செய்திகள் - 14.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. செபம் மற்றும் கண்ணீர் ஆகியவற்றின் வழியாக, சிலுவை என்ற மறையுண்மையை நெருங்கமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்
2. Jose Gabriel Brochero அவர்கள், முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படும் புனித நிகழ்ச்சிக்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள்
3. எருசலேம் புனித கல்லறையின் காவல்படையினருக்கு திருத்தந்தையின் உரை
4. புதியத் திருத்தந்தையால் பிரேசில் திருஅவையில் நல்ல மாற்றங்கள்
5. கடத்திச்செல்லப்பட்டோர் விடுவிக்கப்பட பிலிப்பீன்ஸ் ஆயர்கள் வேண்டுகோள்
6. மரண தண்டனை ஒரு தீர்வாக எந்நாளும் மாறப்போவதில்லை - இந்திய ஆயர் பெர்னான்டஸ்
7. மத்திய ஆப்ரிக்க குடியரசில் மோதல்களை நிறுத்த ஆயர் பேரவை அழைப்பு
8. எகிப்தில் கிறிஸ்தவக்கோவில், மசூதியாக மாற்றப்பட்டுள்ளது
9. “எச்ஐவி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியும்”
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. செபம் மற்றும் கண்ணீர் ஆகியவற்றின் வழியாக, சிலுவை என்ற மறையுண்மையை நெருங்கமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.14,2013. மனிதகுலத்தின் மிகப்பெரும் மறையுண்மை, சிலுவையின் மறையுண்மையே, அதனை
செபம் மற்றும் கண்ணீருடனேயே நாம் அணுகமுடியும் என்று இச்சனிக்கிழமை காலை
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரை
வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருச்சிலுவையின் மகிமை விழாவை சிறப்பித்த இச்சனிக்கிழமையன்று காலை நிறைவேற்றிய திருப்பலியில், சிலுவையின் மகிமை என்பது மனித வரலாற்றையும், இறை வரலாற்றையும் உள்ளடக்கியது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
சிலுவை எனும் மரத்தால் வந்த மீட்பு, அன்பின் வழியாக வந்தது என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் பலியை கசப்பு கலந்த இனிய சுவையாக நம்மால் ஆழமாக உணரமுடியும் என்றார். நம் செபம் மற்றும் கண்ணீர் ஆகியவற்றின் வழியாக, இந்த மறையுண்மைக்கு நெருக்கமாக நாம் வரமுடியும் என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நம் பாவங்களுக்காக மனம் வருந்தியும், மனிதகுல துன்பங்கள் கண்டும் நாம் கண்ணீர் விடவில்லையெனில், சிலுவை எனும் மறையுண்மையைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. Jose Gabriel Brochero அவர்கள், முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படும் புனித நிகழ்ச்சிக்கு திருத்தந்தையின் வாழ்த்துக்கள்
செப்.14,2013. "நமக்கு அடுத்திருப்பவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே சிலவேளைகளில் நம்மால் வாழமுடியும், ஆனால், அது கிறிஸ்தவமல்ல" என்று இச்சனிக்கிழமையன்று தனது Twitter பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அயலார் மீது நாம் கொள்ளவேண்டிய அன்பின் முக்கியத்துவத்தைத் தன் Twitter பக்கத்தில் வலியுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே நாளில் அர்ஜென்டினாவின் Corboda எனுமிடத்தில் இடம்பெற்ற Jose Gabriel Brochero அவர்கள், முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படும் புனித நிகழ்ச்சிக்குத் தன் வாழ்த்துக்களையும் அனுப்பியுள்ளார்.
ஏழைகளிடையே மிகவும் ஏழையாக வாழ்ந்த Brochero அவர்கள், தன் பங்கு மக்களிடையே, அன்பு மற்றும் நம்பிக்கையின் எடுத்துக்காட்டாகவும், பிறரன்பு மற்றும் கருணையின் முழு வெளிப்பாடாகவும் இருந்தார் என்று, அர்ஜென்டீனா ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Jose Maria Arancedo அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து மடலில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. எருசலேம் புனித கல்லறையின் காவல்படையினருக்கு திருத்தந்தையின் உரை
செப்.14,2013. திருப்பயணத்தில் தொடர்ந்து நடைபோடுதல், சமுதாயத்தைக் கட்டி எழுப்புதல், கிறிஸ்துவை அறிக்கையிடுதல் ஆகிய மூன்றும் நம்வாழ்வைச் சுற்றி அமையவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
'எருசலேம் புனித கல்லறையின் காவல்படையினர்' என்ற கத்தோலிக்க அமைப்பின் உறுப்பினர்களை இவ்வெள்ளியனறு மாலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, இவ்வுலகில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரு திருப்பயணத்தின் அனுபவத்தை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
இத்திருப்பயணத்தில் சமூகத்தைக் கட்டியெழுப்பும் பணிக்கும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடைய ஆழமான நம்பிக்கையை வெளியிடுவதன் வழியாகவே, கட்டியெழுப்புவதற்கான நம் பயணம் பிறக்கிறது என்றும் கூறினார்.
'எருசலேம் புனித கல்லறையின் காவல்படையினர்' என்ற இக்குழு, புனித பூமியில் ஆற்றிவரும் பணிகளையும், ஏழைகளிடையே இக்குழு மேற்கொண்டுள்ள பிறரன்புப் பணிகளையும் பாராட்டியத் திருத்தந்தை, புனித பூமியின் கத்தோலிக்கச் சமுதாயத்தின் இன்றைய நிலை குறித்து, உரோம் நகரில் இக்குழுவினரால் நடத்தப்படவிருக்கும் கருத்தரங்கிற்குத் தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. புதியத் திருத்தந்தையால் பிரேசில் திருஅவையில் நல்ல மாற்றங்கள்
செப்.14,2013. விசுவாசத்தில் ஊறித்திளைக்கும் பிரேசில் நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகைக்குப்பின், மிகப்பெரிய அளவிலான ஆர்வத்தைக் காணமுடிகின்றது என்றார் வத்திக்கானிற்கான பிரேசில் நாட்டின் புதிய தூதுவர் Denis Fontes de Souza Pinto.
இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்து நம்பிக்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தபின், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த புதியத் தூதுவர் de Souza Pinto, ஒவ்வொரு நாடும் தங்கள் தனித்தன்மையயுடன், அதேவேளை, ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதன் தேவையைத் திருத்தந்தை வலியுறுத்திவருவது தன்னைக் கவர்ந்துள்ளது என்றார்.
இத்திருத்தந்தை குறித்து பிரேசில் மக்களிடையே மகிழ்ச்சி நிலவுவதைக் காணமுடிகிறது என்றும், திருஅவை நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொள்ளும் மக்களை, தற்போது கண்டுவருகிறோம் என்றும் மேலும் கூறினார் திருப்பீடத்திற்கான பிரேசிலின் புதிய தூதுவர் de Souza Pinto.
ஆதாரம் : Zenit
5. கடத்திச்செல்லப்பட்டோர் விடுவிக்கப்பட பிலிப்பீன்ஸ் ஆயர்கள் வேண்டுகோள்
செப்.14,2013. பிலிப்பீன்ஸ்
அரசுடனான மோதலில் பொதுமக்களைப் பிணையக் கைதிகளாக எடுத்துச்சென்று
தற்காப்பு ஆயுதங்களாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளின் செயல் குறித்து
தங்கள் வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.
தீவிரவாதிகளால் பிலிப்பீன்சின் Zamboanga பகுதியில் கடத்திவைக்கப்பட்டுள்ள மக்கள், உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்துள்ள ஆயர்கள், அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு தீவிரவாதிகளை விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த வியாழனன்று தீவிரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான மக்களுள், அருள்பணி மைக்கேல் உஃபானா மட்டுமே இவ்வெள்ளியன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆதாரம் : CNS
6. மரண தண்டனை ஒரு தீர்வாக எந்நாளும் மாறப்போவதில்லை - இந்திய ஆயர் பெர்னான்டஸ்
செப்.14,2013. மரண தண்டனை ஒரு தீர்வு அல்ல; அது, ஒரு தீர்வாக எந்நாளும் மாறப்போவதில்லை என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி, புது டில்லியில் இளம்பெண் ஒருவர், ஒரு குழுவினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால், அவர் சில நாட்கள் சென்று உயிரிழந்தார்.
இக்கொடுமையைச் செய்த நான்கு இளையோருக்கு இவ்வெள்ளிக்கிழமை இந்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்து, தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு குறித்து, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், மும்பை உயர் மறைமாவட்டத்தின் குடும்பநலம் மற்றும் பெண்கள் பணிக்குழுவின் தலைவர் ஆயர் தோமினிக் சாவியோ பெர்னான்டஸ் அவர்கள், மரண தண்டனை எக்காலமும் ஒரு தீர்வாகாது என்று கூறினார்.
மரண தண்டனைக்குப் பதில், இவ்விளையோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர்கள், சிறை வாழ்வின்போது, தாங்கள் செய்த கொடுமையை உணர்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று ஆயர் பெர்னான்டஸ் கருத்து தெரிவித்தார்.
பெண்களுக்குத் தகுந்த மதிப்பளித்து, அவர்களைப் பேணிக் காப்பதில் இந்தியச் சமுதாயம் பெருமளவு தவறியுள்ளது என்றும், இந்த மனநிலையில் தீவிர மாற்றங்கள் தேவை என்பதையும் ஆயர் பெர்னான்டஸ் தன் பேட்டியில் வலியுறுத்தினார்.
இந்த மாற்றங்களைக் கொணர, இந்தியக் கல்விக் கூடங்கள் முக்கியப் பங்காற்றவேண்டும் என்றும், தீவிர முயற்சிகள் எடுக்கவேண்டும் என்றும் ஆயர் பெர்னான்டஸ் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. மத்திய ஆப்ரிக்க குடியரசில் மோதல்களை நிறுத்த ஆயர் பேரவை அழைப்பு
செப்.14,2013. மத்திய
ஆப்ரிக்க குடியரசில் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே
இடம்பெற்றுவரும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கு அனைத்துலக சமுதாயம்
உதவவில்லையெனில், அந்நாடு இரண்டாக உடைந்துபோகும் ஆபத்து உள்ளது என தன் கவலையை வெளியிட்டுள்ளது அந்நாட்டு ஆயர்பேரவை.
தங்களைத் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற, கிறிஸ்தவர்கள் பாதுகாப்புக்குழுக்களை அமைத்துவரும் அதேவேளையில், அண்மையில் சில இஸ்லாமியர்கள் கொலைச்செய்யப்பட்டுள்ளது, கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளது என்ற மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆயர் பேரவையின் பொதுச்செயலர் அருட்பணி Cyriaque Gbate Doumalo, நாட்டைக் காப்பாற்ற அனைத்துலக சமூகத்தின் தலையீடு இன்றியமையாதது என்றார்.
மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் Bossangoa நகருடன் அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நகர் ஆயரை தொடர்புகொள்ளமுடியாத நிலை தொடர்வதாகவும் கவலையை வெளியிட்டார் அருள்பணி Doumalo.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான மோதல்களில் பல ஆலயங்களும், இரண்டாயிரத்திற்கும் மேலான வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயர் பேரவையின் பொதுச்செயலர் மேலும் கூறினார்.
ஆதாரம் : CNS
8. எகிப்தில் கிறிஸ்தவக்கோவில், மசூதியாக மாற்றப்பட்டுள்ளது
செப்.14,2013. எகிப்தின் Monshaat Baddini எனுமிடத்திலுள்ள கிறிஸ்தவக்கோவிலை ஆக்ரமித்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அதனை இஸ்லாமியர்களின் தொழுகைக்கூடமாக மாற்றியுள்ளனர்.
'மறைசாட்சிகளின் தொழுகைக்கூடம்' என்ற பெயருடன் இஸ்லாமிய வழிபாட்டுத்தலமாக மாற்றப்பட்டுள்ள இக்கோவிலுனுள் கிறிஸ்தவர்கள் நுழைய அனுமதிக்கப்படாததுடன், காவல்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுத்து வருகின்றது.
இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த Protestant கிறிஸ்தவசபை கோவிலைச் சுற்றி நிற்கும் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள், கிறிஸ்தவர்கள் எவரும் அக்கோவிலை நெருங்க அனுமதிப்பதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் அண்மைக்காலத்தில் இடம்பெற்றுவரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இதுவரை 80 ஆலயங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
ஆதாரம் : AsiaNews
9. “எச்ஐவி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியும்”
செப்.14,2013.
மனிதர்களிடம் எயிட்ஸ் நோயை தோற்றுவிக்கும் எச்ஐவி நுண்கிருமி தொற்றை
முற்றாக அழிக்கவல்ல சோதனை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்
காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
மனிதர்களின்
எச்ஐவி தொற்றைவிட நூறுமடங்கு அதிக வீரியம் மிக்க எஸ்ஐவி நுணகிருமி
தொற்றால் பாதிக்கப்பட்ட குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளின்வழி இந்த
வெற்றி காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரேகான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக அறிவியலாளர்கள், எஸ்ஐவி நுண்கிருமி தொற்றுக்குள்ளான 16 குரங்குகளுக்கு தங்களின் புதிய தடுப்பு மருந்தை அளித்ததில், ஒன்பது குரங்குகளிடம் இருந்த எஸ்ஐவி தொற்று முற்றாக இல்லாமல் போய்விட்டதாகவும், மற்ற ஏழு குரங்குகளிடம் தங்களின் தடுப்பு மருந்து செயற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 16 குரங்குகளில் ஒன்பது குரங்குகளின் உடலில் எஸ்ஐவி வைரஸ் தொற்று முற்றாக இல்லாமல் போய்விட்டது என்பது ஒரு முக்கிய, நம்பிக்கையளிக்கக்கூடிய சாதனை என்ற அறிவியலாளர்கள், தங்களின் புதிய, நுண்கிருமி ஒழிப்பு வழிமுறை, சில குரங்குகளின் உடலில் ஏன் செயல்படவில்லை என்பதற்கான விடை கிடைக்கும்போது, எச்ஐவி தொற்றை முழுமையாக குணப்படுத்த இயலும் என தெரிவித்துள்ளனர்.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment