Tuesday 7 June 2022

பல்சமய உரையாடல், உலகின் அமைதிக்கு மிகவும் முக்கியம்

 

பல்சமய உரையாடல், உலகின் அமைதிக்கு மிகவும் முக்கியம்


1964ம் ஆண்டில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடைபெற்றபோது, பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், கிறிஸ்தவர் அல்லாதவரின் செயலகம் ஒன்றை உருவாக்குவதாக அறிவித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

போர்களால் துண்டு துண்டாக்கப்பட்டுள்ள ஓர் உலகில், ஒருவர் ஒருவரின் பன்மைத்தன்மையை ஏற்பதற்கும், மதிப்பதற்கும், பல்சமய உரையாடல் மிகவும் முக்கியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 06, இத்திங்களன்று கூறியுள்ளார்.

பல்சமய உரையாடல் திருப்பீட அவை, ஜூன் 6 இத்திங்களன்று தொடங்கியுள்ள மூன்று நாள் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் பங்குகொள்ளும் அறுபது பிரதிநிதிகளை திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் வரலாற்றையும் எடுத்துரைத்தார்.   

1964ம் ஆண்டில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நடைபெற்றபோது, பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று மறையுரையாற்றிய திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், கிறிஸ்தவர் அல்லாதவரின் செயலகம் ஒன்றை உருவாக்குவதாக அறிவித்தார் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பல்வேறு சமூகங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும், மதங்களுக்கு இடையே உறவுகள் வளர்க்கப்படவேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கும்வண்ணம் அத்திருத்தந்தை உருவாக்கிய அச்செயலகம், இன்று பல்சமய திருப்பீட அவையாக உருவெடுத்து பணியாற்றி வருகின்றது எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார். 

Praedicate Evagelium

ஜூன் 5 இஞ்ஞாயிறன்று நடைமுறைக்கு வந்துள்ள, திருப்பீட தலைமையகத்தின் சீர்திருத்தம் பற்றிய Praedicate Evagelium புதிய திருத்தூது கொள்கை விளக்கம் குறித்த சிந்தனைகளையும் எடுத்துரைத்த திருத்தந்தை, உலகமயமாக்கலும், பன்னாட்டு சமூகத்தொடர்புகளின் அதிவேக வளர்ச்சியும், உரையாடலை பொதுவானதாக ஆக்கியுள்ளவேளை, பல்சமய உரையாடல், மிக முக்கியமான விவகாரமாக உள்ளது என்று கூறியுள்ளார்.    

உடன்பிறந்த உணர்வுக்கு ஏக்கம்

உலகளாவியத் திருஅவை, ஒன்றிணைந்து வளர்வதற்கு விரும்புகின்ற இக்காலக்கட்டத்தில், “பல்சமய உரையாடல் மற்றும், நல்லிணக்கம்” என்ற தலைப்பில் இந்த நிறையமர்வு கூட்டம் நடைபெறுவது காலத்திற்கேற்றது என்று குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்புகள் அதிகரித்துவரும் இன்றைய உலகில், உடன்பிறந்த உணர்வும், நல்லிணக்கமும் வெகுதொலைவில் உள்ளன என்று கவலை தெரிவித்தார்.

உலகின் இந்நிலையை உணரவேண்டிய பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் உறுப்பினர்கள், கடவுளை உண்மையாகவே தேடும் தாகத்தை மக்கள் மத்தியில் வளர்க்கும்வண்ணம், செயல், இறையியல் பகிர்வு, மற்றும் ஆன்மீக அனுபவங்கள் வழியாக பல்சமய உரையாடலை மேற்கொள்ளுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

உடன்பிறந்த உணர்வு மற்றும், நல்லிணக்கம் ஆகியவற்றில் மற்ற மதத்தினரோடு இணைந்து, மக்கள் கடவுளைத் தேடும் பாதையை வளர்க்கவேண்டியது, பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் பணியாகும், இவ்வழி ஒன்றே, அமைதியில் அனைவரும் வாழத் தகுதியான உலகை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப முடியும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வு கூட்டம், ஜூன் 6 இத்திங்கள் முதல், 8 வருகிற புதன்வரை நடைபெறுகின்றது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...