Tuesday, 24 September 2013

செய்திகள் - 23.09.13

செய்திகள் - 23.09.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. கலியாரியில் திருத்தந்தை: உடன்வாழ் இளையோருக்கும் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக இருங்கள்

2. பாகிஸ்தான் கிறிஸ்தவ கோவில் மீதான தாக்குதலுக்கு திருத்தந்தை கண்டனம்

3. இறை வழிபாட்டில் ஈடுப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது - இந்திய ஆயர் பேரவை

4. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அந்நாட்டு மதத்தலைவர்கள் கண்டனம்

5. திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலகத்தின் டுவிட்டர் செய்திகள்

6. கென்யாவில் இஸ்லாமிய‌ர‌ல்லாதோர் அடையாள‌ம் காண‌ப்ப‌ட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்

7. கர்தினால் Tagle : நெருக்கடிகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியும்.

8. புதிய செனட் அவைக்கு Burkina Faso ஆயர்கள் எதிர்ப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. கலியாரியில் திருத்தந்தை: உடன்வாழ் இளையோருக்கும் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக இருங்கள்

செப்.23,2013. இளையோர், இயேசுவோடு இணைந்து பயணம் மேற்கொள்வதுடன், தங்கள் உடன் வாழ் இளையோருக்கும் நற்செய்தியை எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் சர்தேனியா தீவிலுள்ள கலியாரி நகருக்கு இஞ்ஞாயிறன்று ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அங்கு Carlo Felice வளாகத்தில் இளைஞர்களைச் சந்தித்தபோதுநம்பிக்கையின் மனிதர்களாகச் செயல்படும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வாழ்வில் தோல்வி, சோர்வு என்பவையெல்லாம், நமக்கு வைக்கப்படும் சோதனை மட்டுமல்ல, அவை முக்கியமானவையும் கூட எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவ்ர்கள், இளையோர் ஒவ்வோரும் தங்கள் வாழ்வு மற்றும் மகிழ்வு மூலம் இயேசுவின் நற்செய்தியை எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.
கலியாரி திருத்தலத்தில் சிறைக்கைதிகள் மற்றும் வறியோர் அடங்கிய குழுவைச் சந்தித்த திருத்தந்தை, நம்பிக்கையின் அவசியத்தை மையமாக வைத்து தன் உரையை வழங்கினார்.
திருஅவையின் அங்கமாக இருக்கும் நாம் ஒவ்வொருவரும் பிறரன்பின்வழி நம்பிக்கை எனும் விதைகளை விதைக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் அவர்.
ஒவ்வொருவரும் திருஅவையை தங்கள் சொந்த வீடாக உணரவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ், எழைகளுக்கு உதவிகளை வழங்கும்போது அங்கு சுய இலாபம் என்பது நோக்கமாக இருக்கக்கூடாது, மாறாக, தாழ்ச்சி என்ப‌து முத‌லிட‌ம் வ‌கிக்க‌வேண்டும் என்றார்.
தேவையற்றவைகளாக முதியோரையும் இளையோரையும் தூக்கியெறியும் கலாச்சாரத்தைக் கைவிடுவிவோம் என்ற அழைப்பையும் இந்த மேய்ப்புப்பணி திருப்பயணத்தின்போது முன்வைத்த திருத்தந்தை, பணமே எல்லாம் என கருதி அதற்குக் கடவுளுக்குரிய இடத்தைக் கொடுப்பதே இந்த தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு காரணமாக இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. பாகிஸ்தான் கிறிஸ்தவ கோவில் மீதான தாக்குதலுக்கு திருத்தந்தை கண்டனம்

செப்.23,2013. பாகிஸ்தான் நாட்டில் தற்கொலை குண்டு தாக்குதல் மூலம் எழுபது கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளது, சரியான பாதையல்ல, இதனால் எவ்வித பலனும் கிட்டப்போவதில்லை என தன் கண்டனத்தை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இஞ்ஞாயிறன்று இத்தாலியின் கலியாரி நகருக்கு மேய்ப்புப்பணிச் சார்ந்த திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அதன் இறுதி நிகழ்வாக இளையோரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
அமைதி நிறைந்த உலகைக் கட்டியெழுப்புவதற்கான பாதை அழிவுப்பாதையல்ல என்ற திருத்தந்தை, மேலும் சிறந்த உலகை கட்டியெழுப்ப விரும்புவோர், அமைதியின் பாதையைத் தேர்ந்துகொள்ளட்டும் என எடுத்துரைத்தார்.
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோருக்காக அனைவரும் செபிப்போம் என அழைப்பு விடுத்து, இளையோரோடு சேர்ந்து அங்கேயே செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
வட பாகிஸ்தானின் பெஷாவர் அனைத்துப்புனிதர்கள் கிறிஸ்தவக் கோவிலின் மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெஷாவர் நகரில் நடந்த இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மை ஆண்டுகளில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
ஞாயிறு வழிபாடு முடிந்து கோவிலில் இருந்து, மக்கள் திரும்பிச் செல்லுகையில் இருவர், தற்கொலை தாக்குதலை நடத்தி, இவ்வுயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இறை வழிபாட்டில் ஈடுப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது - இந்திய ஆயர் பேரவை

செப்.23,2013. ஞாயிறு வழிபாட்டில் ஈடுப்பட்டிருந்த கிறிஸ்தவர்களை எக்காரணமும் இன்றி தாக்கிய வன்முறையாளர்களின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று இந்திய ஆயர் பேரவை கூறியுள்ளது.
பாகிஸ்தானில், பெஷாவர் நகரில் அமைந்துள்ள அனைத்துப் புனிதர்கள் ஆலயத்தில், செப்டம்பர் 22, இஞ்ஞாயிறன்று வழிபாட்டிற்கெனக் கூடியிருந்த கிறிஸ்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலைக் குறித்து இந்திய ஆயர் பேரவை தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பேரவையின் சார்பாக, தலைமைச் செயலர், பேராயர் ஆல்பர்ட் டிசூசா அவர்கள் வெளியிட்டுள்ள இச்செய்தியில், தற்காப்பு ஏதுமின்றி, இறைவழிபாடு என்ற உயர்ந்த முயற்சியை மேற்கொண்டிருந்த மக்கள் மீது நடத்தப்பட்டத் தாக்குதல் முற்றிலும் கண்டனத்திற்குரியதென்று கூறப்பட்டுள்ளது.
எப்பாவமும் அறியாத மக்களை இலக்காக்குவது இஸ்லாமியப் படிப்பினைக்கு முரணானது என்றும், தீவிரவாதிகளின் கொடூரமான மிருகத் தன்மையை இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது என்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் அவர்கள் வெளியிட்டுள்ள கருத்தை, இந்திய ஆயர் பேரவை முற்றிலும் ஆதரிக்கிறது என்றும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொய்யான, திரிக்கப்பட்ட காரணங்களைக் காட்டி, உலகின் பல பகுதிகளில் அப்பாவி கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்காக வன்முறைகளுக்கு இலக்காகி வருவதையும் இந்திய ஆயர் பேரவையின் அறிக்கை வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஆதாரம் : CBCI

4. பாகிஸ்தானில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு அந்நாட்டு மதத்தலைவர்கள் கண்டனம்

செப்.23,2013. வட‌ பாகிஸ்தானில் இட‌ம்பெற்ற‌ இத்தாக்குத‌ல் குறித்து அந்நாட்டின் க‌த்தோலிக்க‌ ஆய‌ர் பேர‌வையும், ப‌ல்வேறு கிறிஸ்த‌வ‌ ச‌பைக‌ளும், இஸ்லாமிய‌ த‌லைவ‌ர்க‌ளும் த‌ங்க‌ள் க‌ண்ட‌ன‌த்தை வெளியிட்டுள்ளன‌ர்.
இத்த‌கைய‌ வெட்க‌த்துக்குரிய‌ கோழைத்த‌ன‌மான‌ தாக்குத‌ல் குறித்து க‌ண்ட‌ன‌த்தை வெளியிட்ட‌ பாகிஸ்தான் க‌த்தோலிக்க‌ ஆய‌ர் பேர‌வைத்த‌லைவ‌ர் பேராயர் Joseph Coutts அவர்கள், இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக, இத்திங்கள் முதல் புதன் முடிய மூன்று நாட்களும் அந்நாட்டின் அனைத்து கிறிஸ்தவப்பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவித்தார்.  
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக இஸ்லாமாபாத் ராவல்பிண்டி ஆயர்  Rufin Anthonyயும், Ulema  இஸ்லாமிய அவைத் தலைவர் Maulana Tahir Ashrafiயும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அமெரிக்கக் குண்டுவீச்சூக்குப் பதிலடியாக இத்தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தானின் தாலிபான் பிரிவு ஒன்று பொறுப்பேற்றுள்ளது.

ஆதாரம் : AsiaNews

5. திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலகத்தின் டுவிட்டர் செய்திகள்

செப்.23,2013. 'இயேசுவுக்குச் சான்றுப‌க‌ர்வ‌தைத் த‌விர‌ திருஅவைக்கு வேறு அர்த்த‌மோ, நோக்க‌மோ இல்லை. நாம் இதை ம‌ற‌க்காதிருப்போம்' என இத்திங்கள்கிழமையன்று ஒன்பது மொழிகளில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
அதேநாளில், 'ந‌வீன‌ கால‌ அடிமைத்த‌னத்தால் பாதிக்கப்பட்டோர், நுக‌ர்வுக்கலாச்சார‌ச் ச‌ந்தையில் ஒரு பொருளாக‌வே மாறுகின்ற‌ன‌ர்'  என,  தன் டுவிட்டர் பக்கத்தில் திருப்பீடச் செயலகம் எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. கென்யாவில் இஸ்லாமிய‌ர‌ல்லாதோர் அடையாள‌ம் காண‌ப்ப‌ட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்

செப்.23,2013. கென்யாவின் தலைநகர் நய்ரோபியில் உள்ள ஒரு வர்த்தக வளாகத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்லாமியரல்லாதோர் மட்டும் தனியாகப் பிரிக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அரபு மொழி பேசாதவர்களும், இஸ்லாமியச் செபத்தை உச்சரிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் காணப்பட்டு, 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் காரணமாக 175 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த வளாகத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் கென்யாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோசப் ஒலே லென்கூ கூறியுள்ளார்.
இத்தாக்குதலில் இந்தியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம் : XtianGlobe 

7. கர்தினால் Tagle : நெருக்கடிகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணமுடியும்.

செப்.23,2013. பிலிப்பீன்ஸ் நாட்டின் தென் பகுதியில் Zamboangaவில் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண முடியும் என்பதில் தலத்திருஅவை முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்நாட்டு கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் கூறினார்.
அமைதியைக் கட்டியெழுப்புவதில் முயன்றுவரும் Mindanao ஆயர்களுடன் பிலிப்பீன்ஸ் நாட்டின் அனைத்து ஆயர்களும் இணைவதாக உரைத்த மணிலா கர்தினால் Tagle அவர்கள், தலத்திருஅவை எப்போதும் அமைதிக்காக உழைத்து வருகிறது, அந்த அமைதியையே பிலிப்பீன்ஸ் மக்களும் விரும்புகின்றனர் என்றார். 
Mindanao பகுதியில் ஆயதம் ஏந்திப் போராடும் இரு குழுக்களுள் ஒன்று அமைதி உடன்பாட்டிற்கு இசைந்துள்ளதாகவும், ஏனையது அரசின் பரிந்துரைகளை ஏற்க மறுத்துவருகிறது என்பதையும் தெரிவித்த கர்தினால் Tagle அவர்கள்,  மக்களின் உடைமைகளைச் சேதப்படுத்துவதையும், அவர்களுக்குத் துன்பங்களை வரவழைப்பதையும் ஏற்கமுடியாது எனவும் கூறினார்.

ஆதாரம் :  Fides

8. புதிய செனட் அவைக்கு Burkina Faso ஆயர்கள் எதிர்ப்பு

செப்.23,2013. புதிய செனட் அவை ஒன்றை உருவாக்கி, அதில் மதப்பிரதிநிதிகளுக்கும் இடமளிக்கும் Burkina Faso அரசுத்தலைவரின் திட்டத்தை தாங்கள் ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
மதத்தலைவர்கள் தங்கள் பிரதிநிதிகளை செனட் அவையில் நியமிக்கலாம் என்ற அரசுத்தலைவரின் புதியச் சட்டத்திற்கு தாங்கள் செவிமடுக்க விரும்பவில்லை எனவும், சமூக இணக்க வாழ்வுக்கு நன்னெறி அடிப்படையில் வழிகாட்டியாக இருக்க விழையும் தங்கள் நோக்கத்திற்கு அது தடையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர் Burkina Faso ஆயர்கள்.
அரசு நிர்வாகத்தில் பங்குபெறுவது தங்களுக்குரிய பணியல்ல எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தேவையெனில், பொதுநலனை மனதில்கொண்டு அரசுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே நடுநிலையாளராகப் பணியாற்ற தாங்கள் எப்போதும் தயார் எனவும் கூறும் ஆயர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப்பிரதிநிதிகள் அவை குறித்து தங்கள் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர்.

ஆதாரம் : Fides

No comments:

Post a Comment