ஜெனிவா பிரேரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும்: பிரித்தானியா நம்பிக்கை
ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்த வாரம் நிறைவேற்றப்பட உள்ள சர்வதேச விசாரணை நடத்தக் கோரும் பிரேரணைக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் என நம்புவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது, போர் தொடர்பான பிரச்சினையில் பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளுக்கு போதுமானதல்ல என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் கூறியுள்ளார்.
இலங்கை தொடர்பில் டுவிட்டாரில் அவரிடம் இன்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்று பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு காலம் தேவை என்பதை பிரித்தானியா அறியும், ஆனால் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறல் தொடர்பில் உள்நாட்டு ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வழங்கிய வாக்குறுதிகளை 2009 ஆம் ஆண்டும் முதல் நிறைவேற்றவில்லை.
இலங்கை நம்பகமான உள்நாட்டு விசாரணைகளை நடத்தவில்லை என்பதாலேயே பிரித்தானியா ஒரு சர்வதேச விசாரணைக்கான கோரிக்கை விடுத்துள்ளது.
போரின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரித்தானியா மிகத் தெளிவாக உள்ளது. இரண்டு தரப்பிலும் என்ன நடந்தது என்ற உண்மையை அறிய வேண்டும்.
விடுதலைப் புலிகள் அமைப்பை கொடூரமான அமைப்பு என்று பிரித்தானியா கண்டித்துள்ளது. அத்துடன் 2001 ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பு பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்படும் பிரேரணையானது, இலங்கையின் நீடித்த நல்லிணக்கத்திற்கும் அங்குள்ள சகல தரப்பினரின் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும் வழி வகுக்கும் என்றும் பிரித்தானிய அமைச்சர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment