Friday, 17 June 2022

வருங்காலத் தம்பதியர் உருவாக்கப்படுவதில் திருஅவையின் பங்கு

 

வருங்காலத் தம்பதியர் உருவாக்கப்படுவதில் திருஅவையின் பங்கு


பல தம்பதியர், திருமணத்திற்குமுன்பு, மேலெழுந்தவாரியான தயாரிப்புக்களையே பெறுகின்றனர், இத்தகைய பலவீனமான அடித்தளத்தில் அவர்களின் திருமணம் ஆபத்தை எதிர்கொள்கின்றது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

பிரிந்த குடும்பங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைத் தவிர்க்கும்வண்ணம், திருமணத்திற்கு வருங்காலத் தம்பதியர் நன்கு தயாரிக்கப்படுவதற்கு திருஅவை உதவவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீட ஏடு ஒன்றிற்கு எழுதியுள்ள முன்னுரையில்   கூறியுள்ளார்.

“திருமண முன்தயாரிப்புக்கு மேய்ப்புப்பணி வழிகாட்டிகள்” என்ற தலைப்பில் திருப்பீட பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவை, ஜூன் 15 இப்புதனன்று வெளியிட்டுள்ள ஏட்டிற்கு நீண்டதொரு முன்னுரை எழுதியுள்ள திருத்தந்தை, திருமணம் புரிந்துகொள்ள தங்களையே தயாரிக்கும் தம்பதியரோடு திருஅவை மிக நெருக்கமாக உடனிருந்து வழிகாட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குடும்பம் பற்றிய திருத்தூது அறிவுரை மடலின் பின்புலத்தில் சிறப்பிக்கப்பட்டுவரும் Amoris Laetitia அதாவது அன்பின் மகிழ்வு குடும்ப ஆண்டின் ஒரு கனியாக இவ்வேடு உள்ளது என்று எழுதியுள்ள திருத்தந்தை, திருமணம் எனும் அருளடையாளம், மற்றும், குடும்ப வாழ்வில் பொதிந்துள்ள அபரிவிதமான அருளின் அழகை, திருஅவை எல்லாக் காலத்திலும் புதிய சிந்தனையோடு அறிவிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமண முறிவுகள்

பழங்காலத்தில் வயதுவந்தோரை திருமுழுக்கு அருளடையாளத்திற்குத் தயாரிக்கும் பாணியில் அமைந்துள்ள இவ்வேடு, வருங்காலத் தம்பதியர், தங்களின் திருமணத்தை நம்பிக்கை எனும் பாறையின்மீது கட்டியெழுப்ப உதவும்வண்ணம் இந்த ஏடு உருவாக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

பல தம்பதியர், திருமணத்திற்குமுன்பு, மேலெழுந்தவாரியான தயாரிப்புக்களையே பெறுகின்றனர் எனவும், இத்தகைய பலவீனமான அடித்தளத்தில் அவர்களின் திருமணம் ஆபத்தை முன்வைக்கின்றது எனவும் கூறியுள்ள திருத்தந்தை, இதனால், சிறிது காலத்திலேயே, முதல்முறையாக எழுகின்ற தவிர்க்க முடியாத பிரச்சனைகளில்கூட அவர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

திருமணங்கள் தோல்வியடைதல், பெருந்துன்பங்களைக் கொணர்கின்றன மற்றும், மக்களில் ஆழமான காயங்களை விட்டுச்செல்கின்றன என்றும், அத்தம்பதியர், ஏமாற்றம், கசப்புணர்வு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர் என்றும், மிகவும் வேதனைதரும் விவகாரங்களில், மனித இதயங்களில் கடவுளே பொறித்துள்ள அன்புகூரும் அழைப்பிலும் நம்பிக்கையை இழந்துவிடுகின்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

அன்னை திருஅவையின் பணி

இதனால் அன்னை திருஅவை, நீதியால் வழிநடத்தப்பட்டு, திருஅவையில் திருமணம் புரிந்துகொள்ளும் வழிகளைத் தேடுகின்ற தம்பதியரோடு உடனிருந்து வழிநடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டாத அன்னை போன்று, திருஅவையும், அத்தம்பதியருக்காக நேரம் மற்றும் சக்தியைச் செலவழித்து அவர்களை வழிநடத்தவேண்டும் என்றும், அருள்பணித்துவ மற்றும், துறவு வாழ்வில் நுழைய விரும்பும் இருபாலாருக்கு உதவுவதுபோல் வருங்காலத் தம்பதியருக்கும் உதவவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...