செய்திகள் - 09.09.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, தூய ஆவி மற்றும் இயேசுவின் கொடை
2. திருத்தந்தை பிரான்சிஸ்: இயேசுவின் சிலுவை வழியைப் பின்செல்லுங்கள்
3. திருத்தந்தை : தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் நம் ஒவ்வொருவர் இதயத்திற்குள்ளும் இடம்பெற வேண்டும்
4. திருத்தந்தை பிரான்சிஸ் : மன்னிப்பு, உரையாடல், ஒப்புரவு ஆகியவையே அமைதியின் வார்த்தைகளாகும்
5. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
6. பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபிக்கு ஆதரவாக பிரிட்டன் மனித உரிமை குழு
7. இந்தியாவின் 22 நகரங்களுக்கு அன்றாட தண்ணீர் பற்றாக்குறை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, தூய ஆவி மற்றும் இயேசுவின் கொடை
செப்.09,2013. கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, எதிலும் நல்லதையே எதிர்நோக்கும் மனநிலை அல்ல, மாறாக அது தூய ஆவி மற்றும் இயேசுவின் கொடை என்றார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்திங்களன்று காலை வத்திக்கானின் சாந்தா மார்த்தா இல்லக் கோவிலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, விசுவாசம் மற்றும் பிறரன்பைவிட குறைவாகவே அறியப்பட்டுள்ள இந்த கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, எதிலும் நல்லதை எதிர்நோக்கும் மனித இயல்போடு இணைத்துக் குழப்பப்படக்கூடாது என்றார்.
கிறிஸ்தவனுக்கு நம்பிக்கை என்பது இயேசுவே என்ற திருத்தந்தை, பாதியளவு தண்ணீர் உள்ள கோப்பையை 'பாதி நிரம்பிய கோப்பையாகப்' பார்க்கும் மனநிலையல்ல கிறிஸ்தவ நம்பிக்கை என்பது, என்றார்.
கிறிஸ்தவ நம்பிக்கை நம்மை ஒருபோதும் ஏமாற்றுவதில்லை, ஏனெனில் அது இறைவனால் வழங்கப்படும் கொடை, எனவும் கூறினார் திருத்தந்தை.
நம் நம்பிக்கையின் காரணமாக இருப்பவர் இயேசுவே என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவுக்கும், தேவையிலிருக்கும் இறைமக்களுக்கும் அருகாமையில் இருக்கும் அருள்பணியாளர்கள், நம்பிக்கையின் அடையாளங்கள் மட்டுமல்ல, இயேசுவில் இந்த நம்பிக்கையை வாழ்பவர்கள் என்றார்.
மகிமையின் நம்பிக்கையாக இருக்கும் நமதாண்டவர், நமக்கு
நம்பிக்கையையும் நம்பிக்கை மீதான ஆர்வத்தையும் வழங்குகிறார் என மேலும் தன்
மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ்: இயேசுவின் சிலுவை வழியைப் பின்செல்லுங்கள்
செப்.09,2013. இயேசுவைப் பின்செல்வது என்பது அவரின் வெற்றிப்பவனியில் பங்கு கொள்வது அல்ல, ஆனால்
அவரின் கருணைநிறைந்த அன்பில் பங்குகொண்டு ஒவ்வொரு மனிதருக்கும் மனித
சமுதாயம் முழுவதற்குமான அவரின் மாபெரும் கருணைப் பணியில் சேருவதாகும் என்று
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு
நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய ஒரு
இலட்சம் பயணிகளுக்கு மூவேளை செப உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் சிலுவை வழியில் அவரைப் பின்செல்லுமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.
இயேசுவின்
சீடர்களாய் இருப்பதற்குரிய வரைமுறைகள் குறித்து விளக்கும் இஞ்ஞாயிறு
நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவின் அன்புக்கு முன்பாக வேறு எதையும் வைக்க வேண்டாமென்றும், ஒவ்வொருவரும் தனது சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்செல்ல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
பலர் இயேசுவை, சிறப்பாக, புதுமைகள் நடந்தபோது அவரைப் பின்செல்ல விரும்பினர், ஆனால் இயேசு அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை என்று விளக்கிய திருத்தந்தை, எருசலேமில் தமக்குக் காத்திருப்பது என்ன என்பதை நன்றாக அறிந்திருந்த இயேசு, நம் பாவங்களுக்கு மன்னிப்பாக, அவர்
தம்மையே தியாகம் செய்த சிலுவையின் வழியில் தந்தை அவரை நடக்கக்
கேட்டுள்ளார் என்பதையும் இயேசு அறிந்திருந்தார் என்றும் கூறினார்.
தந்தை தம்மிடம் கொடுத்த பணியில் இயேசு நம்மையும் இணைக்க விரும்புகிறார் என்றும், உயிர்ப்புக்குப் பின் இயேசு இப்பணியைத் தம் சீடர்களுக்கு அளித்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.
சீடர்கள் இயேசுவில் மாபெரும் பொருளைக் கண்டுணர்வதால் அவர்கள் அனைத்தையும் துறந்து தம்மைப் பின்செல்ல வேண்டும், நற்செய்தியின் தத்துவத்தில், அன்பு மற்றும் பணியின் தத்துவத்தில் கிறிஸ்தவர்கள் எல்லாவற்றிலிருந்தும் பற்றுக்களை அறுக்கின்றனர், எல்லாவற்றையும் மீண்டும் கண்டுகொள்கின்றனர் என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சீடர்களைப் போன்று, கிறிஸ்துவுக்காக, குடும்பம், உறவுகள், வேலை, கலாச்சாரம், பொருள்கள்
ஆகியவற்றைத் துறக்கும் கிறிஸ்தவர்கள் அவரில் அனைத்தையும் புதிதாகக்
கண்டுகொள்கிறார்கள் என்றும் ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்
திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை : தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் நம் ஒவ்வொருவர் இதயத்திற்குள்ளும் இடம்பெற வேண்டும்
செப்.09,2013. சிரியா, லெபனன், இஸ்ராயேல், பாலஸ்தீனம், ஈராக், எகிப்து
உள்ளிட்ட மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ தொடர்ந்து செபிக்குமாறு
மீண்டுமொருமுறை அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொருவரும் கொண்டிருக்கவேண்டிய நல்லதையே தேர்ந்தெடுக்கும் மனநிலை, சகோதரத்துவ பகைமையையும், அது உருவாக்கும் பொய்களையும், அனைத்து வன்முறைகளையும், ஆயுத பயன்பாட்டையும், ஆயுதங்களின் சட்டவிரோத வியாபாரத்தையும் ஒதுக்கித்தள்ளுவதாக இருக்கவேண்டும் என இஞ்ஞாயிறு நண்பகல், தூய பேதுரு வளாகத்தில் வழங்கிய மூவேளை செப உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.
அமைதிக்கானத் தேடல் என்பது மிக நீளமானது, அது பொறுமையையும் விடாமுயற்சியையும் எதிர்பார்க்கின்றது என்ற பாப்பிறை, தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் நம் ஒவ்வொருவர் இதயத்திற்குள்ளும் இடம்பெற வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்ததார்.
தீமைக்கு எதிரான போராட்டத்தை நம் உள்மனதிற்குள் நாம் நடத்தாவிடில், ஏனைய போர்கள் அனைத்தும் பயனற்றவையே எனவும் கூறினார் திருத்தந்தை.
அமைதி மற்றும் பொதுநலனில் ஆர்வம் கொண்டவர்களாக, பகைமை, ஆயுத வியாபாரம், வன்முறை ஆகிய தீமைகளை எதிர்த்துப்போராட ஒவ்வொருவரும் உறுதிகொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
சனிக்கிழமையன்று
இரவு இடம்பெற்ற அமைதிக்கான செபவழிபாட்டில் கலந்துகொண்டு மத்தியக்கிழக்குப்
பகுதிக்கென செபித்த அனைவருக்கும் தன் நன்றியையும் தெரிவித்தார்
திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் : மன்னிப்பு, உரையாடல், ஒப்புரவு ஆகியவையே அமைதியின் வார்த்தைகளாகும்
செப்.09,2013. படைப்பின் சிகரமான மனிதர், படைப்பின் அழகையும் நன்மைத்தனத்தையும் தியானிப்பதை நிறுத்தும்போதும், தனது தன்னலத்துக்குள் நுழையும்போதும், வன்முறையும், பிரிவினையும், முரண்பாடும் போரும் இவ்வுலகில் இடம்பெறுகின்றன எனறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து, 11 மணிவரை இடம்பெற்ற செப வழிபாட்டிற்குத் தலைமைத் தாங்கி வழிநடத்திய திருத்தந்தை, மனிதர் தன்னைப்பற்றி மட்டுமே, தனது சொந்த ஆதாயங்களை மட்டுமே நினைக்கும்போதும், தன்னை மையப்படுத்தும்போதும், ஆட்சி அதிகார நிலைகளால் கவரப்படுவதற்குத் தன்னை அனுமதிக்கும்போதும், கடவுளின் இடத்தில் தன்னை வைக்கும்போதும், எல்லா உறவுகளும் முறிந்து விடுகின்றன, அனைத்தும் பாழ்படுத்தப்படுகின்றன என்று கூறினார்.
‘நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியா?’ என்று கேட்ட காயினின் மறுபிறப்பை ஒவ்வொரு வன்முறைச் செயலிலும், ஒவ்வொரு போரிலும், கொண்டு வருகிறோம் என்ற திருத்தந்தை, இன்றும் சகோதரருக்கு இடையேயான சண்டையின் வரலாறு தொடர்கிறது, நமது மனசாட்சி ஆழ்ந்து உறங்குகின்றது, அழிவையும், வேதனையையும் மரணத்தையும் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கவலையை வெளியிட்டார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் வத்திக்கான் பேதுரு வளாகத்தில் நடந்த இந்த செபவழிபாட்டில், இஸ்லாம் மதப் பிரதிநிதிகள் உட்பட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி
செப்.09,2013. 'நாம் ஒருபோதும் நம்பிக்கை இழக்கக்கூடாது. நாம் கேட்டுக்கொண்டிருந்தால், இறைவன் தன் அருளால் நம்மை நிரப்புவார்' என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், நம்பிக்கை இழக்காமல், தொடர்ந்து வேண்டிக்கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் குறித்து இத்திங்கள் டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.
'ஒருவர்
ஒருவருடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைகளின் பாதையை உறுதியான
தீர்மானத்துடனும் மன உறுதியுடனும் பின்பற்றுமாறு ஒவ்வொருவரையும்
வேண்டுகிறேன். அமைதிக்காகச் செபியுங்கள்', என பிறிதொரு டுவிட்டர் செய்தியையும் இத்திங்களன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. பாகிஸ்தானில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபிக்கு ஆதரவாக பிரிட்டன் மனித உரிமை குழு
செப்.09,2013. தேவநிந்தனை
சட்டத்தின் கீழ் பொய்யானக் குற்றச்சாட்டுடன் பாகிஸ்தானில் மரணதண்டனை
விதிக்கப்பட்டுள்ள ஆசியா பீபி என்ற கிறிஸ்தவ பெண்ணின் விடுதலைக்காக
பிரிட்டனின் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
குடிநீர் பிரச்னை தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தின் இறுதியில், இறைவாக்கினர் முகமதுவை பழித்துப் பேசினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் 2009ம் ஆண்டு கைதுச்செய்யப்பட்ட ஆசியா பீபி, ஐந்து குழந்தைகளின் தாயாவார்.
உலக சிறுபான்மை மக்களின் கூட்டமைப்பு என்ற குழு, ஆசியா பீபியின் விடுதலைக்காக உழைத்து வருவதுடன், அவருக்கு ஆதரவாக 5 இலட்சம் கையெழுத்துக்களையும் திரட்டத் திட்டமிட்டுள்ளது.
ஆசியா பீபி, தேவநிந்தனை சட்டத்தின் கீழ் பாகிஸ்தானில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முதல் பெண்மணியாவார்.
ஆதாரம் : ANS
7. இந்தியாவின் 22 நகரங்களுக்கு அன்றாட தண்ணீர் பற்றாக்குறை
செப்.09,2013. இந்தியாவில் உள்ள 32 முக்கியப் பெருநகரங்களில் இன்று 22 நகரங்களுக்கு அன்றாட தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என, அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இந்திய அரசுக்கு இப்பிரச்சனை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சனை எனக்கூறும் இப்புள்ளிவிவரம், இதில் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் எனவும் தெரிவிக்கிறது.
கான்பூர், அசான்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகபட்டினம், மதுரை, ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நகரங்களுக்கு போதுமான தண்ணீர் உள்ளதாகவும், தண்ணீரை பொறியாளர்கள் சரியானபடி பராமரிக்காத காரணத்தினால் இப்பிரச்சினை ஏற்படுவதாகவும் கூறும் அப்புள்ளி விபரம், டில்லியில் 40 விழுக்காடு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாகத் தெரிவிக்கிறது.
இந்தியாவில் தினசரி தண்ணீரை முறையாக பயன்படுத்தினால் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்யலாம் என்றும், தண்ணீ்ரை வீணாக்காமல் வழங்கினாலே பற்றாக்குறையை தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆதாரம் : தினமலர்
No comments:
Post a Comment