செய்திகள் -12.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அன்னையின் பெயர் என்றும் நமக்கு இனிமையாகவே விளங்குகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்
2. தாய்லாந்து பிரதமர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
3. சுரங்கத் தொழில், மனித சமுதாயம் மீது கடும் விளைவுகளை உருவாக்குவது கவலை தரும் ஒரு போக்கு - திருத்தந்தை
4. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருத்தந்தையின் பொது நிகழ்வுகள்
5. அமைதியை நிலைநாட்டுவதில் உண்மையான தலைவரின் பெருமை அடங்கியுள்ளது - முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham
6. இரு உலகப் போர்கள் நமக்குப் பாடங்களாக அமைய வேண்டும் - முதுபெரும் தந்தை Kirill
7. உலகெங்கும் வீணாக்கப்படும் 130 கோடி டன் எடையுள்ள உணவுப் பொருள்களால் பொருளாதார அழிவும் உருவாகிறது - ஐ.நா.அறிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அன்னையின் பெயர் என்றும் நமக்கு இனிமையாகவே விளங்குகிறது - திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.12,2013. நற்செய்தி நம்முன் கடினமான சவால்களை வைக்கின்றது; அவற்றைக் கடைபிடிக்க விழைவோர் அன்னைமரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
செப்டம்பர் 12, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட அன்னை மரியாவின் புனிதப் பெயர் திருவிழாவன்று, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் காலைத் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, இத்திருநாளைக் குறித்து தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
அன்னை மரியாவின் புனிதப் பெயர் திருவிழாவென்று தற்போது அழைக்கப்படும் இந்நாள், துவக்கத்தில் அன்னை மரியாவின் இனியப் பெயர் திருவிழா என்றே அழைக்கப்பட்டது என்று கூறியத் திருத்தந்தை, அன்னையின் பெயர் என்றும் நமக்கு இனிமையாகவே விளங்குகிறது என்பதை எடுத்துரைத்தார்.
பணிவான, மென்மையான உள்ளம் கொண்டிருக்க, திருப்பலியின் இரு வாசகங்கள் வழியே, புனித பவுல் அடியாரும், இயேசுவும் விடுக்கும் அழைப்பு, நமக்குச் சவால்களாக அமைந்துள்ளன என்று திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.
மேலும், "ஒவ்வொரு மனிதர் மீதும் இயேசு கொண்டிருக்கும் கருணை நிறை அன்பில் பங்கேற்பதே, அவரை பின்பற்றுவதன் பொருள்" என்று இவ்வியாழன் வெளியிட்ட Twitter செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக தன் Twitter செய்திகளில் "அமைதிக்காகச் செபிப்போம்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து அழைப்பு விடுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. தாய்லாந்து பிரதமர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சந்திப்பு
செப்.12,2013. செப்டம்பர் 12, இவ்வியாழன் காலை 11 மணியளவில், தாய்லாந்து பிரதமர் Yingluck Shinawatra அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார்.
அரைமணி நேரம் நீடித்த இச்சந்திப்பின்போது, தாய்லாந்துக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவு குறித்தும், கல்வி, சமுதாய மேம்பாடு ஆகிய அம்சங்களில் இவ்விரு தரப்பினரும் எவ்வகையில் இன்னும் இணைந்து செயலாற்ற முடியும் என்பது குறித்தும் பேசப்பட்டது.
மனித உரிமை, பல்சமய உரையாடல், பன்முகக்
கலாச்சாரப் புரிதல் ஆகிய எண்ணங்களின் அடிப்படையில் நாடுகளுக்கிடையே
நிலவக்கூடிய அமைதி குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபின், பிரதமர் Yingluck Shinawatra அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அவர்களையும், பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. சுரங்கத் தொழில், மனித சமுதாயம் மீது கடும் விளைவுகளை உருவாக்குவது கவலை தரும் ஒரு போக்கு - திருத்தந்தை
செப்.12,2013.
சுரங்கத்தொழில் பல தலைமுறைகளைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு சுற்றுச்சூழல்
மற்றும் சமுதாய விளைவுகளை உருவாக்குகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார்.
