Monday, 9 September 2013

செய்திகள் - 06.09.13

செய்திகள் - 06.09.13

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், பொலிவிய அரசுத்தலைவர் சந்திப்பு

2. திருத்தந்தை பிரான்சிஸ் : திருமணத்துக்குப் போகும் ஒருவர் போன்று கிறிஸ்தவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

3. திருத்தந்தை பிரான்சிஸ் : அமைதி நல்லது, இது ஒவ்வொரு தடையையும் தகர்த்தெறிகிறது

4. அமைதிக்கான செபத்தின்போது ஐம்பது அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருள்சாதனம் நிறைவேற்றுவார்கள்

5. சிரியாவில் அமைதி நிலவ திருத்தந்தையுடன் இணைந்து இலத்தீன் அமெரிக்க நாடுகள் செபம்

6. சிரியா குறித்து திருப்பீட வெளியுறவுச் செயலர் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு

7. முதல் அனைத்துலக பிறரன்பு நாள், ஐ.நா.வுக்கு திருப்பீட அதிகாரி நன்றி

8. வீட்டுப்பணியாளர் குறித்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது

9. இந்திய நாவலாசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், பொலிவியா அரசுத்தலைவர் சந்திப்பு

செப்.,06,2013. பொலிவிய நாட்டு அரசுத்தலைவர் Juan Evo Morales Ayma அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று வத்திக்கானின் அப்போஸ்தலிக்க மாளிகையில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் பொலிவிய அரசுத்தலைவர் Morales.
பொலிவிய நாட்டின் சமய, சமூக-பொருளாதாரச் சூழல், சமூகத்தில் இடம்பெறும் ஏற்றத்தாழ்வுகளையும், ஏழ்மையையும் அகற்றுவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள், கல்வி, நலவாழ்வு, சிறார் மற்றும் முதியோர் பராமரிப்பில் பொலிவியாவுக்குக் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் பணிகள் போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன. 
தலத்திருஅவைக்கும் நாட்டுக்கும் இடையேயான உறவுகள் குறித்தும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றதாக அறிவித்த திருப்பீட பத்திரிகை அலுவலகம், அனைத்துலக நிலைமை, குறிப்பாக, சிரியாவிலும் மத்திய கிழக்கிலும் அமைதியை ஊக்குவிக்கவேண்டியதன் அவசியம் குறித்து இச்சந்திப்புக்களில் பேசப்பட்டதாகத் தெரிவித்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : திருமணத்துக்குப் போகும் ஒருவர் போன்று கிறிஸ்தவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

செப்.,06,2013. திருமணத்துக்குப் போகும் ஒருவர் போன்று கிறிஸ்தவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் இவ்வெள்ளிக்கிழமை காலையில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
லூக்கா நற்செய்தி 5ம் பிரிவு, திருச்சொற்கள் 33 முதல் 39 வரையிலான பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், பழைய தோற்பைகளில் நற்செய்தியின் புதியகூறை வைக்கும் சோதனைகளிலிருந்து வெளிவரவேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார்.
திருமணம் எனும் திருவருள்சாதனம், திருஅவையோடு கிறிஸ்து கொண்டுள்ள ஒன்றிப்பின் அடையாளமாக இருக்கின்றது என்பதை மீண்டும் மீண்டும் உரைத்த திருத்தந்தை, மணமகன் மணவிருந்தினர்களோடு இருக்கும்போது நோன்போ, சோகமோ இருக்க முடியாது என்று கூறினார்.
கிறிஸ்தவர் அடிப்படையிலே மகிழ்ச்சியானவர், இதனாலேயே திராட்சை மது பற்றி நற்செய்தியில் பேசும்போது அது விழாவைக் குறிப்பதாக இருக்கின்றது, கிறிஸ்தவ வாழ்வும் இத்தகையதே, கிறிஸ்தவ வாழ்வு இம்மகிழ்ச்சியான உணர்வை, இதயத்தின் மகிழ்வைக் கொண்டிருக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.
மேலும், கிறிஸ்துவை தனது வாழ்வின் மையமாக, தனது வாழ்வின் முழுமையாக ஏற்பது, கிறிஸ்தவக் கண்ணோட்டமாக இருக்க வேண்டும் என்று மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தியின் புதினத்தை பழைய மனப்பான்மைக்குள் திணிக்கும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றோம், இது பாவமாகும், நாம் அனைவரும் பாவிகள், இதை ஏற்க வேண்டும் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : அமைதி நல்லது, இது ஒவ்வொரு தடையையும் தகர்த்தெறிகிறது

செப்.,06,2013. அமைதி நல்லது, இது ஒவ்வொரு தடையையும் தகர்த்தெறிகிறது. ஏனெனில் அமைதி அனைத்து மனித சமுதாயத்துக்கும் உரியது, அமைதிக்காகச் செபிப்போம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வெள்ளிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pope Francis @Pontifex_en என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் தினமும் ஒன்பது மொழிகளில் எழுதிவரும் திருத்தந்தை பிரான்சிஸ், அன்பு இளையோரே, உலகின் அமைதிக்காக என்னோடு சேர்ந்து செபியுங்கள் என்று மற்றுமொரு செய்தியையும் இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்.
மேலும், இவ்வியாழனன்று தனது டுவிட்டரில், மிகக் குறைந்தவிலை கிறிஸ்தவம் என்று எதுவும் இல்லை, இயேசுவைப் பின்செல்லுதல் என்பது, தீமையையும் தன்னலத்தையும் புறக்கணித்து, பேரலைகளை எதிர்த்து நீந்துவதாகும் என்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சண்டையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழுவும் தனது தனிப்பட்ட ஆதாயத்தில்மட்டும் முடங்கிவிடாமல் இருக்குமாறு எனது அனைத்துச் சக்தியுடன் கேட்பதாக மற்றுமொரு செய்தியையும் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அமைதிக்காகச் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. அமைதிக்கான செபத்தின்போது ஐம்பது அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருள்சாதனம் நிறைவேற்றுவார்கள் 

செப்.,06,2013. சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவுவதற்கென இச்சனிக்கிழமை இரவு 7 மணிக்கு வத்திக்கான் பேதுரு வளாகத்தில் செபங்கள் தொடங்கும்போது, அவ்வளாகத்தில் தூண்கள் இருக்கும் பகுதியில் ஐம்பது அருள்பணியாளர்கள் ஒப்புரவு அருள்சாதனம் நிறைவேற்றுவார்கள் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
இறைவனோடும், உடன்வாழும் சகோதர சகோதரிகளோடும் ஒப்புரவை  ஏற்படுத்தும் மனிதரின் இதயங்களில் உண்மையான அமைதி பிறக்கின்றது என்று சொல்லி, செபங்கள் நடைபெறும்போது, ஒப்புரவு அருள்சாதனம் நிறைவேற்றப்பட வேண்டுமெனத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே கேட்டுக்கொண்டுள்ளார் என்று திருப்பீட திருவழிபாட்டு அலுவலகம் அறிவித்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அமைதிக்கான செப வழிபாட்டை ஆரம்பித்து வைப்பார். ஐந்து பகுதிகளாக நடைபெறும் இவ்வழிபாட்டில், ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் சிரியா, எகிப்து, புனிதபூமி, அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தம்பதியர் தூபக் காணிக்கை கொடுப்பார்கள்.
இரவு 11 மணிவரை நடைபெறும் இவ்வழிபாட்டின் இறுதியில் திருநற்கருணை ஆசீர் அளிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. சிரியாவில் அமைதி நிலவ திருத்தந்தையுடன் இணைந்து இலத்தீன் அமெரிக்க நாடுகள் செபம்

செப்.,06,2013. சிரியாவில் அமைதிக்கு எதிராக வைக்கப்படும் கடும் அச்சுறுத்தல்கண்டு யாரும் ஒதுங்கிவிடக்கூடாது என்று பெரு நாட்டு ஆயர் பேரவை கூறியது. 
சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவுவதற்குச் செபிக்குமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஞாயிறு மூவேளை செப உரையில் உலகினருக்கு விடுத்த அழைப்பு குறித்துப் பேசிய பெரு நாட்டு ஆயர் பேரவை இவ்வாறு கூறியது. 
மேலும், உலகின் குறிப்பாக, சிரியாவில் அமைதிக்காக இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இச்சனிக்கிழமை செப வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
இனி ஒருபோதும் சண்டை வேண்டாம், அமைதி என்பது ஒரு கொடை, அது பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அழைப்புடன் பெரு, அர்ஜென்டினா, சிலே, உருகுவாய் உட்பட அனைத்து தென் அமெரிக்க நாடுகளின் பங்குகளும், பக்த சபைகளும், பக்த இயக்கங்களும் செபம் செய்யவுள்ளன.
மேலும், சிரியாவில் இடம்பெறும் வன்முறை, மனித உரிமை மீறல்கள், அந்நாட்டுக்கெதிராக அறிவிக்கப்பட்டுள்ள இராணுவத் தாக்குதல்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள செபம் மற்றும் நோன்பு நாள் உதவும் என அந்நாட்டின் சிரியாவின் கிறிஸ்தவரும், கிறிஸ்தவரல்லாதவரும் நம்பிக்கையோடு உள்ளனர் என அந்நாட்டு கிறிஸ்தவ அரசியல்வாதி Maria Saadeh கூறினார்.
சிரியாவின் கிறிஸ்தவர்கள் திருத்தந்தையின் உணர்வையும் ஆவலையும் பகிர்ந்து கொள்கின்றனர் எனவும் Saadeh, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார். 

ஆதாரம் : Fides

6. சிரியா குறித்து திருப்பீட வெளியுறவுச் செயலர் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு
செப்.,06,2013. சிரியாவில் அமைதி நிலவுவதற்கென ஒரு நாள் செபம் மற்றும் நோன்பு கடைப்பிடிப்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பு குறித்து கலந்துபேசுவதற்கென திருப்பீடத்துக்கான நாடுகளின் தூதர்களைச் சந்தித்தார் திருப்பீட வெளியுறவுச் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி.
பேராயர் மம்பெர்த்தி அவர்கள் இவ்வியாழனன்று 71 தூதர்களைச் சந்தித்துப் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பகிர்நதுகொண்ட திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி, சிரியாவில் உண்மையான உரையாடலுக்கு வழிவகுக்கும்  வன்முறையை நிறுத்துவதே முக்கியமான முதல் நடவடிக்கை என்று கூறினார்.
பேச்சுவார்த்தைமூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றும், கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்துச் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் திருப்பீடம் விரும்புவதாகவும் அருள்பணியாளர் லொம்பார்தி தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. முதல் அனைத்துலக பிறரன்பு நாள், ஐ.நா.வுக்கு திருப்பீட அதிகாரி நன்றி

செப்.,06,2013. முத்திப்பேறு பெற்ற கொல்கத்தா அன்னை தெரேசா இறந்த நாளை அனைத்துலக பிறரன்பு நாளாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் அறிவித்து கடைப்பிடித்தது குறித்த மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
அன்னை தெரேசா இறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியான இவ்வியாழனன்று முதல் அனைத்துலக பிறரன்பு நாள் சிறப்பிக்கப்பட்டதை வரவேற்று அறிக்கை வெளியிட்ட, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட், நாடுகளில் காணப்படும் மனிதத் துன்பங்களை அகற்றுவதற்குப் பிறரன்பு மிகவும் அவசியம் என்பதை இந்நாள் நினைவுபடுத்துகின்றது என்று கூறினார்.
அறிவியலும், தொழில்நுட்பமும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், எண்ண முடியாத அளவில் இலட்சக்கணக்கான மக்கள் பல்வேறு விதமான வறுமையை, பொருளாதார அளவில் மட்டுமல்லாமல் ஆன்மீக அளவிலும் அனுபவிக்கின்றனர் என்றும் பேராயர் சுள்ளிக்காட் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை வரலாற்றில் எண்ணற்ற ஆண்களும் பெண்களும் தன்னலமற்ற அன்புக்குச் சாட்சிகளாய் வாழ்ந்துள்ளனர் என்றுரைத்த பேராயர் சுள்ளிக்காட், அன்னை தெரேசா இறந்த நாளை அனைத்துலக பிறரன்பு நாளாக அறிவித்திருப்பதற்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. வீட்டுப்பணியாளர் குறித்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது

செப்.,06,2013. உலகின் ஏறக்குறைய 5 கோடியே 30 இலட்சம் வீட்டுப்பணியாளர்களின் தொழில் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் ஐ.நா. ஒப்பந்தம் ஒன்று இவ்வியாழனன்று அமலுக்கு வந்துள்ளது.
ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனத்தால் 2011ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 189 நாடுகளும் இவ்வியாழன் முதல் இதனைக் கடைப்பிடிக்கச் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வார விடுமுறை, வேலை நேரங்கள், ஊதியம் உட்பட தங்களின் அடிப்படை உரிமைகளைத் தொழிலாளர்கள் இனிமேல் வலியுறுத்திக் கேட்கலாம் என்றும், பொலிவியா, இத்தாலி, மொரீசியஸ், நிக்கராகுவா, பரகுவாய், பிலிப்பீன்ஸ், தென்னாப்ரிக்கா, உருகுவாய் ஆகிய நாடுகள் உடனடியாக இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துகின்றன என்றும் ILO நிறுவனம் கூறியது.

ஆதாரம் : UN

9. இந்திய நாவலாசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொலை

செப்.,06,2013. தலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிய வணிகரைத் திருமணம் செய்துகொண்ட 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி (Sushmita Banerjee), Paktika மாநிலத்தின் Kharanaவில் அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கி மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானில் தனது வாழ்க்கை குறித்து காபூலிவாலாவின் வங்காள மனைவி என்ற பெயரில் இவர் எழுதிய நூலில் அவர் தனது ஆப்கான் கணவர் ஜான்பாஸ் கானுடன் வாழ்ந்த வாழ்க்கையை வர்ணித்துள்ளார்.
கடந்த 1995ம் ஆண்டு ஆப்கானில் இருந்து தான் தப்பி வந்தது குறித்து சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய அந்தப் புத்தகம் 2003ம் ஆண்டு இந்தியில் திரைப்படமாக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மிகவும் விற்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலிலும் இடம்பெற்றது.
அண்மையில்தான் தனது கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஆப்கானுக்கு மீண்டும் சென்றுள்ளார் பேனர்ஜி. அங்கே சையத் கமாலா என்ற பெயரில் அறியப்படும் இவர், நலவாழ்வுப் பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அங்குள்ள பெண்களின் வாழ்க்கை குறித்த ஒலி-ஒளிப் பதிவுகளையும் தனது பணி நிமித்தம் இவர் செய்துள்ளார்.

ஆதாரம் : AsiaNews
 

No comments:

Post a Comment