Wednesday, 26 March 2014

செய்திகள் - 26.03.14

செய்திகள் - 26.03.14
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையரும், அமெரிக்க அரசுத் தலைவர்களும் வத்திக்கான் தகவல்கள்

2. உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தின் தலைமைத் திருநாளில் கர்தினால் Filoni

3. கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாள், நமது நம்பிக்கையின் அடித்தளமான திருநாள் - பேராயர் Zimowski

4. ஹையான் சூறாவளியில் பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ள ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில்

5. Colosseum திடலில் நடைபெறும் சிலுவைப் பாதைக்குரிய சிந்தனைகளை எழுதுபவர் பேராயர் Giancarlo Bregantini

6. திருக்குடும்பத்துடன் ஒன்றிணைந்தால், நாம் எந்த சவாலையும் சந்திக்க முடியும் - எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal

7. இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றப் பணிக்குழு கொண்டாடிய பேராயர் ரொமேரோ அவர்களின் மறைவு நாள்

8. இலங்கையில் "இன்னும் முடிவுறாத போர்" - புதிய ஆய்வறிக்கை

9. மார்ச் 29ஆம் தேதி, சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் Earth Hour

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தையரும், அமெரிக்க அரசுத் தலைவர்களும் வத்திக்கான் தகவல்கள்

மார்ச்,26,2014. மார்ச் 27, இவ்வியாழனன்று, அமெரிக்க அரசுத் தலைவர், பாரக் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பதையோட்டி, சில தகவல்களை வத்திக்கான் வெளியிட்டுள்ளது.
அரசுத் தலைவர் ஒபாமா அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்றாலும், அவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர், 2009ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்துள்ளார்.
1919ம் ஆண்டு, சனவரி 9ம் தேதி, அமெரிக்க அரசுத் தலைவர் Woodrow Wilson அவர்கள், அப்போதையத் திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்த முதல் அமெரிக்க அரசுத் தலைவர் என்றும், அரசுத் தலைவர் ஒபாமா உட்பட, இதுவரை 9 அமெரிக்க அரசுத் தலைவர்கள் திருத்தந்தையரைச் சந்தித்துள்ளனர் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.
1959ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்களை, அரசுத் தலைவர் Dwight Eisenhower சந்தித்தார். 1963ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைச் சந்தித்த அரசுத்தலைவர் ஜான் கென்னடி அவர்கள், கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்தத் திருத்தந்தை, முத்திப்பேறுபெற்ற 2ம் ஜான்பால் அவர்களது தலைமைப்பணி காலத்தில், வத்திக்கானுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே 1984ம் ஆண்டு உயர்மட்ட தூதரக உறவுகள் நிறுவப்பட்டன.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களது நீண்ட தலைமைப்பணி காலத்தில், அமெரிக்க அரசுத் தலைவர்கள், Ronald Regan, George Bush Sr., இருவரும் முறையே இருமுறைகளும், George Bush Jr., அவர்கள் மும்முறையும் வத்திக்கானுக்கு வருகை தந்து, திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைச் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு, மார்ச் 19ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணியேற்புத் திருப்பலியில், அமெரிக்க அரசின் சார்பாக, அந்நாட்டு உதவி அரசுத் தலைவரும் கத்தோலிக்கருமான Joe Biden அவர்கள் கலந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகத்தின் தலைமைத் திருநாளில் கர்தினால் Filoni

மார்ச்,26,2014. அன்னை மரியாவும், இயேசு கிறிஸ்துவும் கூறிய 'ஆம்' என்ற அர்ப்பணத்தைக் கொண்டாடும் நாள், கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாள் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரில் அமைந்துள்ள உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகம், மார்ச் 25ம் தேதி கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாளை, தன் தலைமைத் திருநாளாகக் கொண்டாடுகிறது.
இப்பல்கலைக் கழகத்தின் வேந்தரும், மறைபரப்புப் பணி பேராயத்தின் தலைவருமான கர்தினால் Fernando Filoni அவர்கள், இத்திருநாள் திருப்பலியை தலைமையேற்று நடத்தியபோது இவ்வாறு கூறினார்.
1627ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகம், அருள்பணி பயிற்சியில் ஈடுபட்டுள்ள 1,500க்கும் அதிகமான மாணவர்களை, தன் வளாகத்தில் கொண்டிருந்தாலும், உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் மேலும் 10,000த்திற்கும் அதிகமான மாணவர்கள் இப்பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் வழியாகப் பயின்று வருகின்றனர்.
பல்வேறு நாடுகள், கலாச்சாரங்கள் மத்தியில் உருவாகும் உரையாடலுக்கு உர்பானியன் பாப்பிறைப் பல்கலைக் கழகம் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று இப்பல்கலைக் கழகத்தின் அதிபர், அருள்பணி Alberto Trevisiol அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஆதாரம் : Fides

3. கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாள், நமது நம்பிக்கையின் அடித்தளமான திருநாள் - பேராயர் Zimowski

மார்ச்,26,2014. கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாள், நமது நம்பிக்கையின் அடித்தளமான திருநாள், ஏனெனில், இந்த அறிவிப்பே இறைவனை மனித வரலாற்றில் பிரிக்கமுடியாத வண்ணம் பிணைத்தது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
திருப்பீட நலப்பணியாளர் அவையின் தலைவரான பேராயர் Zygmunt Zimowski அவர்கள், இந்த அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் திருப்பலியாற்றியபோது, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
தனித்துவம் மிக்கதொரு வழியில் இறைவனைச் சந்தித்த மரியன்னை, அந்தப் பெருமையிலேயே தங்கிவிடாமல், தன் உறவினரான எலிசபெத்தை நாடிச் சென்றது நமக்கு நல்லதொரு பாடமாக அமைகிறது என்று கூறிய பேராயர் Zimowski அவர்கள், இறைவனை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் சாதனங்களாக வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை எடுத்துரைத்தார்.
வறியோரை, நோயுற்றோரை, துன்புறுவோரைத் தொடுவதன் வழியாக, நாம் இறைவனைத் தொடமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிவருவதை எடுத்துரைத்த பேராயர் Zimowski அவர்கள், துன்புறும் மனுக்குலமே கிறிஸ்துவின் உடல் என்பதை மறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
மரியன்னை, கருவில் இறைவனைத் தாங்கும் இத்திருவிழா, கருவில் உருவாகும் ஒவ்வொரு குழந்தையையும் நாம் கொண்டாடவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது என்று தன் மறையுரையின் இறுதியில் கூறி, இவ்வுயிர்களைக் காப்பதற்கு மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுத்தார், பேராயர் Zygmunt Zimowski.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. ஹையான் சூறாவளியில் பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ள ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில்

மார்ச்,26,2014. ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலாளர்களுக்கு உதவுவதும், அவர்கள் இயற்கை சார்ந்த வழிகளில் தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு உதவுவதும் திருப்பீடத்தின் நோக்கம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி, பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியை பெரும் வலிமையோடு தாக்கிய ஹையான் சூறாவளியில் பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ள, புலம்பெர்யர்ந்தோர் மற்றும் பயணிகள் திருப்பீட அவையின் செயலர், ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில் அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.
ஆயர் களத்திப்பரம்பில் அவர்களின் பயணத்தில், மணிலா பேராயர் கர்தினால் அந்தோனியோ தாக்லே அவர்களையும், மணிலா திருப்பீடத் தூதர் பேராயர் ஜூசப்பே பின்டோ மற்றும், மணிலா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் சாக்ரடீஸ் வியேகாஸ் ஆகியோரையும் சந்திக்கிறார்.
திருப்பீடத்தின் நிதி உதவியுடன் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகளையும் ஆயர் களத்திப்பரம்பில் அவர்கள் பார்வையிடுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. Colosseum திடலில் நடைபெறும் சிலுவைப் பாதைக்குரிய சிந்தனைகளை எழுதுபவர் பேராயர் Giancarlo Bregantini

மார்ச்,26,2014. ஏப்ரல் 18, புனித வெள்ளியன்று மாலை, உரோம் நகர், Colosseum திடலில் திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் சிலுவைப் பாதைக்குரிய சிந்தனைகளை எழுத, இத்தாலியின் Campobasso-Boiano உயர்மறைமாவட்டத்தின் பேராயர் Giancarlo Maria Bregantini அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
"இன்றைய உலகில் துன்புறும் மனிதரின் முகத்தில் இயேசுவின் முகச் சாயல்" என்ற தலைப்புடன் தான் எழுதவிருக்கும் சிலுவைப் பாதை பக்தி முயற்சியில் திருஅவையின் பாரம்பரிய பழக்கமான 14 நிலைகள் இருக்கும் என்று பேராயர் Bregantini அவர்கள் வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டார்.
துன்பம் என்பதை ஒரு கருத்தாக மட்டும் பார்க்காமல், அத்துன்பத்திற்குப் பின்புலத்தில் உள்ள மனித முகங்களை எண்ணிப்பார்க்கவும், அந்த முகங்களில் இயேசுவின் முகத்தைக் காணவும் சிலுவைப் பாதையின் முக்கிய கருத்தாக இருக்கும் என்று பேராயர் Bregantini அவர்கள் எடுத்துரைத்தார்
இத்தாலிய ஆயர் பேரவையின் தொழிலாளர் நலன், சமுதாய நீதி பணிக்குழுவின் தலைவராக பணியாற்றும் 60 வயது நிறைந்த பேராயர் Bregantini அவர்கள், இளவயதில் தொழிலாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. திருக்குடும்பத்துடன் ஒன்றிணைந்தால், நாம் எந்த சவாலையும் சந்திக்க முடியும் - எருசலேம் முதுபெரும் தந்தை Fouad Twal

மார்ச்,26,2014. கிறிஸ்தவக் குடும்பங்கள் இன்று சந்திக்கும் சவால்கள் அதிகம் என்றாலும், நாசரேத்தில் வாழ்ந்த திருக்குடும்பத்துடன் ஒன்றிணைந்தால், நாம் எந்த சவாலையும் சந்திக்க முடியும் என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.
மார்ச் 25ம் தேதி கொண்டாடப்பட்ட கிறிஸ்து பிறப்பு அறிவிப்புத் திருநாளன்று, புனித பூமியில் உள்ள நாசரேத்து பசிலிக்காவில் திருப்பலியாற்றிய முதுபெரும் தந்தை Twal அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
புனித பூமியில் மட்டுமல்லாது, சுற்றியிருக்கும் சிரியா, ஈராக், எகிப்து ஆகிய நாடுகளிலும், நைஜீரியா, மத்திய ஆப்பரிக்க நாடுகளிலும் தங்கள் மத நம்பிக்கைக்காகத் துன்புறும் உடன்பிறந்தோரை இன்று நினைவில் கொள்வோம் என்று முதுபெரும் தந்தை Twal அவர்கள் விண்ணப்பித்தார்.
அமைதியின் திருத்தூதர், குடும்பங்களின் திருத்தூதர், வறியோரின் சார்பில் வழக்காடுபவர் என்று பலவாறாகப் புகழடைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமிக்கு வருவது நமக்கெல்லாம் அருள் மிகுந்த ஒரு தருணம் என்றும் முதுபெரும் தந்தை Twal அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றப் பணிக்குழு கொண்டாடிய பேராயர் ரொமேரோ அவர்களின் மறைவு நாள்

மார்ச்,26,2014. அநீதியின் அராஜகத்திற்குத் தலைபணியாமல், வன்முறையற்ற அகிம்சை வழியில் நீதியை நிலைநாட்டப் போராடிய பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி என்று டில்லி உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் Vincent Concessao அவர்கள் கூறினார்.
34 ஆண்டுகளுக்கு முன், மார்ச் 24ம் தேதியன்று, எல் சால்வதோர் நாட்டின், சான் சால்வதோர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் திருப்பலி நேரத்தில் கொல்லப்பட்டதன் ஆண்டு நினைவை டில்லி உயர் மறைமாவட்டம் இத்திங்கள் மாலை கொண்டாடியபோது, முன்னாள் பேராயர் Concessao அவர்கள் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி, மனித முன்னேற்றப் பணிக்குழு, புது டில்லியில் உள்ள எல் சால்வதோர் தூதரகத்துடன் இணைந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக, பேராயர் ரொமேரோ அவர்களின் மறைவு நாளைக் கொண்டாடி வருகிறது.
34 ஆண்டுகளுக்கு முன் பேராயர் ரொமேரோ அவர்கள் துப்பாக்கி குண்டால் கொலை செய்யப்பட அதே நேரத்தில், முன்னாள் பேராயர் Concessao அவர்கள் இத்திங்கள் மாலை தன் மறையுரையை வழங்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று இந்திய ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
பேராயர் ரொமேரோ அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்தும் பணிகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆண்டு மேமாதம் மீண்டும் துவக்கிவைத்தார்.

ஆதாரம் : CBCI

8. இலங்கையில் "இன்னும் முடிவுறாத போர்" - புதிய ஆய்வறிக்கை

மார்ச்,26,2014. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சென்றபின்னரும், இன்னும் அந்நாட்டில் இளைஞர்களும், இளம்பெண்களும் தொடர்ந்து வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர் என்று புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
தென் ஆப்ரிக்க மனித உரிமைகள் அறக்கட்டளை என்ற நிறுவனத்தின் இயக்குனரான Yasmin Sooka என்பவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் அறிக்கை அண்மையில் வெளியானது.
2009ம் ஆண்டில் இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் காட்ட நேரத்தில் இராணுவம் மேற்கொண்ட வன்முறைகளை ஆய்வு செய்யவேண்டும் என்பது குறித்த வாக்கெடுப்பு ஐ.நா.அவையில் இந்த வாரம் நடைபெறவுள்ள இவ்வேளையில், அந்நாட்டில் தொடர்ந்து நடைபெறும் இராணுவ அடக்குமுறைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பல இளையோர் இன்றும் எவ்விதக் காரணமும் இன்றி இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதும், சித்திரவதைகளுக்கு உள்ளாவதும், குறிப்பாக, இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவதும் தொடர்கிறது என்று இவ்வறிக்கை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறது.
"இன்னும் முடிவுறாத போர்" (An Unfinished War) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஆண்டு 21 பேர் வன்முறைகளுக்கு உள்ளானதும், கடந்த மாதம் வரை இராணுவம் மேற்கொள்ளும் பல்வேறு சித்திரவதை முயற்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் மறைமுகமாக நடைபெறும் பல்வேறு வன்முறைகளின் ஒரு மிகச் சிறிய பகுதியே தங்கள் ஆய்வு என்பதையும் இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஆதாரம் : The Guardian

9. மார்ச் 29ஆம் தேதி, சனிக்கிழமை கடைபிடிக்கப்படும் Earth Hour

மார்ச்,26,2014. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத்தை அணைத்து வைக்கும் எர்த் அவர் (Earth Hour) பிரச்சாரம், இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.
இந்தப் பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வீடுகள், நிறுவனங்கள், வணிக வளாகங்களில் தேவையற்ற விளக்குகளை, மின்கருவிகளை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை அணைத்து வைக்கவேண்டும். உலகில் நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சாரங்களிலேயே மிகப் பெரியதாக இது கருதப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் கடைசி சனிக்கிழமை இந்தப் பிரசாரம் நடைபெறுகிறது. இரவில் நடத்தினால்தான் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பது வெளிப்படையாகத் தெரியும் என்பதால்தான், இந்தப் பிரச்சாரம் இரவில் நடத்தப்படுகிறது. மரபுசாரா எரிசக்தி மூலம் மின் கருவிகளை இயக்க வேண்டும் என்பது, இந்த ஆண்டு பிரச்சாரத்தின் நோக்கம்.
WWF (World Wide Fund for Nature) என்று பொதுவாக அறியப்படும் உலக இயற்கை நிதியம், இந்தப் பிரச்சாரத்தை நடத்துகிறது. 2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், உலகிலுள்ள 7000க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறுகிறது.
ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்து வைக்கும் பிரசாரமாகத் தொடங்கிய இது, இந்த முறை மாற்று எரிசக்திக்கு மாறுங்கள்என்ற பிரச்சாரமாக வளர்ந்துள்ளது.
சூரியசக்தி, காற்றாலை, தாவர-உயிர்க்கழிவு எரிசக்தி, நீர்மின் சக்தி உள்ளிட்டவை புதுப்பிக்கத்தக்க அல்லது மாற்று எரிசக்திகள் எனப்படுகின்றன. இவை உலகம் உள்ளவரை உற்பத்தி செய்யக்கூடிய எரிசக்திகள். இவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோல், மின்சாரப் பயன்பாட்டுக்கான செலவும் குறையும்.
விளக்கை அணைக்கும் இந்த எர்த் அவர் பிரச்சாரம் 2009ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் ஆண்டு 58 நகரங்களில், 50 லட்சம் பேர் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். 2012இல் 150 நகரங்களுக்கு இந்தப் பிரச்சாரம் விரிவடைந்தது.
2011இல் குடியரசுத் தலைவர் மாளிகையிலும், நாடு முழுவதும் உள்ள 30 பாரம்பரியச் சின்னங்களிலும் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டன. 2010இல் 120 பொது, தனியார் துறைகள் பங்கேற்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் பங்கேற்று வருகின்றனர்.

ஆதாரம் : தி இந்து

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...