திருநற்கருணையில், இயேசு நம்மிடம் மௌன மொழியில் பேசுகிறார்
மற்றவருக்கு, குறிப்பாக, தேவையில் இருப்போருக்கு மகிழ்வோடு பணியாற்ற நம்மையே கையளிப்பதற்கு சக்தியைத் தருமாறு கடவுளிடம் செபிப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்
மேரி தெரேசா: வத்திக்கான்
நம் வாழ்க்கையை எப்போதும், தனக்கும் மற்றவருக்கும் கொடையாக வழங்கவேண்டும் என்று, இயேசு, திருநற்கருணையின் பேருண்மையில் நம்மிடம் பேசுகிறார் என்று, ஜூன் 16, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
வத்திக்கானில் இவ்வியாழனன்று சிறப்பிக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழாவை மையப்படுத்தி தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை பதிவுசெய்துள்ள திருத்தந்தை, திருநற்கருணையின் பேருண்மையில், இயேசு நம்மிடம் மௌன மொழியில் பேசுகிறார் என்று கூறியுள்ளார்.
இயேசுவைப் பின்செல்தல் என்பது, நம் கவலைகள், அச்சங்கள் போன்றவற்றிலிருந்து வெளியேறி, வாழ்வை நம் சொந்த உடைமையாகக் கொண்டிராமல், இயேசுவுக்கும், மற்றவருக்கும் ஒரு கொடையாக வழங்குவதாகும் என்று, திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜூன் 15, இப்புதன் காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய பொது மறைக்கல்வியுரையில் ஜெர்மன் மொழி பேசும் மக்களை வாழ்த்தியபோது, வத்திக்கானில் இவ்வியாழனன்று கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம், பெருவிழா சிறப்பிக்கப்படுவது குறித்து குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மற்றவருக்கு, குறிப்பாக, தேவையில் இருப்போருக்கு மகிழ்வோடு பணியாற்ற நம்மையே கையளிப்பதற்கு சக்தியைத் தருமாறு கடவுளிடம் செபிப்போம் என்றும், அன்றாட வாழ்வில் கடவுள் சிந்தனையில் நாம் வாழ, திருநற்கருணை நமக்கு அழைப்புவிடுக்கிறது என்றும், திருத்தந்தை கூறினார்.
இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் தலைமைக்குரு கர்தினால் Mauro Gambetti அவர்கள், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழாத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றி, திருநற்கருணை பவனியையும் நடத்தினார்.
No comments:
Post a Comment