Friday 17 June 2022

திருப்பீடம்: விளையாட்டு அனைவருக்கும் உரியது

 

திருப்பீடம்: விளையாட்டு அனைவருக்கும் உரியது


2016ம் ஆண்டில், "மனிதசமுதாயத்தின் பணிக்கு விளையாட்டு" என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டின் தொடர்ச்சியாக, வருகிற செப்டம்பரில் பன்னாட்டு மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒவ்வொரு மனிதரும் விளையாட்டை அனுபவிக்க உரிமை கொண்டிருக்கின்றனர் என்பதை மையப்படுத்தி, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை, இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில், வத்திக்கானில் விளையாட்டு பற்றிய பன்னாட்டு மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.   

வருகிற செப்டம்பர் மாதம் 29, 30 ஆகிய இரு நாள்களில் நடைபெறும் இவ்வுலக மாநாட்டை, கலாச்சார திருப்பீட அவை, கத்தோலிக்க கல்வி பேராயம், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் விளையாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஒத்துழைப்போடு பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை நடத்துகிறது.

“அனைவருக்கும் விளையாட்டு: ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, வாய்ப்பு” என்ற தலைப்பில் நடத்தப்படும் இம்மாநாட்டில் பெரிய விளையாட்டுகளின் அரசு அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, விளையாட்டின் மூன்று அடிப்படை கூறுகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மனிதர், கல்வி மற்றும், ஆன்மீகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுவதாய் விளையாட்டு இருக்கவேண்டியதன் முக்கியத்துவம், மற்றும், அதன்மீது அனைவருக்கும் இருக்கின்ற சமூகப்பொறுப்பு ஆகியவற்றுக்கு திருத்தந்தை அழைப்புவிடுத்து வருவது குறித்த கலந்துரையாடல்களும் இம்மாநாட்டில் இடம்பெறும்.

2016ம் ஆண்டில், "மனிதசமுதாயத்தின் பணிக்கு விளையாட்டு" என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டின் தொடர்ச்சியாக, 2022ம் ஆண்டில் வத்திக்கானில் வருகிற செப்டம்பரில் பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது.

உங்களிடம் உள்ளதில் சிறந்ததைக் கொடுங்கள் என்ற தலைப்பில், 2018ம் ஆண்டு ஜூன் முதல் தேதி, திருப்பீடம் விளையாட்டு பற்றிய முதல் ஏட்டை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...