பல்சமயப் பிரதிநிதிகள்: தேர்தல்கள் சுதந்திரமாக நடைபெறவேண்டும்
இலங்கையில் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்குரிய சரியான சூழலை உருவாக்குவதற்கு, தேவைப்பட்டால் புதிய சட்டங்கள் அல்லது, சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும் - பல்சமயப் பிரதிநிதிகள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இலங்கையில் சுதந்திரமான மற்றும், நியாயமான தேர்தல்கள் நடைபெறுவது உறுதிசெய்யப்படவேண்டும் என்று, அந்நாட்டு பல்சமயத் தலைவர்கள், தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜூன் 9, இவ்வியாழனன்று அருள்பணியாளர் அனுரா பெரேரா அவர்கள் உட்பட பல்சமயப் பிரதிநிதிகள் குழு ஒன்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்துப் பேசியபோது இவ்வேண்டுகோளை முன்வைத்தது.
பொதுத் தேர்தல்களை நடத்துவதற்குரிய சரியான சூழலை உருவாக்குவதற்கு, தேவைப்பட்டால் புதிய சட்டங்கள் அல்லது, சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுமாறு அக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கை அரசுத்தலைவரின் தம்பியும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் இராஜபக்ஷே அவர்கள், அந்நாட்டை தற்போதைய மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு உட்படுத்தியதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் கிளம்பியதையடுத்து, அவர் நாடாளுமன்றத்திலிருந்து பதவி விலகிய அதே நாளில், பல்சமயப் பிரதிநிதிகள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
இன்றிலிருந்து அரசின் நடவடிக்கைகள் எதிலும் நான் ஈடுபடமாட்டேன், ஆனால் அரசியலிலிருந்து விலக மாட்டேன், விலகவும் முடியாது என்றுரைத்து பதவி விலகிய பசில் இராஜபக்ஷே அவர்கள், இராஜபக்ஷே குடும்பத்திலிருந்து பதவி விலகிய இரண்டாவது அரசியல்வாதி ஆவார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவர் வழங்கும் நிதியின் அளவுக்கு வரையறை இருக்கவேண்டும், இவ்வாறு பணத்தை வாரி இறைப்பவர்கள் தேர்தலில் நிற்பதற்கு தடைவிதிக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று பல்சமயப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இத்தகைய வேட்பாளர்கள், தங்களை மக்களின் பிரதிநிதிகள் என அறிவித்துக்கொண்டு பதவியைக் கைப்பற்றுவது தடைசெய்யப்படவேண்டும் என்று, புத்தமதக் குரு Omalpe Sobitha Thera அவர்கள் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஐம்பது நாள்களுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான போராட்டதாரர்கள் அரசுத்தலைவரின் அலுவலகத்தின் முன்பக்கத்தை ஆக்ரமித்து, இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு முதல் காரணம் நானே என்பதை அரசுத்தலைவர் ஏற்று, பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர் என்று யூக்கா செய்தி கூறியுள்ளது.
இதற்கிடையே, இலங்கையிலுள்ள சிறாரில் ஏறத்தாழ பாதிப்பேருக்கு, மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெப் அறிவித்துள்ளது. (UCAN)
No comments:
Post a Comment