செய்திகள் - 20.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பணம், ஒரு கடவுள் ஆகும் வலிமை கொண்டதால், அது, முதல் கட்டளைக்கு எதிரான பாவம் - திருத்தந்தை பிரான்சிஸ்
2. ஹங்கேரி மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
3. தூக்கி எறியும் கலாச்சாரத்தில், மனித உயிர்களைப் பேணுவது சவால் நிறைந்த அழைப்பாக கத்தோலிக்க மருத்துவர்களுக்கு உள்ளது - திருத்தந்தை
4. இயேசு சபையினரின் La Civiltà Cattolica இதழுக்கு, திருத்தந்தை வழங்கியுள்ள தனிப்பட்ட நேர்காணல்
5. அமெரிக்காவில் வாழும் கத்தோலிக்கர்களில் 80 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ் மீது பெரும் ஈடுபாடு கொண்டுள்ளனர் – ஆய்வுத் தகவல்
6. அடுத்த வாரம் உரோம் நகரில் கூடவிருக்கும் மறைகல்வி ஆசிரியர்களின் மாநாடு
7. குழந்தைகளைச் சரிவர பராமரிக்கத் தவறும் நாடுகள் எதிர்காலத்தை இழந்துவிடுகின்றன - முத்திபேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால்
8. அகில உலக அமைதி நாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. பணம், ஒரு கடவுள் ஆகும் வலிமை கொண்டதால், அது, முதல் கட்டளைக்கு எதிரான பாவம் - திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.20,2013. கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்யமுடியாது என்று விடுக்கப்படும் அறைகூவல், கம்யுனிச அறைகூவல் அல்ல, அது நற்செய்தியிலிருந்து வரும் அறைகூவல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இவ்வெள்ளியன்று காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றிய திருத்தந்தை, புனித பவுல் அடியார், திமோத்தேயுவுக்கு எழுதிய அறிவுரைகளை தன் மறையுரையின் மையமாக்கினார்.
சமுதாயத்தில் நல்லதொரு இடத்தைத் தருகிறது என்ற கண்ணோட்டத்துடன் திருப்பலியில் கலந்துகொள்ளும் ஒருவர், திருப்பலியையும் ஒரு வர்த்தகக் கண்ணோட்டத்துடன் நோக்குகிறார் என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
செல்வத்தின்மீது பற்றுகொண்டு வாழ்வதை, திருஅவையில் முதல் சில நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் வெகுவாகக் கண்டனம் செய்துள்ளனர் என்று கூறியத் திருத்தந்தை, 'அலகை வெளியேற்றும் கழிவுப்பொருளே பணம்’ என்பன போன்ற கடுமையான எச்சரிக்கைகள் முற்காலத்தில் விடுக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
பணத்திற்கு எதிராக பத்துக்கட்டளைகளில் எதுவும் கூறப்படவில்லை என்ற கேள்வி எழுப்புவோருக்கு, பணம், ஒரு கடவுள் ஆகும் வலிமை கொண்டதால், அது, முதல் கட்டளைக்கு எதிரான பாவம் என்பதையும் திருத்தந்தை விளக்கிக் கூறினார்.
மேலும், “கிறிஸ்து எப்போதும் பிரமாணிக்கம் உள்ளவர், எனவே அவரைப் போல பிரமாணிக்கம் கொண்டிருக்க நாம் செபிப்போம்” என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஹங்கேரி மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
செப்.20,2013. செப்டம்பர் 20, இவ்வெள்ளி காலை, ஹங்கேரி மற்றும் ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளின் அரசுத் தலைவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்து உரையாடினார்.
தன் மூன்று பெண்குழந்தைகள், ஒரு மகன் மற்றும் மனைவியுடன் திருத்தந்தையைச் சந்தித்த ஹங்கேரி நாட்டு அரசுத்தலைவர் János Áder அவர்கள், திருத்தந்தையின் பதவியேற்புத் திருப்பலியில் கலந்துகொண்டு, அவரைச் சந்தித்தபின், தற்போது இரண்டாவது முறையாக திருத்தந்தையைச் சந்திப்பது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.
இச்சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத் தலைவருக்கு பாப்பிறை பதக்கம் ஒன்றை வழங்க, அரசுத்தலைவரும் தங்கள் நாட்டின் சார்பாக, மரத்தாலான திருப்பலி கிண்ணம் ஒன்றையும், ஹங்கேரி மரியன்னை திருத்தலத்தின் புனித நீர் கொண்ட ஒரு குப்பியையும், 1532ம் ஆண்டு அச்சிடப்பட்ட புனித பவுல் அடியார் திருமுகத்தின் ஒரு பிரதியையும் திருத்தந்தைக்கு வழங்கினார்.
அரசுத்தலைவர் Áder அவர்களின்
மகள்களுள் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை திருத்தந்தை
ஆசீர்வதித்தது உணர்வுப் பூர்வமாக இருந்ததென செய்தி நிறுவனங்கள்
தெரிவித்துள்ளன.
மேலும், இவ்வெள்ளிக் காலை, தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் ஹொண்டுராஸ் அரசுத்தலைவர் Porfirio Lobo Sosa அவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார்.
திருத்தந்தை அவர்கள் பாப்பிறை பதக்கம் ஒன்றை அரசுத்தலைவர் Sosa அவர்களுக்கு வழங்க, அரசுத் தலைவரால் இவ்வெள்ளிக் காலையில் வத்திக்கான் தோட்டத்திற்கு வழங்கப்பட்ட ஹொண்டுராஸ் நாட்டு பாதுகாவலியான Suyapa அன்னைமரியாவின் 200 கிலோ எடைகொண்ட வெண்கலச் சிலைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் நன்றியை வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. தூக்கி எறியும் கலாச்சாரத்தில், மனித உயிர்களைப் பேணுவது சவால் நிறைந்த அழைப்பாக கத்தோலிக்க மருத்துவர்களுக்கு உள்ளது - திருத்தந்தை
செப்.20,2013. வறுமைப்பட்ட நாடுகளிலும், வளர்ச்சி
அடைந்துள்ள நாடுகளிலும் தாய்மை என்ற தன்மை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள
அருங்கொடை என்பதை அனைவரும் உணரவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார்.
செப்டம்பர் 18, இப்புதன் முதல் ஞாயிறு முடிய ‘அகில உலக நலம்பேணும் தாய்மை’ (Mothercare International) என்ற
அமைப்பினர் உரோம் நகரில் மேற்கொண்டுள்ள ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ளும்
உறுப்பினர்களை இவ்வெள்ளிக்கிழமை காலை திருப்பீடத்தில் சந்தித்தத்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவப் பாராமரிப்பைக் குறித்த மூன்று கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
வறுமைப்பட்ட நாடுகளில் தாய்மை என்பது வாழ்வைப் பாதிக்கும் ஒரு ஆபத்தாக இருப்பதையும், செல்வம்
மிகுந்த நாடுகளில் தாய்மை என்பதன் முழு பொருளும் உணரப்படாமல் இருக்கும்
ஆபத்தையும் குறித்து திருத்தந்தை தன் கவலையை வெளியிட்டார்.
மருத்துவத் துறையில் அறிவியல் முன்னேற்றங்கள் பிரமிக்கத்தக்க வகையில் வளர்ந்திருக்கும் அதே வேளையில், இத்துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், தங்கள் பணிக்கு முற்றிலும் தங்களையே அர்ப்பணிப்பதில் குறைபாடுகள் இருப்பது கவலை தருகிறது என்று திருத்தந்தை கூறினார்.
பயனற்றவை தூக்கி எறியப்படவேண்டும் என்ற கருத்தில் வளர்ந்துவரும் இன்றைய உலகில், பயனற்றதென கருதப்படும் மனித உயிர்களும் தூக்கி எறியும் போக்கு வளர்ந்துள்ளது என்றும், இந்நிலையில், மருத்துவர்கள், குறிப்பாக, கத்தோலிக்க மருத்துவர்கள், மனித உயிர்களைப் பேணுவது இன்னும் சவால் நிறைந்த அழைப்பாக உள்ளது என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
1988ம் ஆண்டு பெண்களின் மதிப்பை மையப்படுத்தி திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் எழுதிய Mulieris Dignitatem என்ற சுற்றுமடலின் 25ம் ஆண்டு நிறைவையும், இரண்டாம்
வத்திக்கான் சங்கத்தின் 50ம் ஆண்டு நிறைவையும் கொண்டாடும் நோக்கத்துடன்
கத்தோலிக்க மருத்துவர்களின் இக்கருத்தரங்கு உரோம் நகரில் நடைபெற்று
வருகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. இயேசு சபையினரின் La Civiltà Cattolica இதழுக்கு, திருத்தந்தை வழங்கியுள்ள தனிப்பட்ட நேர்காணல்
செப்.20,2013. நன்னெறி விழுமியங்கள், மதக் கோட்பாடுகள் என்ற எல்லைகளைத் தாண்டி, மீட்பளிக்கும் இறைவனின் அன்பு இவ்வுலகிற்கு முதலில் அறிவிக்கப்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
பல்வேறு தலைப்புக்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு நீண்ட நேர்காணலில் வழங்கிய கருத்துக்கள், இயேசு சபையினர் பல்வேறு நாடுகளில் நடத்தும் 16 இதழ்களில் செப்டம்பர் 19, இவ்வியாழனன்று வெளியாகியுள்ளன.
உரோம் நகரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் La Civiltà Cattolica என்ற இதழின் தலைமை ஆசிரியர் அருள் பணியாளர் Antonio Spadaro அவர்கள், ஆகஸ்ட் மாதம் 19,23,29 ஆகிய தேதிகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து மேற்கொண்ட நீண்ட உரையாடல்களில், திருத்தந்தை அவர்கள் பல்வேறு தலைப்புக்களில் பேசிய கருத்துக்கள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு போர்க்களத்தில் பணியாற்றும் மருத்துவமனை போல திருஅவை விளங்கவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, காயப்பட்டு, கசப்புற்று திருஅவையை விட்டு விலகி வாழும் மக்களை திருஅவை தேடிச் செல்லவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தன் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து பேசியுள்ள திருத்தந்தை, பாவியான தன்னை இறைவன் கருணைகொண்டு பார்த்ததால் அவரைத் தொடர்ந்ததாகவும், தான் இயேசு சபையில் சேர்ந்ததற்கான காரணத்தையும் விளக்கிக் கூறியுள்ளார்.
இந்த நேர்காணலில் திருத்தந்தை அவர்கள் தன் தினசரி வாழ்வில் பின்பற்றும் செப முயற்சிகளைக் குறித்தும், இசை, ஓவியம், இவற்றில் தனக்குப் பிடித்த கலைஞர்கள் குறித்தும், வாசித்துப் பயனடைந்த நூல்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அமெரிக்காவில் வாழும் கத்தோலிக்கர்களில் 80 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ் மீது பெரும் ஈடுபாடு கொண்டுள்ளனர் – ஆய்வுத் தகவல்
செப்.20,2013. வறியோர் மட்டில் காட்டும் பரிவும், சமுதாயத்தின்
விளிம்புகளில் வாழ்வோரை தேடிச்செல்லும் போக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் முதல் ஆறுமாத பணியின் முக்கிய அம்சங்கள் என்று அமெரிக்காவில்
உள்ள பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.
செப்டம்பர் 12ம் தேதி தன் ஆறு மாத பணிக்காலத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ததையடுத்து, Pew Research Centre என்றழைக்கப்படும் ஓர் ஆய்வு மையம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளன.
இந்த மையம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தாக்கம் திருஅவையைத் தாண்டி உலக சமுதாயத்தில் பரவலாக, அதேவேளையில் ஆழமாகப் பதிந்துள்ளது என்பது தெளிவாகிறது.
இக்கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்காவில் வாழும் கத்தோலிக்கர்களில் 80 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ் மீது பெரும் ஈடுபாடு கொண்டுள்ளனர் என்றும், கத்தோலிக்கர் அல்லாத மற்றவர்கள் மத்தியில் 58 விழுக்காட்டினர் அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டுள்ளனர் என்றும் தெரிகிறது.
திருத்தந்தை இதுவரை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பெரும் வரவேற்பு காணப்படுகிறது என்றும், செப்டம்பர்
7ம் தேதி சிரியாவின் அமைதிக்காக அவர் மேற்கொண்ட செபங்கள் மிகப் பெருமளவில்
வரவேற்பு பெற்றுள்ளது என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
ஆதாரம் : CNA/EWTN
6. அடுத்த வாரம் உரோம் நகரில் கூடவிருக்கும் மறைகல்வி ஆசிரியர்களின் மாநாடு
செப்.20,2013. கத்தோலிக்கத் திருஅவையின் மறைகல்வி பாடங்கள், விவிலிய வார்த்தைகள் அனைத்தும், Facebook, Twitter போன்ற சமுதாய வலைத்தளங்கள் வழியாகவும், புதியத்
தொடர்பு சாதனங்கள் வழியாகவும் மக்களை இன்னும் அதிகமாக சென்றடைவதற்கு
திருஅவை முயற்சிகள் மேற்கொண்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்
கூறினார்.
செப்டம்பர் 25, வருகிற புதன்கிழமை முதல் செப்டம்பர் 29, ஞாயிறு
முடிய உரோம் நகரில் கூடவிருக்கும் மறைகல்வி ஆசிரியர்களின் மாநாடு குறித்து
செய்தியாளர்களிடம் பேசிய புதியவழி நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின்
தலைவர் பேராயர் Rino Fisichella அவர்கள் இவ்வாறு கூறினார்.
50 நாடுகளைச் சேர்ந்த 1600க்கும் அதிகமான மறைகல்வி ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டின் உச்சகட்டமாக, செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்கள் திருஅவையின் அடித்தளமான புனித பேதுருவின் கல்லறையைத் தரிசிப்பதும், திருத்தந்தையுடன் நிகழும் சந்திப்புக்களும் அமையும் என்று பேராயர் Fisichella எடுத்துரைத்தார்.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக, செப்டம்பர் 29, ஞாயிறன்று
காலை 10.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியும், அதைத் தொடர்ந்து அவர் வழங்கும் மூவேளை செப உரையும் அடங்கும் என்று பேராயர் Fisichella செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. குழந்தைகளைச் சரிவர பராமரிக்கத் தவறும் நாடுகள் எதிர்காலத்தை இழந்துவிடுகின்றன - முத்திபேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால்
செப்.20,2013.
தன் குழந்தைகளைச் சரிவர பராமரிக்கத் தவறும் நாடுகள் எதிர்காலத்தை
இழந்துவிடுகின்றன என்று முத்திபேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள்
கூறியதை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா. கூட்டம் ஒன்றில் மீண்டும் நினைவுறுத்தினார்.
ஜெனீவாவில் இயங்கும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், மனித உரிமை குறித்து அங்கு நிகழ்ந்த 24வது அமர்வில், இராணுவத்தில் கட்டாயமாக ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் குறித்து கவலை வெளியிட்டார்.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் 1979ம் ஆண்டு, அக்டோபர் 2ம் தேதி ஐ.நா. பொது அவையில் பேசுகையில், குழந்தைகளின் வளமானதொரு எதிர்காலம் பற்றி குறிப்பிட்ட கருத்துக்களை பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் மீண்டும் நினைவுறுத்தினார்.
வறுமையில்
வாடும் குழந்தைகளுக்கு பாதுகாப்பும் உணவும் தருவதாகக் கூறி அவர்களை இராணுவ
நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவர்களின் குழந்தைப் பருவத்தை பல வழிகளில்
சிதைத்துவரும் பன்னாட்டு குழுக்களை ஐ.நா. கண்காணிக்க வேண்டும் என்று
பேராயர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
8. அகில உலக அமைதி நாளையொட்டி, ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்ட செய்தி
செப்.20,2013.
சகிப்புத்தன்மை மற்றும் வாழ்வின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளும்
பக்குவம் ஆகிய விழுமியங்களின் அடிப்படையில் இவ்வுலகின் குடிமக்களை
உருவாக்கும் ஒரு கல்வித்திட்டத்தைப் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை
என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
செப்டம்பர் 21, இச்சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் அகில உலக அமைதி நாளையொட்டி, செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், இவ்வுலக நாள் கொண்டாட்டங்களுக்கு, இவ்வாண்டு 'அமைதிக்கான கல்வி' என்று ஐ.நா. தேர்ந்தெடுத்துள்ள கருத்தை தன் செய்தியில் வலியுறுத்தினார்.
உலக அமைதிக்கு அழைப்பு விடுக்கும் வண்ணம், மரத்தால் ஆன மணி ஒன்று ஜப்பான் நாட்டின் பரிசாக, ஐ.நா. தலைமை அலுவலகத்தின் தோட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் உலக அமைதி வேண்டி ஒலிக்கப்பட்டு வரும் இந்த மணியை, பான் கி மூன் அவர்கள் உலக அமைதிக்கென இவ்வாண்டு அடித்தார்.
இன்றைய உலகில் 5 கோடியே 70 இலட்சம் குழந்தைகள் அடிப்படை கல்வி வசதிகள் மறுக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட பான் கி மூன் அவர்கள், அனைவருக்கும் கல்வி வேண்டும் என்று போராடி வரும் Malala Yousafzai என்ற இளம் பெண்ணின் முயற்சிகளைப் பாராட்டினார்.
இச்சனிக்கிழமை கொண்டாடப்படும் உலக அமைதி நாளையொட்டி, உலகின் பல நாடுகளிலிருந்து 500க்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்
வீடியோ தொடர்பு கொண்டு நடத்தும் ஒரு கருத்தரங்கில் அமைதி குறித்த தங்கள்
சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஐ.நா. செய்திக்குறிப்பொன்று
கூறுகிறது.
No comments:
Post a Comment