உலகின் பல நாடுகளில் சுரங்கத் தொழிலை மேற்கொண்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் அண்மையில் வத்திக்கானில் மேற்கொண்ட ஒரு கூட்டத்திற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடுகள் என்ற எல்லைகளையும், தலைமுறைகள் என்ற கால எல்லைகளையும் கடந்து, சுரங்கத் தொழில், மனித சமுதாயம் மீது கடும் விளைவுகளை உருவாக்குவது கவலை தரும் ஒரு போக்கு என்று கூறியத் திருத்தந்தை, சுரங்கத் தொழில்களில் அடிமைகளாக நடத்தப்படும் மக்கள் குறித்தும் தன் கவலையை வெளியிட்டார்.
கத்தோலிக்கத்
திருஅவை வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய ஒரு கூட்டம் வத்திக்கானில்
நடைபெறுகிறது என்று கூறிய வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று, ஐரோப்பா, சீனா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியமான நிறுவனங்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன என்று தெரிவிக்கிறது.
ஆதாரம் : VIS
4. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் திருத்தந்தையின் பொது நிகழ்வுகள்
செப்.12,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் மேற்கொள்ளும் பொது நிகழ்வுகளின் அட்டவணையை, இப்புதனன்று திருப்பீடம் வெளியிட்டது.
செப்டம்பர் 22ம் தேதி, இத்தாலியின் Cagliari என்ற தீவில் அமைந்துள்ள 'நலம்தரும் காற்றின் அன்னை' என்றழைக்கப்படும் மரியன்னையின் திருத்தலத்திற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வதில் ஆரம்பமாகும் திட்டங்கள் வெளியிடப்பட்டன.
இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 29, ஞாயிறன்று
கடைபிடிக்கப்படும் மறைகல்வி ஆசிரியர்கள் நாளையொட்டி புனித பேதுரு
பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தை திருப்பலி நிகழ்த்துவார்.
செப்டம்பர் 30ம் தேதி கர்தினால்கள் கூட்டத்தை முன்னின்று நடத்தும் திருத்தந்தை, இக்கூட்டத்தில், முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், மற்றும் 2ம் ஜான்பால் ஆகியோரை, புனிதர்களாக உயர்த்தும் நாளை அறிவிப்பார்.
அக்டோபர் மாதம் 4ம் தேதியன்று, அசிசி நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் மரியன்னையின் நாட்களில் வத்திக்கானில் மாலை செப வழிபாட்டையும், ஞாயிறு திருப்பலியையும் முன்னின்று நடத்துவார்.
நவம்பர் மாதத் துவக்கத்தில் கொண்டாடப்படும் அனைத்து ஆன்மாக்களின் திருநாளையொட்டி, கத்தோலிக்கத் திருஅவையில் 2012ம் ஆண்டு மறைந்த கர்தினால்கள், ஆயர்கள் அனைவரையும் நினைவுகூரும் திருப்பலியை நவம்பர் 4ம் தேதி, திங்களன்று திருத்தந்தை நிறைவேற்றுவார்.
நவம்பர் 24, ஞாயிறன்று கொண்டாடப்படும் கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று, நடைபெறும்
நம்பிக்கை ஆண்டின் இறுதி நாள் திருப்பலியை புனித பேதுரு பசிலிக்காப்
பேராலய வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றுவார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. அமைதியை நிலைநாட்டுவதில் உண்மையான தலைவரின் பெருமை அடங்கியுள்ளது - முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham
செப்.12,2013. அமைதியைத் தேடுவதிலும், அதனை நிலைநாட்டுவதிலும் உண்மையான தலைவரின் பெருமை அடங்கியுள்ளது, போரையும்
அழிவையும் கொணர்வதில் அல்ல என்று சிரியா நாட்டு தமாஸ்கு நகரின் மெல்கத்திய
வழிபாட்டு முறை கிரேக்க கத்தோலிக்க முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham அவர்கள் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசுத்தலைவர் பாரக் ஒபாமாவுக்கு எழுதியுள்ள ஒரு மடலில் இவ்வாறு கூறியுள்ள முதுபெரும் தந்தை 3ம் Gregory Laham அவர்கள், வல்லரசு என்பது அமைதியின் சக்தியை நிலைநாட்டும் ஓர் அரசு என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
வன்முறை வழி சிந்திப்பது அறிவு மிகுந்தவர்களின் வழியல்ல என்று கூறியுள்ள முதுபெரும் தந்தை Laham அவர்கள், இயேசுவின் வார்த்தைகளுக்கு உலகத் தலைவர்கள் மீண்டும் செவிசாய்த்தால், கலாச்சாரம், மனித மாண்பு, சுதந்திரம், அன்பு என்ற உயர்ந்த விழுமியங்களின் அடிப்படையில் மனித சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் தன் மடலில் சுட்டிக்காடியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள்
நோக்கி தற்போது உலகத் தலைவர்களும் சிரியாவின் தலைவர்களும் சிந்திக்க
முனைந்திருப்பது நம்பிக்கை தரும் முயற்சி என்று கூறியுள்ள முதுபெரும் தந்தை
Laham அவர்கள், கிறிஸ்தவர்களின் செபங்கள் தொடரவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.
ஆதாரம் : Fides
6. இரு உலகப் போர்கள் நமக்குப் பாடங்களாக அமைய வேண்டும் - முதுபெரும் தந்தை Kirill
செப்.12,2013. கடந்த நூற்றாண்டில் இரு உலகப் போர்கள் வழியாக மனிதகுலம் அனுபவித்த கொடுமைகளும், 21ம்
நூற்றாண்டின் துவக்கத்தில் அமேரிக்கா சந்தித்த உயிர் இழப்புக்களும்
நமக்குப் பாடங்களாக அமைய வேண்டும் என்று இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ
சபையின் முதுபெரும் தந்தை Kirill அவர்கள் கூறியுள்ளார்.
2001ம் ஆண்டு, செப்டம்பர் 11, அமெரிக்காவில் நிகழ்ந்த தாக்குதல்களின் 12ம் ஆண்டு நினைவையொட்டி, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்களுக்கு, முதுபெரும் தந்தை Kirill அவர்கள் அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
சிரியாவிலும், மத்தியக்
கிழக்குப் பகுதியிலும் அமைதி முயற்சிகள் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே
நடைபெற வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பம்
துவங்கி, உலகெங்கும்
உள்ள அனைத்து மதத் தலைவர்களும் கூறும் அறிவுரைகளுக்கு அமெரிக்க அரசுத்
தலைவரும் ஏனைய தலைவர்களும் செவி மடுப்பர் என்ற தன் நம்பிக்கையை முதுபெரும்
தலைவர் Kirill வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, எக்காரணம் கொண்டும், வெளிநாட்டுப் படைகள் சிரியாவில் இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்படக் கூடாது என்றும், அத்தகைய முயற்சி சிரியாவைத் தாண்டி வேறுபல நாடுகளில் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சூழலை உருவாக்கும் என்றும் இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin அவர்கள், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆதாரம் : Fides / AsiaNews
7. உலகெங்கும் வீணாக்கப்படும் 130 கோடி டன் எடையுள்ள உணவுப் பொருள்களால் பொருளாதார அழிவும் உருவாகிறது - ஐ.நா.அறிக்கை
செப்.12,2013. ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் வீணாக்கப்படும் 130 கோடி டன் எடையுள்ள உணவுப் பொருள்களால் 75,000 கோடி டாலர்கள் அளவுக்கு பொருளாதார அழிவும் உருவாகிறது என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.
“வீணாகும் உணவு உலகில் பதிக்கும் தடங்கள்” என்ற தலைப்பில் இப்புதனன்று ஐ.நா.வின் மனித மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், உணவுப் பொருள்கள் வீணாவதால், சுற்றுச்சூழலும் பெருமளவு பாழாகிறது என்று கூறப்பட்டுள்ளது.
உணவுப் பொருள்களை உருவாக்குவதற்கு, பெருமளவு நீர் பயன்படுத்தப்படுவதால், அந்த உணவு உண்ணப்படாமல் எறியப்படும்போது, இரஷ்யாவில் ஓடும் Volga என்ற பெரும் நதியில் ஓராண்டு ஓடும் அளவு நீர் வீணாக்கப்படுகிறது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதேபோல், உலகில் வீணாக்கப்படும் உணவு, 1400 கோடி ஹெக்டேர் நிலத்தில் பயிராகும் உணவுக்கு இணையானது என்ற தகவலையும் இவ்வறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகில் 87 கோடி மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்ற நிலையில், நாம்
தயாரிக்கும் உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி வீணாகிறது என்பது
ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி என்று உலக உணவு வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
'சிந்திப்பீர், உண்பீர், சேமிப்பீர் - உணவுத் தடங்களைக் குறைப்பீர்' (‘Think Eat Save - Reduce Your Foodprint!’) என்பது இவ்வாண்டு ஐ.நா. விடுத்துள்ள ஓர் அழைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment