)” செய்தியையும் ஆசீரையும் வழங்குவார்.
புனித வியாழனன்று மாலையில், ஆண்டவரின் இறுதி இரவு உணவு திருப்பலியை, திருத்தந்தை நிறைவேற்றும் இடம், பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருப்பீடத்தில் ஐரோப்பிய ஒன்றிய அவை தலைவர்கள்

மார்ச்,03,2017. உரோம் ஒப்பந்தம் இடம்பெற்றதன் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு உரோம் நகருக்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றிய அவை நாடுகளின் தலைவர்களை, மார்ச் 24ம் தேதி, மாலை 6 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் சந்திக்கவுள்ளார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் புர்கே (Greg Burke) அவர்கள் அறிவித்தார்.
1957ம் ஆண்டு, மார்ச் 25ம் தேதி, உரோம் நகரில், ஆறு நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு உருவாக்கிய உரோம் ஒப்பந்தத்தின்படி, EU என்ற ஐரோப்பிய ஒன்றியம் பிறந்தது. தற்போது, இந்த ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன.
மேலும், இந்த அறுபதாம் ஆண்டு நிகழ்வு பற்றிப் பேசிய மால்ட்டா பிரதமர் Joseph Muscat அவர்கள், ஐரோப்பாவின் வருங்காலத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உள்ளார்ந்த கருத்துக்கள், மிக முக்கியம் என்று தெரிவித்தார்.
EU ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக தற்போது பணியாற்றும் மால்ட்டா பிரதமர் Muscat அவர்கள், உரோமன் கத்தோலிக்கத் தலைவராகிய திருத்தந்தை அவர்கள், அரசியல்வாதிகள் சிந்திக்கத் தவறும் கருத்துக்களை வழங்கக்கூடும் எனவும், தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஐரோப்பியர்கள் கிறிஸ்தவ பாரம்பரியத்திற்கு திரும்ப அழைப்பு

மார்ச்,03,2017. ஐரோப்பாவின் எதிர்காலம் குறித்து பரவலாக கவலைகள் அதிகரித்துள்ள இக்காலத்தில், ஐரோப்பியர்கள், தங்களின் கிறிஸ்தவ பாரம்பரியத்தை நினைவில்கொள்ளுமாறு, அக்கண்டத்தின் கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய கத்தோலிக்க - ஆர்த்தடாக்ஸ் அமைப்பு, பாரிசில் நடத்திய 5வது கூட்டத்தின் இறுதியில் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பிய சமுதாயங்கள் தங்களின் ஆன்மீக வளங்களுக்குத் திரும்பி, தற்போது ஐரோப்பா எதிர்கொள்ளும் சூழலுக்குப் பதில்கூருமாறு  கேட்டுக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய அரசுகள், மனிதரின் அடிப்படை உரிமைகளுக்கு உறுதியளிக்கும்வேளை, பொது வாழ்விலிருந்து மதத்தை ஓரங்கட்ட அல்லது முழுவதும் புறக்கணிக்க, பல சக்திகள் முயற்சித்து வருகின்றன எனவும், அவ்வறிக்கை குறை கூறுகின்றது.  
ஐரோப்பிய கத்தோலிக்க ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பிலிருந்து 12 பிரதிநிதிகள், ஐரோப்பிய ஆர்த்தடாக்ஸ் சபைகளின் கூட்டமைப்பிலிருந்து 12 பிரதிநிதிகள் என, மொத்தம் 24 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, ஐரோப்பா தற்போது எதிர்கொள்ளும் பயங்கரவாத அச்சுறுத்தல், சமய சுதந்திரம், மனிதரின் மாண்பு போன்றவை குறித்து கலந்துரையாடினர். 

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி

5. உலக வெப்பநிலை உயர்வுக்கு செல்வந்தர்கள் பொறுப்பு

மார்ச்,03,2017. உலகளாவிய வெப்பநிலை உயர்வுக்கும், உயிரினங்களின் அழிவுக்கும், பணக்காரர்களே முதல் காரணம் என்று, வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது.
உயிரினங்களின் அழிவு : இயற்கை உலகை எவ்வாறு காப்பாற்றுவது?” என்ற தலைப்பில், திருப்பீட அறிவியல் கழகமும், திருப்பீட சமூக அறிவியல் கழகமும் இணைந்து, வத்திக்கானில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தற்போது உலகிலுள்ள உயிரினங்களில் நான்கில் ஒரு பகுதி, அழியக்கூடிய ஆபத்தில் உள்ளது என்றும், இந்த உயிரினங்களில் ஏறக்குறைய பாதி, இந்த நூற்றாண்டு முடிவதற்குள் அழிந்துவிடக்கூடும் என்றும், அவ்வறிக்கையில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
1950ம் ஆண்டிலிருந்து, உலகின் மக்கள் தொகை மூன்று மடங்காக அதிகரித்து, 740 கோடியை எட்டியிருக்கின்றவேளை, இப்பூமிக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மக்கள் தொகை பெருக்கம் அல்ல, ஆனால், மனிதரின் பேராசையே என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது. 
பல்வேறு உயிரினங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் அச்சுறுத்தலுக்கும், பூமியின் வளங்கள் கட்டுப்பாடற்றுப் பயன்படுத்தப்படுவதற்கும், குறிப்பிட்ட அளவு மக்கள், வளங்களை அளவுக்கதிகமாக உறிஞ்சுவதும், வளங்கள் சமமாகப் பங்கிடப்படாமல் இருப்பதுவுமே காரணங்கள் என்று, அவ்வறிக்கை குறை கூறியுள்ளது.  
சுற்றுச்சூழலையும், பல்வேறு உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கு, உலகின் வளங்கள் பகிரப்பட வேண்டும் எனக் கூறும் அவ்வறிக்கை, இலாபத்தை அடிப்படையாக வைத்து ஆற்றப்படும் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதும், மரங்கள்  எரிபொருள்களாகப் பயன்படுத்தப்படுவதும், சுற்றுச்சூழல் மாசுகேட்டிற்குக் காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 27ம் தேதி முதல், மார்ச் 01ம் தேதி வரை வத்திக்கான் தோட்டத்தில் நடந்த இக்கருத்தரங்கின் அறிக்கை, இவ்வியாழனன்று, செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. அருள்பணி டாம் விடுதலைக்காக, இந்தியாவில் செபம்

மார்ச்,03,2017. ஏமன் நாட்டில், அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் கடத்தப்பட்டு ஓராண்டு நிறைவுறுவதை முன்னிட்டு, அவரின் விடுதலைக்கென, இந்திய சலேசிய சபையினர், இச்சனிக்கிழமையன்று செபக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஏமன் நாட்டின் ஏடன் நகரில், பிறரன்பு மறைப்பணி அருள்சகோதரிகள் சபையினரின் வயது முதிர்ந்தோர் இல்லம் தாக்கப்பட்டபோது, அவ்வில்லத்திலிருந்து, அருள்பணி டாம் உழுன்னலில் அவர்கள் கடத்தப்பட்டார்.
அருள்பணி டாம் அவர்கள், இன்னும் விடுதலை செய்யப்படாமல் இருப்பது, தங்களுக்கு மிகுந்த கவலை தருகின்றது எனத் தெரிவித்துள்ள, பெங்களூரு சலேசிய சபை மாநில அருள்பணியாளர்கள், அவரின் விடுதலைக்கென சிறப்பு செப முயற்சிகளை ஊக்குவித்துள்ளனர்.
சலேசிய சபையின் அருள்பணியாளராகிய டாம் அவர்கள், ஏடனில் பணியாற்றிவந்த திருக்குடும்ப பங்கு, 2015ம் ஆண்டு செப்டம்பரில், சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட பின்னர், அவர், பிறரன்பு மறைப்பணி அருள்சகோதரிகள் சபையினர் நடத்திய வயது முதிர்ந்தோர் மற்றும், மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் தங்கிப் பணியாற்றி வந்தார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி

7. பங்களாதேஷின் புதிய சிறார் திருமணச் சட்டத்திற்கு கண்டனம்

மார்ச்,03,2017. பங்களாதேஷ் நாடாளுமன்றம், இவ்வாரத்தில் அங்கீகரித்துள்ள சிறார் திருமணம் குறித்த புதிய மசோதாவிற்கு, தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது, தலத்திருஅவை.
இப்புதிய மசோதா குறித்து, ஆசியச் செய்தியிடம் பேசிய, பங்களாதேஷ் ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி அவைத் தலைவர் ஆயர் கெர்வாஸ் ரொசாரியோ அவர்கள், சில குறிப்பிட்ட சூழல்களில், சலுகை வழங்கும் இப்புதிய மசோதாவிற்கு இசைவு தெரிவித்திருப்பதன் வழியாக, நாடாளுமன்றம், கடும் தவறிழைத்துள்ளது என்று கூறினார்.
பங்களாதேஷ் அரசு, சிறார் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்தார் ஆயர் ரொசாரியோ.
சட்டத்திற்குப் புறம்பே அல்லது விருப்பத்திற்கு மாறாக, சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது போன்ற சில குறிப்பிட்ட சூழல்களில், அச்சிறுமிகளின் மதிப்பைக் காப்பாற்றும்பொருட்டு, சிறார் திருமணத்திற்கு இம்மசோதா அனுமதியளிக்கின்றது.
ஆசியாவில், சிறார் திருமணம் அதிகமாக இடம்பெறும் நாடு பங்களாதேஷ். இந்நாட்டில், திருமணமான பெண்களில் 52 விழுக்காட்டினர் 18 வயதிற்குக் கீழும், 18 விழுக்காட்டினர் 15 வயதிற்குக் கீழும் உள்ளனர் என, ஆசியச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews  / வத்திக்கான் வானொலி

8. இந்தோனேசியா : ஒவ்வோர் ஆண்டும் 3,40,000 சிறார் திருமணங்கள்

மார்ச்,03,2017. இந்தோனேசியாவில் சிறார் திருமணங்களை ஒழிப்பது குறித்து, அந்நாட்டு அரசு மிகவும் அக்கறை காட்ட வேண்டுமென, சிறார்க்கெதிரான வன்முறை ஒழிப்பு குறித்த ஐ.நா.வின் சிறப்புத் தூதர் Marta Santos Pais அவர்கள், இந்தோனேசிய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இந்தோனேசிய அரசுத்தலைவர் Joko Widodo அவர்களை அண்மையில் சந்தித்த Pais அவர்கள், இந்தோனேசியாவில் 25 விழுக்காட்டுச் சிறுமிகள், 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் என்று தெரிவித்தார்.
இச்சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும்போது, அவர்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்பட்டு, அவர்கள் மரணத்தையும் எதிர்நோக்க நேரிடும் என்றும் எச்சரித்தார், ஐ.நா. அதிகாரி Pais.
இந்தோனேசிய புள்ளிவிபர நிறுவனத்தின்படி, அந்நாட்டில், ஒவ்வோர் ஆண்டும், 15 மற்றும், 18 வயதுக்கு உட்பட்ட ஏறக்குறைய 3 இலட்சத்து 40 ஆயிரம் சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் எனத் தெரிகிறது.
இந்தோனேசியாவின் ஆயர் பேரவையின் குடும்பநல பணிக்குழுவின் செயலராகிய அருள்பணி Hibertus Hartana அவர்களும், அந்நாட்டின் திருமணம் சார்ந்த சட்டத்தை, குறிப்பாக, வயது வரம்பு குறித்து, மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி
 

No comments:

Post a Comment