செய்திகள் - 11.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. காலியாகிவரும் துறவு இல்லங்கள் வறியோருக்குப் புகலிடம் தரும் இல்லங்களாக மாறவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்
2. உரோம் நகரின் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை செலவிட்ட நேரம்
3. அரசியல் முறைகளைக் காட்டிலும் அனைத்து மனிதரும் செபத்தில் இணைவதால் அமைதி சாத்தியமாகும் - கர்தினால் Bráz de Aviz
4. ஆயுத விற்பனையைக் குறித்து திருத்தந்தை சங்கடமான கேள்வியை எழுப்பியுள்ளார் - பேராயர் சில்வானோ தொமாசி
5. இராணுவ முயற்சிகள் சிரியாவில் எவ்வித பயனுமற்ற வகையில் துன்பங்களை உருவாக்கும் - அமெரிக்க ஆயர்கள் பேரவை
6. பாலஸ்தீன அரசுத் தலைவர் பேராயர் நிக்கோல்ஸ் அவர்களுடன் சந்திப்பு
7. "நாங்கள் விரும்பும் உலகம்: பத்து இலட்சம் குரல்கள்" - ஐ.நா. அறிக்கை
8. பேராயர் பீட்டர் பால் பிரபு அவர்கள் இறையடி சேர்ந்தார்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. காலியாகிவரும் துறவு இல்லங்கள் வறியோருக்குப் புகலிடம் தரும் இல்லங்களாக மாறவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்
செப்.11,2013.
உரோம் நகரிலும் இன்னும் உலகின் பல இடங்களிலும் காலியாகிவரும் துறவு
இல்லங்கள் வறியோரை வரவேற்று புகலிடம் தரும் இல்லங்களாக மாறவேண்டும் என்று
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்திவரும் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்திற்கு இச்செவ்வாயன்று மாலையில் சென்றிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மையத்தில் பணிபுரிவோர் மற்றும் அங்கு உதவிகள் பெறும் புலம்பெயர்ந்தோர் ஆகியோரைச் சந்தித்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
இயேசு சபையினரைப் போலவே இன்னும் பல்வேறு துறவுச் சபையினரும், வேறு பல பிறரன்புப் பணி மையங்களை நடத்தும் அனைவரையும் பாராட்டியத் திருத்தந்தை, பாதுக்காப்பது, பணியாற்றுவது, பயணிப்பது ஆகிய மூன்று கருத்துக்களில் தன் உரையை வழங்கினார்.
தகுதியான முறையில் இறைவனைப் புரிந்துகொள்ள நமக்கு பாடங்கள் சொல்லித்தரும் சிறந்த ஆசிரியர்கள் வறியோரே என்று கூறியத் திருத்தந்தை, வறியோரிடம் காணப்படும் நலிவுற்ற நிலை நமது தன்னலக் கவசங்களை நீக்கிவிட்டு, எளிமையான முறையில் வாழ அழைப்பு விடுக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இயேசு சபையை நிறுவிய புனித லொயொலா இஞ்ஞாசியார், சமுதாயத்தில் நலிந்தோரை வரவேற்கும் பாங்கினைச் சொல்லித்தந்தார் என்றும், அவர்
வழியில் இயேசு சபைத் தலைவராக இருந்த அருள் பணியாளர் பேத்ரோ அருப்பே
அவர்கள் வாழ்வில் அனைத்தையும் இழந்த புலம்பெயர்ந்தொருக்கென பணி மையங்களை
நிறுவ 1981ம் ஆண்டு முக்கியமான ஒரு முடிவெடுத்தார் என்றும் திருத்தந்தை
எடுத்துரைத்தார்.
பணியாளர்கள் குறைவினால் காலியாகும் துறவு இல்லங்கள், கிறிஸ்துவின்
காயப்பட்ட உடலைப் பேணிக் காக்கும் இல்லங்களாக மாற வேண்டும் என்ற குறிப்பான
வேண்டுகோளை திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
மேலும், தீமைக்கு எதிரான போர் ஒன்றே நாம் அனைவரும் இவ்வுலகில் மேற்கொள்ளவேண்டிய போர், அமைதிக்காக வேண்டுவோம் என்ற Twitter செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று மாலை ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. உரோம் நகரின் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில் திருத்தந்தை செலவிட்ட நேரம்
செப்.11,2013. செப்டம்பர் 10, இச்செவ்வாயன்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தும் Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில் செலவிட்ட நேரத்தைக் குறித்து திருப்பீட பேச்சாளர் அருள்பணியாளர் Federico Lombardi செய்தியாளர்களிடம் விவரங்களை எடுத்துரைத்தார்.
உரோம் நகரில் அமைத்துள்ள Gesu எனப்படும்
புகழ்பெற்ற கோவிலின் அருகே அமைந்துள்ள இந்த மையத்தில் பணிபுரிவோர் மற்றும்
இங்கு உதவிகள் பெறும் புலம்பெயர்ந்தோர் என 500க்கும் அதிகமானோரை, ஊடகங்களின் ஊடுருவல் ஏதுமின்றி, தனிப்பட்ட முறையில் திருத்தந்தை சந்தித்தார்.
சூடான் நாட்டைச் சேர்ந்த Adam என்ற இளைஞரும், சிரியா நாட்டைச் சேர்ந்த Carol என்ற இளம்பெண்ணும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட பின்னர், திருத்தந்தை கூடியிருந்தோருக்கு ஓர் உரை வழங்கினார்.
"அவர்களைப் போலவே" என்ற மையக் கருத்துடன் இயேசு சபை உலகத் தலைவர் அருள் பணியாளர் Adolfo Nicolas அவர்கள்
எழுதியிருந்த ஒரு செபம் வேண்டப்பட்டது. புலம் பெயர்ந்தோர் பணியை இயேசு
சபையில் உருவாக்கிய முன்னாள் தலைவர் அருள்பணியாளர் பேத்ரோ அருப்பே
அவர்களின் கல்லறை Gesu கோவிலில்
அமைந்துள்ளது. திருத்தந்தையும் புலம்பெயர்ந்தோரின் இரு பிரதிநிதிகளும்
அக்கல்லறையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Astalli புலம்பெயர்ந்தோர் மையத்தில் 2012ம் ஆண்டு மட்டும் 21,000க்கும் அதிகமான புலம் பெயர்ந்தோர் உதவிகள் பெற்றுள்ளனர் என்று CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. அரசியல் முறைகளைக் காட்டிலும் அனைத்து மனிதரும் செபத்தில் இணைவதால் அமைதி சாத்தியமாகும் - கர்தினால் Bráz de Aviz
செப்.11,2013. மனித வரலாறு பல போர்களைச் சந்தித்துள்ளது எனினும், தற்போதைய உலகமயமாக்கல் என்ற போக்கின் ஒரு பக்க விளைவாக, உலகின் ஒரு பகுதியில் நடக்கும் போர், அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்க்கிறது, அமைதியைத் தேடவைக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில், சிரியாவில் அமைதி உருவாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளைத் தொடர்ந்து, அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் João Bráz de Aviz அவர்கள், Zenit கத்தோலிக்க நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில், இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை சனிக்கிழமையன்று மேற்கொண்ட வழிபாட்டு முயற்சிகளில் அனைத்து மதத்தவரையும் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு, உலகில் மத நம்பிக்கையுள்ளோர் அனைவருமே அமைதியை நாடுகின்றனர் என்பதைத் தெளிவாக்கியது என்று கர்தினால் Bráz de Aviz அவர்கள் கூறினார்.
அரசியல்
முறைகள் வழியாக அமைதியைக் கொணர்வதைக் காட்டிலும் அமைதியை விரும்பும்
அனைத்து மனிதரும் செபத்தில் இணைவதால் அமைதி சாத்தியமாகும் என்பதை
திருத்தந்தையின் முயற்சிகள் தெளிவாக்குகின்றன என்பதை கர்தினால் Bráz de Aviz அவர்கள் சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : Zenit
4. ஆயுத விற்பனையைக் குறித்து திருத்தந்தை சங்கடமான கேள்வியை எழுப்பியுள்ளார் - பேராயர் சில்வானோ தொமாசி
செப்.11,2013. உலகில் இன்று உருவாகும் மோதல்கள் தகுந்த காரணங்களுடன் மேற்கொள்ளப்படும் போராட்டங்களா அல்லது, ஆயுத விற்பனையை வளர்க்கும் முயற்சிகளா என்ற சங்கடமான கேள்வியை, திருத்தந்தை எழுப்பியுள்ளார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் திருப்பீடத்தின் நிரந்தர பார்வையாளராக பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் உலக அமைதிக்கென மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில், ஆயுத விற்பனை என்ற கவலைதரும் போக்கினைக் குறித்து ஆழ்ந்த கேள்விகளை திருத்தந்தை எழுப்பியுள்ளார் என்று பேராயர் தொமாசி கூறினார்.
கடந்த ஆண்டு மட்டும் உலகில் விற்பனையான ஆயுதங்களின் மதிப்பு 1,75,000 கோடி டாலர்கள் என்று குறிப்பிட்ட பேராயர் தொமாசி, அதிர்ச்சியூட்டும் இந்த அளவு பணம் மக்களின் வறுமையைத் துடைக்கும் முயற்சிகளுக்குச் செலவிடப்பட்டிருந்தால், எத்தனையோ போர்களை நாம் நிறுத்தியிருக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
ஆதாரம் : Zenit
5. இராணுவ முயற்சிகள் சிரியாவில் எவ்வித பயனுமற்ற வகையில் துன்பங்களை உருவாக்கும் - அமெரிக்க ஆயர்கள் பேரவை
செப்.11,2013. சிரியாவில் போர் நிறுத்தத்தை உறுதி செய்து, போரிடும்
குழுக்களை பேச்சுவார்த்தையில் ஈடுபடத்தும் முயற்சிகளை அமெரிக்க அரசு
மேற்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க ஆயர்கள் பேரவை அரசிடம்
விண்ணப்பித்துள்ளது.
36
ஆயர்களைக் கொண்ட அமெரிக்க ஆயர் பேரவையின் உயர்மட்ட குழுவொன்று வாஷிங்டன்
நகரில் இப்புதன் விழாயன் ஆகிய நாட்கள் மேற்கொண்ட ஒரு கூட்டத்தின் முதல்
நாளன்று இவ்விண்ணப்பம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இராணுவ முயற்சிகள் சிரியாவில் எவ்வித பயனுமற்ற வகையில் மேலும் துன்பங்களை உருவாக்கும் என்றும், அரசியல் தீர்வுகளை பேச்சுவார்த்தைகளே உருவாக்கமுடியும் என்றும் ஆயர்கள் தங்கள் விண்ணப்பத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
இராணுவத் தாக்குதல்களில் பணத்தைச் செலவிடுவதற்குப் பதில், துயர்துடைப்புப் பணிகளுக்கு இன்னும் அதிகப் பணத்தை ஒதுக்கும் முடிவுகளை அரசு எடுக்கவேண்டும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
மத வேறுபாடுகள் ஏதுமின்றி துயர் துடைப்புப் பணிகள் செய்யப்படுவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆயர்கள், கிறிஸ்தவர்கள் உட்பட சிறுபான்மைச் சமுதாங்களுக்கு அதிக அக்கறை காட்டப்படவேண்டும் என்பதையும் எடுத்துரைத்துள்ளனர்.
ஆதாரம் : Zenit
6. பாலஸ்தீன அரசுத் தலைவர் பேராயர் நிக்கோல்ஸ் அவர்களுடன் சந்திப்பு
செப்.11,2013.
புனித பூமியின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கத்தோலிக்கத் திருஅவை எப்போதும்
ஆர்வம் கொண்டுள்ளது என்று இங்கிலாந்து பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ்
அவர்கள் கூறினார்.
பாலஸ்தீன நாட்டின் அரசுத் தலைவர் Mahmoud Abbas அவர்கள், பிரித்தானியாவில் மேற்கொண்டுள்ள பயணத்தின்போது, இச்செவ்வாயன்று பேராயர் நிக்கோல்ஸ் அவர்களைச் சந்தித்தார்.
கத்தோலிக்கத் திருஅவையும், குறிப்பாக
இங்கிலாந்து தலத்திருஅவையும் புனித பூமியின் நலனில் காட்டிவரும்
அக்கறையைக் குறித்து பேராயர் நிக்கோல்ஸ் இச்சந்திப்பின்போது
எடுத்துரைத்தார்.
இஸ்ரேல் அரசு தற்போது கட்டிவரும் பாதுகாப்பு அரண் என்ற திட்டம், கிறிஸ்தவர்களின் குடியிருப்புக்களையும், பல கிறிஸ்துவ நிறுவனங்களின் நிலங்களையும் விழுங்கிவருகிறது என்ற கவலை இச்சந்திப்பின்போது வெளியிடப்பட்டது.
ஆதாரம் : ICN
7. "நாங்கள் விரும்பும் உலகம்: பத்து இலட்சம் குரல்கள்" - ஐ.நா. அறிக்கை
செப்.11,2013. உலகில் நிலவும் கொடுமையான வறுமையைப் போக்குதல், அனைவரும் சமத்துவம், நீதி, அமைதி
ஆகிய வழிகளில் வாழ்தல் ஆகியவை 2015ம் ஆண்டுக்குள் நாம் நிறைவேற்றக்கூடிய
மில்லேன்னிய இலக்குகள் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
"நாங்கள்
விரும்பும் உலகம்: பத்து இலட்சம் குரல்கள்" என்ற தலைப்பில் 88 நாடுகளில்
மக்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ள கருத்துக்கள் அடங்கிய ஓர் அறிக்கையை
இச்செவ்வாயன்று ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்ட பான் கி மூன்
அவர்கள் இவ்வாறு கூறினார்.
‘மில்லேன்னிய இலக்குகள் 2015’ என்ற திட்டத்தை நோக்கி உலகின் ஒவ்வொரு நாடும் முயற்சிகள் மேற்கொண்டுவரும் இவ்வேளையில், சமுதாயத்தில் குரல் எழுப்ப திறனற்ற வறியோரிடமிருந்து திரட்டப்பட்ட கருத்துக்கள், நமது மில்லேன்னிய இலக்குகளை மறு பரிசீலனை செய்ய உதவும் என்று பான் கி மூன் இத்திட்டத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
கேட்கப்பட
முடியாத மக்களின் குரல்களைக் கேட்பது அரசுகளுக்கு பெரும் உதவியாக
இருக்கும் என்று ஐ.நா. முன்னேற்றத் திட்டக் குழுவின் தலைவர் ஹெலன் கிளார்க்
அவர்கள் கூறினார்.
ஆதாரம் : UN
8. பேராயர் பீட்டர் பால் பிரபு அவர்கள் இறையடி சேர்ந்தார்
செப்.11,2013. ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிய பேராயர் பீட்டர் பால் பிரபு அவர்கள் இச்செவ்வாய் இரவு, தன் 82வது வயதில் இறையடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
1931ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி சென்னையில் பிறந்த பிரபு அவர்கள், 1955ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தில் பணியாற்றினார்.
இறையியலிலும், திருஅவை சட்டங்களிலும் பட்டங்கள் பெற்ற இவர், 1962ம் ஆண்டு திருஅவையின் அரசுத் துறையில் தன் பணிகளைத் துவங்கினார்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் பயணிகள் திருப்பீட அவையில் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இவர், 1993ம் ஆண்டு ஜிம்பாப்வே நாட்டில் திருப்பீடத் தூதராகப் பொறுப்பேற்று, ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியபின், 2002ம் ஆண்டு ஒய்வு பெற்றார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
No comments:
Post a Comment