Tuesday, 24 September 2013

செய்திகள் - 21.09.13

செய்திகள் - 21.09.13
 ------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: இயேசுவின் பார்வை உங்கள் மீதுபட அனுமதியுங்கள்

2. திருத்தந்தை: கிறிஸ்துவை மக்கள் அறிந்துகொள்ள திருஅவையின் சமுக்கத்தொடர்புதுறைகள் உதவுகின்றனவா

3. திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயகத்தின் டுவிட்டர் செய்திகள்

4. Cagliari நகரில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம்

5. தமிழகத்தில் காசநோய் பாதித்தவர்களில் 70 விழுக்காட்டினரே சிகிச்சை பெறுகின்றனர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை: இயேசுவின் பார்வை உங்கள் மீதுபட அனுமதியுங்கள்

செப்.21,2013.  இயேசுவின் பார்வை நம்மீது திரும்புவதற்கு நம்மை அனுமதிப்பதன் மூலம், நம் வாழ்வை நாம் மாற்றமுடியும் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மத்தேயு விழாவான இச்சனிக்கிழமையன்று வத்திக்கானிலுள்ள புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, வரி வசூலிப்பவராக இருந்த புனித மத்தேயுவை இயேசு உற்றுநோக்கத் துவங்கியதுமே அவரின் வாழ்வில் மாற்றம் நிகழத் துவங்கியது என்றார்.
இயேசுவின் பார்வை பட்டதும் தன் மனதில் மாற்றத்தை உணர்ந்த புனித மத்தேயு, உடனே எழுந்து இயேசுவின் பின்னேச் சென்றார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இயேசுவின் பார்வை நம்மைச் சோர்வடைய விடாமல் தூக்கி நிறுத்துகிறது, மற்றும் நமக்கு ஊக்கமளித்து நம்மை வளரச்செய்கின்றது எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரை பின்பற்றுவதற்கான பலத்தையும் அப்பார்வை நமக்கு வழங்குகிறது என மேலும் உரைத்தார்.
இயேசுவின் பார்வை பட்டு வாழ்வில் மாற்றத்தைக் கண்டவர்களின் வரிசையில் தூய பேதுரு குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவை மறுதலித்தபின், அவர் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தேம்பி அழுததையும், இயேசு உயிர்த்தபின் 'நீ என்னை அன்புச்செய்கிறாயா' எனக் கேட்டதும் நிகழ்ந்த மாற்றம் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார்.
தன் தாயை உற்றுநோக்கி அவரை நம் தாயாக தந்தது,  நல்ல கள்வரை உற்று நோக்கி உரையாடியது ஆகியவைகளையும் எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல அந்தப் பார்வையை வழங்க நமக்காகவும் இயேசு காத்திருக்கிறார் என்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை: கிறிஸ்துவை மக்கள் அறிந்துகொள்ள திருஅவையின் சமுக்கத்தொடர்புதுறைகள் உதவுகின்றனவா

செப்.21,2013.  இன்றைய மனித குலத்தின் நம்பிக்கைகளை, சந்தேகங்களை மற்றும் ஆவல்களைப் புரிந்துகொள்ளும் முயற்சியில், பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே திருஅவையின் சமூகத்தொடர்புப் பணிகளின் நோக்கம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். சமூகத்தொடர்புக்கான திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, கிறிஸ்துவை மக்கள் அறிந்துகொள்ள திருஅவையின் சமூகத்தொடர்புத் துறைகள் உதவுகின்றனவா என்பது குறித்து ஆழமாக ஆராயவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நம் இவ்வுலக வாழ்வு மற்றும் பயணத்தில் காணப்படும் வனப்பு, நம் விசுவாசம் மற்றும் இயேசுவுடன் நாம் கொள்ளும் சந்திப்பின்வழி கிட்டும் திருப்தி போன்றவைகளை சமூகத்தொடர்பு சாதனங்கள் வழியும், நம் தனிப்பட்ட தொடர்புகள் வழியும், மீண்டும் கண்டுகொள்வதே நமக்கிருக்கும் சவால் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயகத்தின் டுவிட்டர் செய்திகள்

செப்.21,2013.  'உண்மையான பிறரன்பிற்கு மனவுறுதி தேவைப்படுகின்றது: தேவையிலிருப்போருக்கு உதவுவதில் நம் கரங்கள் அழுக்காகுமே என்ற அச்சத்தை வெற்றிக்கொளவோம்' என இச்சனிக்கிழமையன்று ஒன்பது மொழிகளில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
அதேநாளில், 'உலகப் பாதுகாப்பு என்பது அணுஆயுதங்களைச் சார்ந்து இருக்கக்கூடாது' என பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள், அனைத்துலக அணுசக்தி அமைப்பில் பேசியதை, தன் டுவிட்டர் பக்கத்தில் திருப்பீடச்செயலகமும் எழுதியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. Cagliari நகரில் திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணம்

செப்.21,2013.  சர்தேனியா தீவின் போனாரியா மரியன்னை திருத்தலத்தை தரிசிப்பதற்கான ஆவலை கடந்த மேமாதம் 15ம்தேதி புதன் பொதுமறைபோதகத்தில் வெளியிட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று அத்தீவின் கலியாரியில் தன் 10 மணிநேர திருப்பயணத்தை மேற்கொள்கிறார்.
அர்ஜென்டினாவின் Buenos Aires  பேராயராகப் பணியாற்றியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் பொனாரியா மரியன்னை திருத்தலத்திலிருந்தே Buenos Aires  என்ற பெயர் வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஞாயிறு காலை உள்ளூர் நேரம்  8.15 மணிக்கு சர்தேனியா தீவின் Cagliari-Elmas என்ற விமான நிலையத்தை அடையும் திருத்தந்தை, Carlo Felice என்ற சதுக்கத்தில் தொழில் உலகின் பல்வேறு பிரதிநிதிகளைச் சந்தித்தல், பொனாரியா (Bonaria) அன்னை மரியா திருத்தலத்தில் Cagliari நகரின் முக்கிய அதிகாரிகளையும், நோயுற்றோரையும் சந்தித்தல் ஆகியவைகளுக்குப்பின், அத்திருத்தலத்தில் பொதுமக்களுக்கான திருப்பலியை நிறைவேற்றுவார்.
சர்தேனியாவில் உள்ள ஆயர்களுடன் மதிய உணவு அருந்தியபின், மீண்டும் திருத்தலப் பேராலயத்திற்குச் சென்று, அங்கு, காரித்தாஸ் பணிகளால் பயன்பெறும் வறியோரையும், சிறைக் கைதிகளையும் சந்திப்பார் திருத்தந்தை. அதன்பின்னர், பாப்பிறைக் கல்விக்கூடங்களில் பயிலும் இறையியல் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பயிற்சிப் பொறுப்பாளர்களையும் சந்தித்து உரையாற்றிவிட்டு, மீண்டும் ஒருமுறை Carlo Felice சதுக்கம் சென்று இளையோரைச் சந்தித்து உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 6.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து உரோம் நகருக்குத் திரும்புவார்.
திருத்தந்தை சர்தேனியா தீவில் நிறைவேற்றும் வழிபாடுகளில் கலந்துகொள்ள 3 இலட்சத்து 50 ஆயிரம் விசுவாசிகள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அத்தீவின் பத்திரிகைகள் கருத்துத்தெரிவித்துள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. தமிழகத்தில் காசநோய் பாதித்தவர்களில் 70 விழுக்காட்டினரே சிகிச்சை பெறுகின்றனர்

செப்.21,2013.  காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினரேக் கண்டறியப்பட்டு, சிகிச்சை பெறுவதாகவும், மீதியுள்ளோரின் நிலை தெரியவில்லை எனவும், தமிழக‌ காசநோய் திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் இடம்பெற்ற தென்மண்டல காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரையாற்றிய  திட்ட அலுவலர் லட்சுமி, தமிழகத்தில், பாதிக்கப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினரேக் கண்டறியப்பட்டுள்ளனர், மீதியுள்ளோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனரா இல்லை சிகிச்சை பெறாமல் விடுபட்டுள்ளனரா எனத் தெரியவில்லை என்றுக் கூறினார்.
தமிழகத்தில் மதுரை, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 2400 தனியார் மருத்துவமனைகளுடன், காசநோய் திட்டத்தை தமிழக அரசு இணைந்து செயல்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதே கருத்தரங்கில் பேசிய‌ சென்னை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரெங்கநாதன், இந்தியாவில் இரண்டு கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு, 65 லட்சம் பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், ஒவ்வோர் இரண்டு நிமிடங்களுக்கும், மூன்று பேர் காசநோயால் இறக்கின்றனர் எனவும் புள்ளிவிவரங்களை வழங்கினார்.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment