குர்சுரா நீர்மூழ்கிக் கப்பல்
இந்தியாவின் நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். குர்சுரா (INS KURSURA), இந்திய கப்பற்படையில் 1969ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டுவரை சிறப்பாகப் பணியாற்றியது. இப்போது குர்சுரா, ஆசியாவின்
முதல் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகமாக ஆந்திர மாநிலம்
விசாகப்பட்டினக் கடற்கரையில் கம்பீரமாக நங்கூரமிட்டுள்ளது. இதில்
அமைக்கப்பட்டிருக்கும் சோனார் சிக்னல்தான் இந்தக் கப்பலின் கண்களாகச்
செயல்பட்டன. எதிரிக் கப்பல்களைக் கண்டுபிடிக்கவும், கடலுக்கு அடியில் கப்பலைச் செலுத்தவும் இது உதவியாக இருந்தது. எதிரிக் கப்பல்களைத் தாக்கி அழிக்க இதனுள் 22 வெடிகண்ணிகள் (Torpedoes) இருந்தன. வெடிகண்ணிகளைச் செலுத்த உயர்அழுத்தக் காற்று பயன்படுத்தப்பட்டது. இதிலிருந்த பேலஸ்ட் டேங்க் (Ballast Tank) தண்ணீரில்
மூழ்குவதற்கும் மிதப்பதற்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கப்பல்
தண்ணீரில் மூழ்கியிருக்கும்போது இயந்திரத்தை இயக்குவதற்கு காற்று
இல்லாதுபோனால், பேட்டரியில் இயக்குவதற்கு 488 பெரிய வகை பேட்டரிகள் இருந்தன. பேட்டரிகள் தன் சக்தியை இழந்தால், உடனே கப்பல் தண்ணீரின் மேல் மட்டத்துக்குச் சற்று கீழே வந்து, தன் சுவாசிக்கும் மேல்பகுதியை மட்டும் தண்ணீரின்மேல் நீட்டி, காற்றை இழுத்துக்கொள்ளும். பின் டீசல் இன்ஜினை இயக்கி, பேட்டரிகளை மறுபயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும். 72 கப்பற்படை வீரர்கள் இதில் பணியாற்றினர். இவர்கள் தங்குவதற்கு, உணவு அறை, சமையல் அறை என அனைத்தும் இதில் இருந்தது. இந்தக் கப்பல் மிதக்கும்போது 1,945 டன்னும் கடலின் அடியில் இருக்கும்போது 2,469
டன்னும் எடை கொண்டது. இக்கப்பல் 91.3 மீட்டர் நீளமும் 11.92 மீட்டர்
உயரமும் உடையது. இன்று விசாகப்பட்டினத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக
மாறிவிட்டது குர்சுரா.
ஆதாரம் : விகடன்
No comments:
Post a Comment