திருத்தந்தை, வருங்கால திருப்பீடத் தூதர்கள் சந்திப்பு
வருங்கால திருப்பீடத் தூதர்கள், புனித Charles de Foucauld, அருள்பணி புனித Peter Faber சே.ச. ஆகிய இருவரின் வாழ்வுமுறையைப் பின்பற்றுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்
மேரி தெரேசா: வத்திக்கான்
புனித பேதுருவின் வழிவருபவரின் பிரதிநிதியாக, மற்ற நாடுகளில் பணியாற்றுகையில், அப்பணியாளர், இறைவேண்டல் வழியாக அருள்பணித்துவ ஆன்மீகத்தில் வேரூன்றப்பட்டவராய் இருக்கவேண்டியது மிகவும் முக்கியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 8, இப்புதனன்று கூறியுள்ளார்.
உரோம் நகரிலுள்ள, வருங்காலத் திருப்பீடத் தூதர்களைத் தயாரிக்கும் பாப்பிறை திருஅவை கல்வி நிறுவனத்திற்கு, இப்புதன் மாலையில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனத்தில் கல்வி பயில்கின்ற 22 நாடுகளைச் சேர்ந்த 36 அருள்பணியாளர்களைச் சந்தித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது உலகில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும், திருஅவையில் தூதரகப் பணி குறித்து, மாணவ அருள்பணியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை,
அருள்பணித்துவ ஆன்மீகம், இறைவேண்டல், வெளிப்படையான செயல்களால் உணர்த்துகின்ற மறைப்பணி ஆர்வம் ஆகியவற்றால் உள்ளூக்கம் பெற்ற ஒரு வாழ்வுமுறை அவசியம் என்பதை எடுத்துரைத்தார்.
திருப்பீடத்தின் தூதரகப் பணிகளுக்கு மாணவர்களைத் தயாரிக்கும் இக்கல்வி நிறுவனம், ஒரு சிறப்பு ஆசிரியராக உள்ளது என்றும், தூதரக வாழ்வுக்கு, அருள்பணியாளரின் சிறப்பான ஆன்மீகம் தேவைப்படுகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, இந்த வருங்கால திருப்பீடத் தூதரகப் பணியாளர்களுக்கு, இவ்வாண்டு மே 15ம் தேதி வத்திக்கானில் புனிதராக அறிவிக்கப்பட்ட 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித Charles de Foucauld, 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணியாளர் புனித Peter Faber ஆகிய இரு புனிதர்களை முன்மாதிரிகையாய் குறிப்பிட்டார்.
பிரெஞ்சு நாட்டு படைவீரர், மற்றும், நாடுகாண் பயணியாகிய அருள்பணி புனித Charles de Foucauld அவர்கள், தூதரக வாழ்வுக்கு புனிதத்துவத்தின் எடுத்துக்காட்டாக விளங்கிய தியானயோகி ஆவார். இவர், அல்ஜீரியா நாட்டின் சஹாரா பாலைவனத்தில் Tuareg மக்கள் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, 1916ம் ஆண்டில் கொலைசெய்யப்பட்டார்.
மறைப்பணி ஆண்டு
வருங்காலத் திருப்பீடத் தூதர்களைத் தயாரிக்கும் கல்விமுறையில், மறைப்பணி ஆண்டு பற்றியும், அவ்வாண்டில் அவர்களின் பங்கு பற்றியும் கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
வருங்காலத் திருப்பீடத் தூதர்கள், மறைப்பணியில் ஓராண்டு செலவழிக்கவேண்டும், அக்காலக்கட்டத்தில், மறைப்பணி நாடுகளின் திருஅவைகளின் அன்றாட வாழ்வில் அவர்கள் பங்குபெறவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு இப்பயிற்சியை நிறைவுசெய்யும் நான்கு பேர், பிரேசில், பிலிப்பீன்ஸ், மடகாஸ்கர், மெக்சிகோ ஆகிய நான்கு நாடுகளில் ஓராண்டு மறைப்பணி அனுபவத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment