திருத்தந்தை: மரியா, தன் மகன் இயேசுவை நமக்களிக்கும் அன்னை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
மரியா, திருஅவையின் அன்னை என்ற விழா ஜூன் 06, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதை மையப்படுத்தி தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரியா, தம் மகன் இயேசுவை நமக்களிக்கும் அன்னை என்று குறிப்பிட்டுள்ளார்.
நம்மீது கொண்டுள்ள அன்பால் தன் வாழ்வையே கையளித்த கிறிஸ்துவின் இதயத்திடம் வழிநடத்திச் செல்லும் பாதை, மரியா எனவும், இதனாலே நாம் அவரை அன்புகூர்கிறோம் மற்றும், வணங்குகிறோம் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
தூய ஆவியார் பெருவிழா சிறப்பிக்கப்படும் ஞாயிறுக்கு அடுத்த நாள் மரியா, திருஅவையின் அன்னை என்ற விழா சிறப்பிக்கப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2018ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி அறிவித்தார்.
வரலாற்றில் மரியா, திருஅவையின் அன்னை
மரியாவை, திருஅவையின் அன்னை என, மிலான் ஆயரான புனித அம்புரோஸ், நான்காம் நூற்றாண்டிலேயே அழைத்தார். புனித அகுஸ்தீன் (354-430), “நம்பிக்கை கொண்டோரை ஒன்றிணைத்து திருஅவைக்குள் பிறக்கச் செய்ததால், கிறிஸ்துவின் உறுப்புகளின் தாயாக மரியா திகழ்கிறார்” என்று கூறினார். 1748ம் ஆண்டில் திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்களும், 1885ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் லியோ அவர்களும், மரியா, திருஅவையின் அன்னை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடைபெற்றபோது, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், மரியா, திருஅவையின் அன்னை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
No comments:
Post a Comment