சுவாமி விவேகானந்தர் மது அருந்துபவராம்:புதிய சர்ச்சையைக் கிளப்பினார் சசிதாரூர்
விவேகானந்தருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்று மத்திய இணை அமைச்சர் சசிதரூர் பேசியது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருப்பவர் சசிதரூர்.
இவர் அடிக்கடி ஏதாவது வில்லங்கமாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தேசிய கீதத்தை பாடும்போது அனைவரும் அமெரிக்கர்களை போல் நெஞ்சில் கை வைத்து பாட வேண்டும் என சசிதரூர் கூறினார். இதுதொடர்பாக சசிதரூர் மீது கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டது.
இதேபோல், மேலும் பல சர்ச்சைகளில் இவர் சிக்கியிருக்கிறார்.ஏற்கனவே, ஐபிஎல் விவகாரத்தில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்த சசிதரூருக்கு, கடந்த ஆண்டுதான் மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்தது.இந்நிலையில், தற்போது சசிதரூர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு விழா நடந்தது. துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பங்கேற்று சிலையை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் சசிதரூர் பேசும்போது, சுவாமி விவேகானந்தருக்கு மீன், மாமிசம் உண்ணும் பழக்கம் இருந்ததுடன் மது அருந்தும் பழக்கமும் உண்டு என்றார். சசிதரூரின் இந்த பேச்சு க்கு பாஜ உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான ஓ.ராஜகோபால் கூறுகையில், கோடிக்கணக்கான இந்தியர்கள் சுவாமி விவேகானந்தரை வணங்குகின்றனர். அவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு என்று சசிதரூர் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் நேசிக்கும் சசிதரூருக்கு இந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்து எதுவும் தெரியாது. விவேகானந்தர் பெங்காலி என்பதால், மீன் சாப்பிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மது அருந்தினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சசிதரூர் தனது கருத்தை உடனடியாக வாபஸ் பெறாவிட்டால் அவரை எதிர்த்து பாஜ போராட்டம் நடத்தும் என்றார்.
No comments:
Post a Comment