Tuesday, 24 September 2013

முகமது நபியின் தாயின் பெயர் தெரியாதவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்:நைரோபி தாக்குதல் குறித்து வெளியாகும் பரபரப்புத் தகவல்கள்

முகமது நபியின் தாயின் பெயர் தெரியாதவரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்:நைரோபி தாக்குதல் குறித்து வெளியாகும் பரபரப்புத் தகவல்கள்

Source: Tamil CNN
முகம்மது நபியின் தாயின் பெயர் தெரியாததால் இந்தியரை கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் மாலில் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலுக்குள் கடந்த சனிக்கிழமை புகுந்த அல் ஷபாப் தீவிரவாதிகள் கண்மூடித் தனமாக சுட்டதில் 2 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த கிறிஸ்தவரான ஜோஷ்வா ஹகீம் கூறுகையில்,ஒரு இந்தியரை தீவிரவாதிகள் அழைத்தனர். அவரிடம் முகம்மது நபியின் தாயாரின் பெயர் என்ன என்று கேட்டனர்.
அவருக்கு பதில் தெரியாததால் அவரை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் ஸ்வஹீலி மொழியில் பேசினர். அவர்கள் முஸ்லிம்களை அடையாளம் கண்டு வெளியேறுமாறு கூறினர். என்னை அழைத்த போது என் ஐ.டி. கார்டில் இருந்த ஜோஷ்வா என்ற முதல் பெயரை விரலால் மறைத்துக் கொண்டு ஹகீமை மட்டும் காட்டினேன். அதனால் உயிர் பிழைத்தேன் என்றார்.ஏதோ கோழிக்கு இறைபோடுவது போன்று தீவிரவாதிகள் மக்களை நோக்கி சுட்டனர் என்று உயிர் பிழைத்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தெரிவித்தார்.
நைரோபியில் வாழும் மகனையும், மருமகளையும் பார்க்க சென்ற இடத்தில் ஷாப்பிங் மால் தாக்குதலில் இருந்து புனேவில் உள்ள கர்நாடக் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். புனேவில் உள்ள கர்நாடக் உயர் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை விம்லா ராமமூர்த்தி ராவ்(74). அவரது மகன் பரத் நைரோபியில் வேலை பார்க்கிறார். அவரை பார்க்க விம்லா நைரோபி சென்றார். அங்குள்ள வெஸ்ட்கேட் மாலில் வாங்கிய பொருட்களில் சிலவற்றை மாற்ற அவரும், அவரது மருமகள் ஸ்ரீநிதியும் மாலுக்கு கடந்த சனிக்கிழமை மதியம் சென்றனர். அவர்கள் மாலுக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் அங்கு தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து விம்லா கூறுகையில்,நானும், எனது மருமகள் ஸ்ரீநிதியும் மாலில் உள்ள சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து கஸ்டமர் கேர் சென்டரில் நின்று கொண்டிருந்தோம். கடையின் வாசலுக்கு அருகே நின்று கொண்டிருந்தோம். ஸ்ரீநிதி பொருளை திருப்பிக் கொடுப்பதற்கான விண்ணப்பத்தை நிரப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீர் என்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. ஆனால் அந்த சத்தம் தீபாவளி பட்டாசு வெடித்தது போன்று இருந்தது.சென்டரில் இருந்த ஒருவர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும் என்றார்.
ஆனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடத் துவங்கினார்கள். நாங்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை சேமித்து வைக்கும் இடத்திற்கு ஓடினோம். அப்பொழுது நாங்கள் ஓடும் திசை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எங்களுடன் ஒரு வயதான தம்பதி, அவர்களின் 2 மகள்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளும் ஓடி வந்தனர்.
கடவுளே காப்பாத்து என்று அனைவரும் வேண்டிக் கொண்டோம். அப்பொழுது குண்டடிபட்டு தசை வெளியே தொங்கியபடி ஒரு ஊழியர் வந்தார். உடனே ஒரு டிராலியில் அவரை வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.வேறு ஒரு டிராலியில் சில பொருட்களை அள்ளிப்போட்டு எங்களுக்கு மறைந்து கொள்ள உதவி செய்தார் ஸ்ரீநிதி. அதற்குள் ஐ.நா மற்றும் போலீஸ் குழுவினர் அங்கு வந்துவிட்டனர். இதற்கிடையே ஸ்ரீநிதி சில பிரிட்ஜுகளை எங்கள் பக்கம் இழுத்து நாங்கள் மறைந்து கொள்ள வழி செய்தார். அனைத்து பக்கங்களில் இருந்தும் துப்பாக்கிச்சூடு சத்தம் வந்து கொண்டிருந்தது. சூப்பர் மார்க்கெட் மேனேஜர் வந்து வெளியே செல்ல ஒரு வழி இருக்கிறது என்று கூறினார். அனைவரும் அந்த வழியை நோக்கி ஓடினோம். பயத்தில் என்னால் ஓட முடியவில்லை. எப்படியோ தட்டித் தடுமாறி ஓடினேன்.
அந்த சமயம் ஒருவர் வந்து வெளியே செல்ல எனக்கு உதவினார்.வெளியே வந்ததும் போலீசார் எங்களை ஒரு காரில் ஏற்றி அருகில் வசிக்கும் என் மகனின் நண்பரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என் மகன் வந்து எங்களை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். பலர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.டிவியில் இந்த செய்தியை பார்க்கையில் நாங்கள் தப்பித்து வந்துள்ளோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்றார்.

No comments:

Post a Comment