இலங்கை இனப்படுகொலை தொடர்பில் மீண்டும் ஐநாவின் கவனத்திற்கு
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்புச் சார்பில் அன்புமணி தலைமையிலான குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஐக்கிய நாடுகள் அமைப்பால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத் தாயகம் அமைப்பும் 2009 ஆம் ஆண்டு முதல் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்று தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த வகையில் இலங்கைக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளுக்கு பசுமைத் தாயகமும் காரணமாக இருந்திருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆணையத்தில் கடந்த 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றின.
அதன் மீது இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, ஜெனிவாவில் கடந்த 9 ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 24 ஆவது கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
அதன்படி, இலங்கை சென்று விசாரணை நடத்திய மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அவரது அறிக்கையை வரும் 25 ஆம் திகதி தாக்கல் செய்யவிருக்கிறார்.
இலங்கை இனப்படுகொலைக்கு நீதி வேண்டி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் இது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. அந்த வகையில் வரலாற்று சிறப்பு மிக்க இந்தக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன்முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் ஒரு குழு கலந்து கொள்கிறது.
அக்குழுவில் பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர. அருள், புதுவை சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ஆர்.கே. அனந்தராமன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் நாளை சென்னையிலிருந்து ஜெனீவா புறப்பட்டுச் செல்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையிலான குழுவினர் பின்னர் மனித உரிமை ஆணையத்தின் நிர்வாகிகளை சந்தித்து, இலங்கை இனப்படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளனர்.
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கரை ஆண்டுகள் முடிவடைந்து விட்ட பிறகும் இனப்படு கொலைக்கு காரணமானோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; அதற்கான அறிகுறியும் தென்படவில்லை. இலங்கையிடம் இதற்குப் பிறகும் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதால்,
அந்த நாட்டின் மீதான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் ஆணையத்தின் 25 ஆவது கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஐ.நா, பிரதிநிதிகளிடம் அன்புமணி தலைமையிலான குழுவினர் வலியுறுத்துவார்கள்.
அதுமட்டுமின்றி, உலகம் முழுவதிலுமிருந்து ஜெனிவாவில் கூடியுள்ள மனித உரிமை செயற்பாட் டாளர்கள் கூட்டத்திலும் அன்புமணி இது பற்றி வலியுறுத்துவார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களையும் அன்புமணி சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment