செய்திகள் - 17.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை: தாய்த்திருஅவை ஒரு வீரமங்கை
2. திருத்தந்தை : மற்றவர்களை வரவேற்கும் இடமாக திருஅவையை மாற்றுங்கள்
3. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
4. அமைதிக்காகவே அணுசக்தி, அழிவுக்கல்ல என்கிறது திருப்பீடம்
5. கியூபா ஆயர்கள்: நல்லதொரு வருங்காலம் குறித்த நம்பிக்கையுடன் செயல்படுங்கள்
6. சுமுகமான தேர்தல் குறித்தே எதிர்பார்ப்பு இருப்பதாக, நெதர்லாந்து தூதரிடம் யாழ்ப்பாண ஆயர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை: தாய்த்திருஅவை ஒரு வீரமங்கை
செப்.17,2013. நேர்மையற்ற நடுவரிடம் தன் வழக்கை எடுத்துச்சென்று இறுதியில் வெற்றியும் அடைந்த விவிலியத்தின் கைம்பெண்ணைப்போல், திருஅவையும் தன் குழந்தைகளைக் காக்க மிகுந்த தைரியத்துடன் செயல்படுகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான்
தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை
காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, வீரமங்கையான அன்னை திருஅவை தன் குழந்தைகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதையும், அக்குழந்தைகளை, தன் துணையாம் கிறிஸ்துவிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதையும் உணர்ந்தே உள்ளார் எனவும் எடுத்துரைத்தார்.
வரலாற்றில் நடைபோடும் நம் அன்னையாம் திருஅவை, தன் குழந்தைகளுக்காக அழுவதையும், அவர்களுக்காக செபிக்க வேண்டியதையும் அறிந்துள்ளார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் குழந்தைகளுக்குப் பலமூட்டி அழைத்துச்செல்லும் இத்தாய், அவர்களை இறைவனை நோக்கி அழைத்துச்சென்று அவரின் கைகளில் ஒப்படைப்பதை தன் கடமையாகக்கொண்டுள்ளார் என்றார்.
தன் துணையான இறைவனைத் தேடிச்செல்லும் தாயாக திருஅவையை உருவகப்படுத்திப் பேசிய திருத்தந்தை, தாய் திருஅவைக்கு வெளியே ஒப்புரவு இடம்பெறுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை : மற்றவர்களை வரவேற்கும் இடமாக திருஅவையை மாற்றுங்கள்
செப்.17,2013. அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சில அவதூறு நடவடிக்கைகள் திருஅவையின் புனிதத்துவத்தை வெற்றிகொள்ளமுடியாது என்பதை மனதில் கொண்டு, இறை
அன்பின் உதவியுடன் தங்கள் இறை அழைப்பை உயிர்துடிப்புடையதாக
வைத்திருக்கவேண்டும் என அருள்பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்திங்கள்
காலை புனித இலாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற
முறையில் அம்மறைமாவட்ட அருள்பணியாளர்களைச் சந்தித்த திருத்தந்தை, தன்
மேய்ப்புப்பணியில் சோர்வடைந்துள்ளது குறித்து தனக்கு வயதுமுதிர்ந்த
அருள்பணியாளர் ஒருவர் அண்மையில் எழுதிய கடிதம்பற்றிக் குறிப்பிட்டு, மேய்ப்புப்பணியின்போது சோர்வு என்பது இயல்பானதே என்றார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அருள்பணியாளர்களுள் ஐந்துபேர், இன்றைய அருள்பணியாளர்களின் சவால்கள் குறித்து முன்வைத்த கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார் திருத்தந்தை.
மற்றவர்களை வரவேற்கும் இடமாக, அவர்களுக்கு
நல் ஆலோசனைகளை வழங்கும் இடமாக திருஅவையை அருள்பணியாளர்கள் மாற்றவேண்டிய
தேவையையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
செப்.17,2013. 'இன்றைய உலகில் உதவி தேவைப்படுவோர் பெருமளவில் உள்ளனர். நான் என்னுடைய தேவைகள் குறித்தே அக்கறைக்கொண்டு சுயநலவாதியாக உள்ளேனா அல்லது, உதவி தேவைப்படுவோர் குறித்து தெரிந்து வைத்துள்ளேனா?' என தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமை எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் ஆங்கிலம், இத்தாலியம், இஸ்பானியம், பிரெஞ்ச், இலத்தீன், அரேபியம், ஜெர்மானியம், போலந்து, போர்த்துக்கீசியம் ஆகிய ஒன்பது மொழிகளில் தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுவரும் திருத்தந்தை, ஏழைமக்களின்
தேவைகள் குறித்து ஒவ்வொருவரும் அக்கறையுடையவர்களாகச் செயல்படவேண்டும்
என்பதை தன் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. அமைதிக்காகவே அணுசக்தி, அழிவுக்கல்ல என்கிறது திருப்பீடம்
அணுசக்தியை இராணுவ நோக்கங்களுக்கென பயன்படுத்தாமல் அதனை உலகம் முழுமையின் அமைதி, நலம் மற்றும் வளத்திற்கென பயன்படுத்தவேண்டும் என்பதை அனைத்துலக அணுசக்தி அமைப்பு உறுதிசெய்யும் வேளையில், அமைதியை நிலைநாட்டும் பாதுகாப்பான முறையில் அணுசக்தி பயன்படுத்தப்படுவதை இவ்வமைப்பு கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், நாடுகளுடனான உறவுகளுக்கான திருப்பீட அலுவலகத்தின் செயலர் பேராயர் DOMINIQUE MAMBERTI.
அனைத்துலக அணுசக்தி அமைப்பின் 57வது பொதுஅவையில் உரையாற்றிய திருப்பீட அதிகாரி பேராயர் MAMBERTI, அணுசக்தி பயன்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது, அதன் பாதுகாப்பான பயன்பாடே எனவும் கூறினார்.
சமூக நீதிக்காகவும், உலக ஒருமைப்பாட்டிற்காகவும் உழைக்க திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவதையும் சுட்டிக்காட்டிய பேராயர், இதன்
அடிப்படையில் அணுசக்தி தொழில் நுட்பங்கள் குறித்த ஒத்துழைப்பு அனைவரின்
நலனையும் கருத்தில் கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மருத்துவத்துறையில் அணுசக்தியை பயன்படுத்தும் வசதி அனைவருக்கும் கிடைக்குமொன்றாக மாற்றவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் அவர்.
அணுஆயதங்களின்
பயன்பாடு இவ்வுலகிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதில்
திருப்பீடம் உறுதியாக இருக்கிறது என்பதையும் எடுத்தியம்பினார் பேராயர் MAMBERTI.
சண்டை இடம்பெறும் மத்தியக்கிழக்குப் பகுதியிலிருந்து அணுஆயதங்களும், பெரும் அழிவை உருவாக்கும் ஆயதங்களும் முற்றிலுமாக அகற்றப்படவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தினார் பேராயர் MAMBERTI.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. கியூபா ஆயர்கள்: நல்லதொரு வருங்காலம் குறித்த நம்பிக்கையுடன் செயல்படுங்கள்
செப்.17,2013.
நல்லதொரு வருங்காலம் குறித்த கண்ணோட்டத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு
கியூபா நாட்டு மக்களனைவருக்கும் விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் அந்நாட்டு
ஆயர்கள்.
கடந்த காலங்களோடு ஒப்பிடும்போது தற்போது கியூபாவில் நல்லதொரு மாற்றத்தைக் காணமுடிகின்றது என்ற ஆயர்கள், இன்றைய இளையோரில் வருங்காலம் குறித்த நம்பிக்கை நிறையவே உள்ளது என தெரிவித்தனர்.
திருஅவையில் சிறப்பிக்கப்படும் விசுவாச ஆண்டு குறித்து 'நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை' என்ற தலைப்பில் இஞ்ஞாயிறன்று மேய்ப்புப்பணி சுற்றுமடல் ஒன்றை வெளியிட்டுள்ள ஆயர்கள், நாட்டின்
அரசியல் மற்றும் கலாச்சார உண்மைநிலைகளை உணர்ந்தவர்களாக நற்செய்தியை
எடுத்துரைக்கவேண்டிய அர்ப்பணத்தை ஒவ்வொருவரும் கொண்டிருக்கவேண்டும் எனவும்
அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய
வாழ்க்கை நிலைகளை மேம்படுத்துவதன் மூலம் வருங்காலத் தலைமுறையினருக்கான
சிறந்த வாழ்வை நாம் அமைத்துக் கொடுக்கமுடியும் எனவும் தங்கள் மேய்ப்புப்பணி
சுற்றுமடலில் ஊக்கமளித்துள்ளனர் கியூபா ஆயர்கள்.
ஆதாரம் : CNS
6. சுமுகமான தேர்தல் குறித்தே எதிர்பார்ப்பு இருப்பதாக, நெதர்லாந்து தூதரிடம் யாழ்ப்பாண ஆயர்
செப். 17, 2013. வடக்கு மாநில அவைத் தேர்தல், சுதந்திரமாகவும் அமைதியாகவும் நடைபெற வேண்டும் என்பதே தமிழர்களுடைய விருப்பமாக உள்ளதால், தேர்தல்
விடயங்களில் இராணுவத்தின் தலையீட்டை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டிய
தேவை உள்ளது என்றார் யாழ்ப்பாண ஆயர் தாமஸ் சவுந்தரநாயகம்.
வடக்கு மாநில அவைத் தேர்தல் குறித்த நிலைவரங்களை அறிந்து கொள்வதற்கென இத்திங்களன்று, யாழ்ப்பாணத்திற்கு
வருகை தந்த நெதர்லாந்து தூதுவர் லூயில் டபிள்யூ.எம்.பெற் அவர்களுடன்
தேர்தல் நிலவரம் மற்றும் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகக்
கலந்துரையாடிய ஆயர் சவுந்தரநாயகம், தமிழ் மக்களைப் பொருத்தவரையில் இது மிக முக்கியமான தேர்தலாகும் என்றார்.
மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்த யாழ்ப்பாண ஆயர் சவுந்தரநாயகம், தேவையற்ற தலையீடுகள் தொடர்ந்தால் தேர்தல் தொடர்பான மக்களின் ஆர்வம் குறையும் என்ற கவலையையும் வெளியிட்டார்.
No comments:
Post a Comment